திருநெல்வேலி மாவட்டம் - 229 | Tirunelveli District -229.
இன்றோடு நெஞ்சையள்ளும் எங்கள் தெற்குச் சீமையான வீரபூமி திருநெல்வேலிமாவட்டமாக பிரிந்து இரண்டேகால் நூற்றாண்டுகள் அதாவது 225ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதைப் பதிவு செய்வதில் பெருமையும் மகிழ்ச்சியும் ஒரு மமதையும் உள்ளது.
திருநெல்வேலிக்கு நிகர் திருநெல்வேலிதான். எத்தனையோ பிதாமகர்கள், எத்தனையோ தலைவர்கள், எத்தனையோ இலக்கிய கர்த்தாகள், வரலாற்று நிகழ்வுகள்.... எதைச் சொல்ல எதைவிட...
சொல்லிக்கொண்டே போகலாம் நெல்லையின் புகழை.
எனது “நிமிர வைக்கும் நெல்லை” நூலை 15ஆண்டுகளுக்கு முன்னால் பதிப்பிக்கும் போது எவ்வளவு பாராட்டுகள். திருநெல்வேலியினால் எனக்குப் பெருமை கிடைத்தது.
டெல்லி தமிழ்ச்சங்கத்தில் இந்நூலை வெளியிடும் போது டெல்லிவாழ் அத்தனை நெல்லை வாசிகளும் கலந்துகொண்டு சிறப்பித்ததை மறக்கவே முடியாது. அதேப்போல சென்னையில் நடைபெற்ற இந்நூல் வெளியீடு மற்றும் அறிமுக விழா இரண்டிலும் நெல்லை நண்பர்கள் திரளாகக் கலந்துகொண்டதும், நெல்லையின் ம.தி.தா இந்துக்கல்லூரியில் நடந்த விழாவிலும் மகிழ்ச்சியோடு நெல்லை மக்கள் பங்கேற்றதையும் நன்றியோடு நினைவில் கொள்கிறேன்.
இன்றும் உலக நாடுகளுக்குச் செல்லும்பொழுது, “நிமிரவைக்கும் நெல்லை” நூல் பற்றியும், “கதை சொல்லி” இதழ் பற்றியும் எவரேனும் ஒருவர் நிச்சயம் பாராட்டுவதுண்டு. 48 ஆண்டுகள் பொதுவாழ்வில் ஈடுபட்டதற்கு இதைவிட வேறு என்ன வெகுமதி வேண்டும் என்று மகிழ்ச்சியாக நினைக்கும் தருணங்கள் இவை.
மெட்ராஸ் பிரஸிடென்ஸி என்று சொல்லக்கூடிய சென்னை ராஜதானியில், 1790ம் ஆண்டு செம்ப்டம்பர் மாதம் 1ம் நாள் உதயமானது தான் திருநெல்வேலி மாவட்டம்.
18ம் நூற்றாண்டில் அன்றைக்கு சென்னை ராஜதானியில் 23 மாவட்டங்கள் ஆந்திரா- ஒரிசா எல்கை வரையும், கர்நாடகத்திலும், கேரளத்திலும் பரவி இருந்தன.
பிரிட்டிஷ்காரர்கள் நில அளவை மூலம் இந்த எல்லைகளை வரையறுத்து தங்கள் நிர்வாகத்தை நடத்தினார்கள். மாநில முதல்வர் என்று அழைக்காமல் பிரதமர் என்று அழைக்கப்பட்டார். நாட்டு விடுதலைக்குப் பின் முதல் பிரதமராக பதவியேற்றவர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்.
நெல்லை மாவட்டத்தின் வடக்கில் விருதுநகரின் தென்பகுதி, திருவில்லிபுத்தூர், தென்கிழக்கே உவரி, மற்றும் தெற்கே வள்ளியூர் தாண்டி பழவூர்,முப்பந்தல் வரையும், கிழக்கே வங்ககடலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகளோடு ஐவகை நிலங்களும் அமைந்த மாவட்டம் தான் அந்தகாலகட்டத்தின் நெல்லைச் சீமை.
மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமான மாவட்டம். தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டாக பாளையங்கோட்டை சிறந்து விளங்கியது. நெல்லை மாவட்டத்திலே பொதியமலையில் உற்பத்தியாகி புன்னைக்காயலிலே கடலில் கலக்கும் தாமிரபரணி தமிழகத்தின் ஒரே ஜீவநதி. உலகின் தொன்மையான நாகரிகம் என்பது தாமிரபரணிக்கரை நாகரிகம்தான் . அதற்கு காலத்தின் சாட்சியாக ஆதிச்சநல்லூர் திகழ்கின்றது.
இம்மாவட்டத்தின் வடபகுதி வானம் பார்த்த கரிசல் மண். மேற்குப் பகுதி செம்மண். ஒருபக்கம் விரிந்த கடல், மறுபக்கம் வானுயர்ந்த மலைத்தொடர், அருவிகள், வனங்கள், தேரிக்காடுகள் என சகல புவி அமைப்புகளைக் கொண்ட ஒருங்கே கொண்ட மாவட்டம். தமிழகத்தில் அதிர்வுகள் பலவற்றை உருவாக்கிய உயிரோட்டமான, தியாகத்திற்கு பெயர்போன வீரக்களம் தான் இந்த பரணி மண். அதன் புகழ்களை இந்த ஒரு பதிவில் அடக்கிவிட முடியாது.
நெல்லையிலிருந்து தூத்துகுடி தனி மாவட்டமாக பிரிந்தாலும் நெல்லையின் சகோதர மாவட்டமாகத்தான் இன்றைக்கும் திகழ்கின்றது. விருதுநகர் மாவட்டத்தின் பெரும்பகுதி இங்கிருந்து பிரிந்தாலும் அதன் கலாச்சாரம் நெல்லை மாவட்டத்தோடு ஒட்டியமைந்தது.
திருநெல்வேலியை 'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், 'தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், 'பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று தாமிரபரணியை கம்பரும் பாடியுள்ளார்கள். இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது.
விரைவில், நான்காவது பதிப்பாக எனது “நிமிரவைக்கும் நெல்லை” நூல் இரண்டு பாகங்களாக வர இருக்கின்றது. அதில் இயன்ற அளவு திருநெல்வேலியின் தொன்மையும், வரலாறும், சிறப்புகளையும் சொல்லியுள்ளேன். அதன் பெருமை உலகளவு; ஆனால் நானறிந்ததே உள்ளங்கையளவு. அவை அத்தனையையும் முறையாகப் பதிவு செய்துள்ளேன்.
எனது நிமிரவைக்கும் நெல்லையில் குறிப்பிட்டவாறு,
“ என்னைப் பிரசவித்த மண்ணே,
என் பரம்பரையின் மூத்தகுடிகளே,
எனக்கு நேர்வழி காட்டுங்கள்”
..... என்று இந்த நன்னாளில் மகிழ்ச்சியோடு இந்த நினைவுகளைப் பகிர்வதை நான் பிறந்த பூமிக்குச் செய்யும் கடமையாக நினைக்கிறேன்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
01-09-2019.
Tail Piece : நெல்லை குறித்து நான் ஏடுகளுக்கு எழுதிய கட்டுரைகள் சில...
No comments:
Post a Comment