Thursday, May 18, 2017

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.

ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார்.
-------------------------------------

நான் நேசிக்கும் தமிழகத் தலைவர்களில் ஒருவர் ஓமந்தூரார். சென்னை ராஜதாணியின் அன்றைய முதல்வர்.  அன்றைக்கு முதல்வரை பிரீமியர் என்று அழைப்பார்கள். அன்றைக்கு சென்னை ராஜதாணி வடக்கே ஒரிஸ்ஸா வரையும் மேற்கே தென் கன்னடம், பாலக்காடு பகுதிகளோடு சேர்ந்து இருந்தன. தெற்கே குமரி மாவட்ட தோவாளை வரை கொண்டிருந்தது. இன்றைய ஆந்திர மாநிலம் அன்றைக்கு சென்னை ராஜதாணியில் தான் இருந்தது. 
 

ஓமந்தூரார் விவசாய முதல்வராகவும், சமூக நீதிக்காவலராகவும், இன்றைக்கு தமிழகத்தில் அமைந்துள்ள அணைகளை கட்ட திட்டமிட்டவர். நேர்மை, எளிமை, மக்கள் நலன் என்ற அணுகுமுறையோடு ஆட்சியை நடத்தினார். அவர் காலத்தில் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழுக்கு கலைக்களஞ்சியம் (Encyclopedia) உருவாக்கும் பணியும் துவங்கியது.

கல்வியை மேம்படுத்தவும், தொழில் வளர்ச்சியை பெருக்கவும், தமிழிசையை வளர்க்கவும் என பல்வேறு பணிகளை தமிழருக்காக மேற்கொண்டவர்.

சென்னையில் டிராம் வண்டி ஓடிய காலத்தில் போக்குவரத்துக்கான ஊர்தி வசதிகள் குறைவாக இருந்தன. இதனால் மக்கள் பொதுப் போக்வகுரத்துக்காக மிகவும் தவித்தனர். அப்போது ஓமந்தூரார் ஜி.டி. நாயுடுவிடம் இது பற்றி விவாதித்தார். அவரும் தனது சொந்த பேருந்துகளை மக்களின் குறைதீர்க்க உறுதியளித்து நூற்றுக்கணக்கான பேருந்துகளை சென்னை மாகாண அரசுக்கு வழங்கினார்.

மேலும் ஓமந்தூரார் பதவி காலத்தில் ட்ராம் ஸ்டிரைக் அறிவித்துவிட்டார்கள்.
 பிரயாணிகளுக்கு பயங்கர அவதி. பிரச்னை சமாளிக்க லாரிகளில் நாற்காலியை போட்டு பேருந்தாக்கி பார்த்தார்கள். இனி ட்ராம் உதவாது என யோசித்து அதற்கு மாற்றாக பஸ் விட ஏற்பாடானது. ட்ராம் தண்டவாளங்களை பெயர்த்து சாலை அமைக்கும் ஒப்பந்தம் ஜி.டி.நாயுடுவுக்கு வழங்கப்பட்டது. அவர் தண்டவாளத்தை பெயர்த்தால் செலவும் பிடிக்கும் காலமும் விரையமாகும் என்று மேலாகவே ஜல்லிக் கொட்டி சாலை வகுத்தார்.

அந்தக் காலத்தில் if எனும் பெயரில் சென்னையில் வெளிநாட்டு பஸ் கம்பெனி இருந்தது. அதை ஒருவேளை(if) போய் சேரும் வாகனம் என மக்கள் கிண்டலடிப்பார்கள். அடுத்து TVS இருந்தது. கூடவே MTS கம்பெனி. TVS என்றால் தள்ள வேண்டாம் சார். MTS என்றால் மெதுவா தள்ளங்க சார். இப்படி அன்றாட பயணம் செய்யும் வாகனத்தை சென்னைவாசிகள் பகடி பேசிய அதே ஊரில் தான் இன்று பாதாள ரயில் பாய்கிறது.

அவரைப் பற்றிய ஆவணப்படம் வருகின்றது என்று நண்பர்கள் சில மாதங்களுக்கு முன்னால் சொன்னார்கள். நல்ல முயற்சி. பாராட்டுக்கள். 

அதைக் குறித்து 'நேசமிகு இராஜகுமாரன்' பதிவு மகிழ்ச்சியைத் தந்தது.

கடந்த ஓராண்டாக நான் உருவாக்கிய 'ஓமந்தூரார்- முதலவர்களின் முதல்வர்' ஆவணப் படம் தற்போது முழுமையடைந்துள்ளது. பாரதியின் நூல்கள் நாட்டுடைமை, தமிழ்வழிக் கல்வி, தமிழ் ஆட்சி மொழி, ஆலயங்களின் சமஸ்கிருத இறை பெயர்களை தமிழ்ப்படுத்தியது, பாடத்தில் திருக்குறளை கட்டாயமாக்கியது என பல வகையிலும் தமிழைப் போற்றி வளர்த்தவர் ஓமந்தூரார். அவரின் ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த அவிநாசிலிங்கம் செட்டியாரின் தமிழ்ப் பணிகளில் முக்கியமானது தமிழ்க் கலைக்களஞ்சியம். இந்திய மொழிகளில் இதுவே முதல் என்சைக்ளோபீடியா! 1947-ல் தொடங்கி 1956-ல் நிறைவுற்ற இது ஒரு நுட்பமான தமிழ்ச் சாதனை! இதில் எங்கும் முதல்வரின் பெயர் கிடையாது! அதன் நான்காம் தொகுதி என் வாழ்வினூடாகவே பயணப்பட்டு, இன்று இந்த ஆவணப் படத்தில் பதிவாகி உள்ளது தனிக்கதை! அடுத்த மாதம் இப்படம் உங்கள் பார்வைக்கு...

#ஓமந்தூரார்
#தமிழகஅரசு
#கலைக்களஞ்சியம்
#ksradhakrishnanpostings 
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
18-05-2017
   

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...