#வேதனையான_விடயம்.#கவிதைகளை
#செழுமையானகுரலில்கொட்டித்_தீர்த்த #மகாவித்வான்_மீனாட்சிசுந்தரம் #பிள்ளைக்கு_தமிழகத்தில்_எந்த #சரியான_நினைவுச்சின்னம் #இல்லாதது....
———————————————-
தமிழ் தாத்தா உவேசா வின் ஆசிரியர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மாபெரும் ஆளுமை.
தான் இறக்கும்போது குடும்பத்தாரை கடனில் வைத்துவிட்டு தமிழையே நேசித்தவர். அவர் விரும்பி கேட்டிருந்தால் ஆதீனங்களும் அக்கால ஜமீந்தார்களும் பொன்னையும் பொருளையும் கொடுத்து அவர் வசதியாக வாழ்ந்திருப்பார். தன் குடும்ப சூழ்நிலையை எவருக்கும் சொல்லாமல் தமிழே தவம் என்று மாணவர்களே தனக்கு கிடைத்த கொடை என்று பணி செய்தார். பல தமிழறிஞர்களும் செல்வந்தர்களும் அவர் இருக்குமிடம் நோக்கி பயணப்பட்டார்கள். ஒருமுறை லண்டனிலிருந்து வெறுமென மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, மதராஸ் ஸ்டேட் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட சரியான முகவரியில்லாத கடிதம் அக்காலத்திலேயே அவரிடத்தில் சரியாக சென்று சேர்ந்ததென்றால் அவரின் பெருமையை சொல்ல வேண்டுமோ?
அவர் இயற்றிய நூல்கள் ஏராளம்.
அவற்றுள் தெரியாதவை பல. தெரிந்தவற்றுள், புராணங்கள் இருபத்திரண்டு; பிற காப்பியங்கள் ஆறு; அந்தாதிகள் பதினான்கு; பிள்ளைத்தமிழ் நூல்கள் பத்து; அகப்பொருள் கோவைகள் மூன்று; தூது இரண்டு; கலம்பகம் இரண்டு; குறவஞ்சி ஒன்று; சிலேடை வெண்பா ஒன்று; ஏனைய பிரபந்தங்கள் பதினொன்று; தனிப்பாடல்கள் அளவிறந்தன.
பிள்ளை அவர்கள் 01.02.1876 அன்று இறக்கும் வேளையின் போது தம் சீடரிடம், “திருவாசகம் படி” என்றார். அவர் உச்சரித்த திருவாசகம் சைவர்களின் மணிவாசகமாகும்.
அவர் மறைந்த போது ‘தமிழ் காளிதாசா நீ போய்விட்டாயே! ‘’இன்றைய தமிழ்க் கம்பனே நீ சென்றுவிட்டாயே’என்று தமிழகமே அழுது தவித்தது. எழுத்தாணியும் ஓலைச்சுவடியுமே தன் கைவசம் வைத்துக் கொண்டு தான் இறக்கும் வரை பாக்களை எழுதி தமிழுக்கு பெருமை செய்தார்.
பக்தி இலக்கியங்களும் தமிழுக்கு அடிப்படை அடையாளம் என்பதை உறுதிப்படுத்தியவர் தல புராண நாயகர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை. நேரசையில் பாக்கள் துவங்கினால் பதினாறு எழுத்து நிரை அசையில் தொடங்கினால் பதினேழு எழுத்து என்பதையெல்லாம் கவனமாக போகிற போக்கில் செய்யுள்களை இயற்றுவார். கலித்துறை இலக்கணக் கோட்பாடு உட்பட கவி எழுதுவது சிரமம். அதையு சாதாரணமாக கவிமொழியில் பாக்களைப் பாடும் ஆற்றல் இவருக்கே உண்டு. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளைக்கு நிகர் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையே. தமிழ் கூறும் நல்லுலகம் வெற்றுப் பேச்சுகளை நம்புகிறது. இப்படிப்பட்ட ஆளுமைகளைப் பற்றி அறிதலும் புரிதலும் இல்லாதது தமிழுக்குச் செய்யும் மாபெரும் கேடாகும் என்பதை உணர வேண்டும். கடல் மடை திறந்தாற் போல கவிதைகளை செழுமையான குரலில் கொட்டித் தீர்த்த மீனாட்சி சுந்தரம் பிள்ளை தமிழகத்தில் எந்த நினைவுச் சின்னம் இல்லாதது என்பது வேதனையான விடயம்.
#மகாவித்வான்_மீனாட்சி_சுந்தரம் #பிள்ளை
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
08.04.2020
#ksrposts
No comments:
Post a Comment