ஐநாவின் அழைப்பைக் குறித்து சில ஆஷாடபூதிகளின் அர்த்தமற்ற கூப்பாடு.
ஐநா_மனித_உரிமை_ஆணையக் 42வது கூட்டத் தொடரும், அழைப்புக் கடிதமும்!
————————————————
ஈழத்தமிழர் குறித்து பேச திமுக தலைவர் எம்கேஎஸ அவர்கள் ஐநா மனித உரிமை ஆணையத்தில் செல்லாம் என்ற செய்தியை கேட்டாலும் கேட்டார்கள் உடனே கொதித்தெழுந்து விட்டனர் குலக்கொழுந்துகள்.
பழையனவற்றை மறந்து பேசுகின்றனர். அன்புமணி ராமதாஸ் கூட இப்படி பதிவு செய்து வைத்திருக்கும் ஒரு அமைப்பான பசுமை தாயகம் முயன்று ஐநா மனித உரிமை ஆணைய கூட்டத்தில் தான் பேசினார். அப்போது என்ன செய்தி வெளியிட்டனர் என்பதை அவர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகின்றேன். அதை தவறு என அப்போதும் சரி, இப்பொழுதும் சரி நான் திரித்து பேசவில்லை. ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பதிவு செய்த இந்த அமைப்புகள் மூலம்தான் ஐ நா மனித உரிமை ஆணையத்தில் பேச நேரமும் வழங்கும். ஐநா மனித உரிமை ஆணையத்தின் மன்றத்தின் அரங்கங்கத்திலதான் நடத்தப்படும். இதில் பிரதான மத்திய அரங்கில் (main central hall)கழகத் தலைவர் பேச ஏற்பாடு நடந்துள்ளது. ஐநா மனித உரிமை ஆணையத்தின் அதிகாரிகள் கலந்துக் கொண்டு அதனை ஐ நா ஆண்டறிக்கையில் பதிவு செய்வார்கள்.
கழகத்தின் மீதுள்ள பொறாமையில் சில்லுண்டுத் தனமாக சிரிப்பதும் சித்தரித்து கேலி பேசுவதும் , குரைப்பதுமாக இருக்கின்றார்கள். அந்த சிரிப்பொலிக்கும் குரைப்பொலிக்கும் தொடர்ந்து பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகின்றேன். ஆனாலும் சிலவற்றை சொல்லித்தான் தீர வேண்டும்.
பசுமைத் தாயகம் என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பு அமைப்பு என்று அனைவருக்கும் தெரியும். அந்த அமைப்பின் பெயரால் தான் டாக்டர். அன்புமணி இராமதாஸ் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் கூட்டத் தொடருக்கு கலந்துகொள்ள சென்றார். ஆனால், கழகத் தலைவர் மற்றும் எங்களைப் போன்றவர்களுக்கோ அப்படியான அமைப்பு எங்களுக்கு இல்லை. ஈழத்தமிழர்கள் விரும்பி,அவர்களின் முயற்சியால் தான் எங்களுக்கு அழைப்பிதழ்கள் வந்தது. இந்நிலையில் இந்த கூப்பாடு என்பது ஈழத்தமிழர்களின் உண்மையான பிரச்சனைக்கே குந்தகம் விளைவிக்கும் கூப்பாடாக தான் இருக்குமேயொழிய ஒட்டுமொத்த ஈழத்தமிழர்களின் பிரச்சனையின் பலத்தினை இவர்கள் கூப்பாட்டால் பலமும், வீரியமான வீச்சும் சேதாரம் தானே படும்.
இதே போல் 2017ம் ஆண்டு அழைப்பினை கிடைக்கப்பெற்று கழகத்தலைவர் எம்.கே.எஸ் அவர்களும், டி.ஆர்.பாலு அவர்களும் நானும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு சட்டமன்ற கூட்ட தொடர் பணி,தலைவர் கலைஞர் உடல் நிலை காரணமாக கலந்துக் கொள்ள இயலாமல் போனது. அன்றும் இதே குரைப்பொலி கேட்டது அன்று நான் சிரித்துக் கொண்டே கடந்து போனேன்.
ஐநா மன்றத்தின் எந்த அவையாக இருந்தாலும் ஈழத்தமிழர் நலனுக்காக குரல் ஒலிக்க வேண்டும் என்பது நம் அக்கறை. 34 அல்லது 35வது கூட்டத் தொடரில் பேசினேன் என்கின்றார்கள் அதன் தொடர்ச்சியாக, அதே வரிசையில் 42வது கூட்டத் தொடருக்கான எங்களுக்கு வந்த அழைப்பு என்பது மட்டும் எப்படி பொய்யாக இருக்க முடியும்? என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும்
திரு.வை.கோ அவர்களும் இதே எங்களுக்கு வந்த அழைப்பு போல அழைக்கப்பட்டு மூன்று முறைகலந்துக் கொண்டு சிறப்பித்தார்.
ஐ.நா,மனித உரிமை ஆணையத்தின் இலச்சினை பொறிக்கப்பட்ட கடிதத்தில் அழைக்கப்பட்ட அரசியல் கட்சித்
தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கும். ‘ தாங்கள் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க தங்களுடைய பெயரைப் பதிவு செய்துள்ளோம் ’- என்று அழைப்பிதழில் கூறுவது ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறை மரபு.
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் அம்மாதிரியான கடிதத்தை தி.மு.கழகத் தலைவர் அவர்களுக்கும்,எனக்கும் அனுப்பட்டுள்ளது. ஈழத்தமிழ் சகோதரர்கள் முன்வந்து அனுப்பி வைத்த கடிதம் தான் இது.
கழகத் தலைவரோ,கழகத் தலைமையோ இந்தக் கடிதம் பெற எந்தக் கோரிக்கையையும் வைக்கவில்லை. போஸ்கோ,பாலா, ரவி போன்ற புலம் பெயர்ந்த ஈழ நண்பர்கள் மனித உரிமை ஆணையத்தில் கழகத் தலைவர் எம்.கே.எஸ் அவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக கோரிக்கை வைத்துக் கொண்டிருந்தார்கள். அதன்படி 2017 ல் கழகத் தலைவர் அவர்களுக்கு இதே மாதிரியான அழைப்பிதழை அனுப்பியதும் உண்டு.
ஐ.நா.மனித உரிமைக் கூட்டத்தில் பங்கேற்பவர்களுடைய பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்று தான் ஐ.நா.மனித உரிமை ஆணையம் எல்லோருக்கும் கடிதம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் கழகத் தலைவர் அவர்களை மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்து ஈழச் சகோதர்களே, அவரகளின் விருப்பத்தின் படி ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் பெற்று அனுப்பிய கடிதம் தான் இது.
இதை மற்றவர்களுடைய புரிதலுக்காகப் பதிவு செய்கிறேன்.
யாரோ அருள் என்பவர் என அறிகின்றேன். அவரது வாய்ச்சொல் மெய்யருளாக இருக்க வேண்டும். எனது அரசியல் களப்பணி வயது இல்லாதவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது.
காமராசருடன் நேரடியாக கோவில் பட்டி தம்பி என அழைக்கும் நிலையில் மாணவ காங்கிரசில் இருந்து பணியாற்றி உள்ளேன்.
தலைவர் கலைஞரும் ராதா என அழைக்கும் அளவுக்கும் அவர்களுடன் மற்றும் எம்.ஜி.ஆரும்,வக்கீல் என கூப்பிடும் நெருக்கமாக இருந்துள்ளேன்.
விடுதலைப்புலிகளின் தலைவர் தம்பி பிரபாகரனால் ராதாண்ணே என அழைக்கப்பட்டவன்.
கடந்த 1970-80களில ப.நெடுமாறன் உடன் ஈழத்தமிழருக்காக பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவன். இங்கு இன்னொன்றையும் குறிப்பிட வேண்டும். அருள் கூர்ந்து வாசித்தால் நலம். மருத்துவர் ராமதாசு அவர்கள் வன்னியர் சங்கம் துவங்கிய காலத்தில் என்னிடம் தொலைபேசி வழி பேசிவிட்டு, தீரன், பு.தா.அருள்மொழி, பு.தா.இளங்கோவன் அகியோர் ஆட்டோவில் வந்திறங்கி நெடுமாறனை சந்தித்த காலத்திற்க்குமுன்1972லிருந்து அரசியலில் இருக்கின்றேன்.
நாராயாணசாமி நாயுடு அவர்களுடன் 1970களில் விவாசய போராட்டத்தில் பெரும்பங்கு ஆற்றிவன் அடியேன். வழக்கு தொடுத்து விவாசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கைகயை ரத்து செய்ய காரணமானதும் அடியேன் தான்.
எம்.பியாகவும், எம்.எல்.ஏ ஆகவும் மந்திரியாகவும் பொறுப்பேற்று அடையாளம் இல்லாமல் போனவர்கள் பலர் உண்டு. ஆனால் அத்தகைய அடையாளங்கள் இல்லாமலேயே தமிழக அரசியத்தில் , தமிழக அக்கறையில் , நலனில் என்னுடையபோராட்டங்களும் முத்திரைகளும் பல உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கு பதிவு செய்வது அவசியமாகின்றது.
கூடங்குளம் அணுவுலை க்கு எதிராக முதல் வழக்கு பதிவு செய்தவரை தான் நீ இகழ்ந்து பேசிக் கொண்டிருக்கின்றாய்.
தேசிய நதிநீர் இணைப்புக்காக 30 ஆண்டுகாலம் சொந்த செலவில் உச்சநீதிமன்றம் வரை போராடிய ஒருவரை தான் நீ சுய அரிப்புக்காக சொரிந்துக் கொண்டிருக்கின்றாய்.
என் ப்ளாக்கரில் சுயவிவரம் இருக்கும் சென்று வாசித்து விட்டு யோசித்தால் நலம்.
Please don’t underestimate any body.
வணிக மற்றும் சந்தை அரசியலில் எங்களைப் போன்றவர்கள் இழந்தது தான் அதிகம். பெற்றது ஒன்றுமில்லை யாரைப் பற்றி பேசுகின்றோம் என அறிந்துபேசவேண்டும்.
உழைத்தவர்களை களங்கப்படுத்தினால் அடுத்த களப்போராட்டத்திற்கு யாரும் முன் வரமாட்டார்கள்.
யாருக்காகவும் பொய் சொல்லி எனக்கு பெருமை சேர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. அப்படி பொய்சொல்லி நான் அடையப்போவதும் எதுவுமில்லை. எனக்கு ரயில்வே ஸ்டேடஷனுக்கு பெட்டி சுமந்த வந்தவர் எல்லாம் நான் ஏற்படுத்தி கொடுத்த அறிமுகத்தால் எம்.பி -அமைச்சர் ஆகி விட்டனர்.எதைப்பற்றியும் கவலை இல்லாமல் தனமானத்தோடு எந்த நிலையிலும் நடப்பவன். பொய்யான செயதியை சொல்லி ஏமாற்றம் வேலை எனக்கு வராது. எங்கள் வட்டாரத்தில் மரியாதை, கண்ணியமான குடும்ப வளர்ப்பும், கல்வியை பெற்றவன் அடியேன்.
நாங்கள் இதுபோன்ற அழைப்புகளை எதிர்பார்த்து கேட்கவில்லை. ஈழத்து சகோதரர்கள் தான் நீங்கள் வந்தால் நல்லது என்றதால் அதை ஏற்றுக் கொண்டோம்.
திரும்ப திரும்ப ஒரு பொய்யை சொன்னாலும் அது யதார்த்தமாகாது. சற்று புரிதலும் சிந்தனையும் இருந்தால் இப்படி அபத்தமாக தேவையில்லாமல் சில ஆஷாடபூதிகள் பேசுவதை வரை அலட்சியப்படுத்தி நகர்வோம்.
உலகின் எந்த பகுதியில் மனித உரிமை பாதிக்கப்பட்டாலும்,ஏன் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டாலும் கூடத் தீர்வை எட்ட ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடம் முறையிடலாம்.
கிட்டத் தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர் பிரச்சினை அங்கு நிலுவையில் உள்ளது. ஈழத் தமிழர்களுக்கான நீதி கிடைக்க வாய்ப்புக் கிடைக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது.
இலங்கையில் ராஜபக்சே ஆட்சி வரை .அதாவது 2009 இறுதிப்போர் வரை நடந்த இனப்படுகொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் விசாரிக்க சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டும், இலங்கை அரசால் இந்த ஆணையத்தில் இந்தப் பிரச்சினைக்கு நியாயமாக தீர்வு எட்டாமல் போய்க் கொண்டே இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச்- செப்டம்பரில் நடக்கும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் 42 ஆவது கூட்டத் தொடர் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதியன்று- ஜெனீவாவில் துவங்க இருக்கிறது.
இந்தக் கூட்டத் தொடரில், குறிப்பாக ஈழத்தமிழர் பிரச்சினை குறித்துப் பேச வேண்டும் என்ற நோக்கில், உலக அளவில் வாழும் ஈழத்தமிழர்கள் பல்வேறு அரசியல் தலைவர்களை அழைப்பது வாடிக்கை. ஈழத்தமிழ் சகோதரர்களே மனித உரிமை ஆணையத்தை அணுகி அந்த அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வதை முறைப்படுத்தி அதற்கான அனுமதிக் கடிதத்தை ஐ.நா.மனித உரிமை ஆணையத்திலிருந்து பெற்று அனுப்பவர்கள். அதுவே முறையான அழைப்பிதழ் ஆகும். அந்த கடிதத்தின் படி ஐ.நா. ஆணைத்தில் நமக்கான உரிமைப்பிரச்சினைகளைப் பேச அதிகபட்சம் பத்து நிமிடங்கள் கிடைக்கும்.
ஈழப் பிரச்சனையில் இன்றைக்குள்ள சூழலில் என்ன செய்ய வேண்டும் இந்த பிரச்சனையில் என்ன செய்ய வேண்டும் என்பது தான் கவனிக்க வேண்டிய விடயமாகும்.
அவை,
1. இன அழிப்பை செய்த ராஜபக்சேவை சர்வதேச மன்றத்தில் நிறுத்தி தண்டிக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில் லைபீரியா அதிபர் சார்லஸ் டெயிலரை இனஅழிப்பு குற்றத்திற்க்காக தண்டிக்கப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், செர்பிய குடியரசுத் தலைவராக இருந்த மிலோசேவிக், அப்பாவி மக்களைக் கொன்று குவித்தார். இதற்காக 2006ஆம் ஆண்டு அவர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு நான்கு ஆண்டு காலமாக விசாரணை நடைபெற்று வந்தவேளையில், அவர் சிறையிலேயே இறந்தார். சூடான் அதிபரான ஓமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டு, அவர் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை நடைபெற்று வருகிறது. இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்ல முடியும்.
முதலில் ராஜபக்சே மீது சர்வதேச சுதந்திரமான புலனாய்வு செய்து அவரை பன்னாட்டு நீதிமன்ற பொறிமுறையில் சுதந்திரமான, நம்பகமான விசாரனை நடத்தி தண்டிக்கப்பட வேண்டும்.
அந்த விசாரனையில் ஈழத்தில் இன அழிப்பு நடந்தது என்று நிரூபிக்கப்படும். அந்த சூழலில் தான் தனிவாழ்வு என்ற தந்தை செல்வாவின் வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு மேலும் சர்வதேச அளவில் வலு சேர்க்கும்.
2. சர்வதேச கண்காணிப்பில் ஈழத்தமிழர் விரும்பும் தீர்வான தனி வாழ்வா, சக வாழ்வா, தனி நாடா, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இருதேசங்கள் என்ற பிரச்சனைகள் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
இது நடைமுறைக்கு வரவேண்டுமெனில் சர்வதேச அளவில் ஆதரவு தேவை. மேற்குறிப்பிட்ட ராஜபக்சே மீது விசாரனை நடத்தி இனஅழிப்பு ஈழத்தில் நடந்தது என்று நிரூபிக்கப்பட்டால் இந்த பொது வாக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதாகிவிடும். இது தான் அடிப்படையாக செய்ய வேண்டிய பணிகள்.
3. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர்களை பீதியில் ஆழ்த்தும் சிங்கள ராணுவத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.
4. இறுதிப் போர் 2009 ல் நடந்தபோது கைது செய்யப்பட்டவர்கள், காணாமல் போனவர்களை உடனடியாக விடுவித்து அவருடைய உறவினர்களிடம் அவர்களை சேர்க்க வேண்டும்.
5. தமிழர்களுடைய விவசாய நிலங்களையும், வீடுகளையும் சிங்களர்கள் கபளீகரம் செய்துவிட்டனர். அதை முறையாக தமிழர்களிடம் திரும்பி ஒப்படைக்க வேண்டும்.
6. ஒப்புக்காக ஏமாற்றும் அதிகாரமற்ற மாகாண கவுன்சில்களுக்கு நில நிர்வாகம், நில வருவாய், காவல் துறை, மீன்பிடி நிர்வாகம் என முக்கிய் அதிகாரங்களை வழங்காமல் இருப்பது தமிழர்களை வஞ்சிக்கின்ற நடவடிக்கையாகும். மாகாண கவுன்சில் என்பது ஏற்புடைய வாதமில்லை என்றாலும் நிர்வாகம் என்று ஒப்புக்கு ஏற்றுக்கொண்ட வகையில் இதன் உரிமைகளை பெற வேண்டிய கட்டாயத்தில் ஈழத்தமிழர்கள் உள்ளனர்.
இப்படியான அடிப்படையான விடயங்களை கவனம் செலுத்துவது முக்கியமான கடமை. இது அவசரமும் அவசியமும் ஆகும். சொல்ல வேண்டிய அவசியத்தினால் இதை வலியுறுத்துகிறேன். ஆக்கப்பூர்வமான எண்ணங்களம் நடவடிக்கைகளும் தான் இன்றைக்கு ஈழப்பிரச்சனைகளுக்கான தீர்வை வழங்கும்.
ஐ.நாவின் 35வது கூட்டத் தொடருக்கும் 2014இல் அழைப்பு வந்தது. கடந்த 40வது கூட்டத்தொடருக்கும் அழைப்பு வந்தது.
கடந்த முறை ( 2017) கிடைக்கப்பெற்ற அழைப்பானையையும் , ஐ.நா நுழைவு அட்டை, ஐ.நா ஆண்டறிக்கையில் எனது பெயரிட்ட அறிக்கை நகலையும் ஆதாரமாக இத்துடன் இணைத்துள்ளேன். இவ்வளவு ஆதாரங்களையும் வைத்துக் கொண்டு இவர்களுக்கு பதில் சொல்லி நேரம் செலவிடும் போது "தலையெழுத்து" என சிந்திக்காமல் இருக்க முடியவில்லை.
#இணைப்பு- ஆவணங்கள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
2-09-2019.
No comments:
Post a Comment