————————————————
இந்த ஆண்டுக்கான சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் அறிக்கையை ஐ.நா.சபையின் பொருளாதார மற்றும் சமூகநலத் துறையின் மக்கள் தொகை பிரிவு நேற்று வெளியிட்டது. இதில் வேலை நிமித்தமாகவோ, அகதிகளாகவோ தங்கள் தாய்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் வசிப்பவர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் தாய்நாடு, வயது, பாலினம் ஆகிய விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த அறிக்கையின்படி வெளிநாடுகளில் வசிக்கும் 1.75 கோடி இந்தியர்கள் சர்வதேச புலம்பெயர்ந்தோர் பட்டியலில் முதலிடம் வகித்துள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளில் 1.75 கோடி இந்தியர்கள் வசிப்பதாக ஐ.நா. புள்ளி விவரம் தெரிவிக்கிறது. இதன்மூலம் சர்வதேச அளவில் புலம்பெயர்ந்து வசிப்பவர்களில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இதன்படி உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வசிப்போர் எண்ணிக்கை 27.2 கோடியாக அதிகரித்துள்ளது. இது 2010-ம் ஆண்டைவிட (22.1 கோடி) 23 சதவீதம் அதிகம். இப்போதைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 3.5 சதவீதமாக உள்ளது. இது 2000-வது ஆண்டில் 2.8 சதவீதமாக இருந்தது.
சர்வதேச அளவில் புலம்பெயர்ந்தோர் பட்டியலில் இந்தியர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். அதாவது 1.75 கோடி பேர் உலகின் பல்வெறு நாடுகளில் வசிக்கின்றனர். இது சர்வதேச அளவிலான புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் 6 சதவீதமாகும்.
இந்தியாவுக்கு அடுத்தபடியாக, மெக்சிகோ (1.18 கோடி), சீனா (1.07 கோடி), ரஷ்யா (1.05 கோடி), சிரியா (82 லட்சம்), வங்கதேசம் (78 லட்சம்), பாகிஸ்தான் (63 லட்சம்) ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் வசிக்கின்றனர்.
புலம்பெயர்ந்தவர்களில் 50 சதவீதம் பேர் அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட 10 நாடுகளில் வசிக்கின்றனர். இதில் அமெரிக்கா 5.1 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்தபடியாக ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியாவில் தலா 1.3 கோடி வெளிநாட்டவர்கள் வசிக்கின்றனர்.
இந்தியாவில் 51 லட்சம் வெளி நாட்டினர் வசிக்கின்றனர். இதில் 4 சதவீதம் பேர் அகதிகள் ஆவர். இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம்.
#ksrpost
24-9-2019.
No comments:
Post a Comment