Sunday, September 22, 2019

அமேசான் - இயற்கையின் அருட்கொடை

மின்னம்பலம் இணையத்தில்  #அமேசான் குறித்த எனது பதிவு.

அமேசான் - இயற்கையின் அருட்கொடை.
வழக்கறிஞர். கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
 
---
“மண்ணின் மீது மனிதனுக்காசை மனிதன் மீது மண்ணுக்காசை,
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது இதை மனம் தான் உணர மறுக்கிறது.”
 
அமேசான் மழைக் காடுகளும், நதிதீரமும், அங்கு படர்ந்துள்ள மலைகளும் மனித இனத்திற்கு கிடைக்கப்பெற்ற கொடைகளாகும். இந்த இயற்கையின் அதிசயத்தில் பல மர்மங்களும் நிரம்பியுள்ளன. இன்னும் பல உண்மைகள், தரவுகள், இது குறித்தான புவியியல் உண்மைகள் புலப்படவில்லை. பச்சை பசேலென்று பின்னிப் பிணைந்த பசுமை நிறைந்த இந்த பூமியில் சூரிய வெளிச்சமே படுவதில்லை. எப்போதும் மழை. எண்ணற்ற அதிசயமான மரங்கள். வித்தியாசமான விலங்குகள், பாடிப் பறக்கும் பறவைகள், பல்வேறு இனங்களாக பிரிந்துள்ள பூர்வகுடி மக்கள் என நிரம்பியுள்ளனர்.
தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் 70 லட்ச சதுரக் கிலோ மீட்டருக்கு மேல் பரந்துள்ளது இந்த அடர்த்தியான காடு. இங்கு பசுமைக் காடுகளே 55 லட்ச சதுரக் கிலோ மீட்டர்களாகும். பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசூலா, ஈக்வேடார், கயானா, பொலிவியா, பிரெஞ்சு கயானா, சுரிநாம் ஆகிய நாடுகளில் இந்த காடுகள் விரிந்துள்ளன. பிரேசில் நாட்டில் இந்த காட்டுப்பகுதியில் 6,992 கிலோமீட்டர் அமேசான் நதி பாய்கிறது. இந்த அமேசானுக்கு 1,100 துணை நதிகளும் உண்டு. அமேசான் காடுகள் உலகின் எங்கோ ஓரிடத்தில் பரந்திருந்தாலும் உலகில் வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு வாயுவை அதிகளவில் உறிஞ்சிக் கொள்கின்றது. மேலும் 20% ஆக்சிஜனை (பிராண வாயு) உலகத்திற்கு வழங்குகின்றது. இதை பூமியின் இதயம், நுரையீரல் என அழைப்பதுண்டு.
இந்த காடுகள் பூமி வெப்பமடைவதை தடுத்து சுற்றுச் சூழலை பாதுகாக்கின்றது. மழை பெய்தால் மழைத்துளிகள் காட்டின் மண் தரையை தொடுவதற்கு 10 நிமிடங்களுக்கு மேலாகிறது. அப்படியானதொரு அடர்த்தியான காடுகள்.
அமேசான் ஆறு உலகின் இரண்டாவது பெரிய நதியாகும். இந்த ஆற்றின் போக்கையோ அதற்கு மேல் பாலமோ, அணைகளோ கட்டப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளன. அமேசானிலிருந்து ஒரு வினாடிக்கு 2,09,000 கன மீட்டர் நீர் வெளியேறுகிறது. அதுவே வருடத்திற்கு 6591 கன கிலோ மீட்டர் நீர் அதாவது உலகில் உற்பத்தியாகும் நீரில் 20 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அமேசான் டெல்டா பகுதி ஏறத்தாழ 70,50,000 சதுர கிலோ மீட்டர்களாகும். பிரேசில் நாட்டின் பெரும்பகுதி, பெரு, ஈக்வேடார் ஆகிய நாடுகளில் இந்த நதி தன்போக்கில் பாய்கிறது. பெருமளவிலான நதிநீர் அட்லான்டிக் பெருங்கடலில் கலக்கிறது. அமேசான் ஆற்றில் எண்ணெய் வளம் இருப்பதாக ஆய்வுகள் நடந்தன. அப்போது அந்த ஆய்வில் அமேசானுக்கு கீழே 6,000 கி.மீட்டர் நீளத்தில் மற்றொரு நதியும் செல்வதாக அறியப்பட்டது. இதையும் இந்தியாவைச் சேர்ந்த வாலிய ஹம்சா என்பவர் ஆய்வு மேற்கொண்டார். இதை ஹம்சா நதி என்றும் அழைக்கப்படுகின்றது.
அமேசான் நதி முதலில் மேற்கு நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. அண்டெஸ் மலையின் வளர்ச்சியால் நதி கிழக்கே நோக்கி பாய்கிறது. நியூயார்க் நகரத்திற்கு 12  வருடத்திற்கு தேவையான நீரை அமேசான் ஆற்றிலிருந்து அட்லான்டிக் கடலுக்கு செல்கிறது. இந்த ஆற்றில் வெள்ளம் நவம்பர் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நீடிக்கும். குளிர்ந்த இந்த மழைகாட்டில் வெப்பமான ஆவி பறக்கும் 4 மைல் நீளமுள்ள ஆறு உள்ளது. இந்த ஆற்றின் பின்புறத்தில் பெரிய நீர்விழ்ச்சி உள்ளது. அந்த நீர்வீழ்ச்சியில் வேகமாக பாறைகளை முட்டும்போது உடைந்த பாறைக் கற்கள் மோதிய இந்த நீரில் அப்படியே டீத் தூளைப் போடலாம். இந்த வெப்பத்தில் எந்த உயிரினம் விழுந்தாலும் சாகடிக்கப்படும். இதனருகே எரிமலைகளும் உள்ளன.
அமேசான் காட்டில் கோடிக்கணக்கில் உயிரினங்களும், தாவரங்களும், பூச்சிகளும் நிரம்பியுள்ளன. 50 லட்சத்திற்கு மேலான காடு வகைகள், 1,500 வகையான பறவைகள், 200 வகையான கொசுக்கள், 1,800 வகையான வண்ணத்துப் பூச்சிகள் என நிரம்பவுள்ளன. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களின் மூன்றில் ஒரு பங்கு விலங்கினங்கள் அமேசானில் தான் குடிபுகுந்துள்ளது. அனகோண்டா பாம்புகள், மின்சாரத்தை வெளிப்படுத்தும் ஈழ் மீன் வகைகளும் உயரமான, தடித்த, இனமறியாத விலங்குகளும் இந்த காட்டில் உள்ளன. சில விலங்குகள் சுவாசத்தலோ, கடித்தோ, மின்சாரத்தை வெளிப்படுத்தியோ ஒரு மனிதனை சாகடிக்க முடியும். சில மீன்கள் விலங்குகளைக் கூட கடித்து உண்டு விடுகிறது. ரத்தத்தைக் குடிக்கும் வௌவால்கள் என எண்ணற்ற உயிரினங்கள் உள்ளன. அமேசான் எண்ணற்ற வித்தியாசமான தாவரங்கள், செடி, கொடிகள் என்ற அற்புதமான இயற்கையின் பூங்கா தான் அமேசான்.
வருடமெல்லாம் கொட்டும் மழையில் ஆபத்தான இந்த காட்டிற்கு சென்றுவிட்டு எளிதில் திரும்ப முடியாது. ஒரு பக்கம் இருட்டு, மனிதனையே சாகடிக்கும் விலங்கினங்களும், தாவரங்களும் உள்ளன. அமேசான் காடுகளில் 3,000 பழ வகைகள் இருப்பதாகவும், அதில் 200க்கும் மேல் மட்டுமே அறியப்பட்டதாகவும், ஆனால், அங்குள்ள பூர்வகுடிகள் 2000க்கும் மேலான அரிய பழங்களைத் தான் உண்டு மகிழ்வதாக ஆய்வுகள் சொல்கின்றன. 6 லட்சத்திற்கும் மேலான பழங்குடியினர் குடியிருந்த காடு தற்போது 3 லட்சமாக சுருங்கிவிட்டது.
இந்த மக்களின் 25 பழங்குடியினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவர்கள் 170க்கும் மேலான மொழிகளில் பேசுகின்றனர். பச்சை பழங்களையும், வேட்டியாடிய விலங்குகளை சமைக்காமலேயே உண்கின்றன. சமைப்பதோ, வெப்பப் படுத்துவதோ அவர்களுக்கு தெரியாது.
இப்படியான இயற்கையின் வரமான அமேசான் காடுகளில் பெருமளவில் தீ பரவி அக்னியாக எரிகிறது. இந்த காட்டுத்துதீ அவ்வப்போது ஏற்படுவது இயற்கை. ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள பெருமளவான நெருப்பு மழையாக எரிவது வேதனையை தருகிறது. இந்த தீயினால் பழங்குடியினர், அரிய உயிரினங்கள், தாவரங்கள் என அழிந்து மிகவும் பாதிப்புக்குள்ளான நிலை. நாசா நிறுவனம் வெளிட்ட படங்களை பார்த்த்தால் வேதனையாகவே இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை இங்கே 74,000 தீவிபத்துகள் நடந்துள்ளன. இது 90% வரை கூடுதலாகிவிட்டது. இதற்கு காரணம் என்ன?
காடுகளை அழித்து கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில், விவசாயம், தாது வளங்களை சுரண்ட நினைத்தபோது தான் இந்த தீவிபத்து ஏறபட்டது. அமேசானை 1970 வரை யாரும் சுயநலப் பேராசையால் நெருங்கவில்லை. ஆனால் இயற்கை புறம்பாக அமேசானின் வளங்களை கபளீகரம் செய்ய நினைத்ததால் இன்றைக்கு அமேசான் காடுகள் பேரழிவை சந்தித்துள்ளது.
கடந்த 1990லிருந்து இன்று வரை பிரேசிலில் மட்டும் 30,000 சதுர கிலோ மீட்டருக்கும் மேலான காடுகள் மானிடப் பேராசையால் அழிக்கப்பட்டது. பிரேசில் சாவ்பாலோ நகரின் அருகில் காடுகள் எரிந்ததால் அந்த நகரமே கருமையாகியுள்ளது. அமேசான் காடுகள் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பொதுவானது. இதன் ஆயுள் 5.5 கோடி வருடங்கள் என்று கணக்கிட்டுள்ளனர்.
இதிலும் சர்வதேச புவியரசியலும் முளைத்துவிட்டது. பிரேசில் அதிபர் போல்சனாரூ அமேசான் காடுகளில் கனிமங்களை எடுக்கவும், வேளாண்மை செய்யவும் உரிய முயற்சிகளை மேற்கொள்வேன் என்றார். ஆட்சிக்கு வந்தவுடன் அமேசான் காட்டில் வாழும் பூர்வக்குடி மக்களின் கட்டமைப்புகளை எல்லாம் களைத்து, நேசனல் இந்தியன் அறக்கட்டளையிடம் இருந்து அனைத்து அதிகாரங்களையும் பறித்துக் கொண்டார். அது மட்டுமல்ல, பழங்குடிகளின் வைரியாக இருந்த லூயிஸ் அண்டானியோ நபாம் கார்சியாவிடம் பழங்குடிகளை குறித்தான அரசு முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை கொடுத்தார். பிரேசில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளின் நிதி ஆதாரத்தை குறைத்தார். இதனால் அங்கே தீயிலிருந்து பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகள் சரியாக எடுக்கப்படவில்லை. போதுமான நிதித் தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை. இதை வைத்துக் கொண்டு இயற்கை வளங்களை கபளீகரம் செய்ய சுயநல பண முதலைகள் காட்டுக்குள் தீவைக்க தொடங்கினர். சில காலம் கமுக்கமாக இந்த வேலைகள் நடந்தது. இந்த தீவைப்பை சர்வதேச மன்னிப்பு அவை (Amnesty International) சென்று பார்த்தபோது, காடு எரிந்து முடிந்தநிலை. மரங்கள் தீக்கிரையாகின. விலங்குகள் கருகி சாகடிக்கப்பட்டனர். பூர்வகுடிகள் பலர் இரக்கமற்ற முறையில் சாகடிக்கப்பட்டதாகவும் தகவல்கள். இவ்வித பாசிச போக்கு மனித நேயத்தையே அழித்தது. இன்னும் ஆங்காங்கு தீ வைத்து காடுகள் எரிந்த வண்ணம் இருப்பதாக தெரிகின்றது. ஐரோப்பிய நாடுகள் காட்டுத் தீயை குறித்து கண்டனங்களை தெரிவித்தன. ஜெர்மனியும், நார்வேயும் காட்டுத் தீயை அழிக்க வழங்கிய நிதியையும் பிரேசில் கோபத்தில் குறைந்தது. பிரான்சும் பிரேசிலை கடுமையாக கண்டித்தது. பிரேசில் நாட்டுடனான வணிகத் தொடர்பையும் ஐரோப்பிய யூனியன் நிறுத்தியது. இந்த சூழ்நிலையில் இன்னும் போல்சனாரூ பயந்து அஞ்சினாலும் அமேசான் காட்டை அழிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் என்பது தான் தகவல்கள்.
இதேபோலத் தான் இந்தியாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் சில சுயநல ஆதிக்கவாதிகள் சுரண்டுகின்றனர். காட்கில் – கஸ்தூரிரங்கன் அறிக்கையின் சில பரிந்துரைகளை நிறைவேற்றவில்லை. கிழக்குத் தொடர்ச்சி மலையிலும் இதே நிலைமை.
உலகில் மனிதன் எவ்வளவுதான் தொன்மையும், நாகரிகமும், கல்வியும், புரிதலும், அறிதலும் அடைந்தாலும் இயற்கையை வணங்கி பாதுகாக்க வேண்டும். மனிதன் நிரந்தரமல்ல. மனித நேயமும், இயற்கையும் தான் நிரந்தரம்.
நமக்கு உரிமையானது மண்ணில் எதுவுமே இல்லை, எல்லாமே தாற்காலிகமாக நாம் வைத்திருக்க, பயன்படுத்தத் தரப்படுவது தான். இதை எப்போதும் நினைவில் வைத்ததால் நமக்கு நல்லது!
-செய்தித் தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி.
rkkurunji@gmail.com

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...