Friday, May 19, 2017

நதி நீர் இணைப்பு - Rivers Linking

பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான முரளி மனோகர் ஜோஷி, நதி நீர் இணைப்பு சாத்தியமில்லை என்று பொத்தாம்பொதுவாக சொன்னது ஏற்புடையது அல்ல. 40, 45 ஆண்டுகளாக அரசியலில் முக்கியப் புள்ளியாக, இந்திரா காந்தி அறிவித்த அவசர நிலை காலத்தில் அதை எதிர்த்து போராடியவர், முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் கல்லூரி பேராசிரியர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சிறப்புமிக்க பௌதிக பேராசிரியர் என இவ்வளவு அடையாளங்களை கொண்டவர்.
வாஜ்பாயின் கனவு திட்டமான நதிநீர் இணைப்பை சாத்தியமில்லை என்று இவரே மறுதலிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத வாதமாகும். இந்திரா காந்தி காலத்திலிருந்து பல குழுக்கள் போட்டு சாத்தியமான திட்டம் என்று தீர்மானிக்கப்பட்டது. உலக நாடுகள் பலவற்றிலும், பல்வேறு நாடுகளுக்கு இடையிலேயே கூட நதிநீர் இணைப்பு சாத்தியமான திட்டம்தான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் 30 ஆண்டுகள் போராடி நதிநீர் இணைப்பு குறித்தான தெளிவான முடிவுகளை எடுத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், திரு. முரளி மனோகர் ஜோஷி அவர்கள் இதை சாத்தியமில்லாத திட்டம் என்று சொன்னது கவலையை தருகின்றது. இப்படியெல்லாம் அனுபவம் உள்ள தலைவர்கள் பேசுவது முறைதானா?
நேற்றைய ஆங்கில இந்து ஏட்டில் (17.05.2016) கென் மற்றும் பட்வா நதிகளை இணைத்து உபரிநீரை பயன்படுத்தும் பிரச்சினையில், இந்த இரண்டு நதிகளும் விந்திய மலையில்தான் உற்பத்தி ஆகி யமுனை நதியில் கலக்கின்றன. இதனால் புலிகள் சரணாலயம் பாதிக்கப்படும் என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டது. இன்றைக்கு மரத்வாடா, பண்டேல்கண்ட் பகுதிகள் இன்றைக்கு வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு குடிநீருக்கே பிரச்சினையாக உள்ளது. இந்த நதிகளை இணைத்தால் இப்பகுதிகள் வளம்பெறும்.
ஆனால் அதே இந்து ஏட்டில் இன்றைக்கு இந்த நதிகளை இணைத்தால் புலிகள் சரணாலயத்திற்கு பயன்படும். வறட்சியான இந்த பகுதிக்கு தண்ணீர் வரத்து சென்றால் புலிகளுக்கு பயன்படும் என்ற கருத்தை முந்தைய செய்திக்கு பதிலாகவே வெளியிட்டுள்ளது. கென்-பட்வா நதிகளை இணைத்தால் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்தில் 6 லட்சம் ஏக்கர்கள் பயன்பட்டு, குடிநீர் போன்ற பாசன வசதிகளுக்கு பயன்படும். இப்படி நதிநீர் இணைப்பையும், அணைகள் திட்டங்களையும் அறிவித்தாலே எதிர்க்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் சாதக பாதகத்தை அறிந்து சுற்றுச்சூழலை சமன்படுத்தி கருத்துக்களை சொல்லவேண்டும். நீர் ஆதாரம் என்பது எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதது. அந்த நிலையில் சுற்றுச்சூழலுக்கு பாதகம் இல்லாமல் எந்த அளவு நீர் ஆதாரங்களை, நதிகளை இணைத்து பெருக்க முடியுமோ அந்த அளவு திட்டங்களை கவனமாக கொண்டு சென்றால் சுற்றுச்சூழலையும் பாதுகாத்து நீர் வளத்தையும் பெருக்கலாம். இந்த நிலையில் நதிநீர் இணைப்பு சாத்தியமில்லை, சுற்றுச்சூழல் பாதிப்பு என்றால் எதிர்காலத்தில் வளர்ச்சி என்பது பின் தங்கிவிடும். அப்படி என்றால் நேரு காலத்திலேயே பக்ராநங்கல் அணை வந்திருக்க முடியாது. நதிநீர் இணைப்பு என்பது தவிர்க்க இயலாத பெரும் திட்டம் என்பதை அனைவரும் உணரவேண்டும்.
நதிநீர் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றத்தில் நான் தொடுத்த வழக்கில் பெற்ற தீர்ப்பைப் பற்றி பிரதமர் அலுவலகத்திலிருந்து சில குறிப்புகள் கேட்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் இது குறித்து விவாதிக்க பிரதமரையும் சந்திக்கக் கூடிய சூழலும் உள்ளது. ஏற்கனவே 30 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவில் இருந்த இந்த வழக்கு குறித்து பிரதமர்களாக இருந்த வி.பி. சிங், பி.வி. நரசிம்மராவ், தேவகவுடா ஆகியோரை சந்தித்துள்ளேன். நதிநீர் மற்றும் நீர் ஆதாரத் துறையின் முன்னாள் மத்திய அமைச்சர் ஹரிஷ் ராவத், இன்றைய அமைச்சர் உமாபாரதியையும் சந்தித்து இது குறித்து விவாதித்துள்ளேன்.

 

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...