Monday, November 23, 2015

நெஞ்சுக்கினிய நட்பும் - சில உரையாடல்களும்...


“பழைய புகை வண்டிகளும் சில நினைவுகளும்... - Steam Locomotive Trains (18-11-2015)” என்ற எனது பதிவை வாசித்து மயிலாடுதுறையிலிருந்து நண்பர் கருணாகரனும், தஞ்சையிலிருந்து திருநாவுக்கரசுவும், செம்பனார் கோவிலிருந்து சௌரிராஜனும், வழக்கறிஞர் சேத்தூர் ராஜேந்திரன் ஆகியோர் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து எழுதியதை செல்பேசியில் அழைத்துப் பேசினர்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்வுகளையும், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரி, கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி, தஞ்சை சரபோஜி கல்லூரி, திருச்சியில் புனிதஜோசப் கல்லூரி, ஜமால் முகம்மது கல்லூரி, நேஷனல் கல்லூரி என்று அரசியல் பணிகளுக்காக இப்பகுதிகளில் புகைவண்டி நிலையங்களில் கிடைக்கும் புளிசாதத்தையும், தயிர்சாதத்தையும் உண்டு, ரயில்களில் அலைந்து திரிந்ததை நினைவுகூர்ந்தனர்.

நண்பர் தஞ்சை திருநாவுக்கரசு, “கே.எஸ்.ஆர் இன்னைக்கும் 1999ல் கல்கி இதழில் (18-07-1999) வெளியான உங்கள் பேட்டியைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன். என்னுடைய மகனும், மகளும் அடிக்கடி அதை எடுத்துப் படிப்பதும் உண்டு. இவ்வளவு பணிகள் செய்கிறீர்களே! என்ன அங்கீகாரம் கிடைத்தது. உங்கள் உழைப்பு வீணாகிவிட்டதே” என்று வேதனையோடு சொன்னார்.

அவரிடம் நான், திருநாவுக்கரசு இதில் வேதனைப்படுவதற்கு ஒன்றுமில்லை. உச்சநீதிமன்றம், உயர்நீதி மன்றங்களில், நதிநீர் இணைப்பு, கண்ணகி கோவில் பிரச்சனை, தேர்தல் சீர்திருத்தம், வீரப்பன் வழக்கில் அப்பாவித்தமிழர்களை கர்நாடகா சிறையிலிருந்து மீட்டது, 1970களில் விவசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கைகளைத் தடுத்தது, சுற்றுச்சூழல் பிரச்சனைகளில் கூடங்குளம் அணு உலை, ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, மனித உரிமைப்பிரச்சனைகள் என 20க்கும் மேலான பொதுநல வழக்குகளை நடத்தி தீர்வுகளையும் எட்டியுள்ளேன்.

1993கட்டத்தில் ஐ.நா மன்றத்தில் வேலைகள் கிடைத்தது. அந்நேரம் பணியில் சேர்ந்திருந்தால் உலக அளவில் அங்கிகாரம் கிடைத்திருக்கும். சகாக்கள் பத்துபேருக்குமேல் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளாகவும் மற்றும் நீதிபதிகளாகவும் இருக்கின்றனர். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் நமக்கென்று ஒரு தளம் இருக்கின்றது என்று தொடர்ந்து செயல்படுகின்றேன் இதில் என்ன அங்கீகாரம் கிடைக்கவேண்டுமென்று கேட்டேன்.

வரலாற்று ரீதியாகப்பார்த்தால் தன் சொத்துகளை எல்லாம் விற்று, பொதுவாழ்கையில் துயரங்களை கண்டு, கிழிந்த கோட்டோடு கோவில்பட்டியில் வக்கீலாகப் பணியாற்றி, இறுதி காலத்தில் பிண்ணாக்கையும், பருத்திக்கொட்டையையும், எண்ணெயையும் விற்று பெரம்பூரிலும் வாழ்ந்த வ.உ.சியையும், நேர்மையான, பண்பான, சென்னை ராஜதானியின் முதல் பிரதமராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்றவர்களையும் நினைத்துப்பாருங்கள்.

உத்தமர் காந்தி, “நாயக்கர், நாயுடு, முதலியார்” என்று அழைக்கப்படும் இம்மூவர்களிடம் தான் தமிழகத்தில் சுதந்திரப்போராட்டத்தின் திட்டங்களும் முடிவுகளும் உள்ளன” என்று கூறினார். அப்படி அழைக்கப்பட்டவர்கள் யார் யாரென்றால் தந்தைப் பெரியார், சேலம் வரதராஜலு நாயுடு, திருவி.கலியாணசுந்தரனார் ஆகிய மூவராவர்.
இதில் சேலம் வரதராஜலு நாயுடு பற்றிய செய்திகளே இன்றைக்கு யாருக்கும் தெரியாது. சுதந்திரப்போராட்ட காலத்தில் இவர் செய்த தியாகங்கள் வெளியாகவில்லை. திரு.வி.கவின் நண்பர், வ.உ.சியின் தோழர், தமிழகத்தின் சுதந்திரப்போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர் என்ற பெருமைகளைக் கொண்டவர் வரதராஜலு நாயுடு.

தியாகி .சத்தியமூர்த்தி காமராஜருக்கு முன்னோடி, அவர்செய்த தியாகங்கள் இன்றைக்கு எத்தனைபேருக்குத் தெரியும். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு நாம் பொதுவாழ்வில் இருக்கமுடியாது. நிச்சயமாக இத்தனை ஆண்டுகள் நாம் இயங்கியதும், செய்த காரியங்களும் வரலாற்றில் பதிவுகளாக இருக்கும் என்பதை மட்டும் மனதில் நினைத்துக்கொள்ளுங்கள் திருநாவுக்கரசு என்றேன்.

43ஆண்டுகாலம் அரசியல் வாழ்கையில் நான் எடுத்துவைத்த நடவடிக்கைகள் எனக்குத் திருப்தியாக இருக்கின்றன. உங்களைப்போல நண்பர்கள் என்மீதுள்ள அக்கறையில் இப்படி கேட்கின்றீர்கள் என்று குறிப்பிட்டேன்.

பின்பு அவர் குறிப்பிட்ட 1999ல் கல்கியில் வெளிவந்த எனது பேட்டி வரலாற்றில் என்னுடைய ஆவணமில்லையா என்று அவருக்குச் சொன்னதும் கம்மிய குரலில் “நியாயம் என்னவென்று உங்களுக்குத் தெரியும். நான் கேட்கவேண்டும் என்று நீண்டநாளாக நினைத்தவை இவையெல்லாம்” என்று முடித்தார்.

இந்தப் பேட்டியிலே எதையும் எதிர்பார்க்காமல் என் கடமையைச் செய்துகொண்டிருக்கிறேன் என்றுதானே சொல்லியுள்ளேன். நமக்கு உதவியாக இருந்தவர்கள் முன்னாள் இன்னாள் என்று பதவிக்கு வந்தும்கூட இந்தப் பணிகளை ஆற்றியுள்ளார்களா? பதவிகள் முக்கியமில்லை. பொறுப்புகளும், கடமைகளும்தான் முக்கியம் பொதுவாழ்வில். பதவிகள் வரும் போகும். ஆற்றிய செயல்கள் காலம் கடந்தும் வரலாற்றில் நிலைக்கும்.

இதுகுறித்து என்னுடைய நான்கு தசாப்தத்திற்கு மேலான நினைவுகளிலிருந்து பதிவு செய்துகொண்டு வருகி்றேன். அந்த நினைவுகளில் நெடுமாறன் அவர்களோடு காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தது, பழைய காங்கிரஸ் இணைப்பு நிகழ்வு, இந்திரா காந்தி சிக்மகளூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டது, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தொடர்புகள், ஈழத்தமிழர் பிரச்சனைகள், பல்வேறு அரசியல் பிளவுகளையும் குறித்து இதுவரைக்கும் வெளிவராத செய்திகளைத் துணிந்து உண்மைகளைச் சொல்லும் வகையில் எழுதிக்கொண்டு வருகின்றேன்.

அதில், 1972லிருந்து இன்றைக்கு சமகால அரசியல்வரை நடந்த, நானறிந்த அகச்சூழல்கள் அனைத்தும் நிச்சயமாக வெளியாகும். அப்போது என்னைப்பற்றித் தெரியலாம் திருநாவுக்கரசு. உங்கள் தோழரான நான் சோடைபோகாத சுயமரியாதை போராளியாகத்தான் என் கடமையைச் செய்துள்ளேன் என்பதை நீங்கள் அறிவீர்கள் என்று அவரிடம் சொன்னேன்.





-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-11-2015.

#KsRadhakrishnan #KSR_Posts #KSRmemories

No comments:

Post a Comment

*Worrying is like sitting in a rocking chair*

*Worrying is like sitting in a rocking chair*. It gives you something to do but it doesn't get you anywhere.Worry is a total waste of ti...