Saturday, April 25, 2020

#பருத்தி_விவசாயம் #விவசாயி_என்ன_செய்வான்_பாவம்.

#பருத்தி_விவசாயம்

#விவசாயி_என்ன_செய்வான்_பாவம். 
————————————————-
வானம் பார்த்த மானாவாரி நிலங்களில் சாகுபடியான பருத்தி கடந்த ஆண்டு ஒரு குவிண்டால் ரூபாய் 5000 விலை போனது அதுவே குறைவானது தான். நடப்பில் தற்போது ரூபாய் 3500-4000 வரை தான் ஒரு குவிண்டாலுக்கு விலை கிடைக்கின்றது. பருத்திச் சாகுபடி செலவு இதை விட அதிகம். ஒரு ஏக்கருக்கு ரூபாய் 18000 செலவு செய்ய வேண்டும். விவசாய வேலைக்கு வரும் கூலிகளுக்கும் பருத்தி விவசாயத்தில் ஒரு நாளைக்கு ரூபாய் 300 ஆவது கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்த வருடம் பருத்தி விவசாயம் கட்டுப்படி ஆகாததால் கரிசல் பகுதிகளான கோவில்பட்டி, விளாத்திக்குளம், ஒட்டப்பிடாரம், சங்கரன் கோவில் ராஜபாளையம்,சிவகாசி,சாத்தூர் வட்டாரங்களில் சாகுபடி செய்த பருத்திச் செடிகளை விவசாயிகள் வெட்டியாக நஷ்டமாகும்,  அழிப்பதை தவிர வேறு வழியில்லை என்ற  பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவ்வட்டாரத்தில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பருத்திச் செடிகளை தேவையில்லை என்ற நிலைக்கு விவசாயி தள்ளப்பட்டுள்ளார்ன். விவசாயி என்ன செய்வான் பாவம்.










பருத்திக்கு 60, 70, 80 வரை நல்ல விலை இருந்தது. அதை பாதுகாத்து லாபகரமாக விற்ற காலமெல்லாம் போய் இன்றைக்கு பரிதாபமாக தான் விதைத்த பருத்திச் செடியை அழிக்கக் கூடிய துயர நிலைக்கு விவசாயி தள்ளப்பட்டுள்ளான்.  நன்றாக நினைவிருக்கின்றது, கிராமங்களிலிருந்து பருத்தியை சாக்கு பொதிகளாக கட்டி விருதுநகருக்கோ ராஜபாளையத்திற்கோ, சாத்தூருக்கோ, கோவில்பட்டிக்கோ, சங்கரன்கோவிலுக்கோ மகிழ்ச்சியாக விற்று விட்டு கை நிறைய பணம் சம்பாதித்து வந்த விவசாயிகளின் நிலைமை இன்றைக்கு மாறி விட்டது. இந்த விவசாயிகளை நம்பி தான் ஆங்கிலேயர்கள் தூத்துக்குடி, அம்பாசமுத்திரம், கோவில்பட்டி, சாத்தூர், மதுரையில் நூற்பாலைகள கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் அமைத்தனர்.  இந்தப் பருத்தி தூத்துக்குடி துறைமுகம் மூலமாக பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர், கிளாஸ்கோ, லங்காஷயர் நகரங்களுக்கு அனுப்ப தூத்துக்குடி நகரில் கிரேட் காட்டன் ரோடு என்று பிரிட்டிஷார்கள் அமைத்தனர். இந்த பருத்தி விவசாயத்தை ஆய்வு செய்யத் தான் 1898 காலக் கட்டங்களில் கோவில்பட்டியில் (Cotton patti)விவசாயிகள் ஆராய்ச்சி மையமும் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டது. ஒரு காலத்தில் நல்ல ஆய்வு மையமாக இருந்தபோது நம்மாழ்வார் போன்றவர்கள் எல்லாம் அங்கு பணியாற்றினார்கள். இன்றைக்கு அது களையிழந்து தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் சரியாக செயல்படாமல் இருக்கிறது. இது குறித்து கடந்த ஆண்டும் பதிவு செய்திருந்தேன். அதன் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி #மானாவாரி நிலங்களில், எப்போதும் பருத்தி வெளேர் என்று இருக்கும். ஆரம்பத்தில், சிறுபருத்தி, அதன் பிறகு போண்டா பருத்தி, லட்சுமி காட்டன், LRA , RCH இப்படி எத்தனையோ வீரிய ஒட்டு ரக பருத்தி விதைகள் வந்து கொண்டே இருந்தன. இதில் LRA பருத்தி  எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் வந்தது .அப்போது பருத்தி விலை குவிண்டால் 500 இல் 600 க்கு விற்றது, எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போ ஒரு ஏக்கர் எங்கள் பகுதியில் ரூபாய் 3000 இல் இருந்து ரூபாய் 4000 க்கு விற்றது. அப்போ பருத்திக்கு மரியாதை இருந்ததை நான் நேரிடையாக உணர்ந்தவன். ஒரு நூறு கிராம்  பருத்தி கொண்டு போனால் 100 கிராம் கார சேவு கொடுப்பார்கள்.சீனி கிழங்கு 4 அல்லது 5 நிருவை கூட கொடுப்பார்கள். அப்படியே சேவு யும், கிழங்கையும் தட்டில் வைத்து அளந்து கொடுப்பார்கள். அதே போல கொஞ்ச வருடங்கள்  கழித்து  பருத்தியை  கால் பகுதியை புடுங்கி அம்பாரத்தில் எறிந்து விட்டு, மீதியை கார சேவின் எடைக்கு வைப்பார்கள். இது தான் எங்கள் பகுதி பழக்கம். அப்போ இளந்தாரிகள் மற்றும் சிறுவர்கள் கூட பருத்தி மேல் மோகம் கொண்டு,  களவு செய்து சேவு வாங்கி தின்பார்கள். அப்படி வந்தது தான் " உங்க பருத்தி, உங்க சேவு என்ற பழமொழி. அப்போது பணம் இருந்தாலும்,  பண்டமாற்று இருந்தது. நாலு பிடி கம்பு ( தவசம் ) கொண்டு போனால் மண் சட்டி,  பானை வாங்கி வந்து விடலாம். அதே போல வண்டி கிழங்கு வரும்போது கோடை பருத்தியை கொண்டு போனால் புட்டி  நிறைய வாங்கி வந்து, அவித்து பல நாட்கள் சாப்பிடும் அளவுக்கு கிழங்கு கிடைக்கும். அத்துடன் மொச்சை பயிறும் பொட்டி நிறைய கிடைக்கும். அதெல்லாம் மலை ஏறிப்போன காலம் ஆகி, எதற்கு எடுத்தாலும் பேக்கரியை நாடி போகும் பழக்கம் ஏற்பட்டு, புரத தட்டுப்பாடு ஏற்பட்டு, உணவில் மைதா வின் அளவு கிடுகிடு ன்னு ஏறிப்போச்சு. இன்று பழம் கிழடு தட்டி போன தாத்தாக்களிடம் கேட்டால் கூட  " கேக், பிசா வாங்கி வா ! பேர புள்ள !! " என்று பல் போன கிழவர் துள்ளி குதிக்கிறார். எல்லாம் காலம் மாறிப்போச்சு. கை நிறைய பணமும் வந்திருச்சு. அதே போல rch போய் இன்று மரபு அணு மாற்றம் செய்த பருத்தி வந்த பிறகு, கரிசல் நிலம் ஏக்கர் 1 க்கு  5 குவிண்டால் விளைந்தது மாறி,  மரபு மாற்ற பருத்தியால் ஏக்கர் ஒன்றுக்கு 10 இல் 15 குவிண்டால் என்று விளைய ஆரம்பித்தது. ஆரம்பத்தில் பூச்சி மருந்து பி. டி ரக  பருத்திக்கு தேவை இல்லை என்று கடுமையான விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால்,  இன்று 5 முதல்  6 மருந்து வரை அடிக்க வேண்டிய நிலையும், அத்துடன் விலை உயர்வான பூச்சி கொல்லி மருந்தும் அடிக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளார்கள். அப்படி அடித்தும், நீங்கள் பார்க்கும் நிறத்தில் தான்  பருத்தி வெடித்து விவசாயிகள் அறுவடை செய்து உள்ளார்கள். இது குவிண்டாலுக்கு 2700 க்கு வாங்குகிறார்கள் என்று விவசாயிகள் என்னிடம் வேதனையுடன்  சொன்னார்கள். இதனால், விரக்தி உற்ற விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள இது போன்ற பருத்தியை  எடுப்பதில் கட்டுப்படி ஆகாத நிலையில் தொழிலாளர்களே சொந்தமாக எடுத்து கொள்ள விவசாயிகள் கூறிவிட்டார்கள். இன்னும் சில விவசாயிகள் கோபத்தில் உழவு செய்து விட்டார்கள். இப்படியாக பன்னாட்டு கம்பெனிகள் தங்களின்விதைகளை கொள்ளை லாபத்துக்கு விற்று விட்டு சம்பாதித்து விட்டார்கள். அவர்கள் கொடுத்த பி. டி ரக  பருத்தி விதைகள் இப்படி தரம் இழந்த பருத்தியை கொடுத்து கொண்டு உள்ளது. யாரிடம் சொல்லி அழ. இங்கு விவசாயிகளின்  பிரச்சனையை புரிந்து கொள்வார் எவரும் இல்லை. சென்ற ஆண்டு வரை பிரச்சனை இல்லாமல் சென்ற பி. டி ரக பருத்தியானது, இந்த ஆண்டு விவசாய்களிடம் கோர முகத்தை காட்டிவிட்டது. எப்போதும் கோவில்பட்டி பகுதியில் விளையும் நல்ல இழு திறன் உள்ள பருத்தியும், கொட்டை சிறுத்த பருத்தியும்  கிடைக்கும். ஆலைக்கு ஏற்புடைய  மிக தரமான நூலாக கோவில்பட்டியில் விளையும்  பருத்தியின் தரம் இருக்கும். இந்த ஆண்டு இப்படியான கெட்ட  நிலை விவசாய்களுக்கு ஏற்பட்டு உள்ளது, இது போன்ற விளைச்சல் விவசாயிகளின்  பொருளாதாரத்தை கெடுத்து குட்டி சுவர் ஆக்கும் நிலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த ஆண்டு என்றும் இல்லாத ஆண்டாக சுமார் 8 இல் இருந்து  10  அடி வரை  வளர்ந்து நிற்கும் பருத்தி செடி, இந்த இழிநிலையை காட்டிவிட்டது. எப்போதும் பருத்தி செடியானது 4 அடியில் இருந்து 5 அடி வரையில் மட்டுமே  வளரும் தன்மை கொண்டதாகவே   இருக்கும். ஆனால், இந்த ஆண்டு பருத்தியின் அபரிமித வளர்ச்சிக்கு  மரபு அணு மாற்றத்தில் ஏற்பட்ட கோளாறுதான்  காரணம். ஆகவே, பாரம்பரிய பருத்தி ரகத்தை இழந்த விவசாயிகள் இன்று கண்ணீர் சிந்தி வருகிறார்கள். தரமில்லாத பருத்தி விதைகளை வழங்க காரணமாக இருந்த விதை உற்பத்தி நிறுவனங்களையும்  மற்றும் அவர்களின்  ஏஜெண்டுகள் மீது நடவடிக்கை எடுத்து,  தகுந்த இழப்பீட்டை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அவர்களிடம் மத்திய, மாநில அரசுகள் வசூலித்து தர குழு அமைக்க வேண்டும். அத்துடன், இதே நிலை அனைத்து பயிர்களுக்கும் ஏற்படுத்த பன்னாட்டு விதை நிறுவனங்கள் முயன்று வருகின்றன. அனைத்து பயிர்களையும் மரபு அணு மாற்றம் செய்யும் முயற்சியில் இறங்கி, அந்த விதைகளை இந்திய சந்தைக்கு திணிக்க அரும்பாடுபட்டு வருகின்றன. சென்ற ஆண்டு இதே விதை கம்பெனிகள் மரபு அணு மாற்றம் செய்த மக்காச்சோள விதைகளை திணிக்க,  படை புழுவை ஏவியது நினைவு இருக்கலாம். ஆகவே, விவசாய்களே. உணவு பொருள்கள்( உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் ) மற்றும் காய்கறிகளில் மரபு அணு மாற்றம் என்ற விஷத்தை எதிர்த்து இப்போது இருந்தே போராடுவோம். பருத்திக்கு வந்த துயரம் மற்ற பயிர்களுக்கு வராமல் பாதுகாப்போம். பாரம்பரிய விதைகளை பாதுகாப்போம்.

https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2019/04/25-04-2019.html

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
25.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...