Thursday, March 9, 2017

கச்சத் தீவு2-அறியா செய்திகள்

கச்சத்தீவு - 2
அறியா செய்திகள்
-------------------------------
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒன்றுப்பட்ட இராமநாதபுரம் மாவட்ட சுவடியை  ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. பின்பு கலைஞர் ஆட்சிக் காலத்தில் தமிழிலும் வெளியிடப்பட்டது. அதனுடைய மறுப்பதிப்பாக 2012-ல் தமிழக அரசு ஆங்கில இராமாநாதபுர சுவடியை வெளியிட்டுள்ளது.
அந்தச் சுவடியில் பக்கம் 19, 30-ல் கச்சத்தீவு இராமநாதபுரத்தில் தமிழகத்திற்கு சொந்தமானதாகவே சொல்லப்பட்டுள்ளது. இது சம்பந்தமான ஆங்கில தரவுகள் இங்கே காட்டப்பட்டுள்ளது.

2. கச்சத்தீவு பிரச்னை ஏற்பட்ட நேரத்தில் காங்கிரஸ் கட்சி பிளவுப்பட்டு பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்தி தலைமையில் ஆளும் காங்கிரஸ் என்றும் தமிழ்நாட்டில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டது.

காமராசர் தலைமையில் இருந்த காங்கிரஸ் வலுவாக இருந்தது. இந்திராகாந்தி தலைமையில் இருந்த காங்கிரஸுக்கு சி. சுப்பிரமணியம், பத்தவச்சலம் போன்ற ஒரு சிலரே இருந்தனர்.

கச்சத்தீவு விவகாரத்தில் காமராசர் காலத்தில் இருந்த பழைய காங்கிரஸ் (ஸ்தாபன காங்கிரஸ்)  கச்சத்தீவை இலங்கைக்கு கொடுக்கக் கூடாது என்று தெளிவான நிலையில் இருந்தனர். இதற்காக இந்திராகாந்திக்கு கண்டனமும் தெரிவித்தனர். காமராசர் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் தலைவர் ப.ராமசந்திரன் தலைவராகவும், நெடுமாறன், குமரி அனந்தன், திண்டிவன ராமமூர்த்தி, தண்டாயுதபாணி போன்றவர்கள் செயலாளராக பொறுப்பில் இருந்தனர்.
சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர் பொன்னப்ப நாடார் கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியும் பேசினார். முதல்வராக இருந்த கலைஞர் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் முதல்வர் கலைஞர் முன்மொழிந்த கச்சித்தீவை கொடுக்கக் கூடாது என்ற தீர்மானத்தை ஆதரித்தும் பழைய காங்கிரஸ் சார்பில் பொன்னப்ப நாடார் கையொப்பமிடப்பட்டார்.
கச்சத்தீவு பிரச்னைக் குறித்து இராமாநாதபுரம் சென்று ஆய்வு நடத்தி கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கக் கூடாது என்ற அறிக்கையை நெடுமாறன் காமராசரிடம் அறிக்கையை வழங்கினார்.

ஆளும் இந்திரா காங்கிரஸ் சட்டமன்றத்தில் இருந்த ஏ.ஆர். மாரிமுத்து, சட்ட மேலவையில் இருந்து பூதலூர் ஆறுமுகசாமியும் தங்களுடைய கட்சிக்கு எதிராக நிலையில் இருந்தனர். கச்சத்தீவை இலக்கைக்கு கொடுக்கக்கூடாது என்ற மத்திய அரசுக்கு கோரிக்கையை வைத்தனர். 

ஆனால், இந்திரா காங்கிரஸின் தமிழ்நாடு கட்சி அமைப்பும், சி. சுப்பிரமணியம், பக்தவச்சலம் அன்றைய கட்சியின் மாநில தலைவர் ராமையா இலங்கைக்கு மத்திய சர்க்கார் வழங்கலாம் என்று ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பிரிந்த எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க.வும், இந்திராகாந்தியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருந்தது.
அ.தி.மு.க தலைமை நிலையச் செயலாளர் அரங்கநாயகம் முதல்வர் கலைஞர் தீர்மானத்திற்கு எதிராக கச்சத்தீவை இலஙகைக்கு தரலாம் என்று கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார்.

அன்றைக்கு இந்திரா காங்கிரஸ் மாநில அமைப்பும், அ.தி.மு.க மட்டுமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கலாம்  என்று ஆதரவாக இருந்தனர்.
தமிழகத்தின் கடுமையான எதிர்ப்பை மீறியும், அன்றைய மத்திய அரசு 1974-ல் கச்சத்தீவை இலக்கைக்கு வழங்கியது.
#கச்சத்தீவு
#தமிழகஅரசியல்
#Ksrpost
#ksradhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
09.03.2017



No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...