#நாடாளுமன்ற_உறுப்பினர்களுக்கு #1993ல்தொகுதி_மேம்பாட்டு_நிதி_
#அவசரமாக_ஏன்_உருவாக்கப்பட்டது_2
#அப்பொழது_என்ன_நிகழ்ந்தது....
————————————————-
மத்திய அமைச்சரவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய சம்பளத்தில் 30 சதவிகிதமும் இரண்டு ஆண்டுகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கீடும் நிறுத்தப்படுகிறது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
*குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்களின் ஊதியம் 30 சதவீதம் குறைப்பு.*
*பிரதமர், மத்திய அமைச்சர்கள் ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.*
*அனைத்து எம்.பி-க்களின் ஓராண்டு ஊதியமும் 30 சதவீதம் குறைப்பு.*
*ஊதிய குறைப்பால் சேமிக்கப்படும் நிதி கொரோனா நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.*
*மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு - அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்தது.*
*எம்.பி-க்களின் தொகுதி மேம்பாட்டு நிதி இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பு.*
நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி (MPLAD)என்பது டிச 23,1993ல் திரு. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது ஒரே நாளில் முடிவெடுத்து 8 மணி நேரத்தில் நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி அறிவிப்பு நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட முடிவு. ஒரு கொள்கை முடிவு எடுப்பதற்கு பல மாதங்கள் எடுக்கும். அந்த கட்டத்தில் நரசிம்மராவ் ஆட்சி கவிழாமல் இருக்க ஜெ எம் எம் கட்சிக்கு லஞ்சம் கொடுத்ததாக வழக்கு எல்லாம் நடந்தது. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் எட்டுமணி நேரத்தில் அனைத்து அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அவசர அவசரமாக நாடாளுமன்ற ஒப்புதல்களும் பெறப்பட்டு நாடாளுமன்றத்தில் உடனே அறிவிக்கப்பட்டது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இத்தனை குறுகிய காலத்தில் அறிவிப்புகள் செய்தது கிடையாது. அந்த நேரத்தில் நரசிம்மராவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கம் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருந்தபடியால் அந்த அவசர அறிவிப்பை வெளியிட வேண்டியிருந்தது.
ஒரே நாளில் முடிவெடுத்து 8 மணி நேரத்திற்குள் இந்திய வரலாற்றில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர். இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட அன்றே முன்னாள் பிரதமர் சந்திரசேகரும் சோம்நாத் சாட்டர்ஜி (முன்னாள் மக்களவை தலைவர்) இந்திர ஜித் குப்தா போன்றோர்கள் உடனடியாக குறுக்கிட்டு கடுமையாக எதிர்த்தார்கள். இரா.செழியன் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தார். இது குறித்தான விரிவான நூலையும் அவர் எழுதியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வெங்கட்ராமய்யா இதற்கு அரசியல் சட்டத்தில் வழியில்லை என்றும் இது தேவையற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வீரப்ப மொய்லி தலைமையில் அமைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்த ஆணையமும் இதை திரும்பப்பெற வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டதை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் இருந்த தேசிய ஆலோசனை கவுன்சிலும் பரிசீலித்து ஏற்கவும் செய்தது. இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் கூட தனது அறிக்கைகளில் பல சமயங்களில் குறிப்பாக 1998-2001-ல் இத்திட்டம் மக்களுக்கு சரியாக செல்லவில்லை என்பதையும் இடையில் பல தவறுகள் நடக்கின்றது என்றும் சுட்டிக் காட்டியிருந்தார்.
நான் உறுப்பினராக உள்ள Common Cause என்ற உலகறிந்த டெல்லியில் இருந்து இயங்கும் அமைப்பும் இது தேவையற்றது என்றும் இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தது. இந்த அமைப்பு பல்வேறு வழக்குகளை மக்கள் பிரச்சினைக்காக உச்சநீதிமன்றத்தில் தொடுத்து வாதாடி மக்களுக்கான தீர்ப்புகள் கிடைக்க வழி செய்த ஒரு சமூக அமைப்பாகும். இத்திட்டம் அறிவித்ததன் காரணம் நரசிம்மராவின் அரசை பலப்படுத்திக் கொள்வது தான் அன்றைய நோக்கமாக இருந்தது. இத்திட்டம் அவசியமற்றது என்று பணங்கள் வீணாகும் என்று வி.பி. சிங் மற்றும் பொதுவெளியில் உள்ள அறிஞர்கள், நிபுணர்கள்,, பொருளாதார சிந்தனையாளர்கள் எல்லாம் வெளிப்படுத்தியதுண்டு.
நாடாளுமன்ற உறுப்பினருடைய ஊதியம் படிகள் போன்றவை குறைக்கப்படுவதில் எந்த பிரச்சினையும் இல்லை. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்களும், வசதியானவர்களும் தான். மக்கள் பிரதிநிதிகள் என்பது ஊதியம் வாங்கும் பணியல்ல. இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 266க்கு மேல் கிட்டத்தட்ட இரண்டு அவைகளிலும் 300 பேரைத் தாண்டும். 2 கோடிக்கு குறைவான சொத்துள்ளவர்கள் வெறும் 7 சதவிகிதம் மட்டுமே என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரா. செழியனும் பிரபல கருத்தாளர் சூரிய பிரகாஷும் எழுதிய தங்கள் நூல்களில் நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி தொகுதியில் நடக்கும் தவறுகள் ஊழல்கள் பற்றி விரிவாக படம் பிடித்து காட்டியுள்ளனர்.
இது குறித்து தினமணியில் வெளியான என்னுடைய பத்தி:
https://ksradhakrishnan-ksrblogs.blogspot.com/2007/10/blog-post.html
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
07.04.2020
#ksrposts
No comments:
Post a Comment