Monday, May 22, 2017

ஈழப் பிரச்சனையில் இன்றைய நிலை.

ஈழப் பிரச்சனைகள் குறித்து சமூக வலைத் தளங்களில் சற்று சூடான வாதங்களும், பிரதி வாதங்களும் கடந்த இரண்டு, மூன்று நாட்களாக நடந்து வருகின்றன. அதை குறித்தான கருத்தோ விவாதமோ செய்ய விரும்பவில்லை. கடந்த சில நாட்களாக ஈழத்தில் இருந்தும் லண்டன், பாரீஸ், கனடா, நார்வே போன்ற நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தோழர்கள் பேசினார்கள். முள்ளிவாய்க்கால் நினைவு நாள் ஒவ்வொரு நாடிலும் தாங்கள் பங்கேற்றதைப் பற்றியும் குறிப்பிட்டனர்.
இன்றைக்குள்ள சூழலில் இந்த பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விடயமாகும்.



அவை,

1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.

முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.

அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.

2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.

இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.

3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.

5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.

6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.

இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.


#ஈழம்
#இலங்கை
#Eelam
#Srilanka
#ksradhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
22-05-2017

No comments:

Post a Comment

*Some believe holding on and hanging in there are signs of great strength*

*Some believe holding on and hanging in there are signs of great strength*. However, there are times when it takes much more strength to kno...