Friday, May 19, 2017

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

எனது வீட்டில்1982ல் காவல்துறை ரெய்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனும் என்ற தலைப்பில் என்னுடைய பொதுநல பணிகள் குறித்து குறிப்பிட்டு இருந்தேன். அதனை வாசித்த அன்புக்குரியவர்கள் சற்று விளக்கமாக பதிவு செய்யும்படி கேட்டுக் கொண்டனர். ஒவ்வொரு வழக்கு குறித்தும் பின்னர் விளக்கமாக பதிவு செய்கின்றேன். அதற்கு முன்னதாக  என்னைப் பற்றி விக்கிப்பீடியா குறிப்பிட்டு இருப்பதை முன்னோட்டமாக உங்கள் விருப்பத்திற்காக பதிவு செய்கின்றேன். என் சமூக நலப்பணிகள் குறித்து நானே பதிவு செய்வது தற்பெருமை பேசுவது போல் கவனிக்கப்படுமோ என்ற அய்யத்தின் காரணமாக வீக்கிப்பீடியாவின் குறிப்பினை உங்களுக்காக பதிவு செய்கின்றேன். 


''சென்னை உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மக்கள் நலனுக்காக பல்வேறு பொது நல வழக்குகளை தொடர்ந்தவர். 


நாட்டில் உள்ள நதிகளை தேசியமயமாக்குதல், கங்கை-கிருஷ்ணா-காவிரி-வைகை-தாமிரபரணி-குமரி மாவட்டம் நெய்யாறோடு இணைத்தல், கேரளாவில் உள்ள அச்சன்கோவில்-பம்பை தமிழகத்தில் உள்ள வைப்பாறோடு இணைத்து மற்றும் மேற்கே கேரளாவில் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் உபரி நீரை தமிழகத்திற்கு திருப்பி விடக் கோரி என்று 1983 ஆம் ஆண்டு முதல் போராடி உச்ச நீதிமன்றத்தில் போராடி 27-02-2012ல் தீர்ப்பையும் பெற்றார். 


உச்சநீதிமன்றத்தில் சிறைக் கைதிகளுக்கான வாக்குரிமைக்காகவும் 


பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் மூன்றடுக்கு முறைக்காகவும் போராடினார். 


பல்வேறு ஊழலை ஒழிக்க தேர்தலில் சீர்திருத்தங்களை கொண்டுவரவும், 


வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் பொதுநல வழக்குகளையும் தொடுத்துள்ளார்.


சென்னை உயர்நீதி மன்றத்தில் அவர் தொடர்ந்த குறிப்பிடத்தக்க பொதுநல ரிட் மனுக்கள்:


விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள் தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில் பெற்றார்.


தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல் உச்சநீதிமன்றம் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியதெல்லாம் கடந்த காலம். இது ஒரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர் என்ற முறையில் செய்த கடமையாகும்.


கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தார்.


விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு, ஏனைய வழக்குகளிலும் வழக்கறிஞராக வாதிட்டவர்.


ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹாசன், டாக்டர் சத்யேந்திரா எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து நாடு கடத்தியபோது வழக்குத் தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிறப்பு அனுமதி பெற்று நடத்தினார்.


1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவால் ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி மகிழ்ச்சியடைந்து திரு. கே.எஸ்.ஆர் அவர்களுக்கு தங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.


இவர் தொடர்ந்த ரிட் மனுவினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவித்தது


காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளார்.


விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.


1993ல் கோவில்பட்டி விவசாயிகள் போராடிய போது இரண்டு விவசாயிகள் ஜெயலலிதா ஆட்சியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். சுடப்பட்ட இருவரில் வெங்கடாசலபுரம் எத்திராஜு நாயக்கர் உடல் எரிக்கப்பட்டது. கயத்தாறு அருகில் அகிலாண்டபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி இருதய ஜோசப் ரெட்டியார் உடல் புதைக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் துப்பாக்கிச் சூட்டில் தான் இறந்தார் என்பதை தமிழக அரசு இல்லை என மறுத்தது. உடனே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம். நான் வாதாடிய வழக்கில் மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட்டது. அன்றைக்கு அது ஒரு முக்கியமான நிகழ்வாக கருதப்பட்டது. இப்படியும் பல விவசாய வழக்குக நடத்தியது உண்டு.


காவிரி பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறிலும் எடுத்துக்கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள்.


காவிரிப் பிரச்சனையில் 1995ல் அன்றைய கர்நாடக முதல்வர் தேவகவுடா தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா முதலியவற்றை எதிர்மனுதாரராக சேர்த்தது. அன்றைய காவிரி நடுவர் மன்ற ஆணையரான சித்தகோஷ் முகர்ஜியை விலக்க வைக்க வேண்டுமென்று பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கு 1996ல் தேவகவடா பிரதமர் பொறுப்பை ஏற்றிகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் மீது வழக்கு தொடுக்கும் ஒருவர் எப்படி பிரதமர் பொறுப்பை ஏற்பது முறையாகும் என்று ரிட் மனு தாக்கல் செய்தேன். உடனே அவர் மனுவை திரும்ப பெற்று காவிரி பிரச்சனையில் நடுநிலையாக இருப்பேன் என கூறியிருந்தார். ஆனால் அதை காற்றில் பறக்கவிட்டார்.


சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பெற்றார்.


தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில் வாடியவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.


கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல் முதலில் வழக்கு தொடர்ந்தார்.

இவருடைய சீனியர் முதுநிலை வழக்கறிஞர் ஆர். காந்தி, மறைந்த பிரபல முதுநிலை வழக்கறிஞர் என்.டி. வானமாமலை ஆகியோர் இவரை வழி நடத்தினர். வழக்குகளில் இவருக்கு வழிகாட்டினர்.''


மேற்கணடவாறு வீக்கிப்பீடியா என்னைப் பற்றி  சிறு பட்டியல் இட்டுள்ளது.


https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D


#ksRadhakrishnan

#என்னைப்பற்றி 

#வீக்கிப்பீடியா 

#KSRadhakrishnanpostings

#KSRpostings 

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

18-05-2017

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...