Sunday, September 22, 2019

#நிமிரவைக்கும்_நெல்லை




திருநெல்வேலிக்காரர்கள் பலர் பெரும் புகழ் பெறுவது எப்படி?

பெரும் புகழ் பெறுகிறார்களா? என்பதை கடைசியில் பார்ப்போம். நெல்லைக்காரர்களின் பொதுவான சில குணங்களை முதலில் பார்ப்போம்.

கடின உழைப்பாளிகள்: காடோ, வயலோ, தி நகர் ரங்க நாதன் தெருவோ, வேளச்சேரி மென்பொருள் நிறுவனமோ, கோரா பதில்களோ, எதுவானாலும் தங்களது 200 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பார்கள். மற்றவரை குற்றம் சொல்லிக் கொண்டு, தலையை சொறிந்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். இறங்கி வேலை செய்வார்கள். பாதையே இல்லையெனில் தனக்கென தனிப் பாதையை உருவாக்கி விடுவார்கள். முயற்சி மெய்வருத்தக் கூலி தரும்.

உதவும் மனப்பான்மை: நெல்லை பேருந்து நிலையத்திலோ, ரயில் நிலையத்திலோ வெறும் ஊர், மற்றும் சந்திக்க வேண்டிய நபர் பெயர் மட்டும் சொல்லி, எப்படி போகணும்? என்று விசாரித்தால், மெட்ரோ நகரத்து பக்கத்து பிளாட்காரன் மாதிரி "நோ ஐடியா" என்று விட்டேத்தியாக பதில் சொல்லாமல், பத்திரமாக உங்களை அனுப்பி வைப்பார்கள்.

ஏலே கணேசா, நம்ம பத்தமடை முருகன் வீட்டு விசேசத்துக்கு மெட்றாஸ்லேந்து வந்திருக்காக, போற வளில பாத்து பத்திரமா இறக்கி வுடு என்ன?

கணேசன் என்பவர் அந்த பஸ்ஸின் கண்டக்டர்.

போற வழியில், அந்த பஸ்ஸே சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் விழுந்து விட்டால், எல்லா மக்களும் சேர்ந்து, தூக்கி நிப்பாட்டி விடுவார்கள். அரசு அதிகாரிகள் வந்து டிராக்டரில் கயிறு கட்டி பஸ்ஸை இழுக்க வேண்டும் என்றெல்லாம் காத்திருக்க மாட்டார்கள்.

கண்ணு பார்த்தால், கை செய்து விடும்.

சொல்ல மறந்துட்டேனே! உங்களை ஒரு வேலை செய்ய விட மாட்டார்கள்.

நீங்க, எங்க ஊரு விருந்தாளி இல்லா?

கறார் பேர்வழிகள்: அன்னிக்கு ஒரு பேச்சு, இன்னிக்கு ஒரு பேச்செல்லாம் கிடையாது. வியாபாரத்தில் கறாராக இருப்பார்கள்.

கணக்குனா கணக்கு தான். பைசா பாக்கியில்லாமல் பைசல் செய்வார்கள். அரசாங்கம் தங்கள் கடனை ரத்து செய்யுமா? என்றெல்லாம் ஆருடம் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள்.

எல, பேப்பர் பாத்தியா? அந்த செருக்கி வுள்ள செஞ்ச வேலைய பாரு! பேங்குல கடன வாங்கிட்டு, லண்டனுக்கு ஓடிட்டானாம். அவனெல்லாம் சோத்த தான் திங்கானா? இல்ல வேற ஏதாச்சும் திங்கானா?

விஜய் மல்லையாவுக்குத் தான் இந்த மரியாதையான அர்ச்சனை.

ஆற்றில் ஆண்கள் இந்த பக்கம் குளித்தால், பெண்கள் சற்று தள்ளி குளிப்பார்கள். ஒரு தலையோ, கண்களோ அந்த பக்கம் திரும்பாது.

ஸார்வாள் ஊருக்கு புதுசோ? பொம்பளையாள் குளிக்கற பக்கமெல்லாம் திரும்பக் கூடாது.

ஒரு தரம் தான் வார்னிங் எல்லாம், அடுத்த முறை நடந்தால், கட்டி வைத்து உரித்து விடுவார்கள், முதுகுத்தோலைத்தான்!

தெய்வ பக்தி மிக்கவர்கள்: காலை, மாலை, வேளை தப்பிடாமல், அந்த கந்தவேளை வணங்குவதே என் வேலை ! என்று இருப்பவர்கள். திருநீறு இல்லாத நெற்றியை பார்க்கவே முடியாது. கஷ்ட காலங்களில் "செந்தூரா ! இங்க வந்து கொஞ்சம் கவனிப்பா !" என்று உரிமையோடு அழைப்பார்கள். செந்தூர் ஆண்டவனும் இவர்களுக்கு பட்ட கடனுக்கு வந்து நிற்பான்.

தைப்பூசம், கந்த சஷ்டி எல்லாம் அல்லோலப்படும். கால்நடையாக, வண்டிகளில் என்று சாரை சாரையாக வந்து முடி காணிக்கை செலுத்தி மனமுருகி வேண்டி நிற்பார்கள்.

கூவி அழைத்தால் குரல் குடுத்து தானே ஆக வேண்டும் கந்தன்.

தமிழில் தேர்ந்தவர்கள்: நெல்லைக்கு காரர்களின் 'லகர', 'ளகர' உச்சரிப்பில் வேண்டுமானால் பிழை இருக்கலாம். ஆனால் எழுத்தில், வாசிப்பில் கில்லிகள்.

வெள்ளிக் கிழமை, ஏழைக் கிழவன் பாழும் கிணற்றில் வாழைப்பழ தோல் வழுக்கி கீழே விழுந்தான்.

இந்த வாக்கியத்தை பத்து வினாடிகள் பார்த்து விட்டு நீங்கள் பிழை இல்லாமல் எழுதினால், வாசித்தால், ஒன்று இந்த ஜென்மத்திலோ அல்லது போன ஜென்மத்திலோ நெல்லைக்காரராக இருந்திருப்பீர்கள் அல்லது உங்கள் தமிழாசிரியருக்கு நெல்லையுடன் தொடர்பிருக்கலாம்.

வக்கணையாக சாப்பிடுபவர்கள்: இவர்களுக்கு நாக்கு நாலு முழம். இரண்டு இட்லிக்கு, நாலு சட்னி வேண்டும். சாம்பார் இல்லையெனில், கடை செங்கல் செங்கலாக தகர்த்தெறியப்படும். இதெல்லாம் போக " தோசைக்கு தொட்டுக்க மொளகா பொடி இல்லையா?" என்று ஒருவன் பஞ்சாயத்தை துவங்குவான்.

நக்கல் பேர்வழிகள்: எடுத்ததும் தெரியாது, சொருகியதும் தெரியாது. போகிற போக்கில் நக்கல் அடித்து விட்டு போவார்கள். 75 வயது கிழவியோ, 20 வயது அரிவையோ நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். வெள்ளந்தியான மக்கள். உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாது.

நாக்கு ருசிக்கும், நக்கலுக்கும் காரணம், தாமிரபரணி தண்ணி.  அமிழ்ந்து குளிப்பார்கள், சுறா போல நீச்சல் அடித்துக் குளிப்பார்கள், திமிங்கலம் போல மேலே மிதந்து குளிப்பார்கள், டால்பின் போல தலைகீழாக பல்டி அடித்துக் குளிப்பார்கள். குறைந்தது இரண்டு மணி நேரம், அதிக பட்சம் அம்மா விளக்குமாத்துடன் வரும் வரை. குளித்தபின் பசிக்குமே!

அழகர்கள்: நல்ல கரு கருன்னு கருஞ்சிறுத்தை போல துடியாக இருப்பார்கள். நெல்லைக்காரர்கள் மீசையழகைப் பார்த்து தான் சிங்கம் சூர்யாவுக்கு இந்த மீசை வைத்து அழகு பார்த்தார் இயக்குனர் ஹரி.

உங்களுக்கு பெண்/மாப்பிள்ளை பார்க்கும் போது, நெல்லை பையன்/பெண் வரனாக வந்தால், டக்குனு கழுத்தை நீட்டுங்கள். சுனாமியே வந்தாலும் உங்களை தலையில் வைத்து காப்பாற்றி கரை சேர்த்து விடும் டைட்டானிக் ஜாக் அவர்கள்.

#திருநெல்வேலி
(படம்-நெல்லையப்பர் கோவில்)

No comments:

Post a Comment

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for things to get easier, simpler, better*.

*Being happy and joyful doesn't mean everything is perfect; it means you've learned to see the beauty in bad. Don't wait for thi...