Wednesday, December 20, 2017

திருப்தி இல்லையெனில் #திருப்பி அழைப்போம் (#RighttoRecall)

Image may contain: 3 people, people smiling
இன்றைய (20/12/2017) தினத் தந்தி நாளிதழில் நான் எழுதிய “திருப்தி இல்லையெனில் திருப்பி அழைப்போம் (Right to Recall)” என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளிவந்துள்ளது. அந்த கட்டுரையின் முழுமையான பகுதிகளை இத்துடன் இணைத்துள்ளேன்.
........................
திருப்தி இல்லையெனில் 
———————————————
இந்தியாவில் முதன்முதலாக, தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளான, எம்.பி., எம்.எல்.ஏ., உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்க குரல் கொடுத்தவர்கள், 1944இல் எம்.என்.ராய் மற்றும் 1974இல் லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆவர். ஜேம்ஸ் மில்,“மக்கள் விரும்பாத மக்கள் பிரதிநிதிகளை ஒதுக்கி வைப்பது நல்லது”என்று கூறுகின்றார்.
தற்போது சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, பிலிப்பைன்ஸ், தைவான், உக்ரைன், வெனிசூலா, போட்ஸ்வானா, தான்சானியா, நமீபியா, மலாவி, ஜாம்பியா, உகான்டா, கயானா, கனடாவில் உள்ள சட்டமன்றங்களில், அமெரிக்காவில் அலாஸ்கா, ஜோர்ஜியா, கன்சாஸ், மின்னசோட்டா, மொன்டானா, ரோட் தீவு மற்றும் வாஷிங்டன் போன்ற மாநிலங்களுடைய உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல உலக நாடுகளில் தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது.
திரும்பி அழைக்கும் முறை முதன்முதலாக 1903ஆம் ஆண்டு அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸில் கடைபிடிக்கப்பட்டது. கனடாவில் சீர்திருத்தக் கட்சி இதை தனிநபர் மசோதா மூலம் துவக்கத்தில் வலியுறுத்தியது. ஜெர்மனி போன்ற நாடுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் திரும்ப அழைப்பது குறித்து நடைமுறைப்படுத்த விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஏன், இந்தியாவில் கூட மத்திய பிரதேசம், சட்டீஸ்கார் போன்ற மாநிலங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமைக்காக சட்டத்தினை 10 ஆண்டுகளுக்கு முன்பே திருத்தப்பட்டது. குஜராத் மாநிலத்திலும் இது பரிசீலனையில் உள்ளது. திரும்ப அழைக்கும் முறையை வலியுறுத்தி வருண் காந்தி தனிநபர் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பிரிட்டனில் மக்களுக்கு திருப்தி அளிக்காத, தவறு செய்யும் பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இது பாராட்டத்தக்கது. நாட்டின் இறையான்மை என்பது அந்நாட்டின் மக்களிடமே உள்ளது. இறையான்மை, பொது வாழ்வின் தூய்மையை பாதுகாக்க வேண்டுமென்றால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் நேர்மையாக தங்களுடைய கடமைகளை ஆற்ற வேண்டும். அப்படி இல்லாமல், தவறு செய்யும் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெறும் உரிமையை வாக்களித்த மக்களுக்கு வழங்க வேண்டுமென 50 ஆண்டுகளுக்கு முன்பே ஐ.நா. அவையின் பொதுச் செயலாளராக இருந்த மியான்மரைச் சார்ந்த உதாண்ட் வலியுறுத்தினார்.
தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையின் மூலம் மக்களுக்கு பல உறுதிமொழிகளை அளிக்கின்றன. இப்படிப்பட்ட பிரகடனங்கள் மக்களுக்கு நல்ல திட்டங்களை நிச்சயம் வகுக்கும் என்ற உறுதியைத் தருவதாகும். நாட்டில் நிலவும் பொருளாதார, அரசியல், சமூகச் சூழ்நிலைகளின் காரணமாக தேர்தல், அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்துவது நடைமுறையில் சற்று கடினம்தான்.
தாங்கள் அளித்த வாக்குறுதிகளைக் கிட்டத்தட்ட 80 சதவீதம் தங்கள் ஆட்சியின் காலத்தில் நடைமுறைப்படுத்தி, மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளைச் செய்வது அரசியல் கட்சிகளின் ஜனநாயக கடமையாகும். அவ்வாறு தேர்தல் காலத்தில் தாங்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையென்றால், தங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றுவதற்குச் சமமாகும்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள், மக்களின் திருப்திக்கு மாறாகவும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளைச் செயல்படுத்தாமல் இருந்தால், ஆட்சியிலிருந்து திரும்ப அழைக்கும் (Right to Recall) உரிமை மக்களுக்கு வழங்க வேண்டும். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது வெறும் மேடை முழக்கமாக மட்டும் இருக்கக் கூடாது.
திரும்ப அழைத்தல் என்ற முறை ஜோன்ஸ் Vs ஹாரியான் (Tex Ch. App. 109 SW - 21 - 251,254 Black Law Dictionary 1989 Edition, Jones Vs Harian) என்ற வழக்கிலிருந்து உருவகப்படுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள், தவறாக அதிகாரத்தைப் பயன்படுத்துதல், லஞ்சம் வாங்குவது, உறவினர்களுக்குச் சலுகைகள் (Nepotism) போன்ற ஜனநாயக விரோதச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் திரும்ப அழைத்தல் கோட்பாடு ஒரு ஜனநாயக நாட்டில் செயல்படுத்த வேண்டியது அவசியமாகிறது.
ஒரு குறிப்பிட்ட தொகுதி நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் பணி, நடவடிக்கைகள் தொகுதி மக்களுக்கு திருப்தி அளிக்காமலிருந்தால் அவரை திரும்ப அழைக்கும் உரிமையை, அக்குறிப்பிட்ட தொகுதி மக்களுக்கு வழங்க வேண்டும். தேர்தலில் வெற்றி பெற்று ஐந்து வருட காலம் ஜனநாயக விதிமுறைகளுக்கு மாறாக, தான்தோன்றித்தனமாக ஆள முற்படுபவர்களுக்கு திரும்ப அழைக்கும் முறை ஒரு தடையாக அமையும். அரசியல் அறிவியலின்படி சமன்பாடுகளும் தடைகளும் நேர்மையான நல்ல நிர்வாகத்தை (Checks and Balances) நடத்த அவசிய காரணிகளாகும்.
சோவியத் அரசியல் சட்டத்தில் (1936) அரசியல் சாசனப் பிரிவு 106இல் இந்தக் கொள்கைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, தாங்கள் ஆற்ற வேண்டிய பணிகளையும், தங்களுடைய அரசியல் தன்மையையும், தங்களுடைய தொகுதி மக்களுக்கு கண்காணிக்க உரிமையுள்ளது என கூறப்பட்டது. அவ்வாறு தவறினால், தங்களை திரும்ப அழைக்கும் உரிமை தங்களைத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு உண்டு என்று தெரிவிக்கப்பட்டது. சோவியத் நாட்டில் இவ்வாறு மக்கள் பணியில் தவறிய உறுப்பினர்கள் பல்வேறு சமயங்களில் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கிருஷ்ணய்யர் கூறியுள்ளார்.
இந்தக் கொள்கை பாராட்டுக்குரிய தன்மை கொண்டுள்ளதாகும். ஆனால், இன்றைக்கு சோவியத் நாடு சிதறுண்டு இருக்கிறது என்பது வேறு விவகாரம்.

திரும்ப அழைக்கும் முறையைக் கொண்டு வருவதில் நடைமுறைச் சிக்கல்கள் இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்த வேண்டிய வழி முறைகளை பல்வேறு தரப்பினர்களை அணுகி, ஆலோசனைகளைப் பெற்று, இந்தக் கோட்பாட்டை நெறிப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு வரலாம். இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பல்வேறு தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் நடைமுறைப் படுத்துவது எளிதல்ல என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனாலும் இதுகுறித்தான ஒரு ஆரோக்கியமான விவாதங்கள் இந்தியாவில் நடப்பது வரவேற்கத் தக்கதாகும்.
நீதித்துறையிலும் ஊழலென்று தினமும் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணமிருக்கின்றன. நீதி, நிர்வாக, ஆட்சி மன்றங்களில் பங்கேற்கும், மக்களின் பல்வேறு பிரதிநிதிகள் நேர்மையாக தங்களுடைய ஜனநாயகப் பணிகளைச் செவ்வனே செய்ய ஒழுங்குப்படுத்துவதே திரும்ப அழைத்தல் கோட்பாடாகும். இதனால் அரசியலிலும், பொது வாழ்விலும் தூய்மை ஏற்படும்.
திரும்ப அழைக்கும் கொள்கை, நடைமுறைக்கு வந்தால் நாடாளுமன்ற ஜனநாயகம் தூய்மை பெறும். மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகளை மக்களின் பிரதிநிதிகள் செம்மையாக ஆற்றுவர். நாடாளுமன்றமும், சட்டமன்றங்களும் சரியாக செயல்படுவதுமில்லை.
திரும்பி அழைக்கும் முறையில் பல சிக்கல்கள் உள்ளன. வெற்றி பெற்றுச் சென்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களுக்குத் திருப்தியாகச் செயல்படவில்லை எனில் மக்களே மனுக்களைக் கொடுத்து முறையாகத் திரும்ப அழைப்பதாகும். மக்கள் பிரதிநிதிகள் செய்யும் தவறுகளை சரி செய்து திருத்துவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக இன்று நம்மிடையே உள்ளது.
இப்படியான புரையோடிய நிலையில் நம் அமைப்புளில் சீர்திருத்தங்களை முன்னெடுக்க சில விவாதங்களும் நடத்த வேண்டும். அந்த வகையில் அரசியலில் நேர்மை, பொது வாழ்க்கையில் என்ற இலக்கை அடைய திரும்பி அழைக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இந்த நிலையில், 1970 காலக்கட்டங்களின் பலரையும் கவர்ந்த புதிய கவிதைகள், புதினங்களையும் படைத்த திரு. சுப்பிரமணியராஜீ தமது கவிதையில்,
“வாயைக் கழுவ தண்ணீரைப் பார்த்தால்
தண்ணீரே அசுத்தமாக உள்ளது”
என்று கூறிய கருத்துதான் நினைவுக்கு வருகிறது. ஆம்! இங்கே எல்லா அமைப்புகளையும் சுத்தப்படுத்த வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது. அந்த சுத்தப்படுத்துவதன் ஒரு கூறு தான் மக்கள் பிரதிநிதிகளை திரும்ப அழைப்பது.

செய்தித் தொடர்பாளர், திமுக.
இணையாசிரியர், கதைசொல்லி,
நிறுவனர், பொதிகை - பொருநை கரிசல்,
rkkurunji@gmail.com

K S Radhakrishnan
*கே.எஸ். இராதாகிருஷ்ணன்.*
20-12-2017

No comments:

Post a Comment

Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show up late.

  Life is like a party, many people will come, some leave early, some stay all night, some laugh with you, some laugh at you and some show u...