......................
இரண்டு நாட்களுக்கு முன்பு கிராமத்திலிருந்து கோவில்பட்டிக்கு கழுகுமலை வழியாக சென்றேன். கழுகுமலை முருகன் கோவில் கழுகாசல மூர்த்தி என்ற பெயரில் அமைந்த பழைய கோவில். அந்தக் கோவிலில் அக்கால கட்டிடக் கலை திட்டமிட்டு கட்டப்பட்டதாகும். கோவிலின் தெப்பத்திற்கு தொலைவிலிருந்து குளத்து தண்ணீர் வரும்படியாக கடந்த நூற்றாண்டில் துவகத்தில் எட்டயபுரம் அரசர் கட்டியுள்ளார். இந்தக் கோவில் எட்டயபுரம் சமஸ்தான நிர்வாகத்தில் அப்போது இருந்தது.
சமணர்கள் அங்கிருக்கும் மலையில் வடிவமைத்த வெட்டுவாங்கோவிலும் கீர்த்திக்குரியது.
அந்த நிமிர்ந்த மலையும், அதை ஒட்டி உள்ள கோவிலும் மனதிற்கு அமைதியை தரும் இடங்களாகும்.
அந்த கோவிலுள்ள முருகனுக்கு காவடி தூக்கிக் கொண்டு ஊத்துமலை ஜமீன்தார் மருதப்பர் வந்தபோதுதான் அண்ணாமலை ரெட்டியார் காவடி சிந்தைப் பாடினார்.
சிந்துகள் பல வகையுண்டு. இதைப் பற்றி ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா? என்று தெரிந்துக் கொள்ள அக்கோவிலின் தேவஸ்தான அலுவலகத்திற்கு வருகின்றேன் என்று முன் கூட்டியே அறிவித்துவிட்டு அங்கு சென்றேன்.
கழுகுமலையின் பட்டறை காராச்சேவு என்பது பிரபல்யம்.
அதையும் தேனீரையும் அறிந்து கொண்டு காவடி சிந்து அண்ணாமலை ரெட்டியாரை பற்றி விவாதிக்க முடிந்தது.
அதைக் குறித்தான செய்திகள்
நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலுக்கு வடக்கே ஆறு மைல் தொலைவிலுள்ள சென்னி குளம் கிராமத்தில் 1865-ம் ஆண்டு சென்னவ ரெட்டியார் - ஓவு அம்மாள் தம்பதிக்கு கடைசி மகனாக பிறந்தவர் அண்ணாமலையார்.
இளம் வயதிலேயே தமிழால் ஈர்க்கப்பட்டவர் இலக்கியங்களை எல்லாம் கசடற கற்றார். அபாரமான நினைவாற்றல் கொண்டவர். இவரது ஆரம்பக் கல்வி சென்னிகுளத்தில் சிவகிரி சுப்பிரமணிய பிள்ளையின் திண்ணைப் பள்ளியில் தொடங்கியது. பின்னர், சேற்றூர் சமஸ்தான புலவர் ராமசாமி கவிராயரிடம் தமிழ்ப் பாடம் பயின்றார்.
மீனாட்சி சுந்தரக் கவிராயருடன் ஏற்பட்ட அறிமுகம் இவர் வாழ்வில் மலர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் திருவாவடுதுறை ஆதீனத்தில் கல்வி கற்க இவர் சென்றது மீனாட்சி சுந்தரக் கவிராயரால்தான்.
அங்கு ஆதீனத் தலைவரான ஸ்ரீசுப்பிரமணிய தேசிகரை பற்றி ஒரு பாடலை இயற்றிப் பாடினார். அனைவரது பாராட்டுதலையும் பெற்றார். மகிழ்ந்த தேசிகர், அப்போது மடத்திலிருந்த தமிழ்த் தாத்தா என பின்னாளில் அன்போடு அழைக்கப்பட்ட உ.வே.சாமிநாத அய்யரிடம் உரிய வகையில் தமிழை அண்ணாலை ரெட்டி யாருக்கு கற்பிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
அதன்படி உவேசா. நன்னூலையும், மாயூரப் புராணத்தையும் ரெட்டியாருக்கு கற்றுக் கொடுத்தார். கூவலபுரம் மடத்திலிருந்த சுந்தர அடிகள், சமய இலக்கியங்களை கற்பித்தார்.
இப்படி கரைகண்ட வித்துவான்களிடம் தமிழ் பயின்றதாலோ என்னவோ அண்ணாமலை ரெட்டியாரிடம் தமிழ் விளையாடியது. சென்னிகுளம் சுந்தரப் பரதேசியார் மூலமே இவருக்கு ஊத்து மலை ஜமீன்தாரான மருதப்ப தேவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதுவே நெருங்கிய நட்பாகவும் வளர்ந்தது. விளைவு ஜமீனின் பிரதான அவைப் புலவராக மாறினார். மருதப்பர் மீது முந்நூறுக்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றவும் செய்தார்.
ஊத்துமலை ஜமீனை தவிர வள்ளல் என போற்றப்பட்ட ராஜவல்லிபுரம் முத்துச்சாமிப் பிள்ளை, வெ.ப.சு. முதலியார் ஆகியோரிடமும் நல்ல நட்பினை கொண்டிருந்தார்.
ரெட்டியாரின் உடல்நலம் இளமையிலேயே குன்றியது. இதைக் கண்ட அவர் தந்தை உடனடியாக அவருக்கு குருவம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தார். அப்போது அண்ணாமலை ரெட்டியாருக்கு வயது 24.இதன் பிறகு நெடுங்காலம் அவர் வாழவில்லை. 1891ல் தனது 26வது வயதில், தை அமாவாசை அன்று காலமானார்.
வாழ்ந்தது குறுகிய காலம்தான் என்றாலும் இவரது தமிழ் இன்றும் போற்றப்படுகிறது. குறிப்பாக காவடி சிந்துகள். இதன் சொல்லழகும் இசை அமைதியும் அலாதியானவை.
ஊத்துமலை ஜமீன்தார் கழுகுமலைக்கு காவடி எடுத்து ஒருமுறை சென்றார். அப்போது அவருக்கு சிரம பரிகாரமாக ரெட்டியாரால் பாடப்பெற்றவையே காவடிசிந்து.
இதற்கு ராக, தாள அமைப்புகளை உருவாக்கியவர் கிரிவலம் வந்த நல்லூரைச் சேர்ந்த பொன்னம்மாள் என்ற உருத்திர காணிகை என்கிறார்கள்.
காவடிசிந்தின் முதல் பதிப்பு, ரெட்டியார் காலத்திலேயே அச்சில் வந்துவிட்டது. திருநெல்வேலி நெல்லையப்ப கவிராஜரின் அச்சுக் கூடத்தில் ஊத்துமலை ஜமீனின் பொருள் உதவியுடன் இது பதிக்கப்பட்டது.
எளிமை, இனிமை, பக்தி ஆகியவற்றைக் கொண்ட காவடிசிந்து.
திச்ரம், கண்டம், மிச்ரம் போன்ற நடைகளைப் பெற்றிருந்ததால் இசை வல்லுநர்கள் அனைவரும் இதை பாட ஆரம்பித்தார்கள்.
சொல்லப்போனால் காவடி சிந்தின் புகழ் பெருமளவு பரவியதே இசைக்குயில் எம்.எஸ்.சுப்பு லட்சுமியால்தான்!
ஐநா சபையில் அவருக்கு பாட வாய்ப்பு கிடைத்தபோது -
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிசிந்தை பாடி பெருமை சேர்த்தார்.
அந்தக் காலத்தில் புலவர்களது புலமையை சோதிக்க, ‘அண்ணாமலை ரெட்டியாரின் காவடிசிந்து மாதிரி உம்மால் பாட முடியுமா?’ என்று கேட்பார்களாம்!
ரெட்டியாரின் 22 காவடிசிந்துகளே அச்சாகி இருக்கின்றன என்றும் இன்னும் பல சிந்துகள் அச்சேறாமலேயே உள்ளன என்றும் கூறுகிறார்கள், 1928ல், தான் வெளியிட்ட சங்கீதக் கோவையில் அண்ணாமலை ரெட்டியாரால் இயற்றப்பட்ட காவடிசிந்தின் இசையழகை கே.வி. சீனிவாச அய்யங்கார் பாராட்டியிருக்கிறார்.
ஏட்டுப் பிரதிகளாக இருந்த காவடிசிந்தை கரிசல் எழுத்தாளர் கு. அழகிரிசாமி வெளியிட்டிருக்கிறார்.
‘யமகம், மடக்கு, திரிபு, சந்தம் முதலிய அமைப்புகளோடு செய்யுளை மிக விரைவில் இயற்ற வல்லவர். இவரது இயல்பான பேச்சில் சிலேடை மிளிரும். சித்திர கவிக்கு இவர் இணையற்றவர். காவடிசிந்து முறை ஏற்பட்டதே இவரால்தானே...’ என உ.வே.சாமிநாத அய்யர் பாராட்டியிருக்கிறார்.
இப்படி அனைவராலும் புகழப்பட்ட அண்ணாமலை ரெட்டியாரை தன் உள்ளங்கையில் வைத்து மருதப்பர் தாங்கினார். இவரை வரவழைப்பதற்காக ஜமீன் பல்லக்கை அனுப்புவார்.
அந்தளவுக்கு தமிழ் மீது பற்றுக் கொண்டவராக மருதப்ப தேவர் திகழ்ந்தார்.
#கழுகுமலை
#காவடி சிந்து
#அண்ணாமலைரெட்டியார்
#ஊற்றுமலை ஜமீன்தார்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
24.03.2017
No comments:
Post a Comment