சில மனிதர்களும் ; அவர்கள் அளித்த வேதனைகளும் ..........
-------------------------------------
இன்று காலை கையில் தேநீரும் தினசரி பத்திரிக்கையுடன் வாசிப்பில் மூழ்கிருந்தேன். வாசலில் பணக்கார வாகனம் ஒன்று வந்து நின்றது. நம்மை பார்க்க இத்தகையோர் வருவதற்கான அவசியம் இல்லையே? வீடு மாறி வந்திருப்பார் என கருதிய படி , தினசரி பத்திரிக்கை வாசத்தை முகர்ந்தேன். நிமிர்ந்து பார்த்தேன்.
1990களில் அதிகாரமும், ஆணவமும் , எலும்புத்துண்டுகளுக்கு ஏமாறும் கூட்டமும் என வலம் வந்தவர். எனக்கும் அவருக்கும் 1998க்கு பின்னர் எந்த ஒரு உறவும் இல்லை. அவர் இருக்கும் திசைனோக்கி திரும்பினால் கூட என் சுயமரியாதைக்கு இழுக்கு என திசைமாறி போவதை வழக்கமாக வைத்திருந்தேன். அத்தகைய நல்லவர் அவர்.
வீடு தேடி வந்தோரை நிற்க வைத்து பேசுவது அழகன்று என அமர சொன்னேன். தனக்கு உயர்நீதி மன்றத்தில் ஏதோ காரியம் ஆக வேண்டும் என வந்திருந்தால். கையில் ஒருப் பை.அதில் கத்தைகள் இருந்திருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தேன். 1998ல் நாடாளுமன்ற தேர்தலில் எனக்காக ஒதுக்கப்பட்ட வடசென்னை நாடாளுமன்ற தொகுதியை பாட்டியின் வடையை திருடிய காகம் போல் கொத்திக் கொண்டு போனவர். அன்று வெற்றி பெறும் நிலையில் இருந்தேன். அந்த வாய்ப்பு களவாடப் படமால் இருந்திருந்தால் இன்று சமூக வளைதளங்களில் பதியப்படும் மக்கள் பிரச்சனைகளை , சமுதாய அவலங்களை, விவசாயிகளின் பிரச்சனைகளை நாடாளுமன்றத்தில் வைத்திருக்க கூடும். இவருக்கும் எனக்கும் எந்தவிதப் பகையும் இல்லாமல் இருந்த போதே அத்தனைப் பெரிய துரோகத்தை இந்த சிறிய குணம் படைத்த இவர் துரோகம் இழைத்தார்.
எனது பெயர் அறிவிக்கப்பட இருந்த நேரத்தில் அதாவது மணமேடை ஏறும் நிமிடத்தில் மாற்றப்படும் மணமகன் போல், கண்ணிமைக்கும் நேரத்தில் இன்னொரு பெயரை தன் பலத்தால் அறிவிக்க வைத்தார்.
இந்த பின்னடைவால் ஏற்பட்ட ரணங்களும், இழப்புகளும், அவமானமும், தனிமனித கம்பீர இழப்பும் சொல்லி மாளாது. என் 44ஆண்டுகால அரசியல் வாழ்வுல், அரசியல் களப்பணியில் பெற்ற பேருகள் , மாற்றார் அளித்த கேடுகளால் தனிமனித ஆளுமையில் இழப்பு ஏற்பட்டது.
அன்று ஐநா சபையில் கிடைத்த பணியை மறுதலித்து விட்டு அரசியலில் இருந்தேன். வழக்குரைஞர் தொழிலில் தொடர்ந்து இருந்தால் உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ என சகாக்களை போல் பணியில் இருந்திருப்பேன். இப்படிப்பட்ட மனிதர்களால் பெற்றது ஒன்றுமில்லை, இழந்தவை அதிகம். இவற்றை எல்லாம் கைக்குட்டையில் வியர்வை துடைப்பது போல் துடைத்து விட்டு இன்று தனக்கு காரியம் ஆகவேண்டும் என்பதால் எவ்வித கூச்சமும் இல்லாமல் திறந்த வீட்டுக்குள் இவர்களால் எப்படி நுழைய முடிகின்றது.
எதிரியை மன்னித்து விடலாம், துரோகியை மன்னிக்க மனமில்லை. என்னால் எளிதாக செய்யக் கூடிய காரியம் தான். ஆனாலும் மனமில்லாத காரணத்தால் " சென்று வாருங்கள், வணக்கம் என வழி அனுப்பிவிட்டேன்.
வேதனையை விருந்தளித்து விட்டு பணத்தை மருந்தாக அளிக்க வந்திருப்பார் போலும். சுயமரியாதைக் காரணாக நான் செய்தது சரி என தன்மான அரியாசனத்தில் அமர்ந்தவாரு அந்த தேநீரை அருந்தியவாறு இதனை பதிவு செய்கின்றேன்.
காலச்சக்கரம் வேகமாக ஓடிவிட்டாலும், மனதில் ஆறாத காயங்கள் அகத்தினில் வலிக்கின்றது இந்த பழைய நிகழ்வுகள்.
#தமிழகஅரசியல்
#ksrpost
#Ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
27.03.2017
No comments:
Post a Comment