Friday, September 13, 2019

மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீதுபா !




சென்னையின் ஒரு பகுதியில் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த இந்த பாஷையை நாடறியச் செய்த பெருமை தமிழ் திரையுலகிற்கு உண்டு. எம்.ஆர்.ராதா, சந்திர பாபு, தேங்காய் சீனிவாசன் தொடங்கி லூஸ் மோகன், கமலஹாசன் வரை பலரும் இந்த பாஷையைப் பேசி இதன் பெருமையை பறைசாற்றி இருக்கிறார்கள் ‘வா வா வாத்தியாரே ஊட்டாண்ட..’ என்ற மெட்ராஸ் பாஷை பாடல் தமிழகம் முழுவதும் பட்டி தொட்டி எங்கும் அலறியது. 

ஜெயகாந்தன் போன்றவர்கள் இதே பணியை எழுத்து மூலம் செய்திருக்கிறார்கள். ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்கு போன சித்தாளு’ பேசிய பல சொற்கள் இன்று வழக்கத்தில் இருந்து மறைந்து விட்டன. ஆனால் இன்றும் அந்த சித்தாள் நமது நினைவுகளில் நிழலாடிக் கொண்டிருக்கிறாள்.

தமிழகத்தின் பிற பகுதியினராலும் மெட்ராஸ் பாஷை ரசிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் வேகமும் , ஒலி நயமும் தான் . ‘அடக் படக் டிமிக் அடிக்கிற டோலுமையா டப்ஸா ‘ போன்ற சொற்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாவிட்டாலும் அந்த ஓசை நயம் கேட்பவர்களை திக்கிமுக்காட வைத்து விடுகிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது . அதே போல எவ்வளவு அரிய கருத்தையும் பாமரனுக்கும் புரியும் வகையில் பந்தி வைக்கவும் இந்த மெட்ராஸ் பாஷையால் முடிகிறது என்பது இதன் கூடுதல் பலம் . 

ஆரம்ப நாட்களில் பேசப்பட்ட மெட்ராஸ் பாஷைக்கும் இன்று பேசப்படும் பாஷைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன . அன்று புழக்கத்தில் இருந்த பல சொற்கள் மறைந்து , தற்போது அந்த இடத்தில் ஃபீல் பண்ணி , செக் பண்ணி , டிபன் பண்ணி என நிறைய பண்ணி விட்டார்கள் . ஆனாலும் புது புது சொற்களை அப்படியே அல்லது சற்று நமது வசதிக்கேற்ப உருமாற்றி பயன்படுத்துவது என்ற பாரம்பரியம் மட்டும் இன்றளவும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது . அதனால் தான் மெட்ராஸ் பாஷை ஷோக்கா கீதுபா !

மெட்ராஸ் பாஷை அகராதியில் சில 

கில்லி  - திறமையான ஆள் 
ஜல்பு – ஜலதோஷம் 
மட்டை -  போதையில் மயங்கி விழுவது 
மால் – கமிஷன் 
பீட்டர் -  பெருமைக்காக ஆங்கிலம் பேசுபவர் 
பீலா – பொய் சொல்லுவது 
கலீஜ் – அசுத்தம் 

படம் : நன்றி தி இந்து தமிழ்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...