Friday, March 10, 2017

தாமிரபரணி

தாமிரபரணி-
------
தாமிரபரணியில் போக்குவரத்து:
------------------------------------
வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துவிட்டது. வாகனங்களின் நெரிசலால் சாலைகள் திணறுகின்றன.
சரக்கு போக்குவரத்தில் சாலைகளும், ரெயில் பாதைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரக்கு போக்குவரத்துக்கென்று தனியாக ரெயில் பாதை அமைக்கும் திட்டமும் மத்திய அரசிடம் உள்ளது.
போதிய சாலை மற்றும் ரெயில் பாதை வசதி இல்லாத காலத்தில் உள்நாட்டில் ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் மூலமாகவே சரக்கு போக்குவரத்து நடைபெற்றது.
சாலை மார்க்கமாகவும், சரக்கு ரெயில்கள் மூலமும் ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருட்களை கொண்டு செல்வதற்கு செலவு அதிகமாவதோடு காலவிரயமும் ஏற்படுகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசும் அதிகம் ஏற்படுகிறது.
இதை கருத்தில் கொண்டு நீர்வழி போக்குவரத்துக்கு ஊக்கம் அளிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளது. சாத்தியம் உள்ள இடங்களில் ஆறுகளில் சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை பெரிய அளவில் செயல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
நம் நாட்டில் ஏற்கெனவே சில நதிகளில் சிறிய கப்பல்கள் மற்றும் படகுகள் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. அந்த பட்டியலில் தமிழ்நாட்டின் தென்பகுதியில் உள்ள தாமிரபரணி ஆறும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு தற்போது ஏற்பட்டு உள்ளது.
இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணையம் நீர்வழிப்போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துகிறது.
நதிகள் மற்றும் கால்வாய்கள் வழியான நீர்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் தேசிய நீர்வழிப் போக்குவரத்து மசோதாவுக்கு கடந்த மார்ச் மாதம் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இதன் மூலம் இந்தியாவில் 106 நதிகள் தேசிய நீர்வழிப் பாதைகளாக அறிவிக்கப்பட்டு உள்ளன. ஏற்கெனவே 5 நீர்வழிப் பாதைகள் செயல்பாட்டில் உள்ளன.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 106 தேசிய நீர்வழிப்பாதை திட்டங்களில், 6 திட்டங்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சம்பந்தப்பட்டவை ஆகம்.
அந்த திட்டங்கள் வருமாறு :
1. தாமிரபரணி தேசிய நீர்வழிப்பாதை திட்டம் (திட்டம் எண். 99)
2. காக்கிநாடா - புதுச்சேரி கால்வாய் (திட்டம் எண். 4)
3. பூவார் கடற்கரையில் இருந்து இரயுமன்துறை வரையிலான திட்டம் (திட்டம் எண் : 13)
4. பவானி நீர்வழிப்பாதை (திட்டம் எண். 20)
5. மணிமுத்தாறு நீர்வழிப்பாதை (திட்டம் எண். 69)
6. பாலாறு நீர்வழிப்பாதை (திட்டம் எண். 75)
இவற்றில் தாமிரபரணி தேசிய நீர்வழிப்பாதை திட்டம் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுகிறது.
இது பற்றி இந்திய உள்நாட்டு நீர்வழிப்பாதை ஆணைய அதிகார நீர்வழிப்பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தொடர்பான ஆய்வுப் பணிகள் தொடங்கி உள்ளன.
தொழில்நுட்பம், பொருளாதார ரீதியில் இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான சாத்தியக் கூறுகள், சுற்றுச்சூழல் பாதிப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, சமூக பாதிப்பு ஆகியவை பற்றி ஆய்வு செய்யப்படும். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேற்கண்ட நீர்வழிப்பாதை திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி முடிவு செய்யப்படும்.
இது தொடர்பான வரைவு அறிக்கைப் பணி முடிவடைய குறைந்தது 3 ஆண்டுகளாவது ஆகலாம். அதன் பிறகு தேவையான இடங்களில், நதிக்கரையில் வசிக்கும் மக்களை வேறு இடத்தில் குடியமர்த்துதல் தொடர்பான பிரச்சினை குறித்து மாநில அரசின் ஒத்துழைப்பு கோரப்படும். இந்த திட்டத்தை தொடங்கும் முன் பல்வேறு அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும். எனவே இநத் திட்டத்ை நிறைவேற்றி முடிக்க நீண்ட காலம் ஆகலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
தாமிரபரணி ஆற்றில் நீர்வழி போக்குவரத்து தொடங்குவது பற்றி சமீபத்தில் டெல்லி மேல் - சபையில் கப்பல் போக்குவரத்து துறை ராஜாங்க மந்திரி மன்சுக் மாண்டவியா சில கருத்துகளை தெரிவித்தார். அவர் கூறியதாவது:
நாட்டில் பல பகுதிகளில் பாயும் ஆறுகளில் நீர்வழி போக்குவரத்து தொடங்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தின் ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் நீர்வழி போக்குவரத்து தொடங்கும் நோக்கத்தில், திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சுலோச்சன முதலியார் பாலத்தில் இருந்து புன்னகைக்காயல் பகுதி வரை 64 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள நீர்வழிப்பாதையை தேசிய நீர்வழிப்பாதையாக அறிவித்து இருக்கிறது.
இது தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நீர்வழிப் போக்குவரத்தை சாத்தியமாக்கும் வகையில் தாமிர எனவே தாமிரபரணி நீர்வழிப்பாதையை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்துவது பற்றி பரிசீலிக்கப்படுகிறது.
தாமிரபரணி நதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மூன்று முக்கிய தொழில் உற்பத்தி மையங்கள் உள்ளன. தாமிரபரணி ஆற்றில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ‘சிப்காட்’ தொழில் பேட்டையில் 71 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
தாமிரபரணியில் சரக்கு படகு போக்குவரத்து தொடங்கினால் மேற்கண்ட தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்வது எளிதாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
மேலும் தாமிரபரணியின் சுற்றுவட்டார பகுதியில் தூத்துக்குடி நகரம், முயல் தீவு, ரோச் பூங்கா, பனிமயமாதா ஆலயம், திருச்செந்தூர் முருகன் கோவில், குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில், காந்திமதி - நெல்லையப்பர் கோவில் ஆகிய முக்கியமான சுற்றுலா தலங்கள் அமைந்துள்ளன.
எனவே, சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இந்த நீர்வழிப்பாதையில் ‘ரோ-ரோ’ எனப்படும் சுற்றுலா படகு போக்குவரத்து வசதிகளை வருங்காலத்தில் ஏற்படுத்துவது பற்றியும் ஆராயப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தாமிரபரணியில் நீர்வழிப் போக்குவரத்தை தொடங்குவதற்கான மத்திய அரசின் முயற்சி வரவேற்கத்தக்கது ஆகும். இந்த திட்டம் அறிவிப்போடு நின்றுவிடாமல் செயல்பாட்டுக்கு வந்தால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மேலும் வளர்ச்சி அடையும் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும், எம்.பிக்களும் இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசை தொடர்ந்து வற்புறுத்துவதோடு முழு ஆதரவும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரின் விருப்பமும் ஆகும்.
***
தாமிரபரணி
தமிழ்நாட்டில் உற்பத்தியாகி தமிழகத்தில் மட்டுமே ஓடி கடலில் கலக்கும் முக்கிய நதி தாமிரபரணி. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு சரிவு பகுதியான பொதிகை மலையில் கடல் மட்டத்தில் இருந்து 5,659 அடி உயரத்தில் உற்பத்தியாகும் தாமிரபரணி சுமார் 125 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற இடத்தில் கடலில் கலக்கிறது.
தாமிரபரணியின் குறுக்கே பொதிகை மலையில் காரையார் என்ற இடத்தில் அணை கட்டப்பட்டு உள்ளது. தாமிரபரணி, காரையார் அணையை வந்து சேரும் முன்பு அதனுடன் பேயாறு, உள்ளாறு, பாம்பாறு ஆகிய மூன்று சிற்றாறுகள் கலக்கின்றன. காரையார் அணைக்கு 130 அடி உயரத்தில் இருந்து அருவியாக (பாணதீர்த்தம்) தாமிரபரணி நீர் கொட்டுகிறது.
காரையார் அணையில் இருந்து சற்று தொலைவு வந்ததும் தாமிரபரணியுடன் சேர்வலாறு கலக்கிறது. அங்கிருந்த சில கிலோமீட்டர்கள் தொலைவில் நீர் மின் திட்டம் உள்ளது. அதாவது தாமிரபரணியின் தண்ணீரை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கிருந்து சமவெளி பகுதியான பாபநாசத்தை வந்து சேரும் தாமிரபரணி, கிழக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்குகிறது.
மாஞ்சோலை மலையில் உற்பத்தியாகும் மணிமுத்தாறு, தாமிரபரணியின் முக்கிய உபநதியாகும். இந்த நதி ஆலடியூர் என்ற இடத்தில் தாமிரபரணியுடன் கலக்கிறது. கடனாநதி, ராமநதி, ஜம்புநதி, பச்சையாறு, சிற்றாறு ஆகியவையும் தாமிரபரணியின் முக்கிய உபநதிகள் ஆகும்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணிக்கு பொருணை என்ற மற்றொரு பெயரும் உண்டு. கோடை காலத்தில் கூட முற்றிலும் வறண்டுவிடாது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகீய இரு பருவமழை காலங்களிலும் தாமிரபரணி நீர் ஆதாரம் பெறுகிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம். சமீபத்தில் 1992-ம் ஆண்டும், அதன்பிறகு 2015-ம் ஆண்டிலும் தாமிரபரணியில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் சமயங்களில் ஏராளமான நீர் வீணாக கடலில் சென்று கலப்பது உண்டு.
தாமிரபரணியின் மூலம் நெல்லை மாவட்டத்தில் 40 ஆயிரத்து 300 ஏக்கர் நிலமும், தூத்துக்குடி மாவட்டத்தில் 46 ஆயிரம் 107 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் இரு மாவட்டங்களின் குடிநீர் தேவையையும் பெருமளவில் பூர்த்தி செய்கிறது.
தடுப்பணைகள்
தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் பற்றிய விவரம் வருமாறு :
1. கோடைமேலழகியான் அணை
2. நதியுண்ணி கால்வாய் அணை
3. கன்னடியன் அணை
4. அரியநாயகிபுரம் அணை
5. பழவூர் அணை
6. சுத்தமல்லி அணை
7. மருதூர் அணை
8. ஸ்ரீவைகுண்டம் அணை
மேற்கண்ட 8 தடுப்பணைகளில் மருதூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 2 தடுப்பணைகள் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளன.
மருதூர் அணையில் இருந்து பிரிந்து செல்லும் மேலக்கால், கீழக்கால்வாய்கள் மூலம் மொத்தம் 20,540 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
கடைசி தடுப்பணையான ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து பிரியும் வடகால், தென்கால்வாய் மூலம் மொத்தம் 25,567 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
நெல்லை மாவட்டத்தில் தாமிரபரணி மற்றும் அதன் துணை ஆறுகள் மூலம் மொத்தம் 1,300 குளங்களுக்கு தண்ணீர் கிடைக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் 53 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது.
பக்கிங்காம் கால்வாய் உயிர் பெறுமா?
தமிழ்நாட்டின் வடக்கே ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் தொடங்கி சென்னை வழியாக கடற்கரையோரமாக புதுச்சேரி வரை செல்லும் பக்கிங்காம் கால்வாய் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போதும், அதற்கு முன்பும் முக்கிய நீர்வழி போக்குவரத்தாக விளங்கியது என்று இப்போது சொன்னார் பலர் நம்பமாட்டார்கள்.
அந்த காலத்தில் இந்த கால்வாயில் படகுகள் மூலம் உணவுப் பொருட்கள், மரங்கள், துணிமணிகள் போன்ற சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு சென்றார்கள்.
ஆனால் சாலை மற்றும் ரெயில் பாதை வசதிகள் ஏற்பட்ட பிறகு நம்மவர்கள் பக்கிங்காம் கால்வாயை முற்றிலுமாக கைகழுவி விட்டார்கள். இதனால் ஒரு காலத்தில் மிகச்சிறந்த நீர்வழிப்பாதையாக விளங்கிய பக்கிங்காம் கால்வாய் இப்போது ஆக்கிரமிப்புகளால் தூர்ந்து போய் குறுகி கழிவுநீர் கால்வாயாக பரிதாபமாக காட்சி அளிக்கிறது.
நமது அலட்சியத்தால் ஒரு அற்புதமான நீர்வழிப் போக்குவரத்தை நாம் இழந்துவிட்டோம். ஒருவேளை ஆங்கிலேயர் ஆட்சி நீடித்து இருந்தால் பக்கிங்காம் நீர்வழிப் போக்குவரத்து உயிர்ப்புடன் இருந்திருக்கலாம்.
இந்த பக்கிங்காம் கால்வாய் திட்டத்தின் மீது மத்திய அரசு இப்போது தனது கவனத்தை திருப்பி இருப்பது சற்று நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
பொருநை ஆற்றைப் பற்றிய குறிப்புகளைத் தங்களுடன் இணைந்து பகிர்ந்துகொள்வதில் நான் பெருமை கொள்கிறேன்.

tp://ksr1956blog.blogspot.in/2015/07/tamiraparani.html
2. http://ksr1956blog.blogspot.in/2015/08/thamirabarani.html
3. http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_29.html
4. http://ksr1956blog.blogspot.in/2015/08/blog-post_35.html
5. http://ksr1956blog.blogspot.in/2015/08/225-tirunelveli-district-225.html
6. http://ksr1956blog.blogspot.in/2015/10/journey-of-tamirabarani.html
7. http://ksr1956blog.blogspot.in/2015/10/blog-post_93.html
#தாமிரபரணி
#திருநெல்வேலி
#tirunelveli
- கே.எஸ். இராதாகிருஷ்ணன், சென்னை.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...