Saturday, March 4, 2017

தாமிரபரணி

தாமிரபரணி
============
தாமிரபரணி கீர்த்தியையும், வரலாற்றையும் என்னுடைய நிமிர வைக்கும் #நெல்லை நூலில் நான் செய்த பதிவுகள்.இந்நூல் 2004-ல் வெளியிடப்பட்டு விரைவில் ஐந்தாவது பதிப்பாக விரிவுப்படுத்தி  வெளிவர இருக்கின்றது.
.................
வற்றா ஜீவநதியான தாமிரபரணியிலிருந்து வீணாக 50 டி.எம்.சி. தண்ணீர் புன்னைகாயலில் கடலில் கலக்கின்றது. தி.மு.க ஆட்சியில் திசையன்விளை, சாத்தான்குளம் வரை தாமிரபரணி-நம்பியாறு-கருமேனியாறை இணைக்கவேண்டும் என்று ரூ. 400 கோடி திட்ட மதிப்பில் கால்வாய்கள் வெட்டப்பட்டன.  கல்லிடங்குறிச்சிக்கு தெற்கே தாமிரபரணியும், மணிமுத்தாறும் சந்திக்கும் சின்ன சங்கரன்கோவிலில் கன்னடியன் கால்வாய் வெள்ள நீர் சேர்கின்றனது.  இது வெள்ளங்குழி வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு கரைகளை உயர்த்தி 100 அடி அகலமும் 3500 கன அடி நீர் வரை செல்லும் கால்வாய் புதுப்பிக்கப்பட்டது. இப்போது தாமிரபரணியில் கழிவுநீர்களை விட அரசு அதிகாரிகள் திட்டமிட்டு கழிவுகள் சேர்கின்ற இடமாக கல்லிடக்குறிச்சி பகுதியில் கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. சுவைமிகு பொருநை நதியில் கழிவு நீர்களை விட்டால் தாமிரபரணியின் இயற்கை தன்மை கெட்டுப்போகும் என்று சிந்திக்காமல் பலகோடி ரூபாய்களில் கழிவுநீர் செல்லும் கால்வாய் வெட்ட அடிக்கல்லும் நாட்டப்பட்டுள்ளதாக தெரிகின்றது. குடிநீராகவும், தாமிரபரணி நீர் ஆன்மிகவாதிகளுக்கு அடையாளமாகவும், விவசாயிகளின் பாதுகாவலனாக இருக்கும் நதியை பாழ்படுத்துவதா என்ற குரல்கள் கேட்டவண்ணம் இருக்கின்றன. தாமிரபரணியில் 110 உறைகிணறுகள் தோண்டப்பட்டு வடக்கே விருதுநகர் வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குடிநீர் எல்லாம் மாசுபடக் கூடிய அளவில் அரசு கழிவு நீரையும் தாமிரபரணியில் சேர்க்க திட்டமிட்டிருப்பதைத் தடுக்க வேண்டும்.

 
வெள்ளத்துக்கு சங்கதி சொன்ன சங்கு மண்டபம்!

நம்ம மாநிலத்தை தண்ணீர் பிரச்னைக்காக பக்கத்து மாநிலங்களோட சண்டை போட வைக்காத ஒரே நதி தாமிரபரணிதான். பொதிகை மலையில உற்பத்தியாகும் இந்த நதிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களோட தாகத்தைத் தீர்த்து, பசுமையைக் கொழிக்க வைக்குது.
இந்த தண்ணியில தாமிரச்சத்து கலந்திருக்கிறதால, இந்த நதிக்கு தாமிரபரணினு காரணப் பெயர் வந்திருக்கும்னு சொல்றாங்க. அதாவது, பொதிகை மலை உச்சியில பூங்குளம்ங்கிற இடத்துல இருந்துதான், தாமிரபரணி நதி உற்பத்தியாகுது. தாமிரபரணி உற்பத்தியாகி வர்ற வழியில சில மரங்களோட இலைகள்லயும், பாறைகள்லயும், தாமிரச்சத்து இருக்கிறதாவும், அந்தச் சத்து தண்ணியோட கலந்து வருதுனும் சொல்றதுண்டு. அறிவியல்பூர்வமாவே, இந்த தண்ணியில தாமிரச்சத்து இருக்குனு கண்டுபுடிச்சிரு
க்காங்க. 

தாமிரபரணி தண்ணி எல்லா வகைக் காய்ச்சல், பித்ததோஷம், கண்புகைச்சல், உள்சுரம், சுவாச ரோகம், கக்குவான், என்புருக்கி, கை, கால் எரிச்சல், மிகுந்த நீர்வேட்கை ஆகிய நோய்களைத் தீர்க்கும்.

#தாமிரபரணி ஆறு, மலையில இருந்து, இறங்கி பாபநாசம் வழியா நடந்து, தூத்துக்குடி மாவட்டம் புன்னகாயல் பகுதியில கடல்ல கலக்குது. இந்தக் காலத்துல பல விதமான ரசாயன கழிவுகள் கலந்துதான், தாமிரபரணி கடலுக்குள்ள போய் சேருது. குறைஞ்சபட்சம் பாபநாசம் வரையிலும், வேணும்னா தண்ணி தூய்மையா இருக்கலாம். அதுக்கும் கீழ இறங்க, இறங்க தண்ணியோட தரம் மாறி, உருமாறிடுது. தாமிரபரணியில வெள்ளப்பெருக்கு உருவாகி, கடல் தண்ணியில கலந்தாதான், சுத்துப்பட்டுல நல்ல மழையும், கடலுக்குள்ள மீன் வளமும் பெருகும். நன்னீர் கடல்ல, கலக்குற பகுதிகளிலிருந்துதான் மேகங்கள் அதிகமான தண்ணீரை உறிஞ்சி மழையைக் கொடுக்குது. நன்னீர் இருக்கிற பகுதியிலதான், பல வகையான மீன்கள் உற்பத்தியாகி பெருகி வளருது. ஆக, இனிமேல் கடல்ல வெள்ள நீர் வீணா கலந்துடுச்சுனு சொல்லாதீங்க.

சரி, தாமிரபரணிக்கு வருவோம். அந்தக் காலத்திலிருந்தே, தாமிரபரணி வெள்ளம் கரைபுரண்டு ஓடியிருக்கு. பொதிகை மலையில மழை பெஞ்சி, திடீர்னு வெள்ளம் வர்ற செய்தி திருநெல்வேலியில இருக்கிறவங்களுக்கு எப்படி தெரியும்?
தாமிரபரணியில நமது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல்பூர்வமா தெரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்குப் பேரு, சங்குக் கல்மண்டபம். தாமிரபரணி ஆத்து மையத்தில சங்குக் கல்மண்டபம் அமைச்சிருந்தாங்க. மூணு பக்கம் திறந்தவெளியாகவும், தண்ணி வர்ற எதிர்ப்பக்கம் மட்டும் கற்சுவராலயும் அடைக்கப்பட்ட மண்டபம் அது. மண்டபம் உச்சியில சங்கு மாதிரி ஒரு அமைப்பு இருக்கும். ஆத்துல வெள்ளம் வரும்போது, அந்த மண்டபத்துக்குள்ள குறிப்பிட்ட அளவுக்கு மேல நீர்மட்டம் உயர்ந்தா, வெள்ளத்தோட இரைச்சலால் காத்து உந்தி தள்ளி, அந்த சங்கு சத்தமாக ஊதும். இதுதான் வெள்ளம் பற்றிய அறிவிப்பு. இதன் மூலமா, சுற்று வட்டார மக்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயிடுவாங்க.
நீர்மட்டம் உயர உயர சங்கின் சத்தமும் அதிகமாகும். சங்கு சத்தம் குறைஞ்சதுனா, வெள்ளம் வடிஞ்சிருச்சுனு அர்த்தம். சங்குச் சத்தம் குறைஞ்ச பிறகு, கரையோர மக்கள், இயல்பு வாழ்க்கைக்கு வந்துடுவாங்க.
ஒரு காலத்துல பாபநாசம் தொடங்கி, கடல்ல சங்கமம் ஆகிற வரையிலும், குறிப்பிட்ட தூரத்துக்கு தாமிரபரணியில ஒரு சங்கு மண்டபம் இருந்திருக்கு. அதுக்கு சாட்சியா, தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரி (வைணவ ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் பிறந்த ஊர்)யில, தாமிரபரணிக் கரையில இன்னும் சங்கு மண்டபம் நின்னுக்கிட்டிருக்கு. பல நூறு வருஷத்துக்கு முன்னாடியே, வெள்ளம் வந்தா தப்பிக்கிறதுக்கு, முன்னறிவிப்பு சொன்ன, சங்கு மண்டபம் மட்டும் வெளிநாட்டுல இருந்திருந்தா, இந்நேரம் உலக பாரம்பர்ய சின்னமா அறிவிச்சிருப்பாங்க.
..........................
தொடர்ந்து ‘தவழ்ந்தாய் வாழி தாமிரபரணி’ தொடரைப் படித்துவருகிறேன். பொருநையாறு தவழும் அந்த மண்ணைச் சார்ந்தவன் என்ற வகையில், கட்டுரைகள் என்னுள் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகின்றன. பொருநை ஆற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறையுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் நானும் ஒருவன்.
அதுமட்டுமில்லாமல், கங்கை - காவிரி இணைப்பு என்று பேசுவதை நிறுத்தி, கங்கை காவிரி வைகை - தாமிரபரணி இணைத்து, கங்கையின் நீர் குமரியைத் தொட வேண்டும் என்ற கோஷத்தை முன்வைத்தவன் நான்.
எல்லா ஆறுகளும் கடலில் மீன்களையும் தவளைகளையும் கொண்டுசேர்க்கும். ஆனால், பொருநையாறு மணிகளையும் முத்துக்களையும் கொண்டுசேர்க்கிறது.

தண்பொருநைக் கரையில்தான் தமிழுக்கு இலக்கணம் படைத்த அகத்தியரின் மாணாக்கர்களான அதங்கோட்டாசான், தொல்காப்பியர், செம்பூட்சேய், காக்கைப்பாடினியார், நத்தத்தனார், பனம்பாரனார், அவிநாயனார், வாய்ப்பியனார், வாமனார், வையாடிகளார் போன்ற தமிழ் ஆசான்கள் வாழ்ந்துள்ளார்கள். சங்க காலப் புலவர் மாறோக்கந்து நப்பசலையார் மாறமங்கலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். மாறமங்கலம் பின்னர் மாறோக்கம் என்றாகியிருக்கலாம். கொற்கையின் பக்கத்திலுள்ள பன்னம்பரையில்தான் பனம்பாரனார் வாழ்ந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி இந்நதியைப் பற்றிக் கூறும்போது, “திருநெல்வேலி மக்களின் முக்கால்வாசிப் பேரைத் தினம் அதிகாலையில் தாமிபரணி நதியில் குளித்துக்கொண்டிருக்கக் காணலாம். பொழுது விடிந்து சூரியன் உதயமாவதே காலையில் தாமிரபரணியில் ஸ்நானம் செய்வதற்குத்தான் என்பது திருநெல்வேலியாரின் அசையா நம்பிக்கை” என்று குறிப்பிட்டுள்ளார்.

பேரறிஞர் பெ.நா. அப்புசாமி, ‘‘தாமிரபரணி (அல்லது தாம்ரவரணி) திருநெல்வேலி மாவட்டத்தில் ஓடுகிற நதி. அது ஒரு ஜீவ நதி; இரு பருவ மழையுமே அதன் உற்பத்திக்கு மூலம். கோடைக் காலத்திலும், அது சிறிதாக, மெதுவாக மணலும் பாறையுமான படுகையில் பாய்கிறது.

அதன் தலை, காடு அடர்ந்த பொதிகையடி; அகத்திய மாமுனிவரின் மலை; முத்துக்கள் குவிந்துள்ள கொற்கை வரை அது தன் பாதத்தை நீட்டுகிறது. சங்கப் புலவர்கள் #பொதிகையையும் கொற்கையையும் பாடியுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோன்று இன்னும் ஏராளமான அறிஞர்கள் தாமிரபரணியைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.
#தாமிரபரணி
#திருநெல்வேலி
#tirunelveli
#KSRadhaKrishnanpost 
#Ksrpost 
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
04.03.2017

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...