Wednesday, April 22, 2020

#விடுதலை_போராட்டம்_சில_குறிப்புகள் #காங்கிரஸ் #மிதவாதிகள் #தீவிரவாதிகள் #We_have_atlast #found_Luck - #in_Lucknow-#திலகர் #Minto_Morley

#விடுதலை_போராட்டம்_சில_குறிப்புகள்
#காங்கிரஸ் 
#மிதவாதிகள் #தீவிரவாதிகள்

#We_have_atlast #found_Luck - #in_Lucknow-#திலகர்
#Minto_Morley
————————————————
மணித்கலா சதி வழக்கில் கைதாகி ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு அரவிந்தர் மீது வழக்கு நடந்தது. அந்த சதி வழக்கில் சித்தரஞ்சன் பிரபல கிரிமினல் வழக்கறிஞர் ஆஜராகி சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்து திணறடித்தார். அதன் விளைவாக அந்த சாட்சிகள் முன்னுக்குப்பின் முரணாக சாட்சியங்களை சொல்ல அரவிந்தர் விடுதலை செய்யப்பட்டார். உடனே அவர் புதுச்சேரிக்கு சென்று அங்கே ஆசிரமம் ஒன்றை ஆரம்பித்தார். 









அந்த காலத்தில் புதுச்சேரி பகுதி பிரெஞ்சு சர்க்காரின் ஆதிக்கத்தில் இருந்தது. அந்த பயங்கர இயக்கம் தமிழ்நாட்டிலும் பரவியது. தூத்துக்குடியில் வழக்கறிஞராக இருந்துகொண்டு சுதேசி கப்பல் கம்பெனியை துவக்கிய வ உ சிதம்பரம் பிள்ளைக்கு ஆஷ் என்ற அதிகாரி ஆயுள் தண்டனை விதித்தான். மணியாச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ஒரு ரயிலில்  முதல் வகுப்பில் இருந்த அந்த வெள்ளை அதிகாரியை வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்றுவிட்டு அந்த பெட்டியிலேயே இருந்த கழிவறையில் புகுந்து தன்னையும் சுட்டுக் கொண்டு உயிர் இழந்தார். அவருக்கு திருமணமாகி ஓராண்டு கூட முடியாது இந்த சமயம் அது. இதையடுத்து நீலகண்ட பிரம்மச்சாரி என்ற வாலிபர் மீதும் அவருடைய இளம் தோழர்கள் மீதும் சதி வழக்கு போடப்பட்டு அவர்கள் கடும் தண்டனைக்கு உள்ளாயினர். இந்த சமயத்தில்தான் மகாகவி சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, திருமலாச் சாரி வா. வே. சு ஐயர் முதலியோர் வாரண்டில் இருந்து தப்புவதற்காக புதுச்சேரியை புகலிடமாகக் கொண்டனர். அங்கிருந்து தான் பாரதியார்  உணர்ச்சியூட்டும் கவிதைகளைப் பாடி பிரசுரித்து கொண்டிருந்தார். இந்த காலத்தில்தான் காங்கிரஸ் மகாசபை ஆண்டு மகாநாடு சூரத் நகரில் கூடியது.

அங்கு காங்கிரஸ் மிதவாதிகள் கோஷ்டி, தீவிரவாதிகள் கோஷ்டி என இரண்டாக பிளவுபட்டது. தீவிரவாதியாக கருதப்பட்ட திலகர் தலைமையில் பெரும்பாலோர் ஒன்று சேர்ந்து காங்கிரஸ் ஸ்தாபனத்தை கைப்பற்றினர். மிதவாதிகள் கோஷ்டிக்கு தலைமை தாங்கிய  கோபால கிருஷ்ண கோகலேயும், அவரை சார்ந்தவர்களும் விரட்டி அடிக்கப்பட்டனர். இந்த அமளியில் கலந்து கொண்டவர்களில் அந்த காங்கிரஸ் மகாசபை கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து சென்ற பிரதிநிதிகளான வி. சர்க்கரை செட்டியார், மகாகவி சுப்பிரமணிய பாரதியார், சென்னை பிரபல வக்கீல் துரைசாமி  ஐயர் போன்றவர்கள் ஆவார்கள். துரத்தியடிக்கப்பட்ட மிதவாதிகள் காங்கிரஸ் மகாசபையில் இருந்து விலகி மிதவாத கட்சி என்று அழைக்கப்பட்ட இந்தியன் லிபரல் பெடரேஷன் (Indian Liberal Federation) என்ற பெயரால் ஒரு ஸ்தாபனத்தை துவக்கினர். 
இந்த சூரத் காங்கிரஸ் மகா சபை கூட்டத்தில் தான் பாலகங்காதர திலகர் “சுயராஜ்யம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே தீருவேன்” (Swaraj is my birthright and I will have it) என்று முழங்கினார். 

அந்த  காலத்தில்தான்  வங்காள மொழியில் பக்கிம் சந்திர சாட்டர்ஜியால் எழுதப்பட்ட சன்னியாசி கலகத்தை அடிப்படையாக கொண்ட ஆனந்த மடம் என்ற நவீனத்தில் வரும் வந்தேமாதரம் என்று துவங்கும் பாட்டும் அந்த வந்தேமாதரம் என்ற கோஷமும் தேசிய விடுதலை இயக்கத்தின் கீதமாகவும் கோஷமாகவும் அமைந்தன. பிரிட்டிஷ் சர்க்கார் இந்த நவீனத்தை தடை செய்து அந்த கீதத்தை பாடுவதும் வந்தேமாதரம் என்று கோஷம் இடுவதும் ராஜத்துரோக குற்றம் ஆகும் என்று அறிவித்தது. 

அக்காலத்தில்  நாடு  பூராவும் மக்களிடையே சுதந்திர வேட்கை நாளுக்கு நாள் மேலோங்கி வளர்ந்தது. இந்த விடுதலை வேட்கையை மக்களிடம் பரப்ப பலர் முன்வந்தனர் இதை எதிர்த்து சிலர் மீது ராஜ துரோக குற்றம் சுமத்தப்பட்டு வழக்குப் போடப்பட்டது. 6 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு அன்று இந்திய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாகவே விளங்கிய (தனி நாடான) பர்மாவில் மாண்டலே நகரத்திலிருந்த சிறைக்கு அனுப்பப்பட்டார். இப்படி சுதந்திர இயக்கம் வளர்ந்தது பிரிட்டீஷ் சர்கார் பலமுனைகளில் இருந்து தாக்கப்படும்  சமயத்தில் பிரிட்டிஷ் சர்க்கார் சாம பேத தான தண்டம் என்ற யுத்தியை கடைப்பிடித்தது. அன்று இந்தியாவின் வைசிராயாக இருந்த லார்ட் மிண்டோவும் (Minto) இங்கிலாந்தில் இந்தியா மந்திரியாக இருந்த மார்லியும் (Morley)சேர்ந்து தீட்டிய ஒரு திட்டம் உருவாக்கப்பட்டது. அந்த திட்டம் Minto Morley என பிரிட்டிஷ் பார்லிமெண்டின் அங்கீகாரத்தைப் பெற்றது. இந்த சட்டத்தின் அடிப்படையில் மத்தியிலும் மாநிலங்களிலும் சட்டசபைகள் துவக்கப்பட்டன. இந்த சட்டசபைக்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் உரிமை சொத்துரிமை அடிப்படையில், வரி செலுத்துவோர்களுக்கு மட்டும்தான் இருந்தது. 

திலகர் விடுதலை ஆனவுடன் 1916ஆம் ஆண்டு உலக யுத்தத்தில் சிக்கி பிரிட்டன் திணறிக் கொண்டிருக்கும் சமயத்தில் காங்கிரஸ் மகாசபையின் ஆண்டு கூட்டம் லக்னோ நகரில் கூடியது. அதே சமயத்தில் அதே நகரத்தில் முஸ்லிம்களின் ஆண்டு மகா சபையும் கூடியது. இரண்டு ஸ்தாபனங்களின் தலைவர்களுக்கு இடையே வகுப்புவாரி பிரதிநிதித்துவம் சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. 
இரண்டு ஸ்தாபனங்களின் மகாசபை கூட்டங்களிலும் உடனடியாக இந்தியாவிற்கு சுயாட்சி அளிக்கப்பட வேண்டும் என்று கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிறகு இரண்டு மகாசபை கூட்டங்களும் ஒன்றாக சேர்ந்து அந்த ஸ்தாபனங்களின் தலைவர்கள் ஒரே மேடையில் நின்று இந்த கோரிக்கையை வலியுறுத்தும் தீர்மானத்தை கூட்டாக நிறைவேற்றினர்.

இவ்வாறு பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடித்து ஒற்றுமை நிலைநாட்டப்பட்டது கண்டு அந்தக் கூட்டு மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் மகிழ்ச்சி அடைந்து பரவசப்பட்டனர். இந்த மகிழ்ச்சியில் பூரித்து போன திலகர் அந்தக் கூட்டு மேடையில் மிகவும் "We_have_atlast found_Luck - in_Lucknow"
என்று முழங்கினார்.

மத அடிப்படையில் இந்திய மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியில் தோல்வியடைந்த பிரிட்டிஷ் சர்க்கார் நிலப்பிரபுக்களை, சுதேச மன்னர்களைத் தங்களுக்கு ஆதரவாக கொண்டது.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
20.04.2020
#ksrposts

2 comments:

  1. வாஞ்சிநாதன் ஸ்டேஷனில் இருந்த தகரத்தால் ஆன கழிப்பறையில் தன்னை தானே சுட்டு உயிரிழந்தார். நீங்கள் குறிப்பிட்டபடி ரயிலில் இருந்த கழிப்பறையில் சுட்டுக்கொள்ளவில்லை.

    ReplyDelete
  2. 3.12 பதிவில் சொன்னது சரியே.

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...