யுனெஸ்கோ கூரியர்:
-----------------------
யூனஸ்கோ தமிழ் கூரியர் கடந்த நூற்றாண்டின் இறுதியில் கவனிக்கப்பட்ட ஈர்க்கப்பட்ட ஏடாக இருந்தது. நஷ்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்டது. தமிழர்களுக்கு நாலாந்திர பத்திரிகையும், சினிமா பத்திரிகையும் தான் பிடிக்கும் அறிவு பூர்வமான பத்திரிகைகள் எப்போது தமிழர்களிடம் எடுப்படாமல் கடந்த காலத்தில் நஷ்டத்தில் தானே நிறுத்தப்பட்டது.
டெல்லியில் இருந்த வந்த கணையாழி, சி.சு. செல்லப்பா படைப்புகள் யாவும் தலையில் வைத்து சுமந்தும், கூவி விற்றும், தமிழர்கள் வாங்க மறுத்துவிட்டார்களே.
புலனாய்வு ஏடுகளில் இருந்து இன்றைக்கு வந்து தவறான செய்திகளை மக்களுக்கு விளக்கின்றன.
அதை தான் வேண்டி, விரும்பி படிக்கின்றனர்.
கூரியர் போன்ற ஏடுகள் எவ்வளவோ விளம்பரப்படுத்தியும் தமிழர்கள் ஆகிய நாம் வாங்க மறுத்துவிட்டோமே என்ன செய்ய?
யுனெஸ்கோவின் துணை இயக்குநராக இருந்தவருமான மால்கம் ஆதிசேஷையா தான், யுனெஸ்கோ கூரியர் இதழ் தமிழில் தொடங்கப்பட முக்கியக் காரணம். 1967 ஜூலை மாதம் தமிழில் தொடங்கப்படுவதை ஒட்டியே, இந்தியிலும் கூரியர் இதழ் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இதழின் ஆசிரியர்களாக எஸ். கோவிந்த ராஜூலு, தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் , நெ.து. சுந்தரவடிவேலு ஆகியோர் செயல்பட்டதற்குப் பின்னர், மணவை முஸ்தபா ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். யுனெஸ்கோ கூரியர் இதழ் ஆசிரியர்களின் முக்கியமான பணியைத் தாண்டி, இதழுக்குத் தொடர்ச்சியாகப் பங்களித்த பல்வேறு மொழிபெயர்ப்பாளர்களின் பணியும் அளப்பரியது.
தமிழில் பல மொழிபெயர்ப்பு இதழ்களுக்கு இருந்த முக்கியப் பிரச்சினையை யுனெஸ்கோ கூரியரும் எதிர்கொண்டது. நேரடியாக நம் மொழியில் வாசிக்கக்கூடிய அளவிலான எளிமையை, அதனால் எட்ட முடியவில்லை. இருந்தபோதும், வெளியான காலத்தில் அந்த இதழ் வெளியிட்ட கருத்துகள், பேசுபொருட்கள் அதன் சந்தாதாரர்களின் புரிதலைப் பல வகைகளில் மேம்படுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன், பொது நூலகங்கள் அனைத்துக்கும் யுனெஸ்கோ கூரியர் சென்றுகொண்டிருந்தது.
தமிழ்ச் சிறப்பிதழ்
தமிழ்நாட்டைப் பற்றிய தனிச் சிறப்பிதழை ‘தமிழரின் வாழும் பண்பாடு’ என்ற பெயரில் யுனெஸ்கோ கூரியர் மார்ச் 1984-ல் வெளியிட்டது. அந்த இதழ் வெளியாக முக்கியக் காரணமாக இருந்த பிரெஞ்சு - தமிழ் ஆய்வாளர் பிரான்சுவா குரோ, ‘சங்க இலக்கியத்தில் நிலக் காட்சி’ என்ற கட்டுரையை எழுதியிருந்தார். அவருடன் எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, அம்பை, எஸ். ராமகிருஷ்ணன் (க்ரியா), சு. தியடோர் பாஸ்கரனின் மனைவி திலகா பாஸ்கரன் (தமிழர் உணவு குறித்து) ஆகியோரும் கட்டுரைகள் எழுதியிருந்தனர். தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி சுருக்கமான, அதேநேரம் அழகானதொரு சித்திரத்தை அந்த இதழ் உலக மக்கள் மத்தியில் உருவாக்கியது. தமிழ் உள்ளிட்ட 27 உலக மொழிகளில் அந்த இதழ் வெளியாகி இருந்தது.
நிரப்பப்படாத வெற்றிடம்
‘யுனெஸ்கோ கூரியர்’, நிதி நெருக்கடிகளைக் காரணம் காட்டி 2001-ல் நிறுத்தப்பட்டது. சென்னை சேத்துப்பட்டில் wus ல் அந்த இதழின் அலுவலகம் இயங்கியது. அன்றைய தமிழக அரசு நினைத்திருந்தால், ‘யுனெஸ்கோ கூரியரின் தமிழ் பதிப்பு காப்பாற்றப்பட்டிருக்கலாம்.
யுனெஸ்கோ கூரியர் பழைய தமிழ் இதழ்கள் தனிச் சேகரிப்பிலும், சில நூலகங்களிலும் கிடைக்கலாம்.
நானும் இந்த இதழை சில காலம் சேகரித்து பைண்ட் செய்துசேர்த்துவைத்துள்ளேன்.
தற்போதும் யுனெஸ்கோ கூரியர் ஆங்கிலத்தில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அத்துடன் ஐ.நா. அங்கீகரித்துள்ள ஆறு மொழிகளில் அச்சு இதழாகவும், இணையத்தில் இலவசமாகவும் வெளியாகி வருகிறது. மொழிபெயர்ப்புச் சிக்கல்களைத் தாண்டி, வாழும் இதழாக ‘யுனெஸ்கோ கூரியர்’ - தமிழ் ஏற்படுத்திய வெற்றிடம், இதுவரை இட்டு நிரப்பப்படாமலேயே இருக்கிறது.
#யுனெஸ்கோகூரியர்
#Unescocourier
#KSRPOSTING
#KSRADHAKRISHNAN_POSTING
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
23/03/2017
மிகச்சிறந்த கட்டுரைகள் ஆழமான கருத்துக்களுடன் படித்து அனுபவித்திருக்கிறேன் தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டதால் எனக்கு வருத்தமே
ReplyDelete