Friday, February 5, 2016

Gail


கடலுக்கு அடியில் இருக்கும்  கண்ணுக்கு தெரியாத ஒரு மணல் திட்டுக்காக தமிழகத்திற்கு பயன் தரும் (சேது சமுத்திர திட்டம் ) ஒரு நல்ல திட்டத்தை  கடவுள் பெயரால் நிறுத்தி வைத்து இருக்கு! இந்த நாடு  ஆனால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லாத எரிவாயு பதிக்கும் திட்டத்தை விவசாய விழை நிலங்களை அழித்து    தமிழக விவசாயிகளுக்கு மிகவும்  பாதிப்பு என்று தெரிந்தும் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் மூலமாக நிறேவேற்றுகிறுது ஏன் என்று கேட்டால் இந்த திட்டம் நாட்டு வழர்சிக்கு நல்லாதாம்(  எந்த நாட்டுக்கு என்று புரிகிறதா?  இந்தியாவுக்கு)  தமிழ் நாடு இந்தியாவில் இல்லை என்று அவர்களே கூறுகிறார்கள்.   என்ன கொடுமை......,,!

Thursday, February 4, 2016

Gail

கெயில் குழாய் பறிப்புத் தீர்ப்பு - நடுநிலைத் தவறியது

 --------------------------------

இந்திய எரிவளி ஆணையம் (கெயில்) தமிழ்நாட்டில் குழாய் பதிக்கத் தடைபோடுவதற்குத் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை; அது போட்ட தடையை நீக்குகிறோம்; தாராளமாக வேளாண் நிலங்களில் குழாய் பதித்துக் கொள்ளலாம் என்று தலைமை நீதிபதி சி.எஸ். தாக்கூர் தலைமையில் நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, ஆர். பானுமதி ஆகியோரைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, 01.02.2016 அன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இத்தீர்ப்பின் தீய விளைவுகள் வருமாறு:

 

1 . நடுவண் அரசு நிலம் கையகப்படுத்தும்போது அல்லது தனது பயன்பாட்டிற்குக் குத்தகைக்கு எடுக்கும் போது அதைத் தடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

இந்த முடிவு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மாநில அதிகாரத்தைப் பறிப்பதாகும். மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள அதிகாரப் பட்டியலில், மாநில அரசு அதிகாரப் பட்டியலில் 18ஆம் எண் கொண்ட பிரிவு, நிலம் முழுக்க முழுக்க மாநில அரசு அதிகார வரம்பில் வருகிறது எனக் கூறுகிறது. வேளாண் நில உடைமைமையை மாற்றுவது (Alienation of Agricultural land) மாநில அதிகாரத்திற்குட்பட்டது என்று இப்பிரிவு கூறுகிறது. இதுபோல், இந்திய அரசு நில உரிமை மாற்றம் தொடர்பாக அதிகாரம் வழங்கும் ஒரு பிரிவு, நடுவண் அரசு அதிகாரப் பட்டியலிலும் இல்லை, பொது அதிகாரப் பட்டியலிலும் இல்லை.

 

நடுவண் அரசு நிறுவனங்கள் கனிமவளம், எரிவளி கொண்டு செல்ல - நிலம் குத்தகை எடுக்க அதிகாரம் வழங்கும் 1962-ஆம் ஆண்டுச் சட்டம் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது. அதையொட்டி இயற்றப்பட்ட 2012 சட்டமும் அரசமைப்புச் சட்ட அதிகாரப் பகிர்வுக்கு எதிரானது.

 

இந்த மாநில உரிமையை எடுத்துக்கூறி, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாடவில்லை. ஏனோ தானோ என்றுதான் தமிழ்நாடு அரசு இவ்வழக்கை நடத்தியது.

 

மேற்படித்தீர்ப்பு வந்த பிறகாவது இந்தக் கோணத்தில் தமிழ்நாடு அரசு தன் உரிமையை வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு போடும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை கொடுக்காமல் இருப்பது, தமிழ்நாட்டு உரிமையில் அவருக்கு அக்கறை இல்லை என்பதையே காட்டுகிறது.

 

 

தமிழ்நாட்டின் நில உடைமை மாற்றம் தொடர்பான அதிகாரம் நடுவண் அரசுக்கு இல்லை என்ற உண்மையை உச்ச நீதிமன்றம் தன்னாய்வாக எடுத்துக் கொண்டு, வேளாண் நிலங்களில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்கத் தடைபோட்டு தமிழ்நாடு அரசின் ஆணை செல்லும் என்று தீர்ப்பு வழங்கியிருக்க வேண்டும்.

 

2. தேசிய நலன் பெரிதா, உழவர்கள் நலன் பெரிதா என்றால் தேசிய நலன்தான் பெரிது என்றும் அந்த அளவுகோல்படி, வேளாண் நிலத்தில் எரிவளிக் குழாய் பதிக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் கூறியுள்ளது.

 

தேசிய நலன் என்பதற்குள் உழவர் நலனைச் சேர்க்காமல் எரிவளி நிறுவன வணிக நலனை மட்டும் தேசிய நலன் என்று உச்ச நீதிமன்றம் வரையறுப்பது நடுநிலை தவறிய ஒருபக்கச் சார்பு அணுகுமுறையாகும். மக்களுக்கு உணவளிக்கும் வேளாண் நிலங்களையும், உழவர்களின் உழவுத் தொழிலையும் அழித்து தொழில் துறையை வளர்க்கலாம் என்ற இந்திய ஆட்சியாளர்களின் பெருந்தொழில் நிறுவனச் சார்புக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் கடைபிடிக்கிறது என்பதை இத்தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது.

 

3. எரிவளிக் குழாய்கள் பதிக்க முதலில் அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு உழவர்கள் எதிர்த்தபின் வாக்கு வங்கி அரசியலுக்காக, அனுமதியை நீக்கி விட்டது என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்புரையில் விமர்சித்திருப்பது நீதித்துறையின் கூர்நோக்குரையாக (Observation) இல்லாமல், நீதித்துறையின் அரசியல் சாடலாக உள்ளது. தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு அரசாங்கத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. இதுபோன்ற அரசியல் குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றம் மீதான மதிப்பைத் தாழ்த்திவிடும்.

 

4. கேரளத்திலிருந்து தமிழ்நாடு வழியாக கர்நாடகம் செல்லும் எரிவளிக் குழாய்கள் தமிழ்நாட்டில் மட்டும்தான் வேளாண் நிலங்கள் வழியாகச் செல்கின்றன. கேரளத்தில் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை ஓரமாகவும், தொடர்வண்டிப் பாதை ஓரமாகவும் மட்டுமே குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. வேளாண் நிலங்களில் பதிக்கப்படவில்லை.

 

கேரளத்துக்கு நீதியும் தமிழ்நாட்டிற்கு அநீதியும் எனக் கெயில் நிறுவனம் செயல்படுவதைத் தட்டிக்கேட்டு அநீதியைத் தடுக்க வேண்டிய தனது கடமையை உச்ச நீதிமன்றம் செய்யத் தவறியது, அதன் நடுநிலை மீது வலுவான ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

5. இரண்டடி விட்டமுள்ள குழாய் ஒன்றரை அடி ஆழத்தில் புதைக்கப்படுகிறது. ஆனால் 66 அடி அகலத்திற்கு அதன் மேல் பரப்பை கெயில் எடுத்துக் கொள்கிறது. அந்த 66 அடிப் பரப்பில் ஒன்றரை அடிக்கு மேல் வேர்விடக் கூடிய எந்தப் பயிரையும் செய்யக்கூடாது. அந்த 66 அடி அகலப் பரப்பிலும் அதை ஒட்டியும் மரங்கள் இருக்கக்கூடாது; இருந்தால் வெட்டிவிட வேண்டும். புதைக்கப்பட்டுள்ள குழாய் சேதமடையாமல் பாதுகாக்கும் பொறுப்பு அந்த நில உரிமையாளரைச் சேர்ந்தது. ஏதாவதொரு வகையில் குழாய்க்கு சேதம் ஏற்பட்டால் அதற்கான பொறுப்பை அந்த உழவர் ஏற்க வேண்டும். இதனால் தமது நிலத்தில் சுதந்திரமாக வேளாண்மை செய்ய முடியாதது மட்டுமின்றி, அதன் 24 மணி நேரக் காவல் காரராகவும் அந்த உழவர் அல்லல்பட வேண்டும்.

 

 

இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் வீதிக்கு வந்து போராடித்தான் தமிழ்நாட்டு உரிமை – உழவர்களின் வேளாண் உரிமைகளைப் பாதுகாக்க முடியும். எரிவளிக் குழாய் பதிக்கப்படுவதைத் தடுத்து ஏழு மாவட்ட உழவர்களின் வேளாண்மையைப் பாதுகாக்க தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுப் போட வலியுறுத்துவோம். அவேவேளை ஏழு மாவட்டங்களில் குழாய் பதிக்காமல் தடுக்க இலட்சக்கணக்கான மக்கள் வேளாண் விளை நிலங்களில் அணிவகுப்போம்!

 

 

#gail #gailsupremecourtorder #ksrpost

Wednesday, February 3, 2016

அறிவுஜீவிகளின் EPW - Economic & Political Weekly

There is no reason why a so-called intellectual journal like the EPW cannot mean, or should not be, different things to different people at different points in time.


அறிவுஜீவிகளின் பைபிள் என்று அழைக்கப்படும் Economic & Political Weekly ஐ தொடர்ந்து 1982 லிருந்து சந்தாதாரராகவும், வாசகராகவும் இருந்து வருகிறேன். இன்றைக்கு அதனுடைய ஆசிரியர் திரு. ராம் மனோகர் ரெட்டி இந்த இதழை தன்னுடைய சகாக்களோடு நடத்தி வருகின்றார். குறிப்பாக இந்த இதழ் கடந்த காலத்தில் மறைந்த கிருஷ்ணராஜு என்ற ஆளுமை இந்த இதழை பல சிரமங்களுக்கு மத்தியில் நடத்தினார். இந்த இதழ் வெளியாகி 50 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்டன. 1949ல் துவக்கப்பட்டது.

சச்சின் சௌத்ரி இதன் நிறுவன ஆசிரியர் ஆவார். அதன்பின் 35 ஆண்டுகள் கிருஷ்ணராஜு ஆசிரியராக இந்த இதழை நடத்தி வந்தார். பல பொருளாதார சுமைகள் இருந்தாலும் இந்த இதழ் வெளிவந்துகொண்டிருப்பது ஒரு தவமாக சிலர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் ஆகும். அற்புதமான ஆய்வுக்கட்டுரைகள் வெறும் பொருளாதாரம் அரசியல் மட்டுமல்லாமல் மனித உரிமைகள், சமூகப் பிரச்சினைகள், அறிவியல் ஆய்வுகள் எனப் பல வகையான அழுத்தமான ஆழமான ஆய்வுப்பூர்வமான கட்டுரைகள் இந்த இதழில் வெளிவருகின்றன. இந்த இதழை சற்று கவனமாகப் படித்தால்தான் சொல்லப்பட்ட கருத்துக்களை உள்வாங்க முடியும். மேம்போக்காக மற்ற வார இதழைப் போல்இதில் உள்ள பத்திகளை படித்தால் எதுவும் புரிதல் இல்லாமல் போய்விடும்.

பம்பாயிலிருந்து வெளிவருகின்ற இப்பத்திரிகை EPW Research Foundation 1993ல் நிறுவப்பட்டு அதற்கு இயக்குனரும், குழு உறுப்பினர்களும் உள்ளனர். தற்போது ஜெ. டென்னிஸ் ராஜகுமார் இயக்குனராக இருக்கின்றார். இதில் வரும் ஆய்வுக் கட்டுரைகள் அனைத்தையும் இந்த குழுவும் ஆசிரியர் குழுவும் இணைந்து பரிசீலனை செய்து வெளியிடுகின்றது. இதில் ஒரு கட்டுரை வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. இதில் ஒரு ஆங்கிலக் கட்டுரை வந்துவிட்டால் அந்த பத்தியாளருக்கு ஒரு பெரிய பெருமை.

இந்தியாவிலுள்ள அத்தனை அறிவுஜீவிகள் மட்டுமல்லாமல் விமர்சகர்கள், அரசியல் கட்சிகளின் கொள்கைகளை வகுப்பவர்கள், பேராசிரியர்கள் போன்ற அனைவரும் விரும்பிப் படிக்கின்ற வார இதழாகும்.

இந்த இதழ் முதலில் Economic Weekly என்று 1949ல் துவங்கப்பட்டு, 1966ல் Economic and Political Weekly என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் ஆகி இதன் பொன்விழா கொண்டாட்டம் துவங்கியுள்ளது. ஒரு பக்கம் நிதி பற்றாக்குறை, மற்றொரு பக்கம் வாரம் ஒரு முறை கனமான ஆய்வுகளோடு எளிமையான வண்ணமயமில்லாத தரமான கட்டமைப்போடு கொண்டுவரவேண்டிய கட்டாயம். இதற்கு மத்தியில் இந்த இதழை வெளிக்கொண்டுவரும் ஆசிரியர் குழுவுக்கும், நிர்வாகக் குழுவுக்கும் இந்தியர் அனைவரும் நன்றிக்கடன் பட்டவர்கள்.  50 ஆண்டு நிறைவாகும் EPW இன்றும் 100 ஆண்டுகளுக்கு மேல் தன் பணியை சிறப்போடு ஆற்ற நாம் அனைவரின் வாழ்த்துக்களோடு, அந்த இதழ் வர முடிந்த அளவு அந்த இதழின் சந்தாதாரராக இணைவோம் என்று முடிவெடுப்போம்.

The Economic and Political Weekly, published from Mumbai, is an Indian institution which enjoys a global reputation for excellence in independent scholarship and critical inquiry.

First published in 1949 as the Economic Weekly and since 1966 as the Economic and Political Weekly, EPW, as the journal is popularly known, occupies a special place in the intellectual history of independent India. For more than five decades EPW has remained a unique forum that week after week has brought together academics, researchers, policy makers, independent thinkers, members of non-governmental organisations and political activists for debates straddling economics, politics, sociology, culture, the environment and numerous other disciplines.

EPW is also unique because it is the one forum where there is an exchange of ideas across the social science disciplines - political scientists debate with economists, sociologists read what political scientists have to say, historians study what economists have to say and so on.

EPW, published by the Sameeksha Trust, a registered charitable trust, is the only social science journal of its kind in the world. Where other reputed journals publish either only comments on contemporary affairs or research papers, EPW is unique in that every week it publishes analysis of contemporary affairs side by side with academic papers in the social sciences. The only other similar publication which contains short comments and research output is Nature of the U.K., which covers the physical sciences.

EPW has been built over the decades with a shoe-string budget and has experienced considerable financial difficulties. It has grown to be what it is today because of the passion and selfless efforts of its staff, support from its contributors and goodwill from advertisers.

கெயில் கொடுமை

கேரளாவிலிருந்து கொங்கு மண்டலம் வழியாக; கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட விளை நிலங்கள் வழியாக கெயில் பைப்லைன் பெங்களூரு வரை செல்ல திட்டமிடப்பட்டது.  இந்த கேஸ் லைன் 137 தமிழகக் கிராமங்கள் வழியாக செல்லும், இதனால் மொத்தம் 5,000 ஏக்கர் விவசாய நிலங்களை நேரடியாகப் பாதிக்கும். 50,000 ஏக்கர் விளைநிலங்களில் மறைமுக பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகளின் கவலையாக உள்ளது.

தமிழகத்தில் ஏழு மாவட்டங்கள் வழியாக கெயில் எரிவாயு எடுத்துச் செல்ல 2012ல் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராடினார்கள்.  இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து 2014ல் தடையும் விதிக்கப்பட்டு இப்போது விவசாயிகளுக்கு எதிராக தீர்ப்பு வந்துவிட்டது. இது ஒரு வேதனையான விடயம். விவசாயம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலும் பாதிக்கப்பட்டு மக்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையும் எதிர்காலத்தில் ஏற்படலாம்.

இத்தீர்ப்பின்படி கெயில் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிவிட்டது.  அதுவும் சந்தை விலையில் 40% நஷ்ட ஈடு விவசாயிகளுக்கு கொடுத்தால் போதும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பு சொல்வது மேலும் விவசாயிகளை பாதிக்கும். இது இவ்வட்டார மக்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். மாநில அரசுக்கு இதில் உரிமை கிடையாது என்றும், கெயில் குழாய் பதிக்கப்படும் விளைநிலங்களில் குழாயில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்கு விவசாயிகள் தான் பொறுப்பு என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டது வேதனையான விஷயம்.

கேரளாவில் சாலைகளின் ஓரத்தில் பதிக்கப்படும் குழாய்கள் இங்கே மட்டும் விளை நிலங்களில் பதிக்க முற்படுவது ஏன்?

உதாரணமாக ஒரு விவசாயிக்கு 2 ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்து கொள்ளுவோம், அந்த நிலத்தின் நடுவில் இந்த குழாய்கள் சென்றால், அந்த குழாய்களின் மீது அந்த விவசாயி நீர் வாய்க்கால்களை கொண்டு செல்ல கூடாது.

எரிவாயுக்குழாய் பதிக்கும் வேலைகளின் போதும், கனமான குழாய்களைத் தூக்கிக் கொண்டு கிரேன் உள்ளிட்ட கனரக வாகனங்கள் விளைநிலங்கள் வழியே செல்லும்போதும், பராமரிப்புப் பணிகளின் போதும் விளை நிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும்.

எரிவாயுக்குழாய்  இடப்படும் இடங்களில் இருந்து 20 மீட்டர் வரை இருபுறமும் மரங்களோ வேறு கட்டிடங்களோ இருக்கக் கூடாது, குழாய்களுக்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் விவசாயிகளுக்குக் கடுமையான தண்டனை போன்ற பல கடுமையான விதிமுறைகள் விவசாயிகளை கொந்தளிக்கச் செய்துள்ளது.

கேரளாவில் இருந்து பெங்களூர் செல்வதற்கு சம்பந்தமே இல்லாமல் சுற்று வழியான தமிழகம் வழியாக 310 கி.மீ எரிவாயுக்குழாய் பதிக்கும் திட்டத்திற்கு கெயில் நிறுவனத்தைக் கண்டித்து போராட்டங்கள் வெடித்தன. குழாய்களை விளைநிலங்கள் வழியாகப் பதிக்காமல் நெடுஞ்சாலை வழியாகப் பதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அந்த வழக்கு சரியான தீர்வு கிடைக்காததால் உச்சநீதிமன்றத்திற்கு மேல் முறையீடாக தாக்கல் செய்யப்பட்டது.  இதில்தான் விவசாயிகளுக்கு விரோதமான தீர்ப்பை வழங்கப்பட்டுள்ளது.  இதற்குமேல் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு செய்யவேண்டியதுதான் முக்கிய கடமை மட்டுமல்லாமல் அடுத்தகட்ட நகர்வும் கூட.

எண்ணூர்-மதுரை 615 கி.மீ. எரிவாயு குழாய் திட்டமும் நடைமுறைப்படுத்த பணிகள் துவங்கியுள்ளன. திருவள்ளூர்-காஞ்சிபுர மாவட்ட விவசாய நிலங்களில்தான் குழாய்களை பதிக்க ஆரம்ப பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ஏரி மாவட்டமான ஒருங்கிணைந்த செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயமே அழிந்துவிடும். படிப்படியாக இத்திட்டம் விளைநிலங்கள் வழியாக விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மதுரை வரை பாதிப்பை ஏற்படுத்தும் இந்த பைப்லைன் திட்டமும் வர இருக்கிறது.

இம்மாதிரியான கேஸ் பைப்லைன் பிரச்சினை ஆந்திராவில் ஏற்பட்டது.  கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மாமிடிகுடுரு என்ற கிராமத்தில் விஜயவாடா அருகில் உள்ள லான்கோ கொண்டபள்ளி அனல் மின் நிலையத்திற்கு எரிவாயு கொண்டு செல்லும்போது 4 மீட்டர் ஆழத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்த இந்த பைப்லைன்கள் துரு ஏறி தீப்பற்றி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சிலர் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டனர். இன்னும் அந்த நோயிலிருந்து மாள முடியவில்லை.

2012 ஜூன் 28 அன்று அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு தீ ஜூவாலைகளாக எரிந்து அப்பகுதியையே நாசப்படுத்தியது. இப்படியெல்லாம் விபரீதங்கள் விளையக்கூடிய நிலைமையும் கேஸ் பைப் லைன்களில் ஏற்படுவதுண்டு. இந்த விபத்துக்கு முன்பே அந்த கிராம மக்கள் இது குறித்து நிர்வாகத்திற்கு தெரிவித்தபோது நிர்வாகம் எந்த முயற்சியும் எடுத்துக்கொள்ளாததால் இந்த விபத்து ஆந்திராவில் நடைபெற்றது. இந்த விபத்தினால் மக்களே ஆர்ப்பரித்து கெயில் அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.  இப்படியாக விபத்தை மக்களே போராடியதைப் போன்று கொங்கு மண்டலமும் போராட்ட களமாகிவிடும் என்பதை நீதிமன்றங்களும் ஆட்சியாளர்களும் உணரவேண்டும். பாதிப்பினால்தானே போராட்டம். அந்த பாதிப்பை உணராவிட்டால் என்ன மக்கள் நல அரசு? என்ன இயற்கையின் நீதி?

கொங்கு மண்டலத்தில் 5842 விவசாயிகளை பாதிக்கக்கூடிய வகையில் நடைமுறையில் உள்ள பி.எம்.பி. சட்டம் 2011ஐ திருத்த வேண்டும். இதில் மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.  இம்மாதிரி பைப்லைன் இணைப்புகள் சாலையின் ஓரத்தில்தான் மற்ற மாநிலங்களில் பதிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் ஊடே செல்லவேண்டிய அவசியம் என்ன?

மராட்டியத்தில் மஹிம்-தாசிர் எரிவாயுத் திட்டத்தை மகாநகர் கேஸ் நிறுவனம் வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே நெடுஞ்சாலை வழியாகவும்;  குஜராத்தில் அகமதாபாத் - பகோதரா மற்றும் காந்திநகர் - சார்கட்ஜ் எரிவாயுத் திட்டத்தை அதானி கேஸ் நிறுவனம் நெடுஞ்சாலை வழியாகவும்; உத்திரப்பிரதேசத்தில் இந்தியன் ஆயில் நிறுவனம் பரோனி -கான்பூர் நெடுஞ்சாலை வழியாகவும்;
குஜராத் மாநிலத்தில் ஓ.என்.ஜி.சி., ஐ.ஓ.சி.எல்., இந்தியன் ஆயில், ஜி.எஸ்.பி.சி. போன்ற நிறுவனங்கள் 500 கிலோ மீட்டர் தொலைவுக்கு அகமதாபாத் - வதோதரா நெடுஞ்சாலையில் குழாய் பதித்தும்தான் எரிவாயு எடுத்துச் செல்கின்றன.

தமிழக உரிமைப் பிரச்சினைகளை மட்டும் தொடர்ந்து கவனித்தால் உச்சநீதிமன்ற வழக்குகளில் நியாயங்கள் கிடைப்பதிலும் தாமதம். அப்படியே தீர்ப்பு வந்தாலும் எந்த பயனும் தமிழகத்திற்கு இதுவரை கிட்டியதில்லை.

காவிரியில் தீர்ப்பு வந்தது.  முல்லைப் பெரியாறில் தீர்ப்பு வந்தது. தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை நடக்கவிடாமல் உச்சநீதிமன்றம் தடுத்தது. மீனவர் பிரச்சினையும், கச்சத் தீவும் தீர்ப்புகள் வந்தபாடில்லை. சேது கால்வாய் திட்டமும் தடுக்கப்பட்டது. கூடங்குளம் அணுமின் திட்டத்திலும் போராட்டக்காரர்களுக்கு எவ்வித தீர்வும் உச்சநீதிமன்றத்தில் கிடைக்கவில்லை. குமரி மாவட்ட நெய்யாறு வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவை. கேரளாவில் பிரச்சினையாக இருக்கின்ற எண்டோசல்ஃபானுக்கும் தீர்வு எட்டப்படவில்லை. போபால் விஷவாயு வழக்கிலும் இழுபறி. இப்படியாக நீதித் துறையிலும் மக்களின் நலன் என்ற நிலை சட்டத்துக்கு அப்பாலும் சிந்தித்து தீர்ப்புகள் வரவேண்டும்.

தமிழகத்தில் கூடங்குளம் பிரச்சினை, தேனியில் நியூட்ரினோ, தஞ்சை டெல்டாவில் மீத்தேன், சாயம் மற்றும் தோல் கழிவுகள் தேக்கம், பெங்களூர், கேரளா குப்பைகளை தமிழக எல்லைகளில் வந்து கொட்டுவது போன்று பல சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கும் போராடியும், தமிழகம் ஒரு குப்பைக் கூடை என்று மத்திய அரசும் பன்னாட்டு நிறுவனங்களும் நினைக்கின்றன.  சேலம் இரும்பாலையிலும் பிரச்சினை, நெய்வேலி பிரச்சினை, ஊட்டி போட்டோ ஃபிலிம் ஆலை சிக்கல், நீர் ஆதாரங்கள் பிரச்சினைகள், அண்டை மாநிலங்களோடு கண்ணகி கோட்ட பிரச்சினை, பழவேற்காடு பிரச்சினை, ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, நாசமாக்கப்பட்ட காட்டு வளங்களும், கடல் வளங்களும், அன்னிய குளிர்பானங்கள்,  என ஒரு நீண்ட பட்டியலான தமிழகத்தின் உரிமை ஆதார பிரச்சினைகள் நிறைவேற்றாமலும், சிக்கலிலும், நீதிமன்றம் மற்றும் மத்திய அரசின் கிடப்பிலும் உள்ளன.

உரிமைகளை பறிப்போம். மக்களிடம் அதிகாரங்களை காட்டுவோம் என்பது நீதியல்ல.  அநீதி. நீதிமன்றங்கள் அரசுகளால் ஏற்படும் அநீதிகளுக்கு பரிகாரம் காணும் ஜனநாயக வழிபாட்டுத் தலங்கள். அங்கும் நீதி மறுக்கப்பட்டால் என்ன செய்ய?

கெயில் கொடுமையால் பாதிக்கப்பட்ட கொங்கு மண்டல விவசாயிகள் இனி எங்கு சென்று தங்கள் வேதனைக் குரலை முறையிடுவார்களோ? அப்பாவி விவசாயிகளும் இரண்டாம்தர குடிமக்களாகிவிட்டார்களே.

விதியே! விதியே! தமிழச் சாதியை என்செயக் கருதி யிருக்கின் றாயடா? என்ற எட்டயபுரக் கவியின் வார்த்தைகள்தான் நினைவுக்கு வருகின்றது.

மங்கை சூதகமானால் கங்கையில் மூழ்கலாம்.,கங்கையே சூதகமானால் எங்கே போவது ?

http://ksr1956blog.blogspot.in/2015/08/shale-gas-and-coal-bed-methane-in.html
http://ksr1956blog.blogspot.in/2015/02/blog-post_39.html

Tuesday, February 2, 2016

Gail pipelines 
Thanks to Sundrarajann;விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய்களை பதிக்கும் திட்டத்திற்கு உச்ச நீதி மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. அதுவும் சந்தை விலையில் 40% சதவீதம் குடுத்தால் மட்டும் போதும் என்று சொல்லி உள்ளது. இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது, இது மக்கள் விரோத தீர்ப்பு. 

மாநில அரசுக்கு உரிமை கிடையாது என்று வேறு சொல்லி உள்ளது. அந்த விளைநிலங்களில் குழாயில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதுக்கு அந்த விவசாயிகள் தான் பொறுப்பு.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் மாமிடிகுடுரு என்கிற இடத்தில் நடந்த கெயில் குழாய் விபத்து 18 உயிர்களை காவு கொண்டதை நினைவில் கொள்ள வேண்டும். 

அருகில் உள்ள கேரளாவில் சாலைகளின் ஓரத்தில் பதிக்கப்படும் குழாய்கள் இங்கே மட்டும் விளை நிலங்களில் பதிக்க முற்படுவது ஏன்? 

உதாரணமாக உங்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருப்பதாக வைத்து கொள்ளுவோம், அந்த நிலத்தின் நடுவில் இந்த குழாய்கள் சென்றால், அந்த குழாய்களின் மீது அந்த விவசாயிகள் நீர் வாய்க்கால்களை கொண்டு செல்ல கூடாது. இந்த திட்டத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலத்திற்கு சந்தை விலையில் 40% மட்டும் குடுத்தால் போதும் என்று வேறு சொல்லி இருக்கிறது. 

என்ன தான் சொன்னாலும் இவர்கள் காதில் விழாதா ?#gailpipelines

Monday, February 1, 2016

இன்று நண்பர் பழ. கருப்பையாவுடன் சந்திப்பு

இன்று (1.2.2016) நண்பர் பழ. கருப்பையா அவர்களை பத்து ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தேன். அவருடன் கிட்டத்தட்ட 1974 லிருந்து அரசியல் ரீதியாகவும், நட்பு ரீதியாகவும் தொடர்பு இன்று வரை உள்ளது.  1972 கால கட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், அவரை காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொண்டார்.  ஆனால் ஏனோ அவர் போட்டியிடமுடியாமல் போய்விட்டது.  அவரது மகாபாரத நூலை சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெளியிடும்போது கலந்துகொண்டதெல்லாம் இன்றைக்கும் நினைவில் உள்ளது.  நீண்டகால அரசியல் தளத்தில் இயங்கியவர்.  கருத்துரிமைக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லாத நிலையில் அவருடைய வீடு தாக்கப்பட்டுள்ளது.









வேதனையை அறுவடை செய்யும் விவசாயி

இன்றைய (01-02-2016) தினமணி நாளிதழில் கடந்த காலத்தில் நடந்த விவசாயிகள் மற்றும் மறைந்த விவசாயிகளின் ஒப்பற்றத் தலைவர் நாராயணசாமி நாயுடு பற்றியும் “வேதனையை அறுவடை செய்யும் விவசாயி!” என்ற தலைப்பில். தலையங்க பக்கத்தில் வந்த எனது பத்தி.

வேதனையை அறுவடை செய்யும் விவசாயி


- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற வட மாநிலங்களில் துயரமான விவசாயிகள் தற்கொலைகள் கடந்த காலங்களில் நடந்தன.  இன்றைக்கு தமிழகத்தில் 40 விவசாயிகள் வரை கடன் தொல்லையாலும், வாழ முடியாத என்ற விரக்திக்கு தள்ளப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக 40 விவசாயிகளுக்கு மேல் தற்கொலை செய்துகொண்டனர்.  விவசாயிகள் தற்கொலை தமிழகத்தையும் எட்டி பார்க்கின்ற கொடுமையான நிலை.  விவசாய போராட்டத்திலும், அரசு காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டால் இதுவரை 70 விவசாயிகள் சுடப்பட்டு கொல்லப்பட்டனர்.  விவசாயிகள் போராடியும், அவர்களின் நியாயமான கோரிக்கைகளான விவசாய விளைபொருட்களுக்கு விலை இல்லை. விவசாய இடுபொருட்களின் விலை அதிகரித்துவிட்டது. விவசாயத்துக்கு கடன் வாங்கி சாகுபடி செய்தாலும் வறட்சியால் பயிர்கள் வாடிவிட்டன.  வெள்ளந்தி அப்பாவி விவசாயிகளை காப்பாற்ற வழி இல்லாத நிலை. விவசாயிகள் போராடி பார்த்தனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு நீண்ட வரலாறு உண்டு. விவசாயி உரிமை கேட்டு, ஆங்கிலேயர் ஆட்சி காலத்திலேயே இந்தியாவில் முதல் முதலாக நெல்லை மாவட்ட கடம்பூர் விவசாயி துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது வரலாறு.  காந்தியடிகளுக்கு விடுதலை போராட்டத்திற்கு அடிப்படையாக இருந்தவர்கள் விவசாயிகள் என்பதை மறுக்க முடியாது.  அவரி போராட்டம், கேரளாவில் மாப்புளா விவசாயிகள் போராட்டம் விடுதலைப் போராட்டங்களின் அங்கமாகவே திகழ்ந்தது. 

தமிழகத்தில் விவசாயிகள் 1950லிருந்து போராடினாலும், 1967ல் முதல் முதலாக கோவை ஜில்லா விவசாய சங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.கே. சுந்தரம் அவர்கள் தலைமையில் துவக்கப்பட்து.  வி.கே. பழனிச்சாமி கவுண்டர் தலைவராகவும், என்.எஸ்.எஸ். மன்றாடியார் இணைத் தலைவராகவும், பி.ராமசாமி நாயுடு பொருளாளராகவும், சி.நாராயணசாமி நாயுடு செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.  இந்த அமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த கரூர் முத்துசாமி கவுண்டர், நீலகிரி நஞ்சா கவுடா, சாத்தூர் ராமமூர்த்தி, குலாம் மொய்தீன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த கோவை ஆர். கிருஷ்ணசாமி கவுண்டர், தென்காசி ஏ.ஆர். சுப்பையா முதலியார், சாத்தூர் சங்கிலி மற்றும் மதுராந்தகம் முத்துமல்லா ரெட்டியார், டாக்டர் சிவசாமி, டாக்டர் கொண்டல்சாமி, வி.கே. ராமசாமி, என்.எஸ். பழனிச்சாமி, கே. வரதராஜன், பால் பாண்டியன் போன்றோர் ஆரம்ப கட்டத்தில் விவசாய சங்கத்தை தமிழ்நாடு முழுவதும் எடுத்துச் சென்று விவசாயிகள் மத்தியில் எழுச்சியை உருவாக்கினர்.

குறிப்பாக சி. நாராயணசாமி நாயுடுவின் பங்கு விவசாயிகள் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாகும். அவருடைய தலைமையில் விவசாயப் போராட்டம் வீறுகொண்டு எழுந்தது.  கோவை செங்காலிப் பாளையத்தில் 6.2.1925ல் விவசாய குடும்பத்தில் பிறந்த நாராயணசாமி நாயுடு, விவசாயிகளின் உரிமை வேட்கைக்காக, இளைஞராக இருக்கும்பொழுதே போராட துணிந்தவர்.  1950களின் தொடக்கத்தில் விவசாயத்திற்கு மின்சாரம் வழங்குவது 16 மணி நேரத்திலிருந்து 4 மணி நேரமாக குறைக்கப்பட்டது.  பம்பு செட்களின் மூலம் பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியவில்லை. 1957ல் இதை எதிர்த்து நாராயணசாமி நாயுடு தலைமையில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி 16 மணி நேரம் விவசாயத்திற்கு மின்சாரத்தை பெற்றுத் தந்தார்.  அதன் பின் மின் கட்டண உயர்வை எதிர்த்தும் போராடினார்.  கடன் வசூல், ஜப்தி நடவடிக்கையை எதிர்த்தும் ஐயா நாராயணசாமி பல போராட்டங்களை நடத்தியதுண்டு. இந்தப் போராட்டங்கள் விளைவாக தமிழகமே விவசாயிகளை பார்த்தது. கோவை, கோவில்பட்டி போன்ற இடங்களில் கட்டைவண்டி போராட்டங்கள் இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.  விவசாயிகள் போராடியதால் நகரத்தில் வாழ்பவர்களுக்கு பாலும், காய்கறிகளும் செல்லாமல் நகரவாசிகள் ஒரு வார காலம் அப்போது சிரமப்பட்டதெல்லாம் செய்திகள். இந்தப் போராட்டங்கள் குறித்து, நியூ யார்க் டைம்ஸ் இந்த மாட்டு வண்டிகளை பார்த்து "இந்திய விவசாயிகளின் பாட்டன் டாங்குகள்" என்று அப்பொழுது எழுதியது. 

அந்த காலகட்டத்தில் நாராயணசாமி நாயுடுவின் போராட்டத்தில் அடியேனும், விவசாய குடும்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்களையும் ஈடுபடுத்திய நினைவுகளும் மனதில் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் விவசாயிகளுடைய கடன் தொல்லைக்கு வருவாய் துறை அதிகாரிகள், விவசாயிகளின் வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களையும், கதவுகளையும் 1975 அவசரநிலை காலத்தில் பிடுங்கி சென்றதை எதிர்த்து வழக்குத் தொடுத்து ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்தியும், கடன் நிவாரணத்தையும் விவசாயிகளுக்கு அடியேன் பெற்றுத் தந்தது மனதிற்கு ஓர் ஆறுதலான செய்தி.  நாராயணசாமி நாயுடு சென்னைக்கு வந்தாலோ, கோவில்பட்டி பக்கம் வந்தாலோ அவருடன் இருப்பது வாடிக்கை. இன்றைக்கும் கோவில்பட்டி பயணியர் விடுதிக்கு செல்லும்போது 1984 தேர்தலின்போது, 21.12.1984ல் அதே பயணியர் விடுதியில் உள்ள வடக்கு அறையில் ஐயா நாராயணசாமி மாரடைப்பால் காலமானார். அங்கு செல்லும்போதெல்லாம் அவருடைய நினைவுகள் வந்துவிடும்.  கோவில்பட்டி நகரில் ஐயா நாராயணசாமி அவர்களுக்கு சிலை எடுக்கும் பணிகளையும் கவனித்து வருகின்றேன்.

ஐயா அவர்கள் ஜாதி, மதம், அரசியலுக்கு அப்பால் இந்த விவசாய அமைப்பை எடுத்து செல்ல விரும்பினார். ஒரு கட்டத்தில் மற்றவர்களுடைய வேண்டுகோளை மறுக்க முடியாமல் 1982ல் உழவர் உழைப்பாளர் கட்சியைத் துவக்கினார்.  அதே ஆண்டு செப்டம்ரில் பெரியகுளம் நாடாளுமன்ற இடைத்தேர்தலிலும், 1984 செப்டம்பர் தேர்தலிலும் போட்டியிட்டார்.  இந்த கட்சியைவிட தமிழக விவசாயிகள் சங்கம்தான் எனக்கு நிறைவாக உள்ளது என்று அவர் சொன்னதை கேட்டுள்ளேன். தமிழக விவசாயிகள் சங்கமும், அதன் போராட்ட விவரங்கள் குறித்தும் நான் எழுதிய நூல் விரைவில் வெளிவர உள்ளது. 

விவசாயிகள் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுடைய தியாகத்தை நினைத்துப் பார்க்கவேண்டும். கோவை பெருமாநல்லூர், மல்லேகவுண்டபாளையம், அய்யம்பாளையம், சேலம் மாவட்டம் பெத்தநாயக்கம் பாளையம், சாத்தூர் அருகே உள்ள வெத்தலையூரணி, விருதுநகர் அருகே உள்ள மீசலூர், பாலவநத்தம், வேடசந்தூர், கோவில்பட்டி அருகே உள்ள அப்பணேரி, குருஞ்சாக்குளம், மதுரை அருகே உள்ள நொச்சோடைப்பட்டி, வேலூர் அருகே உள்ள ஒருகத்தூர், விருதுநகர் அருகே உள்ள வாகைகுளம், உடுமலைப்பேட்டை, திருத்தணி அருகே உள்ள கண்டிகை, விழுப்புரம் அருகே உள்ள வீரப்பெருமாள்புரம் போன்ற இடங்களில் போராடிய விவசாயிகள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். கோவில்பட்டி நகரில் மட்டும் 1970, 1991 ஆகிய வருடங்களில் இரண்டு முறை துப்பாக்கிச்சூடு நடந்தது.  மொத்தம் இதுவரை துப்பாக்கிச்சூட்டுக்கு பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 70 வரை தியாகிகளின் பட்டியல் இடம்பெறுகிறது.

நாட்டின் முதுகெலும்பு விவசாயி. நாட்டின் தொழில் விவசாயம் என்றாலும், விவசாயிகளினுடைய பாதிப்பையும், பாடுகளையும், ரணங்களையும் தீர்க்கப்படவில்லை என்பது நீண்டகால குற்றச்சாட்டாகும்.  விவசாய முதல்வர் ஓமந்தூரார், விவசாயிகளின் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்தார். அவர் நீண்டகாலம் ஆட்சியில் இருக்க முடியவில்லை.  ஜெய் கிஷான், ஜெய் ஜவான் என்று சொன்ன சாஸ்திரியும், கிஷான் தலைவர் சௌத்ரி சரண்சிங்கும் பிரதமராக நீண்டகாலம் நீடிக்கவும் முடியவில்லை.  விவசாயிகளுக்கு திமுக ஆட்சியில் இலவச மின்சாரமும், 7000 கோடி கூட்டுறவு கடன்கள் தள்ளுபடியும், உழவர் சந்தை திட்டமும் நடைமுறைக்கு வந்தது.

பசுமை புரட்சி என்று விவசாயத்தில் 1960 காலத்தில் புகுத்தப்பட்ட திட்டம் விவசாயத்தை பாழ்படுத்துகின்ற திட்டமாகத்தான் பிற்காலத்தில் தெரியவந்தது.  மேலைநாட்டு உதவிகளை கொண்டு செயலுக்குவந்த இந்த நடவடிக்கை நம்முடைய மரபு ரீதியான விவசாயத்தை பாழடித்து விவசாய நிலங்களின் வீரியமும், விளைபொருட்களில் நச்சுப்பொருட்களும் சேர்ந்து நம்முடைய விவசாயத்தை நாசப்படுத்தியது. இன்றைக்கு வழங்கப்படுகின்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளும் மிகவும் ஆபத்தானவை.  இயற்கை விவசாயம் முற்றிலும் மாற்றப்பட்டு, தவறான அணுகுமுறையை நோக்கி நம்முடைய விவசாயத்தை அரசுகள் எடுத்துச்சென்றது மன்னிக்க முடியாத குற்றமாகும்.

தற்போது தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலை என்ற செய்திகள் வருவது வேதனையையும் கவலையையும் தருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு விலை இல்லை. நெல்லுக்கு விலை இல்லை.  நோயினால் தென்னை விவசாயம் பாதிக்கப்படுகிறது.  இப்படி ஒவ்வொரு விவசாய சாகுபடி பயிருக்கும் சிக்கலும், இடையூறுகளும் உள்ளன.  விவசாய பணிகளுக்கு முன்பு மாதிரி பணியாளர்களும் கிடைக்காமல் விவசாயம் முடங்கிவிட்டது.  100 நாள் வேலை திட்டம் அறிவிப்பால் விவசாயம் பாதித்தது.  இப்படியான விவசாயிகள் சந்திக்கின்ற அன்றாட பிரச்சினைகளால் ஏதோ இருக்கிற நிலத்தில் முடிந்தவரை விவசாயம் செய்வோம் என்ற முடிவுக்கு விவசாயிகள் வெள்ளந்தித்தனமாக வந்துவிட்டனர்.  விவசாயத்தையும், விவசாய விளை நிலங்களையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்துகொண்டு வருகின்றன.  சிறப்பு பொருளாதார மண்டலங்கள் என்று அரசும் விவசாய நிலங்களை கையகப்படுத்திக்கொண்டு வருகின்றது. 

விவசாயிகளே! உங்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டுகோள்.  எவ்வளவு துயரங்கள் வந்தாலும், உங்கள் முன்னோர் விட்டுச்சென்ற நிலத்தை யாருக்கும் விற்காதீர்கள்.  அதுதான் எதிர்கால வாழ்க்கை.  மற்ற பொன் பொருளைக் காட்டிலும் உயர்ந்து நிற்கப்போவது நம்முடைய மரபு ரீதியான விவசாய நிலங்கள் மட்டுமே! அதை பாதுகாக்க வேண்டும்.

விவசாயிகளே! ஒற்றுமையோடு, கண்ணியத்தோடு உங்களுடைய கோரிக்கைகளை வைத்து போராடுங்கள். வெற்றி உங்களை நோக்கி வரும்.  விவசாய தற்கொலை என்பது நமக்கு உகந்தது அல்ல.  மானமுள்ள வெள்ளந்தி ஜனங்களான நாம், விவசாய உரிமைகளுக்காக ஐயா நாராயணசாமி வழியில் போராடி வெற்றியை பெறுவோம் என்ற நம்பிக்கையோடு விவசாயத் தொழிலை விடாமல் எந்த சிரமங்கள் இருந்தாலும் எடுத்துச்செல்வோம் என்று சூளுரைப்போம்.  இரத்தம், வியர்வை சிந்தினாலும் வேதனையை அறுவடை செய்கிறோம் என்று சிந்திக்காமல், விவசாயத்தை எடுத்துச் சென்று நாட்டுக்கு உணவை படைப்போம்.


AUG 27