Monday, April 20, 2015

நடிகமணி.டி.வி நாராயணசாமி – பாவலர். ஓம். முத்துமாரி, D.V.Narayana samy and Pavalar MuthuMari Folklore Tiruvengadam.


 
நடிகமணி. டி.வி.நாராயணசாமி.

பாவலர். ஓம் முத்துமாரி

  மறைந்த பாவலர். ஓம் முத்துமாரி, நீண்டகாலமாக, பொதுவுடைமை இயக்கத்தின் பிரச்சாரராகவும், நாட்டார் இயல் ஆய்வாளராகவும், நடிகமணி. டி.வி.என் அவர்களின் அன்புக்குரியவராகவும் விளங்கியவர்.    

எங்கள் ஊர் குருஞ்சாக்குளத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் திருவேங்கடத்தில் வாழ்ந்தார். நெல்லைமாவட்டத்திலுள்ள திருவேங்கடம் வளர்ந்துவருகின்ற நகரம். அதைப்பற்றியான பதிவு ஒன்றை பின்னால் செய்யலாம் என்று உள்ளேன். நாட்டுப்புற கலைகளில் ஆர்வம் கொண்ட பாவலர் ஓம்முத்துமாரி கணியன் கூத்து, கரகம், காவடி, ஒயில், கும்மி, தேவராட்டம், தெருக்கூத்து, சிலம்பம் என்ற பல கலைகளில் ஆர்வமும், அக்கறையும் கொண்டவர்.

அதுமட்டுமில்லாமல் நாட்டுப்புற கலைஞர்களின் சங்கத்தை நடத்தி, சங்கத்தின் விழாவினை ஆண்டுக்கு ஒருமுறை திருவேங்கடத்தில் விமரிசையாக நடத்துவார். மார்க்சிஸ்ட் மேடைகளில் ஏற்ற இறக்கத்தோடு ஆர்ப்பாட்டமில்லாமல் இவர் பாடுவது மக்களை ரசிக்கச் செய்யும்.

1989,1996 ஆண்டுகளில் முறையே நான் போட்டியிட்ட இரண்டு கோவில்பட்டி சட்டமன்றத்தொகுதி தேர்தல்களிலும் பிரசாரங்களின் போது கலைநிகழ்ச்சிகள் நடத்தி நான் வெற்றிபெற வேண்டுமென்று கடுமையாக உழைப்பையும் நல்கியவர். மிகவும் குறைவான வாக்கில் வெற்றிவாய்ப்பை இழந்த போது என்னைப் பார்த்தவுடன் பொறுத்தமானவருக்கு மக்கள் ஓட்டுப் போடவில்லையே என்று கண்ணீரோடு சொன்னது நினைவுக்குவருகின்றது.

ஓம்முத்துமாரி பத்திரிகைகளில் வரும் செய்திகளைச் சேகரித்து
பாட்டு வடிவில் எழுதி, அதனை கிராமிய மெட்டமைத்துப் பாடும்போது கேட்பதற்கே ரம்யமாக இருக்கும். கிராமிய மெட்டில் மணிக்குறவர் பாட்டு, தனுஷ்கோடியில் 1964ல் ஏற்பட்ட புயல், ஆளவந்தார் கொலைவழக்கு, பாலாம்பாள் கதைகள் போன்றபல கடந்தகால நிகழ்ச்சிகளை அவர் மெட்டமைத்து பாடும்பொழுது கூட்டத்தை அப்படியே  கட்டுப்போடுவார்.

இப்படியான கலைநயத்தோடு பாடும் ஓம் முத்துமாரிக்கு அரசியல் விசயங்கள் அத்தனையும் அத்துபடி. இவருக்கு, பாவலர் என்ற பட்டத்தை மூக்கையாத் தேவர் வழங்கினார். காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார், தீரன் சின்னமலை, தீரர் சுந்தரலிங்கம் போன்றியவர்களைப் பற்றியும் ஆய்வுகள் நடத்தியுள்ளார்.

காவடிச்சிந்து அண்ணாமலை ரெட்டியார் பற்றி இவர் மெட்டெடுத்துப் பாடிய கதைப்பாடல் வானொலிகளில் ஒலிபரப்பு ஆனது. இவருடைய பாட்டுக்கள் நெல்லை, மதுரை, திருச்சி மற்றும் திருவனந்தபுர வானொலிநிலையங்கள் ஒலிபரப்பியுள்ளன.

 நாட்டுப்புறக் கலைஞர்கள் எப்போதும் இவரைச் சூழ்ந்திருப்பார்கள். சங்கரன்கோவில், தென்மலை, நத்தம்பட்டி, மணல்பட்டி, வரகனூர் போன்ற பகுதிகளில் நாட்டுப்புறக் கலைஞர்களோடு இணைந்து நாடகங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்துவார். இவரைப் பற்றி முழுமையாக ஆய்வுசெய்து கட்டுரையாக வெளியிட்டால் நாட்டுப்புறத் தரவுகள் பற்றிய பல முக்கிய செய்திகள் வெளிப்படும்.

தன்னை அரவணைத்து இந்தத் துறையில் மின்னவைத்த  டி.வி.நாராயணசாமி அவர்களை நன்றி பாராட்டினார். அவர் பெயரில் திருவேங்கடத்தில் ஒரு வளைவு ஒன்றும் அமைத்தார். இந்த இடத்தில் டி.வி.என்-னைப் பற்றி குறிப்பிடவேண்டும். டி.வி.என் அண்ணாவுக்கு மிகவும் நெருக்கமானவர். திராவிடக் கழகத்தில் ஈடுபாடு கொண்டவர். எம்.ஜி.ஆர் அவர்களை அண்ணாவிடம் அறிமுகம் செய்து வைத்தவர் இவர்தான். அப்பொழுது எம்.ஜி.ஆர் யானைகவுனி காவல்நிலையம் அருகில் குடியிருந்தார்.

அண்ணாவின் பரிந்துரையின் பேரில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாராயணசாமிக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தார். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனத்தில் மாதம் ரூ.400 சம்பளத்தில் நாராயணசாமி நடிகரானாவர். அதே நேரம் கே.ஆர். ராமசாமியின் ‘மனோகரா’ நாடகத்திலும் டி.வி. நாராயணசாமி நடித்து வந்தார்.

1949-ம் ஆண்டு திராவிடர் கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணா விலகி தி.மு.கவை தோற்றுவித்தார். அப்போது கே.ஆர்.ராமசாமியையும், டி.வி. நாராயணசாமியையும் கலைத்துறை சார்பில் பொதுக்குழு உறுப்பினராக அண்ணா நியமித்தார்.

1954ம் ஆண்டு 'துளிவிஷம்' நாடகம் படமாக எடுக்கப்பட்ட போது, அதில் ராஜகுரு வேடத்தில் நடித்தார். 1952ம் ஆண்டு முதல் 1967ம் ஆண்டு வரை தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், பொருளாளராகவும் டி.வி. நாராயணசாமி பதவிகள் வகித்தவர்.  இதில் குறிப்பிடும் படியாக இவர் எட்டையபுரம் அருகே உள்ள எஸ்.துரைசாமிபுரம் கிராமத்தில் பிறந்தவர்.

1968ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் டி.வி. நாராயணசாமி பதவி வகித்தார். டி.வி.என்னைப் பார்த்தாலே ஓம் முத்துமாரி தன் குருவாக பாவிப்பார். ஓம் முத்துமாரி வாழ்க்கையிலிருந்து டி.வி.என்னைப் பிரித்துப் பார்க்க முடியாது.

ஓம் முத்துமாரியினுடைய பாடல்கள் சில..


பாலாம்பாள் கொலைவழக்கில் மேடையில் பாடிய பாடல்:- 

  “ஆதியிலே பாண்டி மன்னர் ஆண்டுவந்த மகளிரே
 அவதரித்த எங்கள் குருவே சீரணி
தாங்கள் அவனியெங்கும் புகழ்பெறவே
மன்னர்கள் பாரம்
அரும்பெரும் சபைதனிலே அற்புதக் கவிபடிக்கும்
ஆதரிப்பார் உங்கள் கிருபை மணமுடித்து
ஆதரிப்பார் உங்கள் கிருபை
கந்தவலயத்திலே கண்ணியப்ப முதலியாராம்
கண்ணுக்குக் கண்ணான மகனாம் வீரபத்ராவுக்கு
காணா சித்தியராம் கிளிபோல கட்டழகி
பாலாம்மாள் கல்யாணம் செய்து கண்ணியம்மா வாழ்ந்து வந்தானாம்”.


தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலின் அழிவைப்பற்றிய
ஓம் முத்துமாரியின் பாடல் 


“வாரும் பெரியோர்களே சோதரரே
வணக்கங்கள் பலகோடி ஜனங்களுக்கு
வரம் கொடுத்த தனுஷ்கோடி நகரத்திலே
வஞ்சகப்புயல் அடிச்ச சரித்திரத்தச் சொல்லிவரேன்
வண்ணத்தமிழ் கவிபாடி சொல்லியே வரேன் அய்யா
ஒருவர் இருவர் அல்ல
எத்தனைப் பிணங்கள் என்று
உறுதி தெரியவில்லையே இறந்தவர் உடலும் கிடைக்கவில்லையே.
கரையோரத்தில் ஊதிப்போன பிணங்களைக்
காக்கா வந்து உண்ட சேதி
உள்ளங்கள் பொறுக்குதில்லையே
அதை நினைச்சா ?
உள்ளங்கள் பொறுக்குதில்லையே
பாழாப்போன அறுபத்திநாலாம் வருடம் நடந்த
பயங்கர புயல்பாரு அதே வருசம்
பண்டிட் நேரும் மடிந்தாரு
ஏப்பிரலில் பள்ளிக்கோடம் இடிந்து
டிசம்பரில் புயலடிச்சு பலபேரு மாண்டு போனாரு…”

***

கூடங்குளம் பிரச்சனையைப் பற்றி:-


ஆத்தாமார்களே அருமை சகோதரிகளே
அணு உலை கதையக் கேளுங்க…
மத்திய அரசு அரசாங்கம் செய்யும் கூத்துங்க..
அணுமின் நிலையம் அமைத்திட்டாங்க.
14,000 கோடி ரூபாய் திட்டமிட்டாங்க
அவசரமாக் கேரளாவில் அமைக்கப் பார்த்தாங்க
அங்க ஆகாதுன்னு விரட்ட, கூடங்குளம் வந்தாங்க (ஆத்தா)
தமிழ்நாடு கூடங்குளத்துல இடம்பிடிச்சாங்க
பொய் தாறுமாறா சொல்லி அங்க தடம் பதித்தாங்க
மக்களெல்லாம் ஆகாதுன்னு மறியல் செஞ்சாங்க- கெட்ட
மத்திய அரசு அடக்குமுறையை ஏவி விட்டாங்க (ஆத்தா)
கதிர்வீச்சு கருவிகளால் சேதாரமாகும் –நம்ம
கடல் மீன்கள் உயிரினங்கள் அழிந்திட லாகும்
கணக்கில்லாம புற்றுநோய்கள் சிக்கல்களாகும் –இது
காலமெல்லாம் மனிதர்களின் கஷ்டங்களாகும் (ஆத்தா)

****

தமிழர்களின் உரிமைகளுக்காகப் பாடியபாடல் :-

தமிழர்களே தமிழர்களே
தயவுடன் கொஞ்சம் கேளுங்கள்
தயங்கிடலாமா ஒன்று சேருங்கள்
தமிழர்களே தமிழர்களே
தயவுடன் கொஞ்சம் கேளுங்கள்
காவேரி தண்ணிக்கு கர்நாடகத்தானிடம்
கண்ணீர் சிந்தி நிற்பதோ?
கடலுக்குள் அமைந்த தீவினுள் நாமதினம்
கரும் உடல்கள் எரிந்து சாவதோ?
முல்லைப் பெரியார் அணைக்கு வராமல்
தொல்லைகள் தமிழன் அடைவதோ?
செல்லாக்காசாய் மத்திய அரசு
செவிட்டுத் தனமாய் இருப்பதோ? (தமிழர்களே)
போராட்டங்கள் உண்ணாவிரதம் தொடர்ந்திடலாச்சு - இங்கே
புற்றீசலாய் அனுதினமும் முற்றுகையாச்சு
பாராமலே மத்திய அரசு உறங்கிடலாச்சு
இதை பாவலர் முத்துமாரி பாடிடலாச்சு (ஆத்தா)

****

1992கட்டத்தில் நரசிம்மநாவ் பிரதமராக இருக்கும் போது அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் கொண்டுவந்த,  புதிய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்து பாடிய பாடல் :-

அந்நியரை வெளியேத்தி அடிமையான
நம்ம நாட்டை
ஆளவந்தான்  துப்புகெட்ட ஆணவ சர்க்கார்
இந்த அறுபதாண்டு காலத்திலே
கொஞ்ச கொஞ்சமா நாட்ட அடகுவைக்க
திட்டம் போட்ட அனுபவ சர்க்கார்
வறுமை ஒழிப்போம்ன்னு அஞ்சாறு திட்டம் கொண்டு
வாய்கிழிய அன்றாடம் பேசிடும் சர்க்கார்
அவுங்க வாங்கியிருக்கும் கடனுக்கு  வட்டி கட்ட மாட்டமா
வழிமாறி நடப்பவங்க இந்நாட்டில் நுழையவிட்டு
பாரதத்தைக் கேலிக் கூத்தா ஆக்கிட
சர்க்கரை சில்லறை வணிகத்திலே
சீரழிக்க நாட்டில்  வெளிநாட்டவரை
உள்ள் விட்ட கோமாளி சர்க்கார்.

****

இப்படியான பாடல்களைத் தற்கால அரசியல் நிகழ்வுகளை. அந்தக்கால நாட்ட்புப்புற மெட்டில் பாடுவது ஓம்முத்துமாரியின் தனிநடை ஆகும். பொதுவுடைமைத் தலைவர்களான மாயாண்டி பாரதி, சங்கரைய்யா, நல்ல\சிவம், செம்மலர் ஆசிரியர் எஸ்.ஏ.பெருமாள், மேலாண்மை பொன்னுச்சாமி, கோணங்கி, அவரது சகோதரர் தமிழ்ச் செல்வன் போன்றவர்களோடு மட்டுமல்லாமல் குறிப்பாக கரிசல் வட்டார படைப்பாளிகளிடம் நெருக்கமாகப் பழகி வந்தார் பொதுவுடைமைத் தோழரான ஓம்முத்து மாரி.

வைகோவும் ஓம் முத்துமாரியும், ஒரே பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரோடும் நெருங்கியும் பழகினார். திருவேங்கடத்தில் முடித்திருத்தும் நிலையம் வைத்திருந்த சர்க்கரை என்பவர் மாக்சீயக் கட்சியில் ஈடுபாடு கொண்டவர். தீக்கத்திர் நாளிதழ் அந்த வட்டாரத்திலே அவர்கடையில் தான் கிடைக்கும். அந்தப் பத்திரிகையை முதலில் ஓம்முத்துமாரி பார்த்துவிட்டுத்தான் மற்றவர்கள் கைகளுக்குச் செல்லும்.

ஓம் முத்துமாரியினுடைய நாட்டுப்புற இயல்கள் பல ஆராய்ச்சிகளுக்கு உட்பட்டவையாகும். அது தொடர்பாக பலரும் ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டும். அவர் நினைவாக திருவேங்கடத்தில்
எதிர்கால சமுதாயம் அறிந்துகொள்ளும்படி ஒரு நினைவுச் சின்னம் எழுப்பவேண்டுமென்பதில் எங்களைப் போன்றவர்களுக்கு ஆர்வமும் அக்கறையும் இருக்கின்றது.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-04-2015.


No comments:

Post a Comment