Sunday, December 10, 2017

இதழாசிரியரின் இலக்கணமாக திகழும் கல்கி ராஜேந்திரன்

இன்று கல்கி ஆசிரியராக இருந்த ‘கல்கி’ இராஜேந்திரன் அவர்களை 7 ஆண்டுகளுக்கு பின் அவருடைய அடையாறு இல்லத்தில் ‘கல்கி’ ப்ரியனோடு சந்தித்து பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இவர் கல்கியின் (கிருஷ்ணமூர்த்தி) புதல்வர். வயது 80ஐ தாண்டிவிட்டது. 
இன்றும் காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி, பத்திரிக்கைகள் வாசிப்பு, நேரத்துக்கு உணவு என்று காலந்தவறாமல் தன் பணிகளை தொடர்ந்து கவனமாக கடைபிடிப்பவர்.
எனக்கும் இவருக்கும் 1982லிருந்து நல்ல தொடர்பும் பரிச்சயமும் உண்டு. ஈழத் தமிழர்கள் பிரச்சனையின் போது அதை குறித்து அறியவும் அப்போது என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். ஆரம்பத்தில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள லேக் வியூ தெருவில் குடியிருந்தார். இவரிடம் பழ. நெடுமாறன், ஈழத் தமிழர் தலைவர் அமிர்தலிங்கம், பிரபாகரன், விவசாயிகளின் சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த கிருஷ்ணசாமி ரெட்டியார், இரத்தினவேல் பாண்டியன், சத்தியதேவ் ஆகியோர்களை எல்லாம் அழைத்து சென்று 1983 காலக்கட்டங்களில் சந்தித்ததுண்டு. இப்படியான தொடர்புகள் அவரோடு இன்று வரை நீடிக்கின்றது. 1980,90 களில் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிடும் போது வாழ்த்தி என்னை வழியனுப்புவது அவருடைய வாடிக்கையாகும். என் மீதான அன்பும் பாசமும் இன்றுவரை நீடிக்கின்றது. பார்க்கும் போதெல்லாம் என்ன உங்களுக்கான வாய்ப்புகள் நழுவிப்போகின்றன. என்ன காரணம் என்று அக்கறையோடு கேட்பதும் அவருடைய வழக்கம். கல்கி இதழை கல்கி நடத்தி பின் சதாசிவம் ஆசிரியராக இருந்து பின் இவருடைய கைகளுக்கு கல்கியின் ஆசிரியர் பொறுப்பு வந்தது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக அந்த பொறுப்பிலிருந்தார். 2002 வரை அந்த பொறுப்பில் இருந்து பின்னர் ஓய்வு பெற்று அமைதியான சூழலில் வாழ்ந்து வருகிறார். என்னுடைய, வைகோ நூல்களின் வெளியீட்டு விழாவிற்கு அழைத்தவுடன் மகிழ்ச்சியோடு கலந்து கொண்டவர். 

இன்றைக்கு அவரை சந்திக்கும் போது பலவிதமான பிரச்சனைகளை குறித்து பேசிக்கொண்டிருந்தோம். அவர் அரசியல் சூழலே மாறிவிட்டது. ஆரோக்கியமற்ற முறையில் அரசியல் இருக்கிறது என்ற கவலையை வெளிப்படுத்தினார். ப்ரியன், ‘சார். தங்களின் தலையங்கள் எல்லாம் தொகுத்து வெளியிட்டால் சமகால (அதாவது 40 ஆண்டுகால) அரசியல் வரலாற்றை அறிய உதவியாக இருக்குமே’ என்று வினாவிய போது, சரி பார்ப்போமென்று தலையாட்டினார்.

என்னிடம், ‘கலைஞர் எப்படி இருக்கின்றார்?. ஸ்டாலின் சுற்றுப்பயணம் தொடர்ந்து செய்கின்றாரே. வைகோ எப்படி இருக்கின்றார்?’ என்றெல்லாம் விசாரித்தார். தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய கல்கி தலையங்கத்தை எடுத்து முரசொலியில் வெளியிட்டதையெல்லாம் நினைவாக சொன்னது அவருடைய நினைவாற்றலை கண்டு அடியேனை மெய்மறக்க செய்தது.

இப்படி பல விசயங்கள். ஏன் தமிழ்நாட்டில் மேலவை அமையவில்லை என்று சொன்னபோது, ‘எம்.ஜி.ஆர் நடிகை நிர்மலாவுக்காக மேலவையை ஒழித்தது ஏற்றுக் கொள்ள முடியாது’ என்றும், அற்புதமான ஜாம்பவான்கள் அந்த அவையில் அமர்ந்து விவாதங்கள் நடத்தியதெல்லாம் அவர் குறிப்பிட்டு பேசியபோது, ‘நம்முடைய ஜனநாயக அமைப்புகளை எப்படி குழி தோண்டி புதைத்துவிட்டோம்’ என்ற வேதனை குரல்தான் அவருடைய பேச்சில் எனக்கு தோன்றியது.

நான் உடனே, “தமிழகத்தில் மேலவை முடங்கி 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. தி.மு.க. ஆட்சியில் மூன்று தடவை மேலவை அமைக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டும் பயனில்லாமல் போய்விட்டது. இது குறித்து நான் 2000இல் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கும் தொடுத்தேன். (WP No. 4399/2000). 

தற்போது சில மாநிலங்களில் மேலவை தேர்தல்கள் நடக்கிறது. மேலவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் செலவை இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயிக்க இருக்கின்றது. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் வகையில், மேலவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் செலவு உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் என சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் கருப்பு பண புழக்கத்தை தடுக்க, வேட்பாளர்களின் செலவுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு அவற்றை தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. ஜம்மு காஷ்மீர், ஆந்திரா, பீகார், உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கான போன்ற மாநிலங்களில் சட்டமேலவையும் உள்ளது. மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளாலும், அடுத்த மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் சட்டப்பேரவை பிரநிதிகளாலும், 12ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் அந்த மாநிலத்தில் உள்ள பட்டதாரிகளாலும், இன்னொரு 12ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் அந்த மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களாலும், மீதமுள்ள உறுப்பனிர்கள் ஆளுநராலும் நியமனம் செய்யப்படுகின்றனர். தற்போது மேலவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக் கணக்கில் உச்சவரம்பு இல்லை. கருப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், மேலவை உறுப்பினர்களின் தேர்தல் செலவுக்கும் உச்சவரம்பு நிர்ணயிக்க வேண்டும் எனவும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு உச்சவரம்பில், பாதி தொகையை மேலவை உறுப்பினர்களின் தேர்தல் செலவுக்கு உச்சவரம்பாக நிர்ணயிக்கலாம் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இதற்கு பதிலளித்த சட்ட அமைச்சகம், இது தொடர்பாக மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் மேலவைகளின் கருத்துக்களை கேட்க வேண்டுமென கூறியுள்ளது.” என மேலவை குறித்தான எனது வழக்கு விவரங்களையும், வரலாற்றையும் சொல்லும்போது, கல்கி ராஜேந்திரன் அவர்கள், ‘இவ்வளவு முயன்றுள்ளீர்கள். இதை குறித்தான வரலாற்றையும் தங்களின் முயற்சியை எத்தனை பேர் அறிவார்கள் என்பது சொல்லமுடியாது. ஆனால் பிக்பாஸ் போன்ற கதைகளை பேசுவார்கள். என்ன செய்ய.’’ என்றார்.

‘உங்களைப் போன்றவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகளாக ஆக முடியாது. சமூக விரோதிகள் தான் பெரிய பொறுப்புக்கு காசு கொடுத்து தேர்தலில் வந்துவிடுகிறார்கள்’ என்று சொன்னார். நான் உடனே எப்போதும் சொல்வதை போல, ‘தகுதியே தடையாக உள்ளது.’ என்று பதிலளித்தேன். 

ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்ய கல்கி அவர்கள் அன்றை பேரவைத் தலைவர் சிவசண்முகப்பிள்ளையோடு எங்களின் கிராமத்தின் அருகேயுள்ள சங்கரன்கோவில் சங்கரநாரயணன் திருக்கோவிலுக்கும், கழுகுமலையில் கழுகாசனமூர்த்தி - முருகன் திருக்கோவிலுக்கும் வந்தபோதெல்லாம் என்னுடைய தந்தையார், சீனிவாச நாயக்கர், இராமானுஜ நாயக்கர், ஊர் காவலன், அமராவதி நாடார், எனது பெரியப்பா இராமகிருஷ்ணன் உடனிருந்து கல்கியை உபசரித்ததெல்லாம் திரும்பவும் ஒருமுறை நினைவுப்படுத்தும் போது, ‘நீங்கள் இது குறித்து ஏற்கனவே சொல்லியுள்ளீர்கள்’ என்றார்.

எட்டயபுரத்தில் பாரதி மண்டபம் அமைத்த கல்கிக்கு அந்த மண்டபத்தில் சிலையமைக்க வேண்டுமென்று 1980களில் திரு. கல்கி ராஜேந்திரன் அவர்கள் தமிழக அரசிடம் முறையிட்டபோது செவிடன் காதில் ஊதிய சங்கு போலாகிவிட்டது. அந்த சம்பவங்கள் எல்லாம் ப்ரியனும் நானும் நன்கறிவோம்.

பாரதி, ரசிகமணி டி.கே.சி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரை குறித்தெல்லாம் பல நினைவுகளை பகிர்ந்துவிட்டு மனதிற்கு மகிழ்வேற்படும் வகையில் அவரிடம் சென்று வருகிறோமென்று புறப்பட்டோம். 

*                           *                     *                      *

திரும்பும் போது என்னுடன் வந்த ப்ரியன், ‘சார். இன்னொரு விசயம் தெரியுமா. ஜெயலலிதா 1980களில் தமிழ் இதழுக்கு நீண்ட பேட்டி கொடுத்ததே எங்களுக்கு தான் சார். அப்போது ராஜேந்திரன் சாரும் இருந்தாரே. அவர் இருந்ததனால் அந்த பேட்டியும் சுமூகமாக இருந்தது’ என்று நினைவுபடுத்தி அவர் கூறியது;

ப்ரியன், “நீங்கள் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்யும்போது கலெக்டரே உங்கள் கார் கதவை திறந்து விடுகிறாராமே!"

இப்படி நான் அதிரடியாக கேட்டவுடன் என்னை கடுமையாகப் பார்த்தார் ஜெயலலலிதா, "யார் சொன்னார்கள்?".

இதற்குள் என் ஆசிரியர் "கல்கி" ராஜேந்திரன் குறுக்கே புகுந்து, "சில பத்திரிகைகளில் வந்ததைத்தான் கேட்கிறார்" என்று சூழலை சுமூகமாக்கினார்.
"அது அடிப்படையில்லாத கற்பனைச்  செய்தி" என்று தனது பதிலை பதிவுசெய்தார் ஜெ.

அது 1984 செப்டம்பர். மூன்று மணிநேரம் நடந்த அந்த நேர்க்காணல் "I am a fighter" என்ற தலைப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஜெ அதிமுகவின் கொ.ப.செ. மட்டுமல்ல; மாநிலங்களவை உறுப்பினரும் கூட.

அந்தப் ஆறு பக்கப்  பேட்டி சிறந்த முறையில் வெளிவர வேண்டும் என்று தனி கவனம் எடுத்துக் கொண்டார்ஜெயலலிதா. பதிவு செய்த பதில்களில் ஆசிரியரே சலிப்புறும் வகையில் பல திருத்தங்களைச் சொன்னார். அதில் ஒன்று நன்றாக நினைவிலிருக்கிறது. பல அரசியல் கேள்விகளுக்குப் பிறகு 
"கோவிலுக்கு போவீர்களா?" என்ற கேள்வியை வைத்தோம்.

"ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பதே என் கொள்கை" என்றவர் "நானாக கோவிலுக்கு போக மாட்டேன்" என்றும் பதில் சொல்லியிருந்தார். பின்னர் பேட்டி அச்சுக்கு போவதற்கு ஒரு மணி நேரம் முன்பு  தொடர்பு கொண்டு "ஸார்...அந்த பதிலில் கூடுதலாக " "மற்றவர்கள் கோவிலுக்குப்  போவதை குறை கூற மாட்டேன்; வாழு; வாழவிடு" என்பதுதான் என் கொள்கை" என்று சேர்த்து விடுங்கள்" என்றார்.(பின்னர் வந்த காலகட்டங்களில் தீவிர பக்தராகி பல கோவில்களுக்கு அவர் சென்றதை நாம் பார்த்தோம்)

1997 ஜனவரி மாதம் முதல் வாரம்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி ஜாமினில் வீட்டிற்கு திரும்பிய நேரம்.இப்போது போல அதிக மீடியாக்கள் இல்லாத காலகட்டம். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்த பிறகு "எக்ஸ்குளூஸிவ் பேட்டி" என்று அவரிடம் கேட்க "நிச்சயமா... என் சிறை அனுபவங்களை உங்களுக்குச் சொல்கிறேன்; தொடர்பு கொள்ளுங்கள்"என்றார்( ஆனால் பல முறை தொடர்பு கொண்டும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை)

1999. ஆகஸ்ட் மாதம்.
பாராளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பிரச்சாரம். சிதம்பரம் நகரத்தில் துவங்கி கொள்ளிடம், ஆக்கூர்,  திருக்கடையூர், தரங்கம்பாடி கோட்டுச்சேரி, காரைக்கால்  நாகப்பட்டிணம் என்று அவரை பின் தொடர்ந்தேன். திருவாரூரில் தங்கியவருடன் மறுநாள் பிரச்சாரத்துக்கு கிளம்பும் முன் செங்கோட்டையன் முயற்சியால் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து.பிரசுரத்துக்கு என்று அல்லாமல் சில நிமிடங்கள் பேசியவர் " ஸார்  பிஜெபி ஒரு தீய சக்தி; இனிமேல் அதனுடன் கூட்டணி வைக்கவே மாட்டேன்.இதை நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்" என்றார்.
அது தான் அவரை கடைசியாகப்பார்த்தது.

1998-2002 காலகட்டத்தில் அவரது அரசியல் செயல்பாடுகளை விமர்சனம் செய்து பல கடுமையான் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவைகளில் 

"திருமதி 356" "மேடம் மேக்கியவல்லி" "டான்ஸி ராணி" ஆகிய கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை. 

2002 காலகட்டத்தில் பேட்டிக்கு முயற்சி செய்த போது "ஸாரி ஸார் ..டான்ஸி என்றெல்லாம் கட்டுரை எழுதறவங்களுக்கு எப்படி பேட்டி கொடுக்கறது" என்று அம்மா கேக்கறாங்க" என்பதே தோட்டத்திலிருந்து வந்த பதிலாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக "புதிய வீராணம்; பழைய ஊழல்" என்ற கட்டுரை எழுதியதற்காக அவதூறு வழக்கும் போடப்பட்டது.

தனது ஊகிக்க முடியாத அரசியல் செயல்பாடுகள் மூலம் பத்திரிகையாளர்களுக்கு மட்டுமல்லால் தமிழக மக்களுக்குமே ஒரு புதிராக விளங்கினார் ஜெ என்பதில் சந்தேகமில்லை. ஏராளமான எதிர்மறை விமர்சனங்களுக்கு உள்ளான போதிலும்  இன்னமும் ஒரு பெருங்கூட்டம் அவரைப் போற்றி புகழ்ந்துவரும் நிதர்சனம் தமிழக அரசியல் வரலாற்றில் விசித்திரமான நிகழ்வு” என்று அவர் குறிப்பிட்டார்.

#கல்கி
#கல்கி_இராஜேந்திரன்
#தமிழக_மேலவை
#தமிழக_அரசியல்
#தமிழக_ஆலயப்பிரவேசம்
#சிவசண்முகம்பிள்ளை
#ஜெயலலிதாவின்_கல்கி_பேட்டி
#kalki
#kalki_rajendran
#tamil_nadu_legislative_counil
#Jayalalitha
#Sivashanmugam_pillai
#temple_entry
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
09.12.2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...