———————————————————-
இலங்கை கடற்படை இராமேஸ்வரம் மீனவர்கள், வட்டவளத்தை சேர்ந்த நாகராஜ், மண்டபம் சாம்சன், திருப்புல்லானி செந்தில்குமார் மற்றும் தங்கச்சிமடம் மெர்சியான் என்ற நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குதலால் படகு மூழ்கி இறந்தார்கள். மாண்ட அந்த நான்கு மீனவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது, பத்து ஆண்டுகளுக்கு முன் 2011-ல் இதே போல துயர சம்பவம் நடந்து தமிழகமே போராட்டக் களமாக இருந்தது. சமீபத்தில் இந்திய வெளியுறவி அமைச்சர் ஜெயசங்கர் இலங்கை சென்ற போது இது குறித்து பேசிய பின்னும் இந்த துயரம் தொடர்கிறது.
நான்எழுதிய’#கனவாகிப்_போன_கச்சத்தீவு’ புத்தகத்தில் (2006 பதிப்பு)குறிப்பிட்டவாறு ;
பழைய கணக்குப்படியே 1981-லிருந்தே இலங்கை கடற்படை நமது மீனவர்களை தாக்கிக்கொண்டிருக்கிறது. பழைய கணக்குப்படி பார்த்தாலும் என்னுடைய ’கனவாக்கி போன கச்சத்தீவு’ புத்தகத்தில் பக்கம் 32-ல்
“கச்சத்தீவு இராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தூரத்தில் உள்ளதால் தமிழக மீனவர்களுக்கு மிகவும் பயன்பட்டது. 1981-ல் இருந்து பிரச்சினைகள் கடுமையானது. 1983ல் இருந்து 1994 ஜூன் வரை தமிழக மீன்படி படகுகள் மீது 355 முறை இலங்கைக் கப்பற்படை தாக்குதல் நடத்தியது. 59 படகுகள் எரிக்கப்பட்டன. 98 மீனவர்களின் உயிர்கள் பறிக்கப்பட்டது. 2008 ஜூலை வரை 800 மீனவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இன்றுவரை சிங்களக் கடற்படை 8000 முறை தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. 15,000 பேரை இலங்கையில் சிறைப்பிடித்து வைக்கப்பட்டனர். வெவ்வேறு கால கட்டங்களில் இது நடந்தேறியது. 2000 பேர் தாக்குதலால் ஊனமுற்றுள்ளனர். மத்திய அரசுக்குப் பலமுறை சொல்லியும் இலங்கை அரசுடன் பேச மனது வரவில்லை. பேருக்கு பேசியுள்ளோம் என்று பதில் வருகிறதேயொழிய எவ்வித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் இல்லை. சென்னை முதல் கன்னியாகுமரி வரை 60 சோதனை சாவடிகள் இருக்கின்றன. மேலும் 40 சாவடிகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்திய மீனவர்கள் காவலுக்காக 44 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் எந்தப் பயனும் இல்லாத நிலை. நமது எல்லைக்கு வந்து நமது மீனவர்களை சிங்கள கப்பற்படை கொடுமையாகத் தாக்கியும் சிறைப்பிடிக்கின்றது. ஆனால் சிங்கள மீனவர்கள் நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தாலும் பல சமயங்களில் நமது கப்பற்படை பாரா முகமாக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை. 2.7.2008-ல் 1200 மீனவர்களை நமது கடல் எல்லைக்குள்ளே வந்து இழ்த்துச் சென்றதை மத்திய மாநில அரசுகள் பார்த்துக்கொண்டுதான் இருந்தன. இந்த 1200 பேர் இராமேஸ்வரம், பாம்பன், தங்கச்ச்சிமடம் போன்ற பகுதிகளைச் சார்ந்தவர்கள். 300 படகில் இருந்த இவர்களை இலங்கை கப்பற்படை 40 கடற்படைப் படகுகளில் வளைத்துக்கொண்டு தலைமன்னாரிலுள்ள கப்பற்படைத் தளத்துக்கு அழைத்துக்கொண்டு சிங்கள ராணுவ வெறியர்கள், இவர்களது கண்களைக் கட்டி ஆடைகளை அவிழ்த்து அடித்து கொடுமைப்படுத்தி இவர்களிடமிருந்த பொருட்களைப் பிடுங்கிக்கொண்டு இவர்களில் நான்கு பேரை மட்டும் சிறைப்படுத்திவிட்டு மீதிப்பேரை விரட்டிவிட்டனர். திரும்பி வந்த மீனவர்கள் இது குறித்து முறையீடு செய்தும் எவ்வித மேல் நடவடிக்கையும் இல்லை.”
மேலும் நான் அதில் குறிப்பிட்ட சில விபரங்கள்,
தமிழக கடற்கரை: 1076 கி.மீ
தனியுரிமைப் பொருளாதார மண்டலம் (EEZ): 0.19 மில். ச.கி.மீ
கண்டக் கடற்பரப்பு (Continental Shelf): 41,412 ச.கி.மீ
கடலோர மீன்வர்கள்: 8,00,000
மீன் பிடிக்கும் கடலோர மீனவர்கள்: 2,60,000
விசை மீன்பிடி படகுகள்: 13,164
பாரம்பரியப் படகுகள்: 62,594
கடல் மீன்வள ஆக்கத்திறன்
(Potential Fishery) - ஆண்டொன்றுக்கு
50 மீ ஆழத்துக்குட்பட்ட பகுதியில்: 3.69 இலட்சம் டன்
50 மீ ஆழத்துக்கு அப்பாற்பட்ட பகுதியில்: 3.5 இலட்சம் டன்
மொத்தம்: 7.19 இலட்சம் டன்
2005 – 06 இல் மீன்பிடி: 3.94 இலட்சம் டன்
2005 – 06 இல் கடல் உணவு ஏற்றுமதி மதிப்பு
(ரூபாயில்; கோடியில்): 1995.72
இன்றைக்கு இதன் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம்.

No comments:
Post a Comment