Wednesday, November 25, 2015

கரிசல்காட்டு நல்லெண்ணெய் பற்றி கி.ரா



தமிழ் இந்துவில் (24-11-2015) கி.ரா அவர்கள் எழுதும் “மனுசங்க” தொடரில், நல்லெண்ணெய் பற்றி சிலாகித்துள்ளார். நல்ல எண்ணெய் என்பது நல்லெண்ணெயாக மருவி விட்டது. கரிசல் காட்டில் விளைந்த எள்ளை செக்கில் ஆட்டி எடுக்கும் எண்ணெயின் சுவையே அலாதி. எண்ணெய் என்பதை எள்+நெய் என்று கி.ரா சரியாகக் குறிப்பிடுகின்றார். (இதேபோலத்தான் பெட்ரோலுக்கு தமிழில் கண்ணெய் என்று என்று பெயர். கல்+நெய் )


அக்காலத்தில் புதன் சனி இரண்டு நாட்களும் எண்ணெய் தேய்த்து, சிகைக்காய் தேய்த்துக்குளிப்பது ஒரு வாடிக்கை. இந்த குளியல் முடிந்த உடன் நல்லெண்ணெயில் சமைத்த கோழிக்கறியும், அப்படி இல்லை என்றால் சைவர்கள் சூடான மிளகு ரசத்தையும் சாப்பிடுவது வாடிக்கை.

தேங்காய் எண்ணெய் அதிகமாகப் பயன்பாட்டில் அப்போது இருக்காது, எள்ளில் ஆட்டும் நல்லெண்ணெயும், நிலக்கடலையில் ஆட்டும் கடலை எண்ணெயும் தான் அப்போது சமையலுக்கும் உடலில் தேய்க்கவும் பயன்படுத்துவதுண்டு. கி.ரா தன்னுடைய தொடரில் சொன்ன கருத்துகள் பின்வருமாறு...

“போலய்யா தாத்தாவுக்கு மட்டும் இவ்வளவு வயசாகியும் காதோரம் கூட ஒரு முடியும் நரைக்கவில்லை. அவரிடம் இன்னொரு அதிசயம் தலையில் சொட்டு எண்ணெய் வைத்துக்கொள்ள மாட்டார். சனி, புதன் எண்ணெய் தேய்த்தும் தலை மூழ்கவும் மாட்டார்.

தலைமுடி அதிகமாக இருப்பவர் களுக்கு ஏகப்பட்ட நல்லெண்ணெய் செல்லும். இந்தப் பெரியக் கொண்டைத் தாத்தா சொல்லுவார்: ‘‘தலைக்குத் தேய்த்துக்கொள்ற எண்ணெய சோத்தில் விட்டுத் திங்கலாமே!’’ என்று.

கும்பா நிறைய்ய கம்மஞ்சோறு வைத்து அதன் மத்தியில் குழி செய்து கருப்பட்டியை நுணிக்கிப் போட்டு நிறைய்ய நல்லெண்ணெய்யை விட்டு குழப்பித் தொட்டுத் தொட்டு தின்பது என்கிற வழக்கம் இருந்தது.

வேற தொடுகறி எதுவும் வேண்டாம். வீட்டில் உள்ள ஆண், பெண்கள், வேலையாட்கள், குழந்தைகள் என்று நல்லெண்ணெய் புழங்கினால் ஓராண்டுக்குக் குடம்குடமாக எண்ணெய் செல்லுமெ.

அவர்களது காடுகளில் எள் விளைந்து வருவதினால்தான் ஈடுகொடுத்து முடிகிறது.

‘எண்ணெய்’ என்பதே எள்நெய் என்பதில் இருந்து வந்தது என்பார்கள் தமிழ்ப் படித்த பெரியவர்கள்.

மூதாதையர்களுக்கு அவர்கள் காலமான பிறகு எள்ளும் தண்ணியும் இடுவதில் இருந்தே எள்ளின் மகத் துவத்தை அறிந்துகொள்ளலாம்.

வீட்டைவிட்டு வெளியே அல்லது வெளியூர் கிளம்பிவிட்டால் செய்யும் முதல் காரியம் நல்லெண்ணெய் கிண்ணத்தை எடுத்து வைத்துக் கொண்டு, நுனிநகங்கள் மட்டும் முங்கத் தொட்டுத் தொட்டு முகம், கை, கால் என்று எண்ணெய் தெரியாமல் எண்ணெய் விட்டுக்கொள்ளுதல் என்கிற சடங்கை முடிக்காமல் கிளம்ப மாட்டார்கள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
25-11-2015

#நல்லெண்ணெய் #GinglyOil #KeeRa#KsRadhakrishnan‬ ‪#KSR_Posts

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...