கண்டுகொள்ளுமா ‘திராவிட மாடல்’?
1968இல் சென்னையில் நடைபெற்ற இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் அறிஞர் அண்ணா வைத்த கோரிக்கையை ஏற்று யுனெஸ்கோ உதவியுடன் சென்னையில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவுவதற்கும் தொடர்ந்து ஐந்தாண்டுகள் அந்நிறுவனத்தின் நிதிக்கும் உறுதுணையாக நின்றவர் ஆதிசேசய்யா.
1970இல் பாரீஸில் மூன்றாம் உலகத் தமிழ்நாடு நடைபெறுவதற்கு முழு முதல் காரணமாக இருந்தவரும் அவரே. அம்மாநாட்டில் கலந்து கொண்ட அப்போதைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் அம்மாநாட்டில்,
“முதலாவதாக தமிழ்நாட்டுக்கும், பிற நாடுகளுக்கும் இடையே மாணவர்கள் பரிவர்த்தனைக்கு ஏற்பாடு செய்தாக வேண்டும்;
இரண்டாவதாக தமிழை ஒரு நவீன மொழியாக்கும் வண்ணம், ஆங்கிலம் – தமிழ் அகராதியைத் தயாரிக்கும் பணியில் இறங்க வேண்டும்;
மூன்றாவதாக உலகில் பல்வேறு நாடுகளிலும் தமிழைப் பரப்பவும் வளர்க்கவும் வேண்டும்”
என்று மூன்று கோரிக்கையை வைத்தார்.
1970ஆம் ஆண்டு இறுதியில் யுனெஸ்கோ பணியை முடித்துக்கொண்டு சென்னை திரும்பிவந்து ‘சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்’ தொடங்கிய சில ஆண்டுகளில் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பொறுப்பேற்றார் ஆதிசேசய்யா. பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே கலைஞர் அவர்கள் 3ஆம் உலகத் தமிழ் மாநாட்டில் வைத்த கோரிக்கைகளை பல்கலைக்கழகம் மூலம் செய்லபடுத்தினார்.
திராவிட ஆட்சியாளர்களோ, இந்திய ஆட்சியாளர்களோ சொல்லாமலே யுனெஸ்கோவில் பணியாற்றும்போது தமிழுக்காகப் பல தொண்டுகளைச் செய்தவர் அவர். திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க யுனெஸ்கோ மூலம் உதவியது, ‘கூரியர்’ இதழை தமிழ் மொழியில் யுனெஸ்கோ மூலம் கொண்டு வந்தது என்று பலவற்றை அடுக்கிக் கொண்டு போகலாம்.
இவை தவிர இன்றைக்கு தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் கல்வி, அறிவியல், தொழில், பொருளாதாரம், பண்பாடு குறித்த முன்னெடுப்புகளை ஆட்சியாளர்களுக்கு திட்டங்களாக வழங்கியவர் ஆதிசேசய்யாதான். உதாரணத்திற்கு ஒன்று சொல்லவேண்டுமானால் தற்போது கல்வித்துறையில் உள்ள 10+2+3+2 முறை, கல்லூரிகளில் உள்ள பருவத் தேர்வு முறை; தொலைதூரக் கல்வி முறை; வயதுவந்தோர்க்கான கல்வித் திட்டம் போன்றவை அவர் அறிமுகப்படுத்தியதே.
மக்களுக்கும், சமூக மேம்பாட்டுக்கும் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நேர்மையாகச் செயல்படுகிற ஆளுமைகளையும் அவர்களின் முயற்சியில் கொண்டுவந்த அரிய திட்டங்களையும் எளிதாகப் புறந்தள்ளுவது எப்போதுமே ஆட்சியாளர்களுக்கு கைவந்தகலை. அப்படி ஆதிசேசய்யா பாடுபட்டுக் கொண்டுவந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகளே இதற்கு சரியான எடுத்துக்காட்டு.
இப்படித்தான் அவர் உருவாக்கிய ஆராய்ச்சி நிறுவனத்தையும் அரசு கண்டு கொள்ளவில்லை. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி தமிழ்நாடு அரசு, அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கிப் பல ஆண்டுகள் ஆகின்றன. மிகச் சிறிய எண்ணிக்கையில் உள்ள இவ்வாராய்ச்சி நிறுவன ஊழியர்களுக்கு அந்த பாக்கியம் இன்னும் கிட்டவில்லை.
மத்திய அரசு தன் பங்குக்கு இதுபோன்று இந்தியாவில் இருக்கும் சமூக ஆய்வு நிறுவனங்களுக்கு ஏழாவது ஊதியக் குழுப் பரிந்துரைப்படி ஊதியம் இன்னும் வழங்கவில்லை. அதனால் இந்நிறுவனத்திற்கும் அது கிடைக்கவில்லை. ஆனால் அண்டை மாநிலங்கள் அங்கு உள்ள இதுபோன்ற சமூக ஆய்வு நிறுவனங்களைப் பல்கலைக்ககழகம்போல் கருதி அந்த ஊழியர்களுக்குப் புதிய ஊதியத்தை அளித்துவிட்டது.
டாக்டர் கலைஞர் அவர்கள் முதன் முதலாக தமிழ்நாடு திட்டக்குழு (1971)வைத் தொடங்கியபோது அதன் துணைத்தலைவராக மால்கம் ஆதிசேசய்யாவை நியமித்தார். ஆதிசேசய்யா தலைமையில் மிகச்சிறப்பானதொரு முன்வரைவு (1971-1982) திட்டம் அப்போது முதல்வரிடம் (கலைஞரிடம்) அளிக்கப்பட்டது.
அந்த முன்வரைவுத் திட்டம் பற்றிய கருத்தரங்கின் தொடக்கவுரையை முதல்வர் கலைஞர் அவர்கள் ஆற்றும்போது அதில்,
‘‘பொதுவாக ஒரு விஷயத்தைப்பற்றி ஒரு பைல் வருவதாக வைத்துக்கொள்வோம். அந்த பைலைக் கண்ட ஒரு அமைச்சர் ஒரு அதிகாரியைக் கேட்டு, உடனடியாக அதைக் கவனித்து நடவடிக்கை எடுக்கக்கூடும். ஆனால், எல்லா பைல்களும் அப்படி இருக்க முடியாது. சில பைல்களிலே சில சிக்கல்கள் இருக்கும். இங்கே இருந்து நாம் ஒரு கருத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஒரு குறிப்பினை டாக்டர் மால்கம் ஆதிசேஷையா அவர்களிடத்திலே கொடுத்தால், அவர்கள் அதைப்பற்றி எல்லோரையும் கேட்டறிந்து அதன்பிறகு டாக்டர் நடராசன் அவர்களைக் கலந்து, அதன்பிறகு நமது ராஜாராம் அவர்கள் மூலமாக என்னை வந்து சேருகிறது. அதைப் போலத்தான் நிர்வாகத்திலே நடவடிக்கை எடுக்கின்றபோது சில பைல்களும் இருக்கின்றன. அதைப் போலவேதான் திட்டங்கள் செயல்படுகிற நேரங்களில் சில சிரமங்கள் உண்டு—செயல்படுத்துவதில் சில சம்பிரதாயங்களும் உண்டு—சம்பிரதாயங்கள் இல்லை என்று நான் மறுக்கவில்லை. ஆனால் அதற்காக ஒவ்வொரு இடத்திலும் சம்பந்தப்பட்ட பைல் ஒரு விருந்தாளியாகத் தங்கிவிடக்கூடாது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கௌரவ மாப்பிள்ளையாக இருக்கவேண்டும். கௌரவமான மாப்பிள்ளையாக இருக்க வேண்டுமானால் மாமனார்—மாமியார் வீட்டில் ஒன்றிரண்டு நாட்களுக்குமேல் இருக்கக்கூடாது. கௌரவ மாப்பிள்ளை ஒன்றிரண்டு நாட்களுக்கு மேல் இருக்கமாட்டார். அதைப்போலவே அதிகாரிகளிடத்திலே செல்லக்கூடிய பைல்களும் விடுபட்டு போய்விடவேண்டும். விருந்தாளிகள்போலே அங்கேயே தங்கிவிடக் கூடாது; மாமனார் வீட்டு மாப்பிள்ளைப்போல போய்விடவேண்டும்….’’
என்று பேசியிருப்பார்.
இப்போது இந்த ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய ஏழாவது ஊதியக்குழுப் பரிந்துரைப்படி வழங்கப்படவேண்டிய ‘பைலு’ம் யாரோ ஒரு அதிகாரியிடத்தில் கௌரவ மாப்பிள்ளையாக இல்லாமல் விருந்தாளியாக இருக்கிறது!
21-11-2024 ஆதிசேசய்யாவின் 30ஆவது நினைவு நாள்.
No comments:
Post a Comment