Saturday, December 30, 2017

கவிஞர் இளையபாரதி வெளியிடும் ‘வேலுப்பிள்ளை பிரபாகரனின், விடுதலைப் போராட்ட வரலாறு’

நண்பர் கவிஞர் இளையபாரதி, தனது வ.உ.சி நூலகம் மூலமாக செம்பூர் ஜெயராஜ் எழுதிய வேலுப்பிள்ளை பிரபாகரனின் விடுதலைப் போராட்ட வரலாறு 1200 பக்கத்திற்கு விரிவான நூலாக விரைவில் வெளியிட இருக்கின்றார். அதற்கான பல தரவுகளையும், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் சகோதரர் பிரபாகரன் அவரது சகாக்களோடு எனக்குள்ள நெருக்கமும், 1980 காலக்கட்டங்களில் நடந்த நிகழ்வுகளையும் குறிப்புகளாக இந்த நூலுக்கு வழங்கியது எனக்கு கிடைத்த பெரும் பேறாக நினைக்கின்றேன்.


இந்த புத்தகத்தின் மாதிரி நகலை படிக்க வாய்ப்பு கிடைத்தது. அற்புதமான உழைப்பு, முழுமையான தரவுகளும், ஆய்வுகளோடு ஈழத்தமிழரின் போராட்டத்தையும் பதிவு செய்துள்ளது. இந்நூல் வீரத் தியாகிகளின் வரலாறோடு மட்டுமல்லாமல் தமிழர்களுடைய ஆற்றல்களையும், தியாகத்தையும் வெளிப்படுத்துகின்றன. அருமைத் தம்பி பிரபாகரனுடைய புரட்சிகரமான இந்த வீரப்போராட்டம் தமிழகத்தை மிரள வைத்தது. இப்படி இன்னொரு போராட்ட வரலாற்றை படைக்க முடியுமா? என்பது என்னைப் போன்றவர்களுக்கு கேள்விக்குறியாக மனதில் அவ்வப்போது எழுகிறது. பிரபாகரன் மற்றும் அவரின் சகாக்களோடு நெருங்கிப் பழகியதால் அவர்களின் ஆற்றல், பண்புகள் போன்றவற்றை நன்கு அறிந்தவன்.

கவிஞர் இளையபாரதி இந்தப் பணியை தவமாகச் செய்துள்ளார். அவரை வாழ்த்திப் பாராட்டவேண்டியது நம் அனைவரின் கடமையாகும். சிலர் நினைப்பது போல இல்லாமல் ஈழப் போராட்டம் ஒவ்வொரு தமிழனின் உணர்வில் கலந்த தியாகத்தின் வடிவமாகும். அதை நூல்வடிவமாக  வ.உ.சி. நூலகம் வெளியிடுவது மகிழ்ச்சிக்குரிய செய்திகளாகும்.

#ஈழப்_போராட்டம்
#வேலுப்பிள்ளை_பிரபாகரன்
#velupillai_prabakaran
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29-12-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...