தலைவர் கலைஞர் அவர்களின் சட்டமன்ற கன்னிப்பேச்சு கண்னீர்ப் பேச்சாக அமைந்தது. அதுவே காலப்போக்கில் விவசாயிகளுக்கு கண்ணீர் துடைக்க முன்னுரையாக இருந்தது.
சட்டமன்றத்தில் கலைஞர் 29-04-1957 அன்று அடியெடுத்து வைத்தார். கவர்னர் உரை மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு முதல் முதலாக தனது பேச்சை அதாவது கன்னிப்பேச்சை இன்றைய நாளில் (04-05-1957) பதிவு செய்தார். அது வரலாற்று பதிவு மட்டுமல்ல. விவசாயிகளில் பிரச்சனைகளுக்கு முடிவுரை காண வாசிக்கப்பட்ட மு.க.உரை ( முகவுரை).
சட்டமன்ற வரலாறுகள், சட்டமன்ற ஆவணங்கள் ஆகியவற்றில் நீக்கமற நிறைந்து இருப்பது அவரது பேச்சுக்களும், விவாதங்களும், நகைச்சுவையுடன் கூடிய பதில்களும் ,புள்ளிவிவரங்களும், திட்டங்களும் ஏராளம் ஏராளம். தலைவர் கலைஞரை புறக்கணித்துவிட்டு தமிழக அரசியல் வரலாறை மட்டுமல்ல, இந்திய தேசத்தின் வரலாற்றை கூட எழுத முடியாது.
காகிதங்கள் கடுஞ்சினம் கொள்ளும். கலைஞரின் பெயரை தானாக எழுதச் சொல்லும். உலகளாவிய அரசியலில் கூட கலைஞர் சிறந்த முன்னுதாரணம். ஆபிரஹாம் லிங்கன், கென்னடி, வின்ஸ்டன் சர்ச்சில், மார்கரேட் தாட்சர், மாசேதுங், நெல்சன் மண்டேலா, பண்டித நேரு போன்ற ஆளுமைகள் கூட தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாகவும், பொதுவாழ்வு தொண்டர்களாக உழைத்திடவும் காலம் அனுமதிக்கவில்லை. மொழி, இனம், இலக்கியம் ,பொதுவாழ்வு என அனைத்து துறையிலும் உழைத்தார். உயர்ந்தார்.
அவர் வாழும் காலம் என்பது அவருக்கு அருட்கொடை . அவர் வாழும் காலத்தில், அவரது நிழலின் நாமும் வாழ்கிறோம் என்பது நமக்கு கிடைத்த பெரும் கொடை.
அவரது கன்னிப்பேச்சுக் கூட விவசாயிகளை பற்றியது என்பதை இன்று விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இதனை தெரிவிப்பது அவசியமாகின்றது. அவரது 93வது அகவையில் வெளியிட்ட பிறந்தநாள் மலரில் தலைவர் அவர்களே இதனை நினைவுகூர்ந்து உள்ளார். அதனை அப்படியே
பதிவு செய்ய விழைகின்றேன்.
கன்னிப்பேச்சு
-------------------------
அன்று கவர்னர் உரைமீதான விவாதத்தில்
கலந்துக் கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்த போது மற்ற எல்லா பிரச்சனைகளை விடவும் நங்கவரம் விவசாயிகள் பிரச்சனை தான் என் கண்முன் வந்தது. அன்று நான் முதன் முதலில் பேசிய பேச்சு , மனிதாபிமானமற்ற நிலச்சுவான்தார்களின் மனப்போக்கையும், விவசாயிகளின் அவல நிலையையும் படம் பிடித்து காட்டுவதாக இருந்தது. நான் முதலமைச்சாரக பொறுப்பேற்று நிலச்சீர்திருத்தம் செய்து முடிக்க அன்றைய கன்னிப்பேச்சே முன்னுரையாக இருந்தது. வரலாற்றுப் போக்குபடி இன்று நினைத்தாலும் அன்று பேசியது பெருமையாக இருக்கின்றது.
இந்த பகுதியில் கையேர் வாரம், மாட்டேர் வாரம் என இருவகை விவசாயம் உண்டு. இருவகை விவசாயத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், பட்டாளிகள் அன்று இருந்த சட்டத்தின் படி பலன் அடையவில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நியாயவாரம் கிடைக்காது. சட்டத்தின் மூலம் நியாய வாரம் பெறமுடியாது. பாட்டாளிகள், விவசாயிகள் வயிற்றில் பெரும்புயல் வீசிக் கொண்டிருக்கின்றது. இவர்களுக்கு இந்த சர்க்கார் எப்படி வாழ்வளிக்கப் போகின்றது? என்று நான் பேசிக்கொண்டே போனேன். என் எதிரில் இருந்த அமைச்சர்களோ கவர்னரோ என் கண்ணுக்கு தெரியவில்லை. நங்கவரம் களத்து மேடு, அங்கு குவிந்திருக்கும் நெல்மணிகள், அதனை ஏக்கத்துடன் பசித்த வயிற்றை தடவிக் கொண்டு நிற்கும் பட்டாளி மக்கள், நெற்கதிர்களுக்கும் மக்களுக்கும் நடுவே வேலிபோல் நிற்கும் காவல்துறையினர், வெற்றிலைப்பாக்கு குதப்பிக் கொண்டு பெருமிதம் பொங்க, விஷமச் சிரிப்புடன் சிரிக்கும் நிலச்சுவான்தார்கள் என் கண்முன் தெரிந்தனர்.
என் கன்னிப்பேச்சு அன்று கண்ணீர்ப் பேச்சாக அமைந்தது என்கிறார்.
#கலைஞர்கன்னிப்பேச்சு04-05-1957
#சட்டமன்றத்தில்கலைஞர்உரை
#நங்கவரம் #கையேர்வாரம்மாட்டேர்வாரம்
#குளித்தலை
#KSRadhakrishnanpostings
#kSrpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-05-2017
Photo 1984
No comments:
Post a Comment