வறட்சி, கடன் தொல்லையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு சாதகமாக முடிவெடுக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
---------------------------------------
வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழக விவசாயிகள் அனைவருக்குமே விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டி பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. இந்த அரசாணையை எதிர்த்து விவசாயிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படும்விதமாக ஒட்டுமொத்த விவசாயக் கடன்களையும் ஒரு சேர தள்ளுபடி செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு வேண்டினர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை விரிவுபடுத்தி, மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படும் வகையில் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த தமிழக அரசுக்கு 5 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகளின் கடன்கள் மட்டும் தள்ளுபடி என்று எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசின் சார்பில் ஒட்டுமொத்த விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனில் ரூ. 1,800 கோடி தேவைப்படும் என்றும், அரசிடம் அவ்வளவு தொகை இல்லாதபடியால் கூட்டுறவு வங்கியில் 5 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெற்ற கடன்களை மட்டும் தள்ளுபடி செவ்தென்று முடிவெடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
ஆனால் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டு வந்தது. கடன்களை திரும்ப செலுத்த முடியாத காரணத்தால் மட்டும் 400க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் விவசாயிகளை பிரித்து பட்டியலிடுவது இயலாத காரியமாகும். ஒரு விவசாயி 5 ஏக்கருக்கு கீழ் இருந்தால் மட்டும் தான் நஷ்டம் அடைகிறார்கள் என்பதை எப்படி ஏற்க முடியும். குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயியுடன் சேலம் உட்பட மாநிலத்தின் பல்வேறு வறட்சியான பகுதிகளில் 10 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் என எப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியும்.
இதில் லாபம் மற்றும் நஷ்டம் என்பது நிலம் அமைந்திருக்கும் சூழல், அது இருக்கும் இடத்தை பொருத்ததாகும். அதனால் இதில் பாகுபாடு என்பது கூடாது. ஏனெனில் விவசாயி என்றால் அனைவரும் விவசாயிகள்தான். அதனால் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற 2.5 முதல் 5 ஏக்கர் நிலம் வரை வைத்திருக்கும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யப்பட்டது போல் ஒட்டுமொத்த விவசாயிகளும் வங்கிக் கடனை ரத்து செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் பாகுபாடு என்பது கூடாது. ஏனெனில் விவசாயி என்றால் அனைவரும் விவசாயிகள்தான். விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க சாதகமான முடிவை மேற்கொள்ள முயற்சி செய்ய வேண்டும்.
#விவசாயக்கடன்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-09-2019.
No comments:
Post a Comment