———————————————————
கட்அவுட், பேனர், அடிமையாக காலில் விழும் கலாச்சாரம், அடிக்கொரு போலீஸ் பாதுக்காப்பு, தனது பயணத்தின்போது வாகன போக்குவரத்து நிறுத்தம், பந்தாக்கள், தோரணைகள், வெட்டி கூப்பாடுகள், தகுதியற்றப் பட்டங்கள், வாய்மையற்ற பேச்சு, வியாபார ரீதியான அரசியல்,எல்லாமே துட்டு......
இப்படியான பாசாங்கு தொகுப்பே அரசியலுக்கு தகுதிகள், ஆனால் நான் குறிப்பிடுவது போல நேர்மையான மக்கள் நல அரசியலுக்கு உண்மையான தகுதிகள் திட்டமிட்டு மறுதலிக்க கூடிய நிலை, இதுதான் இங்குள்ள அரசியல் பிழை. இறை சக்தி வேறு, அதற்கு இணையான வாழ்ந்து முடிந்தவர்களுக்கு கோவில்கள் எழுப்புவது ஏன், தமிழகத்தில் திரை நடிகைக்கே 25 ஆண்டுகளுக்கு முன்னால் கோவில் கட்டிய மண் தானே இது.
இதற்கு மேல் ஊழலில் சிக்கியவர்கள் சிறைக்கு சென்றால் தவ வாழ்க்கை என்று சொல்வது. தீயாக வரும் தியாகத்தலைவியே என்பது போன்ற கூப்பாடுகள் எல்லாம் பைத்தியக்காரத்தனமாக தெரியவில்லையா, இதற்கு கூச்சப்படவேண்டாமா..?
உத்தமர் காந்தி நினைவு நாளான இன்று அவருக்கு ஈடாக கோவில், தவ வாழ்க்கை என தகுதியற்றவர்களை உத்தமர் காந்திக்கு நிகராக வெட்டிப் பட்டங்களோடு விழிப்பது......
நம்மை பெற்ற தாய்,தந்தை மறைந்த பின் அவர்களால் பெறப்பட்ட குடும்ப சொத்துகளும், அவர்கள் நமக்கிட்ட பெயரை இறுதிவரை வழக்கத்தில் கொள்ளவேண்டும். பெற்றோர்கள் வைத்த பெயரை அழைத்தால் அது இழிவானது என்று நினைத்து வேறொரு பாசாங்கு தனமாக உத்தமர் காந்தி போன்றோருவர்களுக்கு நிகராக வேறொரு பெயரில் வெட்டியாக கூப்பாடு போடுவது தான் மரியாதை என்று நினைக்கும் மக்களிடம் என்ன சொல்ல முடியும்.
பொது தளத்தில் நேர்மையாக உழைப்பவர்களும் ஒரு பக்கத்தில் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் வியாபார அரசியலில் பெரும்பான்மையோர் இருப்பதால் இந்த பிழையான காட்சிகளும், தோற்றப்பிழைகளும் கோவில் கட்டுவதும், சிறைக்கு சென்றால் தவ வாழ்க்கை என்பதும் பெற்றோர் பெயரை மாற்றி வேறு பட்டங்கள்,பெயர்கள் என போலித்தனமாக மதிப்பாக விழிப்பதை என்ன சொல்ல..?
மாசற்று மறைந்த நமது தலைவர்கள் அண்ணல் காந்தி, மாவீரர் நேதாஜி, ஜெயபிரகாஷ் நாராயணன், தமிழகத்தின் வ.உ.சிதம்பரனார் போன்ற பல ஆளுமைகள் எல்லாம் அவர்கள் பெற்றோர்கள் வைத்த பெயரோடு தான் வாழ்ந்து மறைந்தார்கள். அவர்களை அந்த பெயரில் இன்று அழைக்கின்றோம்.இவர்களுக்கு மட்டும் என்ன விதிவிலக்கு, இவர்கள் வானத்தில் இருந்து கீழே நேரடியாக குதித்தவர்களா? எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் உட்பட்டவர்கள் தானே இவர்களும், ஏன் போலித்தனமான விஷம் போல இங்கு பரவும் இந்த வாடிக்கை எதற்கோ..?
உத்தமர் காந்தி இருக்கும் டில்லி ராஜ்காட் விட சென்னையில் மறைந்த தலைவர்கள் உறங்கும் இடம் பெரிய மாண்புக்குரியது என்று உருவகப்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. எளிமையான நேர்மையான தமிழக தலைவரான வஉசிதம்பதரனார், ஓமந்துரார், குமாரசாமி ராஜா, ஜீவானந்தம் போன்ற பல ஆளுமைகளுக்கு இப்படிப்பட்ட நினைவிடங்கள் அமைக்கவில்லை என்பதுதான் மனதில் ரௌத்திரத்தை கிளப்புகிறது.
நம்மீது சாக்கடை நீர் விழாமல் சற்று தள்ளிதான் நிற்கவேண்டும். இன்று இதுதான் நிலை.வாய்மையே வெல்லும் என்ற தாரக மொழி அரசு பரிவாரத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும், ஆனால் அங்கு வாய்மை,நேர்மை, மெய்பொருள் மட்டும் இருக்காது. கோலங்களான அலங்கோலங்கள். இந்த சிறுமை கண்டு பொங்கி எழவேண்டாமா..?

No comments:
Post a Comment