தொகுதி சார்ந்த தேர்தல் அறிக்கை;
1989 தேர்தலில்.
-----------------------------------
தேர்தலில் தொகுதி வாரியாக தேர்தல் அறிக்கை என இப்போது
பேசப்படுகின்றது.
1989 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக கோவில்பட்டியில் தேர்தல் நான் களம் கண்ட போது;மூன்று பக்கத்தில் அந்த தொகுதியை குறித்து 40 பிரச்னைகளை தேர்தல் அறிக்கையாக 28 ஆண்டுகளுக்கு முன்பே வெளியிட்ட அனுபவம் எனக்கு உண்டு.
அப்போது அந்த தொகுதியில் கோவில் பட்டி வட்டத்தில் கிழவிபட்டி,சங்கரன் கோவில் வட்டத்தில் வெள்ளாகுளம், சங்குபட்டி கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து இல்லாமல் இருந்தது. குடிநீர் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னையாக இருந்தது.
கோமல் சாமிநாதனின் 'தண்ணீர் தண்ணீர்'என்ற பாலசந்தரின் திரைப்படம் கோவில்பட்டி தொகுதியில் உள்ள ஏழுபட்டி கிராமத்தில் தான் எடுக்கப்பட்டது.அந்தத் திரைப்படம் வந்த நான்கு வருடம் கழித்து அந்தத் தொகுதியில் வேட்பாளராக களம் கண்டேன்.
கிராமங்களுக்கு உயர்நிலை குடிநீர்த்தொட்டி வசதியும், கைப்பம்பு குடிநீர்வசதியும் இன்ன இன்ன கிராமங்களுக்கு அமைத்து தருகிறோம் என்ற உறுதியையும் அந்த அறிக்கையில் சொல்லியிருந்தேன்.
எட்டயபுரம் மகாகவி பாரதி நெசவு ஆலை தொழிலாளருக்கு வீட்டு வசதியும், சங்கீத மேதை முத்துசாமி தீட்சதர், விளாத்திகுளம் சுவாமிகள் என்ற நல்லப்ப சுவாமிகள் கால் ஊன்றி எட்டயபுரத்தில் இசைக் கல்லூரியும்,
மகாகவி பாரதியும், சீதகாதியும், சோமு சுந்தர பாரதி போன்ற தமிழறிஞர்கள் உலாவிய மண்ணில் கிராமிய படிப்புகள் சார்ந்த நிகர்நிலை பல்கலைக்கழகம் அமைக்கப்படும் எனவும்,
எட்டயபுரம் தனி தாலுக்கா அமைக்கப்படும் என்றும்,
கோவில் பட்டி வட்டாரத்தில் விவசாயப் போராட்டத்தில் தமிழகத்திலேயே அதிகமானவர்கள் அதாவது 20 மேற்பட்டவர்கள் உரிமை கேட்டு போராடியபோது காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு நினைவிடம் அமைக்கப்படும் எனவும்,
விவசாய விலை பொருட்களுக்கு நியாயமான இலாப விலையும், விவசாய இடுப் பொருட்களின் விலை குறைக்கவும் குரல் கொடுப்பேன் எனவும்,
கோவில்பட்டியில் உள்ள அரசு விவசாயப் பண்ணையில் விவசாயக் கல்லூரி துவக்கவும் குரல் கொடுப்பேன் எனவும்,
வறண்ட குளங்களை தூர்வாரி முள் செடிகளை வெட்டுவதும்என்றும்,
கேரள அச்சங்கோவில் - பம்பையை வைப்பாரோடு இணைத்து கங்கை, வைகை, தாமிரபரணி, குமரிமுனை வரை தேசிய நதிகளை இணைக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளேன். அந்த வழக்கை விரிவுப்படுத்தி கோவில்பட்டி வட்டாரத்தில் நீர்ப்பாசன வசதியை பெருக்குவேன் எனவும்,
கோவில்பட்டி குடிநீருக்கு புதிய பைப் லைன் அமைப்பதும்,
அரசு கலைக்கல்லூரி அமைப்பது எனவும்,
புறவழி சாலை அமைக்கவும்,
பாதிக்கப்பட்ட தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கவும்,
என பல அத்தொகுதியின் தேவைகளை தேர்தல் அறிக்கையில் அப்போது சொல்லியிருந்தேன்.
ஆனால் வெற்றி வாய்ப்பு எனக்கு கிட்டவில்லை. என்னை எதிர்த்து போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாரளர் சோ. அழகிரிசாமி வெற்றி பெற்றார். 5 முறை சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். எளிமையானவர், சைகளில் பிரயாணம் செய்யக்கூடியவர், கோவில்பட்டி சாத்தூர் டீ கடையில் உட்கார்ந்து அனைவரையும் சந்திக்கக் கூடிய நல்ல மனிதர்.என் மீதும் அன்பு கொண்டவர். அக்கட்சியின் சட்டமன்ற தலைவராகவும் விளங்கியவர். அவரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தாலும்;சரி பெரியவர் நல்லவர் அவரிடம்தானே தோற்தோம் என்று எனக்கு ஒரு ஆறுதல்.
தோற்றபின்பும் நான் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பேருந்துகள் செல்ல கிழவிபட்டிக்கும், வெள்ளாகுளம் - சங்குப்பட்டி என இரண்டு மார்க்கங்களுக்கும் பஸ் போக்குவரத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.
150 கிராமங்களுக்கு குடிநீர் வசதிக்காக அடிப்பம்பு வசதிகளையும் செய்துக்கொடுத்தேன். 8 கிராமங்களக்கு குடிநீர் உயர்நிலைத் தொட்டிகளை கட்ட கடமைகளை செய்தேன். ரோடு வசதி இல்லாத கிராமங்களுக்கு சாலை வசதிகளும் செய்து தரப்பட்டது. எட்டயபுரத்தில் நெசவாளர் காலனியும் கட்டப்பட்டது.
இப்படியானநினைவுகள்......
இன்றைக்கு ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிக்கையை செய்திதாளில் பார்த்தபோது இந்த நினைவு ஓட்டங்கள் மனதில் எழுந்தது.
#தொகுதிதேர்தல்அறிக்கை
#கோவில்பட்டி
#தேர்தல்1989
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
30.03.2017
No comments:
Post a Comment