பெப்சி கோக் ஆலைகளும், தாமிபரணியும்;(தும்பை விட்டு வாளை பிடிப்பது போன்ற கதைதான்.)
------------------------------------
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, சுவை நீரான பொருணை ஆற்று நீரை பெப்சி கோக் ஆலைகளுக்கு வழங்கலாம் என்று தன்னுடைய தடை உத்தரவை திரும்பப் பெற்றுள்ளது.
தாரளமாக இனிமேல் குளிர்பான ஆலைகள் இயற்கையின் அருட்கொடையான தாமிரபரணி நீரை சுரண்டி கபளீகரம் செய்யலாம்.
இந்த தீர்ப்பு மக்கள் விரோத தீர்ப்பே ஆகும். தாமிரபரணியில் ஓடும் உபரி நீரை அந்த நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக அறிகிறோம். இந்தியாவின் "நீராதார துறை " (central water commission) தெளிவாக சொல்லியுள்ளது, இந்தியாவில் ஓடும் எந்த நதியிலும் உபரிநீர் கிடையாது என்றும் பிரம்மபுத்திராவில் மட்டும் சிறிது உபரி நீர் இருப்பதாக சொல்லுகிறது அந்த ஆய்வு அறிக்கை.
ஒரு உண்மையென்னவெனில் தாமிரபரணி ஆற்றில் நீர்மானிகளே (water guage) கிடையாது, அதனால் எந்த இடத்தில் ஓடும் நீரை வைத்து நீதிமன்றம் உபரி நீர் என்று சொல்லுகிறார்கள் என்று தெரியவில்லை. அப்படியே உபரி என்று ஒன்று இருந்தால் கூட (ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்ளுவோம்) அதை எப்படி ஒரு தனியார் நிறுவனம் எடுக்க முடியும்?
நீர் என்பது அடிப்படை வளம், ஒரு விற்பனை பண்டம் அல்ல, இந்த உலகத்தில் உள்ள அத்தனை உயிர்களுக்கும் சொந்தமான அடிப்படை வளத்தை, ஒரு நிறுவனம் எப்படி காசுக்கு விற்க முடியும், நாம் எப்படி காசு கொடுத்து வாங்க முடியும்? அதுவும் அந்த நிறுவனத்தால் உற்பத்தி செய்ய முடியாத பொருள் அது எப்படி "உற்பத்தி செய்யும்" நிறுவனம் ஆகும்?
இந்த குளிர்பான ஆலைகள் 2004-ல் கங்கை கொண்டானில் நிறுவும் பொழுது இதை தடுக்க வேண்டும் என்று முயற்சிகள் மேற்கொண்ட போது நெல்லையை சார்ந்தவர்களிடம் இந்த பிரச்னையைப் பற்றி பேசிய காலத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள். குறிப்பாக தி.க.சி. மாலன், தோப்பில் மீரான், தொ. பரமசிவம், கழனியூரான் என ஒரு சிலரே கோக்-பெப்ஸிக்கு எதிராக இருந்தார்கள்.
இதைக் குறித்து விழிப்புணர்வு கூட்டமும் எனது நிமிர வைக்கும் நெல்லை நூல் அறிமுக விழாவும், 2005-ல் ஆகஸ்ட்டில் திருநெல்வேலி, இந்துக் கல்லூரி மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் முதன்முதலாக நெல்லையில் இரத்த நாளமான தாமிரபரணியில் உறிஞ்சவரும், கோக் ஆலைகளை விரட்ட வேண்டும் என்று நாங்கள் எடுத்து வைத்தக் கருத்துக்களை சிலர் ஏற்றுக் கொள்ளவில்லை பரிகாசமும் செய்தார்கள்.
16 ஆண்டுகளுக்கு முன்னால் சொன்ன கருத்து இன்று பெரும் கேடாக மாறிவிட்டது.
இதைப் போலதான் மஹாராஷ்டிரா ரத்தின கிரியிலிருந்து விரட்டப்பட்ட நஞ்சு கக்கும் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் அமையக் கூடாது என்று 1995-96லிலேயே விழிப்புணர்வை நடத்தியபோது யார் காதிலும் கேட்கவில்லை.
1988-ல் கூடன்குளம் அனுஆலை வந்தபோது அந்த ஆலைக் கூடாது என்று வழக்குமன்றம் வரை சென்றதுண்டு. அப்போது டேவிட் பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர்செல்வம் போன்றவர் எல்லாம் கூடாது என்று குரல் கொடுத்தபோது கூட்டங்கள் நடத்தி அனுஆலை தீமைகளை எல்லாம் அப்போதே சொன்னோம். அந்தக் காலக் கட்டத்தில் இது குறித்து ஜூனியர் விகடனில் தொடரும் வெளியானது. பத்திரிகையாளர் நாகர்ஜூனா போன்றோர் பலர் இதைக் குறித்து கண்டனங்கள் தெரிவித்தனர்.
திரும்பவும் 2011-ல் பிரச்னை கடுமையாகவும், கூடன்குளம் கூடாது என்று முதன் முதலாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடுத்தவன் அடியேன்தான். இரண்டு முறை கூடன்குளத்திற்காக உயர்நீதிமன்ற வாயிலைத் தட்டினேன். கூடன்குளம் பிரச்னை குறித்து 29 ஆண்டுகளுக்கு முன்னாலே குரல் கொடுத்தோம். ஆனால் மக்களுக்கு புரியவில்லையே என்ன செய்ய? அன்றைக்கு கூடன்குளம் 1988-ல் நாங்கள் சென்ற போது அங்குள்ள மக்கள் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தப் பகுதி வளம் வரும். பேச்சி பாறையிலிருந்து தண்ணீர் வரும். அதைக் கெடுக்க நீங்கள் எல்லாம் வந்துருக்கிறீர்களா என்று சொன்னவர்கள்தான் கூடன்குளம் கிராம மக்கள்.
அதுபோலவே, அக்னி வெயில் கக்கும் கந்தக பூமியான எங்கள் கரிசல் காட்டில் சிவகாசி அருகில் தமிழ்நாடு அரசு சிமெண்ட் கழிவை புகை மூலமாக ஆக்கி விவசாயம் பாதிக்கப்பட்டு குடிநீரும் நஞ்சாகிவிட்டது.
மக்களும் அதை அறிந்து பல்வேறு நோய்களுக்கு ஆளானார்கள். அந்த ஆலையை விற்க எம்.ஜி.ஆர். 1983-ல் முயற்சி செய்த போது, அதைத் தடுத்து நிறுத்தி அந்த ஆலையினால் வரும் நச்சு புகையை சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து வழக்கில் வெற்றி கொண்டு சுற்றுச் சூழலை பாதிக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலம் உத்தரவு வாங்கி அதற்கான எந்திரங்களும் பொருத்தப்பட்டு இன்றைக்கு செயல்பாட்டில் உள்ளது.
கடந்த நவம்பர் 2016-ல் மறுபடியும் இந்த ஆலையை ஜெயலலிதா அரசு விற்க முயன்றபோது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து, தனியாருக்கு விற்காமல் தடுக்க உரிய உத்தரவுகளை அடியேன் பெற்றேன் என்பது செய்தி.
இப்படி சுற்று சூழல்கள் பாதிக்கும் தொழிற்சாலைகளை துவக்கும்போதே தடுத்திருக்க வேண்டும். அது துவங்கி கேடுகளை தரும் பொழுது, போராட துவங்குவது மேலும், சிக்கல்களும், சிரமங்களும் தான் ஏற்படும்.
மத்திய அரசு தமிழக உரிமைகளை எல்லாம் மறுத்து, காவேரி பிரச்னை, கச்சத்தீவு, சேதுகால்வாய், முல்லை பெரியாறு போன்ற நதி ஆதார பிரச்னைகளை எல்லாம் மறுத்துவிட்டு, தமிழகத்திற்கு சுற்றுச் சூழல் பாதிப்பால் கேடு செய்யும் ஆலைகளை மட்டும் தாரளமாக நிறுவி வருகிறது. தமிழகம் என்ன சுற்றுச் சூழல் பாதிக்கும் ஆலைகள் அமைக்கும் குப்பைக்கூடையா? நம்முடைய உரிமைகளை மறுப்பது மட்டுமல்லாமல் நமக்கு கேடுகளை மட்டும் அள்ளி தருகிறது மத்திய அரசு.
தும்பை விட்டு வாளை பிடிப்பது போன்ற கதைதான்.
#தாமிரபரணி
#கோக்பெப்ஸி
#குளிர்பான ஆலைகள்
#நெல்லை
#ஸ்டெர்லைட்
#கூடன்குளம்அனுஆலை
#tirunelveli
- கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02.03.2017
No comments:
Post a Comment