நாளந்தா பல்கலைக்கழகம் - Nalanda University.
_______________________________________
பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்போடு இந்திய அரசு, தொன்மை வாய்ந்த நாளந்தா பல்கலைக்கழகத்தை மீண்டும் நிறுவ முயற்சி எடுத்தது. அதைக்குறித்தான பதிவுகளை ஏற்கனவே இந்த தளத்திலும், தினமணி ஏட்டிலும் எழுதி இருந்தேன்.
இன்றைக்கு நாளந்தாவினை கட்டமைக்க உரிய நிதி இல்லாமல் இன்னும் தள்ளாடுகிறது. ஆஸ்திரேலியா, புரூணை (Brunei), லாவோஸ் (Lao People's Democratic Republic), மியான்மர் ஆகிய நாடுகள் இந்தியாவோடு 2013ல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் கட்டமைப்புப் பணிகளுக்கு உரிய பொருளுதவிகளைச் செய்வதாக ஒப்பந்தம் செய்துகொண்டன. சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளும் இப்பணிக்கு உதவுவதாக வாக்களித்தன. இலங்கையை இந்தப் பல்கலைக் கழக விவகாரத்தில் சம்பந்தப்படுத்தவில்லை என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன. மலேசியாவும் பட்டுபடாமல் உள்ளது. பௌத்தம் தளைத்துள்ள நாடுகள் புதிய நாளந்தாவ்வை கட்டமைக்க ஆதரிப்பதாக உறுதியளித்துவிட்டு, சொல்லியபடி நடந்துகொள்ளவில்லை என்றும் செய்திகள் வந்துள்ளன.
பீகாரில் உள்ள “ராஜ்கிர்”-ல் நாளந்தா பல்கலைக்கழகத்தின் பழைய தடயங்கள் உள்ள பகுதியிலிருந்து, பத்து கிலோமீட்டர் தொலைவில் கிராமப்புரத்தில் திரும்பவும் நாளந்தா பல்கலைக்கழகத்தை அமைக்கத் திட்டமிட்டு ,நிலங்களைப் பெறுவதும், கட்டமைப்புத் திட்டங்களும் பிகார் அரசின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்பட்டன. பழமையும், புதுமையும் கலந்து இந்தக் கலாசாலை மீண்டும் எழும் என்று இந்திய அரசு கூறியது.
பௌத்தத்தை முக்கிய ஆராய்ச்சிப் பணியாகக் கொள்ளாமல், அனைத்துப் பாடங்களையும் முறைப்படுத்தி இங்கே கற்பிக்க வேண்டும் என்பதோடல்லாமல், பன்னாட்டு பல்கலைக்கழகமாக புதிய நாளந்தா அமையவேண்டும் என்று அனைவரும் விரும்பினார்.
இந்தப் பல்கலைக் கழகத்தை பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் வழிநடத்தினார். தற்போது பா.ஜ.க ஆட்சி வந்தவுடன், அவருக்கும் மத்திய அரசுக்குமிடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.
சீனாவில் இருந்து யுவான் சுவாங்க் போன்ற பயணிகளும், அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியது வரலாறு. நாளந்தாவுக்கும், பாகிஸ்தானின் ராவல்பிண்டி அருகே உள்ள தட்சசீலத்திற்கும் சீனாவிலிருந்து வந்து பலர் கல்வி கற்றதுண்டு. சீனாவிலிருந்து 1900கி.மீட்டர் தொலைவு பயணித்து அக்காலத்தில் மாணவர்கள் இங்கு வருவதுண்டு.
இந்த தொன்மையான கல்வி நிலையங்களுக்கு அக்காலத்தில் கைபர் கணவாய் , திபெத், இன்றைய அருணாச்சல பிரதேசம் வழியாக நடந்தும், குதிரைகளிலும் மாணாக்கர்கள் வந்ததாகச் செய்திகள் உள்ளன.
இதேபோல, பஹல்பூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரம சீலாவும், கலிங்கத்தில் புஷ்பகிரியும், தமிழகத்தில் உள்ள காஞ்சி கடிகையும், நாகார்ஜுனா, உஜ்ஜயினி ஆகியவையும் அக்காலத்தில் புகழ்பெற்ற கலாசாலை கேந்திரங்களாக விளங்கின. நெல்லை மண்ணில் உள்ள கழுகுமலையும் அப்போது சிறிய அளவிலான கற்பிக்கும் மையமாக இருந்தது.
பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் திட்டமிட்டவாறு முழுவடிவம் பெற்று அதன் நோக்கம் வெற்றிபெற வேண்டுமென்றால் உரிய நிதி ஆதாரங்களைப் பெறவேண்டிய நிலையில் உள்ளது.
இதற்கு என்ன செய்யவேண்டும் எனச் சிந்தித்தபோது, பொருளாதார அறிஞர் ஜெகதீஷ் பகவதி,” திருப்பதி கோவிலில் உண்டியலில் நிதி திரட்டுவது போல நாளந்தாவிலும் திரட்டலாம்” என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் அம்மாதிரி அணுகுமுறை வெற்றிபெறுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயமாகும்.
இவ்வளவு அற்புதமான நோக்கத்திற்கு, அரசியல் தலையீடு, நிதி ஆதாரங்கள் இல்லாதது மட்டுமில்லாமல், தவறான செயல் திட்டங்களும்ல் நாளந்தா பல்கலைக் கழகம் முழுமையாக எழாமல் முடங்கிப் போகிற நிலையில் உள்ளது. இதை மத்திய அரசு கவனிக்கவேண்டியது அதன் கடமையாகும்.
-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
03-09-2019.
see also :
No comments:
Post a Comment