#அர்த்தமற்ற_மெய்யற்ற_தகுதியற்ற #வெட்டிபேச்சுகளை_விவதங்களை, #விமர்சனங்களை_தவிர்ப்போம்
————————————————-
கடந்த மார்ச் 22லிருந்து வீட்டில் செடிகளையும், மொட்டைமாடி நடைப்பயிற்சியும், தமிழ் ஆங்கில செய்தி தாட்கள்,1950லிருந்து 2000 வரை திரையிசைப் பாடல்களைக் கேட்பது. தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, மெளனி, நா.பா, கிரா போன்றவர்களின் படைப்புகளை மீள்பார்வையாக படித்ததும் என்ற நிலையில்; கடந்த கால தமிழகத்தின் வாழ்க்கையை அசைப் போட முடிகின்றது. காவிரி டெல்டாவின் குடும்ப வாழ்க்கை, கு. அழகிரிசாமி,கிரா வானம் பார்த்த கந்தக கரிசல் மண்ணின் கலாச்சாரம், நா.பாவின் அரவிந்தன், ஷேக்ஸ்பியரின் படைப்புகள், கீட்ஸ், எல்லியட், வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் ஆங்கில கவிநயங்கள், ஆழ்வார்களின் பாசுரங்கள், பதிகங்கள் என படிப்பதில் பொழுபோக்குவது மட்டுமல்ல அதன் சுவையும் தரத்தையும் அறிய முடிகின்றது. பாசுரங்களும் பதிகங்களும் பக்தி இலக்கியங்களாக இருந்தாலும் அதை தமிழின் வேர்களாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
தமிழுக்கு முதல் நாவலை 1876 இல் அளித்தவர் நீதிபதி மாயூரம் வேதநாயகம் பிள்ளை. பின்னால் வந்த நீதிபதிகள் பலரும் கம்பராமாயணத்தில் பக்தி இலக்கியங்கள், சங்க இலக்கியங்களில் தோய்ந்திருக்க, வேதநாயகம் பிள்ளை படைப்பு மட்டும் தற்கால உரைநடை இலக்கியமாக விளங்கியது.
அவரின் இரண்டாம் படைப்பு `சுகுண சுந்தரி`யை விட முதல் நாவலான `பிரதாப முதலியார் சரித்திரம்` கூடுதல் இலக்கியத் தகுதி பெற்றது. (அந்தக் காலத்து மொழிநடையில் அவர் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தை ஒரு பதிப்பகம் வடசொற்கள் நீக்கித் தமிழ்ச் சொற்கள் பெய்து புதுப்பதிப்பு வெளியிட்டது. இந்த அடாத செயலைக் கண்டித்து தீபம் இலக்கிய இதழ் ஒரு கட்டுரை வெளியிட்டது. கட்டுரையின் தலைப்பு: `பரிதாப முதலியார் சரித்திரம்!
வேதநாயகம் பிள்ளைக்குப் பின்னால் வந்த நடேச சாஸ்திரி சில நாவல்களைப் படைத்தார். `மாமி கொலுவிருக்கை, கோமளம் குமரியானது, திக்கற்ற இரு குழந்தைகள், மதிகெட்ட மனைவி` போன்ற அவரது படைப்புகள் தொடக்க கால முயற்சிகள் என்ற அளவில் மட்டுமே குறிப்பிடத் தகுந்தவை.
நாவல் வரலாற்றில்,`கமலாம்பாள் சரித்திரம்` எழுதிய ராஜம் ஐயர், `பத்மாவதி சரித்திரம்` எழுதிய மாதவையா, நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதித் தள்ளிய வை.மு. கோதைநாயகி, `முருகன் ஓர் உழவன், கந்தன் ஒரு தேசபக்தன்` நாவல்களின் ஆசிரியரான கே.எஸ். வெங்கடரமணி எனக் குறிப்பிடப்பட வேண்டிய பலபெயர்கள் உண்டு.
சிறுகதை என்பது `உரைநடையால் ஆக்கப்பட்ட கவிதை` என்று கூறுகிறார் ஜெயகாந்தன். (தினமணி கதிரில் கவிஞர் ராஜமார்த்தாண்டனுக்கு அவர் அளித்த பேட்டியில்.)
நா. பார்த்தசாரதியின் நாவல்கள் யாவும் உரைநடையால் ஆக்கப்பட்ட கவிதைகளே. கவிதையில் தென்படும் அணி அலங்கார அழகுகள் அனைத்தும் நா.பா. நாவல்களில் தென்படுகின்றன. அறக் கருத்துகளைப் அதிகம் பொதிந்து எழுதப்பட்ட இதிகாசத் தன்மை கொண்ட அவரது குறிஞ்சி மலர் நாவலை விடவும், அடுத்த நாவலான `பொன்விலங்கு`, கூடுதலான கவிதையழகுகளைக் கொண்டது.
தி. ஜானகிராமனின் மலர் மஞ்சம் தஞ்சாவூர், கும்பகோணம், வைத்தீஸ்வரன் கோயில், மாயவரம் கூறைநாடு, கொரடாச்சேரி, திருவல்லிக்கேணி என எத்தனை ஊர்களைச் சுற்றி வரச் செய்தது.அவரின்
படைப்புகளில் தஞ்சை, கும்பகோணம், மாயவரம் வட்டாரங்கள் கண்முன் வருகின்றன.அங்குள்ள எத்தனை எத்தனை மனிதர்கள்.மனிதர்களில் எத்தனை எத்தனை வகையானவர்கள்.
அவரின் படைப்புகளில் மிகச் செறிவான வடிவச் சிறப்புக் கொண்ட நாவல் என்று `அம்மா வந்தாளை`ச் சொல்ல வேண்டும். அதன் வடிவக் கட்டுக்கோப்பு படிப்பவர்களின் நெஞ்சை அள்ளுவது. அதன் கதாநாயகன் அப்பு, வேத பாடசாலையிலிருந்து புறப்பட்டுச் சென்னை வருகிறான். பின்னர் வேத பாடசாலை திரும்பும் வழியில் சகோதரி வீட்டுக்குச் சென்று அதன்பின் வேத பாடசாலை திரும்புகிறான். அவன் அம்மா அலங்காரத்தம்மாள் அப்புவை வேத பாடசாலை வந்து சந்தித்துப் பின் திரும்புகிறாள். இதுவே கதையின் போக்கு.
இதற்குள் முழுக் கதையையும், சொன்ன வார்த்தைகளாலும் சொல்லாத வார்த்தைகளாலும் புரிய வைத்துவிடுகிறார், தி.ஜா.! `அம்மா வந்தாள்` தொடங்கி, `மோகமுள், செம்பருத்தி, மலர்மஞ்சம்` என ஏறக்குறையத் தனது எல்லா நாவல்களிலும் பாலியல் விவகாரத்தைத் தான் அவர் பேசுகிறார் என குற்றச்சாட்டு அவர் மேல் உண்டு.
இந்தக் குற்றச்சாட்டை அவரது சாகித்ய அகாதமி பரிசுபெற்ற `சக்தி வைத்தியம்` என்ற சிறுகதைத் தொகுதி மேல் வைத்து, சாகித்ய அகாதமி குழுவிலிருந்து தன் பதவியை ராஜினாமா செய்தார் ராஜம் கிருஷ்ணன்.
நா.பா. கேட்டுக்கொண்டு, நா.பா.வே தலைப்பு வைத்து தி.ஜா. கல்கியில் தொடராக எழுதிய `அன்பே ஆரமுதே` மட்டும் தி.ஜா.வின் பாலியல் பாணிக்கு விதிவிலக்கு. அதில் இல்லற வரன்முறை தவறிய பாலியல் உறவுகள் கிடையாது.
ஆனந்தவிகடனில் தி.ஜா. எழுதிய `உயிர்த்தேன்` நாவலிலும் பாலியல் அம்சம் குறைவு. தி.ஜா. நாவல்களில் சிறந்ததாக அசோகமித்திரன் உயிர்த்தேனைத் தான் தேர்வுசெய்கிறார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
பாலியல் பிரச்னைகளையே மிகுதியாகத் தம் நாவல்களில் கையாண்ட தி.ஜா. எந்த இடத்திலும் வெளிப்படைப் பாலியல் பாணியைப் பின்பற்றவில்லை
மோகமுள்ளில் யமுனாவின் புடவை நாற்காலியில் கிடக்கிறது. `எல்லாம் இதுக்குத் தானா` என அவள் பாபுவைக் கேட்கிறாள். அவ்வளவே. இன்று சில எழுத்தாளர்கள் மாய்ந்து மாய்ந்து அந்த நிகழ்ச்சியையே பக்கம் பக்கமாக எழுதுகிறார்களே, அப்படிப்பட்ட பாணியை தி.ஜா. தவிர்த்துவிட்டார். அத்தகைய ஆபாசப் பாணி அல்ல இலக்கியம் என்ற தெளிவு அவருக்கு இருந்தது.தமிழ்ச் சூழலில், வெளிப்படைப் பாலியல் அதிர்ச்சி மதிப்பீட்டுக்கு உதவலாமே அன்றி ஆழ்ந்த இலக்கிய வளர்ச்சிக்கு உதவாது.
கணையாழியில் தி.ஜா. தொடராக எழுதிய அவரின் இறுதி நாவலான நளபாகமும் கண்ணியமான நாவல்தான். மரப்பசுவை அளவுகடந்து கொண்டாடுபவர்கள் உண்டு. ஆனால் அந்த அதிரடியான அம்மிணி பாத்திரத்திற்காக அது பேசப்படுகிறதே அன்றி அதை தி.ஜா.வின் உயர்ந்த படைப்பு வரிசையில் சேர்க்க இயலாது.
தி.ஜா. தமது படைப்பாற்றலின் உச்சத்தில் இருந்தபோது எழுதியவை
‘மோகமுள், உயிர்த்தேன்` போன்றவை என்றால் படைப்பாற்றல் அவரிடமிருந்து விலகத் தொடங்கிய காலத்தில் வலிந்து அவர் எழுதியவை `மரப்பசு, நளபாகம் ` ஆகிய நாவல்கள்,என்கிறார் திருப்பூர்
கிருஷ்ணன்.
மில்டனை விட கம்பனுடைய கவிசாரம் உயர்ந்தது. தாகூர் இந்தியாவின் மிக கீர்த்தியான கவிஞர் ஆனால் நமது எட்டயபுரம் முண்டாசு கவியின் படைப்புகள் தாகூரை விட சற்று சிறப்பானது தான். மத நல்லிணக்கம் இந்தியாவில் சகலமொழிகளிலும் இருந்துள்ளது. தமிழகத்தில் தமிழில் உமறுப்புலவரின் சீராப்புராணம், குனங்குடி மஸ்தானின் கவிநயம், ஹெச். கிருஷ்ணப்பிள்ளையின் கிறித்துவ இலக்கியமான இரட்சணீய யாத்ரீகம் மற்றும் தேம்பாவணி, தமிழ் காப்பியங்கள், மணிமேகலை, வளையாபதி, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, சமண காப்பியங்களும் மற்றும் சிலப்பதிகாரம், ஜைன பாடல்கள் என்பதெல்லாம் நமக்கு கன்னித் தமிழ் என்ற பொதுவெளியில் கிடைத்த அருட்கொடைகளாகும். சங்கத்தமிழ் இலக்கியங்களுக்கு நிகர் உலகில் எதுவும் இல்லை.
ஆங்கிலத்திலும் மலையாளம், தெலுங்கு, கன்னடம், வங்கம், ஒரியா, இந்தி இலக்கியங்கள் ஆங்கில மொழியாக்கத்தில் படிக்கும்போதும் மூலத்தன்மை எப்படி இருந்தது என்று தெரியாது ஆனால் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.
இந்த ஊரடங்கு நாட்களால் இவற்றையெல்லாம் படிக்கக் கூடிய, கவனிக்கக் கூடிய, சிந்திக்கக் கூடிய தனிமையும் அமைதியும் கிடைத்தது.
எவ்வளவு, விடயங்கள் செய்திகள் இருக்கின்றன என்பதை அறியாமல் நாம் சில நேரங்களில் நடந்துக் கொள்கிறோம். மெய்ப்பொருள், தகுதி, தரம் என்பது அடிப்படையில் முக்கிய காரணி என்பதை இதய சுத்தியோடு ஆக்கப்பூர்வமான உணர்வு இந்த மானிடத்திற்கு வேண்டும்.அர்த்தமற்ற,
மெய்யற்ற,தகுதியற்ற வெட்டிபேச்சுகள், விவதங்களை, விமர்சனங்களை தவிர்ப்போம்
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
05.04.2020
#ksrposts
No comments:
Post a Comment