Tuesday, March 7, 2017

2 விவசாயிகள் சாவு. உச்ச நீதிமன்றம் கவலை

வறட்சியால் பயிர்கள் கருகியது :
2 விவசாயிகள் சாவு.
உச்ச நீதிமன்றம் கவலை 
 -------------------------------------
கோவில்பட்டி அருகே உள்ள படர்ந்தபுளியை சேர்ந்தவர் நாராயணசாமி (வயது 44). விவசாயியான இவர் தனது மானாவரி நிலத்தில் மக்காச்சோளம், மிளகாய் பயிரிட்டு இருந்தார். பருவமழை பொய்த்ததால் தண்ணீர் இல்லாமல் அனைத்து பயிர்களும் கருகின. இதனால் மன வேதனை அடைந்த நாராயணசாமி நேற்று காலை தனது விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதே போல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி செம்புளிச்சாம்பாளையம் புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி சென்னிமலை (68). தனது தோட்டத்தில் கதலி ரக வாழை பயிரிட்டு உள்ளார். பாசனத்திற்காக பயன்படுத்தி வந்த 2 ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் வாழை மரங்கள் கருகி கீழே சாய்ந்தன.
நேற்று காலை தோட்டத்துக்கு சென்ற அவர் கருகிய நிலையில் இருந்த வாழை மரங்களை கண்டு வேதனை அடைந்தார். அப்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு கோபி தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சென்னிமலை பரிதாபமாக இறந்தார்.

கடன் பிரச்னை, விளைச்சல் பாதிப்பு ஆகியவற்றால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களுக்கு உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்ததுடன், "விவசாயிகளின் தற்கொலையை மத்திய அரசு தடுக்கத் தவறிவிட்டது" என்று கூறியுள்ளது.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுப்பது தொடர்பாக, தன்னார்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.சேஹர், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.கே. கௌல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது :
விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை, இந்த விவகாரத்தில் மத்திய அரசு தவறான திசையில் சென்று கொண்டிருப்பதாகவே கருதுகிறோம். வங்கிகளில் கடன் வாங்கும் விவசாயிகள், அதைத் திருப்பிச் செலுத்த இயலாததால் தற்கொலை செய்துகொள்கிறார்கள். முந்தைய காலங்களைப் போலவே, விவசாயிகளின் மரணத்துக்குப் பிறகு, அவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத் தொகை வழங்குவது, அந்தப் பிரச்னைக்கு உண்மையான தீர்வாகாது. மாறாக, விவசாயிகளின் மரணத்தை முன் கூட்டியே தடுக்கும் வகையில் மத்திய அரசிடம் திட்டங்கள் இருக்க வேண்டும். எனவே, மத்திய அரசு தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை ஆய்வு செய்ய வேண்டும்.
விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள், பல ஆண்டு காலமாகவே நீடித்து வந்தாலும், அதற்கான பின்னணியைக் கண்டறிந்து, அவற்றுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படாதது வியப்பளிக்கிது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சட்ட ஆலோசகர் பி.எஸ். நரசிம்மா முன் வைத்த வாதம்: விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 2015-ஆம் ஆண்டைய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் வெகுவாகக் குறையும். எனினும், அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில், மற்ற திட்டங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்.
அதைத் தொடர்ந்து தன்னார்வ அமைப்பு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் காலின் கான்சால்வ்ஸ் வாதிடுகையில், "விவசாயிகள் நலனுக்கான திட்டங்கள், பல ஆண்டுகளாக அமலில் இருந்தாலும், முக்கியப் பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது" என்றார். அதையடுத்து வழக்கின் அடுத்த விசாரணை, வரும் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
#உச்சநீதிமன்றம்
#விவசாயிகளின்தற்கொலை
#KSRadhaKrishnanpost 
#Ksrpost 
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
07.03.2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...