Saturday, December 16, 2017

சி.பி.எம்,தலைவர் பி.இராமமூர்த்தி அவர்களின் 30வது நினைவு தினம் இன்று.


————————————————-
தியாகத் தழும்புகளை சுமந்து வாழ்ந்த செம்படையின்  செம்மல் இவர்.  1979டிசம்பர்4 ல் எங்கள் கோவில்பட்டி சட்ட மன்றஉறுப்பினர் திரு.சோ.அழகிரிசாமி அவர்கள் பாரதியார் குறித்த நூல்களை வாங்க வேண்டும் என்றார். அவரை அப்பொழுது சென்னையின் பிராதன புத்தகக்கடையான ஹிக்கின்பாதம்ஸ் அழைத்து சென்று புத்தகங்களை வாங்கிக் கொண்டு இருந்தோம்.  அந்த சமயத்தில் அங்கு வந்திருந்த பி.இராமமூர்த்தி அவர்களை எனக்கு அழகிரிசாமி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதேக் காலக்கட்டத்தில் தான் தினமணி பத்திரிக்கையில் எனது கட்டுரை "வஞ்சிக்கப்படும்  தமிழகம்" என்ற தலைப்பில் (ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அவர்கள் ஆசிரியராக பொறுப்பில் இருந்த போது )   வெளியானது. அதனைக்  குறிப்பிட்டு, பி.இராமமூர்த்தி "நீங்கள் தானா அதை எழுதியது? நன்றாக இருந்தது" என கூறினர்.  அன்று துவங்கிய அறிமுகம் அவரது இறுதி நாட்கள் வரை தொடர்ந்தது. 

1980களில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தமிழ் நாடு காங்கிரஸ்( காமராஜ்) என 14 கட்சிகள் அணி அமைத்து மூன்றாவது அணியாக  இயங்கின.   அப்போது நெடுமாறன் தலமையில் இயங்கிய தமிழ் நாடு காங்கிரஸ்( காமராஜ்) அலுவலகமானது அரசினர் தோட்டத்தில் இயங்கி வந்தது. திரு.ஏ.நல்லசிவன் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்தார்.  நெடுமாறன் அவர்களுடன் இணைந்து அவ்வலுவகத்தில் பணியாற்றினேன்.  அங்கும் பி.இராமமூர்த்தி வருவார். அவரிடம் பழகும் வாய்ப்பு கிடைத்தது .மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்   திருவல்லிக்கேணி தேரடித் தெருவில் இருந்தது., பின்பு தி.நகர் வைத்தியராம ஐயர் தெருவில் தற்போது உள்ளது.
அதற்க்கு பி.ஆர் பெயர் சூட்டப்பட்டது.
கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் 

 கட்சி மற்றும் தொழிற்சங்கத்தையும் தமிழகத்தில் வழிநடத்திய பி. ராமமூர்த்தி 1952 ஆம் வருடம் சிறையில் அடைக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு கூட செல்ல முடியாமல் மதுரை சிறையிலிருந்து வெற்றி பெற்றார்.  அப்போது தலைமறைவு வாழ்க்கை நடத்திய பி. ராமமூர்த்தி உடல்நலம் கெட்டு இரவில்தான் வெளியே வருவார். 1951ல் இவர் பம்பாய் செல்லும்போது கைது செய்யப்பட்டார். மாறுவேடத்தில் சென்ற இவரை எப்படியோ காவல்துறையினர் பிடித்துவிட்டனர். வழியில் அமலாபுரத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு கொண்டுவரப்பட்டார். அப்போது 1952 தேர்தல் நேரம். மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்கினார் பி. ராமமூர்த்தி. மதுரையில் ஜவுளித் தொழிலாளர் பிரச்சினையிலும், மக்கள் பிரச்சினையிலும் ஈடுபட்டு மக்களிடம் செல்வாக்கை பெற்றார். 1952 தேர்தலில் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் பிரமுகர் சிதம்பர பாரதியை காட்டிலும் 3332 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  பிரச்சாரத்திற்கு கூட போகாமல் சிறையிலிருந்தே வெற்றி பெற்ற இந்தியாவில் முதல் சட்டமன்ற உறுப்பினர்.  

1957ம் ஆண்டு தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தலைமையில் முதல் கம்யூனிஸ்ட் கட்சி அமைச்சரவை கேரளத்தில் அமைந்தது. காமராஜர் ஆட்சி காலத்தில் கேரளத்திலிருந்து அரபிக்கடல் நோக்கிப் பாய்ந்த பரம்பிக்குளம், ஆழியாறு நதிகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி விட வேண்டும் என்பது நீண்ட நெடுநாள் கோரிக்கையாகும். இது குறித்து முதல்வராக இருந்த இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்களிடம் பி.ராமமூர்த்தி பேசினார். இரு பெரும் தலைவர்களின் முயற்சியால் உருவானதுதான் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம். ஆழியாறு பரம்பிக்குளம் நதிகளில் அணை கட்டி நீரை தேக்கி வைத்து, உபரி ல்நீரை தமிழகத்திற்குத் தருவது என்றும் அதற்காகும் செலவுகளை இரு மாநில அரசுகளும் சமமாக ஏற்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் இரு அரசுகளும் செலவினை ஏற்று அணை கட்டப்பட்டது. இதன் மூலம் கோவை, ஈரோடு மாவட் டங்களுக்கு பாசனவசதி கிடைத்தது.  

சென்னை ராஜதானி சட்டமன்ற எதிர்க் கட்சித் தலைவராக தோழர் பி.ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். மொழிவாரி  மாநிலங்கள் அமைக்கப்படவேண்டுமென்று பி.ராமமூர்த்தி தலைமையில் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் தொடர்ந்து சட்டமன்றத்தில் குரல்கொடுத்தனர். 

மாநிலங்களவைக்கும் போட்டியிட்டார். அப்போது ஜனதாகட்சி   முகமது இஸ்மாயில் இவருக்கு வாக்களிக்க மறுத்தார்.  முன்னால் பிரதமர் சந்திரசேகர் ஜனதாக் கட்சியின் தேசிய தலைவர். அவர் கூறினால் தான் பி.இராமமூர்த்திக்கு வாக்களிப்பேன் என்றார்.  அப்போது டெல்லியில் இருந்த நெடுமாறன் சந்திரசேகர் அவர்களை தொலைபேசியில் பேசி தக்கலை முகமது இஸ்மாயில் அவர்களிடம் கொடுக்குமாறு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தை நானும், குமரி முத்துக்கருப்பன் அவர்களும் தக்கலை சென்று முகமது இஸ்மாயில் அவர்களிடம் கொடுத்தோம். 

சென்னை இராஜதானிக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டவேண்டுமென்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர் பி.இராமமூர்த்தி. 

தீர்மானம் நிறைவேறிய நாளில் அவைக்கு செல்ல இயலாத நிலையில் பூவேஷ் குப்தாவைக் கொண்டு வழிமொழிய செய்யப்பட்டது. 

1953ல் நடந்த சம்பவம் ஒன்று. பட்ஜெட், பொருளாதாரம் குறித்து தமிழில் விளக்க முடியுமா என்ற அய்யம் இருந்தது.  1953ம் ஆண்டு பட்ஜெட் விவாதத்தின் போது தோழர் பி.ராமமூர்த்தி ஒரு மணி நேரம் தமிழிலேயே முதன்முறையாக  நுட்பமான பொருளாதார விஷயங்களை எடுத்துரைத்தார். விவாதத்திற்கு பதிலளித்த சி.சுப்பிரமணியம், தமிழில் பொருளாதார பிரச்சனைகளை விளக்கமுடியும் என்பதை ராமமூர்த்தி நிரூபித்துவிட்டார் என்று கூறித்தான் தமது பதிலுரையை துவக்கினார் என வாசித்த நினைவு இருக்கின்றது.   தமிழ்மொழியை ஆட்சிமொழியாக அறிவிக்க கோரி குரல் கொடுத்தார். 1956 டிசம்பர் 27 அன்று தமிழை ஆட்சிமொழியாக்கும் சட்டவடிவத்தை தாக்கல் செய்து முன்மொழிந்தார்  சி.சுப்ரமணியம் . அன்று பி.இராமமூர்த்தி இதுவே என் வாழ்வின் நன்னாள். தமிழர்களின்  திருநாள் என மகிழ்ச்சி பொங்க பேசினார்.  ஆனால் இன்னும் சட்டவடிவமாகவே இருப்பது வேதனை.  

முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவர்களின் மரியாதைக்குரியவர். அரசின் தவறான போக்குகளை நேரடியாகவே சுட்டிக்காட்டும் முக்கிய  தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தார். 

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் பெரம்பூர் கூக்ஸ் ரோடு, சி.ஐ.டி அலுவலகத்தில் பழ.நெடுமாறன் அவர்களுடன் சென்று  அன்னாரின் உடலுக்கு  இறுதிமரியாதை செலுத்தினேன். 

அரசியல் மனமாச்சிர்யங்களுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் போற்றப்பட்ட, நேசிக்கப்பட்ட  நல்லிணக்க நாயகர் ஆவார். 

அன்னாரது பெயரால் டெல்லியில் தொழிற்சங்கம் துவங்கப்பட உள்ளது என்ற செய்தி உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கின்றது. 
#pramamurthi
#cpm
#பிஇராமமூர்த்தி
#30வதுஆண்டுநினைவுநாள் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
15-12-2017

No comments:

Post a Comment

#*LIFE is such a fragile thing*

#*LIFE is such a fragile thing* , a priceless treasure that you are given to guard and make use of to the best of your ability. It will not ...