Wednesday, November 20, 2024

(3) #கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாடு நாள், நவம்பர் 1, 1956






(3) #கன்னியாகுமரிமாவட்டம் தமிழ்நாடு நாள், நவம்பர் 1, 1956 பி. எஸ். மணி, ஆர். கே.ராம், காந்திராமன் ஆகியோர் முயற்சியால், வழக்கறிஞர் சாம் நத்தானியலை தலைவராக கொண்டு, 1945 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது தான், திருவிதாங்கூர் தமிழர் காங்கிரஸ், பின்னர் திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் என பெயர் மாற்றம் கண்டது. முதலில் இதற்கு தலைமை ஏற்க அப்போதைய முனிசிபல் தலைவராகவும் வழக்கறிஞர் ஆகவும் புகழ் பெற்ற நேசமணியை அணுகிய போது அதை மறுத்து விட்டார். இரண்டு வருடங்களுக்கு பிறகு அந்த இயக்கத்திற்கு கிடைத்த மக்கள் ஆதரவை கண்டு, 1947 இல் தன் ஆதரவாளர்களோடு வந்து இணைந்து கொண்டார். தோவாளை, அகத்தீசுவரம், கல்குளம், விளவங்கோடு, நெயாத்தங்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்கள் தமிழ் சிறுபான்மையாக இருக்கும் மலையாள பகுதிகளில் இருந்து விலகி சென்னை மாகாணத்தில் இணைக்க வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்தில் செயற்பட்ட அரசியல் இயக்கமாக இருந்த திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசை தீவிரமாக எதிர்த்தது திருவிதாங்கூர் சமஸ்தான காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் மற்றும் சென்னை காங்கிரஸ். ஆதரித்தது ம.பொ.சியும் இங்கிருந்த திராவிடத் தலைவர்களுமே. பாளையங்கோட்டை தீர்மானம் என்கிற ஒன்றை வைத்து இந்த இயக்கத்தை உடைக்க காங்கிரஸ் தலைவர் பக்தவச்சலம் எடுத்த முயற்சி கைகூடியது. தாணுலிங்க நாடார், குஞ்சன் நாடார் என தீவிர மாக இயங்கிய போராட்டக் களம் இரண்டு ஆனது. இராமசாமி பிள்ளையை தலைவராக கொண்டு இயக்கத்தை நேசமணியும், தாணுலிங்க நாடாரை தலைவராக கொண்டு போட்டி இயக்கமும் பிரிந்தன. குடமும் வண்டிச் சக்கரம் சின்னமும் மோதிக் கொண்டன. இரண்டையும் இணைக்க உண்ணாவிரதம் இருந்த காந்திராமன் ஒன்பது நாட்களுக்கு பிறகு உடல்நிலை காரணமாக வாபஸ் வாங்கினார். பி.எஸ். மணியோ பிரஜா சோஷலிஸ்ட் கட்சியில் போட்டியிட்டார். காந்திராமனை, பி.எஸ். மணியை, சாம் நத்தானியலை எல்லாம் இருட்டடிப்புச் செய்தாகியது. தாணுலிங்க நாடாரை சங்கி முத்திரையோடு சுருக்கி விட்டார்கள். ஏன் மாணவர் பருவத்தில் இந்த போராட்டங்களில் சிறந்த மேடை பேச்சுகள் வழங்கிய சங்கரலிங்கம் என்பவரை நாம் திமுகவினர் என்றே அறிவோம். அனைவரும் கூடி இழுத்த போராட்ட வரலாறு சிதம்பர நாடார், அப்துல் ரசாக், மனுவேல் சைமன், நூர் முகம்மது, இராமசாமி பிள்ளை, பொன்னப்ப நாடார், ஏ. கே. செல்லையா என இன்னும் விரிவாக கொண்டு செல்லப்பட வேண்டும். இப்போராட்டத்தின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த எம். முத்துச்சாமி எ. அருளப்பநாடார் எ. பீர்முகம்மது என். செல்லப்பாபிள்ளை எ. பொன்னையன் எஸ். இராமையன் என். குமரன் நாடார் எம்.பாலையன் நாடார் ஜி. பப்பு பணிக்கர் ஆகியோர் தியாகத்தை போற்றி புகழ்வோம்.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...