Wednesday, February 10, 2021

#சில_நேரங்களில்_சில_நீதிபதிகள்

துலாக்கோல் நிலையில் இருந்து நியாயங்களை பரிசீலனை செய்து நீதி வழங்க வேண்டியவர்கள் நீதிமான்கள். நீதிமன்றங்கள் கோவில்களுக்கு ஒப்பாக Temples of Justice என்றும் வழக்கு மன்ற மனுக்களில் கோரிக்கையை prayer என்று தான் குறிப்பிடுவதுண்டு. நேற்றைக்கு மும்பை நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்ட புஷ்பா கனேடிவாலா என்ற நீதிபதி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கியதற்காக மும்பை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி என்ற பதவி உயர்வு பரிந்துரையை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற்றுள்ளது. மகிழ்ச்சி தான்!!
என்னுடைய அனுபவத்தில் ஊடக வெளிச்சத்திற்காகவோ, சுய ஆதாயத்திற்காகவோ இல்லாமல் பொதுநல வழக்குகள், தமிழ்நாடு உரிமைகள், மனித உரிமைகள், நதிநீர்ச் சிக்கல்கள், விவசாய பிரச்சினைகள் என்று பொதுநலவழக்குகளை (Public Interest Litigation) என்று நடைமுறைக்கு வந்தது ஏறத்தாழ 40 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ரட்லம் முனிசிபாலிட்டி வழக்கு காலத்திலிருந்து பொதுநல வழக்குகளுடைய முக்கியத்துவம் ஆரம்பித்த காலத்திலிருந்தே நானும் இம்மாதிரியான வழக்குகளை உச்சநீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்து வருகின்றேன். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வீ. ஆர். கிருஷ்ணய்யர், பகவதி, சின்னப்ப ரெட்டி, வெங்கட் ராமைய்யா போன்ற பல நீதிபதிகள் இதற்கு ஆதரவான நிலையினை முன்னெடுத்து ஒரு நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினர். இதுவரை நான் 40க்கு மேல் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்திருப்பேன். இதையெல்லாம் என்னுடைய ksradhakrishnan.in வலைத்தளத்தில் உள்ள சுயகுறிப்பு (profile) பார்த்தாலே தெரியும்.
சமீப காலமாக நேர்மையாக இந்த வழக்குகளை வழக்குமன்றத்திற்கு கொண்டு செல்வதில் சிக்கல்கள் மட்டுமல்ல சற்று கவலையும் ஏற்படுகிறது. சொல்ல வேண்டியதை சொல்லித் தானே ஆக வேண்டும். வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டியது அவசியமானது.

உதாரணத்திற்கு 2011 காலகட்டங்களில் கூடங்குளம் அணுமின் நிலைய வழக்கு சுற்றுச்சூழலை பாதிக்கிறது என்று தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் WP. No. 22771/2011 தாக்கல் செய்தேன். விசாரணைக்கு வந்தது. ஆனால் அந்த வழக்கை அங்கே விசாரிக்காமல் வேறு நீதிமன்றத்திற்கு தள்ளி வைத்தார்கள். காரணம், என்னோடு வழக்கறிஞராக இருந்தவர் தலைமை நீதிபதியோடு நீதிபதியாக இருந்து விசாரித்த அமர்வில் இருந்த காரணத்தினால் வேறு நீதிமன்றத்திற்கு விசாரிக்காமலே அனுப்பப்பட்டது. சரி தான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அடுத்து இதே கூடங்குளம் குறித்து பொதுநல வழக்கு ஒன்று வந்தபோது அதே தலைமை நீதிபதி தலைமையில் இருந்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு ஏற்றுக் கொண்டதினுடைய logic எனக்கு புரியவில்லை. அப்படியானால் அந்த வழக்கு எனக்கு அடுத்து தானே இருக்க வேண்டும். இப்படியான குளறுபடிகள்.
சமீபத்தில் 03.06.2020 அன்று மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நான் தாக்கல் செய்த ரிட் மனு எண். WP. No. 5995/2020 தலைமை நீதிபதி அமர்வில் 03.06.2020 அன்று விசாரணைக்கு வந்தது. சென்னை உயர்நீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த மனுவை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவின் பேரில் தேசிய பசுமை ஆணையத்திலும் தாக்கல் செய்யப்பட்டு இன்னமும் விசாரணைக்கு வராமல் நிலுவையில் இருக்கிறது. அதன் செயலகத்திலிருந்து தென்பிராந்திய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யுங்கள் என்றும் கூறுகின்றார்கள். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைக் கூட கவனிக்க தவறியிருக்கிறார்கள் என்றால் என்ன சொல்ல?
சரி இப்படியான நிலை, தேர்தல் சீர்த்திருத்தங்களில் பன்னாட்டு தேர்தல் விதிமுறைகளை புரிந்து அறிந்து பல கவனத்திற்கு வராத தேர்தல் முறைகள் , சீர்த்திருத்தங்கள் வேண்டுமென்று என்னுடைய விரிவான ரிட் மனு WP. No.(C) 549/2020 உச்சநீதிமன்றத்தில் கடந்த 21.01.2021ல் விசாரணைக்கு வந்தது. ஆனால் தலைமை நீதிபதியும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியும் இதை விசாரித்து திரும்பவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டார்கள். வேறு என்ன செய்ய? சரி அதற்கான மனுக்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளேன். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் தேர்தல் சீர்திருத்தத்திற்காக நிலுவையில் உள்ள மனுக்களோடு சேர்த்து இதனை விசாரத்திருக்கலாம். ஏனோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுங்கள் என்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. எத்தனை பொதுநல மனுக்கள் கடந்த காலத்தில் எளிதாக நீதிமன்றங்களின் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில் நிலைகள் இருந்தன. நேர்மையான போக்கில் பொதுநல வழக்குகளை எடுத்துச் சென்றாலும் இப்படி தடைகளும் பின்னடைவுகளும். அரசியலிலும் உழைத்தும் நமது உழைப்பை பெற்றவர்களால் தடையும் தடங்கலும். என்ன செய்ய? இதெல்லாம் வாழ்க்கையின் முறை என்றாகிவிட்டது. இதைப் பற்றிக் கவலை கொள்வதில்லை. ஏனென்றால் தகுதியே தடை. இதையும் கடந்து செல்வது தான் அன்றாட வாழ்க்கை ஆகிவிட்டது.
”நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்”

No comments:

Post a Comment

"திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay

  "திரிஷா விவகாரம்" | நயினாருக்கு முன்பே தெரியுமா? KSR interview நேர்காணல் Part 1 | Trisha | Vijay Sangeetha issue | Vijay Vijay...