Monday, September 30, 2019

மெய்யான நேர்மையான வரலாறு வேண்டும்.

மெய்யான நேர்மையான வரலாறு வேண்டுமென்ற என் பதிவை படித்துவிட்டு சஞ்ஜீவ் சன்யால் என்ன பேசினார், நீங்கள் அதை மறுத்ததும் தெளிவாக இருந்தது. சஞ்ஜீவின் பேச்சை குறிப்பிட வேண்டுமென்று நண்பர்கள் கேட்டனர். அவருடைய பேச்சும், என்னுடைய பதிவும் வருமாறு.
சுதந்திரப் போராட்ட வரலாற்றை திருத்தியமைக்க வேண்டும்
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்றை திருத்தியமைத்து புதுப்பிக்க வேண்டிய உச்சகட்ட தருணம் இது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் கூறினார்.
சுதந்திரப் போராட்ட வரலாறு - மீள்பார்வை என்ற தலைப்பிலான ஆங்கில கலந்துரையாடல் அமர்வு சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை இண்டர்நேஷனல் சென்டர் சார்பில் நடைபெற்ற அந்த நிகழ்வில் பிரதமர் அலுவலகப் பொருளாதார ஆலோசகரும், பொருளாதார நிபுணரும், வரலாற்று ஆய்வாளருமான சஞ்சீவ் சன்யால் பங்கேற்றார். இந் நிகழ்ச்சியில் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசியதாவது:
தேசத்தின் விடுதலை வரலாற்றில் லட்சக்கணக்கான வீரர்களின் தன்னலமற்ற தியாகங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இன்றளவும் அந்த நாயகர்கள் பலரை நாம் நினைவில் வைத்து போற்றுகிறோம் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்.
அதேவேளையில், தங்களது வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த எத்தனையோ வீரர்களும், அவர்தம் தியாகங்களும் சமகாலத் தலைமுறையினருக்குக்  கொண்டு சேர்க்கப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. அதிலும், குறிப்பாக  தென்னிந்திய மாநிலங்கள் சுதந்திரப் போராட்டத்துக்கு அளித்த அளப்பரிய பங்கு வரலாற்றுப் பக்கங்களில் பதிவாகவில்லை. அவை மறைக்கப்பட்டனவா அல்லது வரலாறு எழுதியவர்கள் தென்னிந்தியப் பங்களிப்பை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லையா என்று தெரியவில்லை.
 பிரிட்டன் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய மறுத்து இந்திய கடற்படையினர் 1946-இல் பம்பாய் கலகம் நடத்தியதற்கு ஏறத்தாழ 140 ஆண்டுகளுக்கு முன்பே வேலூரில் சிப்பாய்ப் புரட்சி அரங்கேறிவிட்டது. சொல்லப்போனால், 1806-ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்தப் புரட்சிதான் தேசம் முழுவதும் பல்வேறு போராட்டங்களுக்கு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. அப்போது பிரிட்டனின் ராணுவ வலிமையையும் மீறி வேலூர் கோட்டையைக் கைப்பற்றி இந்தியப் புரட்சியாளர்கள், சுதந்திரத்துக்கான நம்பிக்கை விதையை விதைத்தனர். 1857-இல் நடந்த சிப்பாய் கலகம்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறதே தவிர, வேலூர் புரட்சியைப் பற்றி தமிழகம் மட்டும்தான் பேசிக் கொண்டிருக்கிறது.
அதுபோலவே 1800-ஆம் ஆண்டிலேயே கோயம்புத்தூர் பிரிட்டிஷ் கோட்டையைக் கைப்பற்ற போராட்டக்காரர்கள் முயற்சி மேற்கொண்டனர். அதற்கு பழநி சதி வழக்கு என்று பெயர். இந்தச் சாதனை நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறவில்லை.
அதுபோலவே, ஆர்யா என்று அறியப்படும் பாஷ்யம் என்ற ஆகச்சிறந்த தேசபக்தனையும், புரட்சியாளனையும் வரலாறு வசமாக்கிக் கொள்ளத் தவறிவிட்டது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்ற வேள்வி அவரது மனதில் கனலாக எரிந்து கொண்டிருந்தது. 1932-ஆம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதியன்று பிரிட்டிஷ் படையினரின் கடுமையான கண்காணிப்பையும் மீறி அந்த கனவை நினைவாக்கினார் ஆர்யா பாஷ்யம். அடுத்த நாள் காலை கோட்டையில் இந்தியக் கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்த்த பிரிட்டன் ஆட்சியாளர்கள் அடைந்த அதிர்ச்சி, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
அத்தகைய துணிச்சல் மிக்க வீரரின் பெயரைக்கூட சமகாலத்தினர் அறியாத நிலை உருவாகியிருப்பது வேதனைக்குரியது. விடுதலைக் களத்தில், இவ்வாறு வ.வே.சு. ஐயர், வாஞ்சிநாதன், ஆர்யா உள்ளிட்ட தென்னிந்தியப் புரட்சியாளர்களின் பங்களிப்பைப் பதிவு செய்யாமல் புறந்தள்ளியதால்தானோ என்னவோ, இங்கு தேசியவாத உணர்வு குறைவாக இருக்கிறது என்றார் தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்.
முன்னதாக, கலந்துரையாடல் அமர்வில் சஞ்சீவ் சன்யால் பேசியதாவது:
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு உள்ளது. அஹிம்சை போராட்டமாகவும், ஆயுதமேந்திய போராட்டமாகவும் அதனை இரு வேறாக வரலாறு வரையறுத்து வைத்திருக்கிறது.  அதில், பழங்குடியினரின் போராட்டங்கள், வடகிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர வேள்விகள் என பல விஷயங்கள் வரலாற்றுக்கு வந்து சேரவில்லை.
அந்த வரிசையில் சாவர்க்கர் முன்னெடுத்த போராட்டங்களும், அவர் வழி தொட்டு பல புரட்சியாளர்கள் செய்த தியாகங்களும் சரி வரப் பதிவாகவில்லை. சொல்லப்போனால், சாவர்க்கர் எழுதிய இந்திய சுதந்திரப் போராட்டம் - 1857 என்ற புத்தகம்தான் பல புரட்சியாளர்களையே உருவாக்கியது. ஆயுதமேந்திய போராட்டத்தின் வேத நூலாகவும் அது விளங்குகிறது. அத்தகைய புகழ்மிக்க சாவர்க்கரை சமகாலத் தலைமுறையினருக்கு அறிமுகம் செய்ய வேண்டிய நிலை இருப்பது கவலைக்குரிய விஷயம்.
ராஷ்பிகாரி போஸ், சுபாஷ் சந்திரபோஸ், சச்சீந்திரநாத் சன்யால் போன்ற வங்கத்தின் புரட்சியாளர்களின் பங்களிப்பு போதிய கவனம் பெறவில்லை. வரலாற்றுப் பாடநூல்களில் காந்தியடிகளின் வழியொற்றிப் பயணித்தவர்கள்தான் இடம் பெறுகிறார்களே தவிர, மாற்று வழியான புரட்சிப் பாதையில் பயணித்தவர்கள் இடம் பெறவில்லை.
வ.வே.சு.ஐயர், பாரதி, அரவிந்தர், சாவர்க்கர் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் நன்கு அறிமுகமானவர்கள் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது. விடுதலை போராட்டத்தில் அவர்கள் பல தருணங்களில் ஒருங்கிணைந்து செயல்பட்டிருக்கிறார்கள். பாரதியின் கருத்துகளை சற்று கூர்ந்து கவனித்தால், அதில் சாவர்க்கரும், அரவிந்தரும், வ.வே.சு.ஐயரும் வந்து போவதை உணர முடியும். பல்வேறு காலகட்டங்களில் புரட்சியாளர்கள் நூலிழையில் வெற்றி நழுவவிட்டனர். சந்தர்ப்பம் அவர்களுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றிருந்தால் இந்திய வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்களின் பங்கையும் வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும். திருத்தி எழுத வேண்டும் என்றார் சஞ்சீவ் சன்யால்.
-தினமணி
மெய்யான நேர்மையான வரலாறு வேண்டும்.
-------------------------
நேற்று (27-09-2019) சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் Madras School of Economics அரங்கத்தில் Revolutionaries during Independence Struggle in India (இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சியாளர்கள்) என்ற தலைப்பில் பொருளாதார ஆலோசகரான சஞ்ஜீவ் சன்யால் பேசினார். 
அவரது உரையில் வடபுலத்தை சார்ந்த விடுதலை போராட்ட தலைவர்களை மட்டுமே குறிப்பிட்டு பேசினார். தமிழகத்தை சார்ந்த வா.வே.சு.ஐயர் பெயரை மட்டும் 2, 3 முறை உச்சரித்தார். மற்ற புரட்சியாளர்களான பூலித்தேவர், ஒண்டிவீரன், முத்துராமலிங்க சேதுபதி மன்னர், தஞ்சை மன்னன் அமரசிம்மன், காஞ்சி சங்கராச்சாரியார் பாராட்டிய திப்பு சுல்தான், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வேலு நாச்சியார், சுந்தரலிங்கம்,  மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை, வெள்ளையனையே தூக்கில் போட்ட உடுமலைப்பேட்டை தளி எட்டியப்ப நாயக்கர், மூக்கன் ஆசாரி, சுப்பிரமணிய பாரதியார், சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், செண்பகராமன், தில்லையாடி வள்ளியம்மை, மாடசாமி, பாஷ்யம் அய்யங்கார், எம்.பி.டி.ஆச்சார்யா, விருப்பாச்சி கோபால் நாயக்கர், வேலுத்தம்பி தளவாய் மருதநாயகம், வீரன் அழகு முத்துகோன் போன்ற பல ஆளுமைகள் சுதந்திரத்துக்காக சர்வபரி தியாககங்கள் செய்தார்கள். இதுகுறித்து அந்த விழாவிலேயே கடுமையாக ஆட்சேபித்து அந்த ஆளுமைகளின் பெயர்களையும் பதிவு செய்தேன். 
அதுமட்டுமா, மீரட் கலவரத்திற்கு முன்னரே வேலூர் புரட்சி நடந்தது. அதற்குப்பின், திண்டுக்கல், பழனி புரட்சி, தூத்துக்குடி சதி வழக்கு, திருநெல்வேலி சதி வழக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் - சாத்தூர் - விருதுநகர் சதி வழக்கு, குலசேகரப்பட்டினம் சதி வழக்கு, தேவக்கோட்டை சதி வழக்கு, திருவாடானை சதி வழக்கு என இப்படி பல வரலாற்று நிகழ்வுகளும் விடுதலைப் போராட்டத்தில் நடந்தேறியது. நேத்தாஜியின் ஐஎன்எல்லும் தமிழகத்தை சார்ந்தவரகள் அதிகம் இடம் பெற்றனர்.இவையெல்லாம் மறைக்கப்படுகிறது. சிலர் மறந்தும் விட்டனர் என்பது தான் வேதனையான விடயம். தமிழகம் எல்லா காலக்கட்டங்களிலும் தன்னுடைய பங்களிப்பை இதய சுத்தியோடு ஒவ்வொரு பிரச்சனையிலும் வழங்கியுள்ளதை மறுக்கப்படும்போது, ரௌத்திரம் எழத்தான் செய்கிறது. 
வரலாறு என்பது தெற்கிலிருந்துதான் எழுதப்பட வேண்டும். லெமூரியா கண்டம் முதல் தமிழகத்தில் இருந்து தான் எழுத வேண்டுமென்று எழுதி வருகிறேன். வரலாற்றில் நேர்மையான பதிவுகள் இருக்க வேண்டும் என்று உரைத்தேன். இதே கருத்தை தினமணி ஆசிரியரும் எடுத்துரைத்தார். 

இப்படி விடுதலை போராட்டக் காலத்தில் பல ஆளுமைகளின் தியாகப் பங்களிப்புகள் இருந்தன. இவர்களது வரலாற்றை விரிவாகச் சொல்ல வேண்டும்.

விதியே, விதியே, தமிழ்சாதியே. வரலாறு நேர்மையாக, உண்மையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தலைமுறைக்கும் கொண்டு செல்கின்ற அடையாளம் மட்டுமல்ல சீதனமும் ஆகும்.

#இந்தியவிடுதலைப்போரட்ட_வரலாறு
#தமிழகவிடுதலைவீரர்கள்
#விடுதலை_போராளிகள்
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
30-09-2019.


No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...