தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியைச் சீண்டிப் பார்க்கும் இயற்கை.
இயற்கையின் எழிலையும் பிரிவின் துயரத்தையும் அழகாக நயமாக எடுத்துரைக்கும் பாடல்கள்.
நம் தலைமுறையினர் இதுபோன்ற இயற்கை எழிலை நாம் நம்முடைய பதின் பருவத்திலும் இளமைப் பருவத்திலுமாவது அனுபவித்து வாழ்ந்திருக்கிறோம். கற்பனையில் இப்பாடல்களின் பொருளை காட்சிகளாக்கி சிலாகிக்க முடிகிறது.
ஆனால்... இன்றைய தலைமுறையினர் இவைபோன்ற பாடல்களை வாசித்து நுகரும்போது கற்பனையில் எண்ணிப்பார்க்கக் கூட இதுபோன்ற இயற்கை வளம் தற்போது இல்லை.
***
கார் காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிப் பிரிந்து சென்ற தலைவன் இன்னும் வந்து சேரவில்லை. ஆனால் கார் காலமோ வந்து விட்டது. மழை பெய்து முல்லைக் கொடியும் செழித்து விட்டது. அரும்புகள் பல தோன்றி விட்டன. அந்த அரும்புகள் கார் காலத்தின் வெண்ணிறப் பற்கள் போலவும், கார் காலம் அப் பற்களைக் காட்டித் தலைவியை நோக்கி நகைப்பது போலவும் தோன்றுகின்றன. "சொன்ன சொல் தவறாமல் தலைவன் மீள்வானென்று நீ இன்னும் நம்புகிறாயே, பேதை !!" என்று கார் காலம் தன்னை நோக்கி நகுவது போல் தலைவி உணர்கிறாள்;
பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
தொகுமுகை இலங்கெயி றாக
நகுமே நறுந்தண் காரே (குறுந்தொகை-126)
தலைவி அந்த முல்லைக் கொடியை நோக்குகிறாள். தனக்கு இன்பம் தந்து வந்த பொருள்களெல்லாம் இப்போது துன்பம் தருவதாக உணர்கிறாள். முல்லைக் கொடியும் தனக்குத் துன்பம் செய்வதாகக் கருதுகிறாள். தன்னைப் பார்த்து எள்ளி நகையாடுவதாக எண்ணுகிறாள். "முல்லைக் கொடியே !! நீ வாழ்க. உன் சிறு சிறு வெண்ணிற அரும்புகளால் என்னைப் பார்த்துப் புன்முறுவல் கொண்டு நகைப்பது போல் காட்டுகிறாய். கணவனைப் பிரிந்து தனித்திருந்து வருந்தும் என் போன்றவரிடத்தில் நீ இவ்வாறு செய்வது தகுமோ?" என்கிறாள்;
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே (குறுந்தொகை-162)
பருவ மழை தொடங்கி விட்டதைக் கண்டும், அதனால் மயில்கள் மகிழ்ந்து ஆடுவதைக் கண்டும், கொன்றை முதலான மலர்கள் மலர்ந்து விளங்குவதைக் கண்டும், கார் காலம் வந்தும் தலைவனுடைய தேர் வருகின்றதெனச் சொல்வாரில்லையேயென்று தலைவி வருந்துகிறாள்;
பொழுதோ தான்வந் தன்றே
மாலை நனிவிருந் தயர்மார்
தேர்வரும் என்னும் உரைவா ராதே (குறுந்தொகை-155)
அவளுடைய துயரத்தை அறிந்த தோழி, அவளை ஆற்றுவிக்கக் கருதி, "கார் காலம் வந்து விட்டதென்று தவறாக எண்ணி நீ வருந்துகிறாய். இது கார் காலமன்று" என்கிறாள். "மயில்கள் ஆடுவதைக் கண்டு கார் வந்து விட்டதென்று வருந்துகிறாய். மயில்கள் அறிவில்லாதவை. பருவ மழை பெய்து விட்டதென்று அறியாமையால் மயங்கி ஆடுகின்றன. பிடவம் பூக்களும் அவ்வாறே மயங்கிப் பூக்கின்றன. ஆயினும் சொல்கிறேன் தோழி !! இது கார் அன்று. உன் துயரம் ஒழிக. பழைய மழை தன் நீர் முழுவதும் பொழியாமல் சிறிது நீர் எஞ்சியிருந்தது. அந்தப் பழைய நீரை முற்றிலும் சொரிந்த பிறகு தானே கடலிற் சென்று புது நீரை முகந்து வர வேண்டும்? அவ்வாறு சொரிந்த பழைய நீரைக் காரென்று மயங்கக் கூடாது. இடியும் இடிக்கின்றதேயென்று கேட்பாய். மழை நம்மிடம் அன்பில்லாதது. ஆதலால் நம்மைத் துன்புறுத்த வேண்டுமென்று முழக்கம் செய்கிறது. அந்த முழக்கத்தைக் கேட்டு, மயங்கி அறிவில்லாத மயில்கள் ஆடுகின்றன. அவ்வளவு தான் உண்மை" என்கிறாள்;
மடவ வாழி மஞ்ஞை மாயினம்
கால மாரி பெய்தென அதனெதிர்
ஆலலும் ஆலின ; பிடவும் பூத்தன
காரன்று இகுளை! தீர்கநின் படரே
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
புதுநீர் கொளீஇய உகுத்தரும்
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே (குறுந்தொகை-251)
"பெரிய கொன்றை மரங்களும் அறிவில்லாதவை. நம்மைப் பிரிந்து சென்ற தலைவர் கூறிய பருவம் வருவதற்கு முன்னமே கிளைகளில் கொத்துக் கொத்தாக மலர்ந்து விட்டன. இடைக் காலத்தில் பெய்து விட்டுச் செல்லும் வம்ப மழையைப் பருவ மழையாகிய காரென்றெண்ணி மலர்ந்து விட்டன. இதைக் கண்டு நீ வருந்தாதே;"
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை
கொம்புசேர் கொடியிணர் ஊழ்த்த
வம்ப மாரியைக் காரென மதித்தே (குறுந்தொகை-66)
"அவர் வருவதாகக் கூறித் தெளிவித்த பருவம் இது தானேயென்று கேட்கிறாய். அறிவில்லாமல் உரிய காலத்தை மறந்து கடலிடம் சென்று நீரை முகந்து கொண்டு வந்த கரிய மேகம் நீரைப் பொறுத்திருக்க முடியாமல் கொட்டி விட்ட மழையிது. இது காரென்று மயங்கிய உள்ளத்தால் ஆராய்ந்து பார்க்காமல் பிடவமும், கொன்றையும், காந்தளும் பலவாக மலர்ந்து விட்டன, அறிவில்லாதவை ஆகையால்;"
தாம்வரத் தெளித்த பருவம் காண்வர
இதுவோ என்றிசின் மடந்தை ; மதியின்று
மறந்துகடல் முகந்த கமஞ்சூல் மாமழை
பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்
கார் என்று அயர்த்த உள்ளமொடு தேர்வில்
பிடவமும் கொன்றையும் கோடலும்
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே (நற்றிணை-99)
கண்ணெதிரே கார் காலத்தின் பல அறிகுறிகளையும் காண்கிறாள். அதனால் “கார் அன்று !! கார் அன்று !!” எனத் தோழி பல முறை எடுத்துச் சொல்லி வற்புறுத்துவது கேட்டுச் சலிப்படைகிறாள். "பொன் காசுகளைப் போன்ற பூக்களையீன்ற கொன்றையைக் காண்கிறேன். குருந்த மலர்கள் மலர்ந்து அசைவதையும் காண்கிறேன். மிக்கக் குளிர்ச்சி பெற்ற இந்தக் காலம் கார் காலமன்றென நீ சொல்வாயானால், நான் காண்பதெல்லாம் கனவு தானாவென்று கேட்கிறேன்" என்கிறாள்;
காசின் அன்ன போதுஈன் கொன்றை
குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
கார்அன்று என்றி யாயின்
கனவோ மற்றிது வினவுவல் யானே (குறுந்தொகை-148)
பிற்குறிப்பு:
மேலிருப்பவை தமிழறிஞர் மு வரதராசனார் அவர்களின் "முல்லைத் திணை" என்னும் நூலினொரு பகுதியாகும். சங்க கால மக்களின் வாழ்க்கை எவ்வளவு அழகாக, இயற்கையோடு பின்னிப் பிணைந்திருந்துள்ளது. தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியானவள் தன் பிரிவுத் துயரத்தைத் தன்னை வருத்தும் மலர்களிலும், மயில்களிலும், மழையிலும் கொட்டித், திட்டித் தீர்க்கிறாள். எம் வாழ்க்கையில் பல விதமான தொலைத் தொடர்பு வசதிகள் வந்து காதலிலும், பிரிவிலுமுள்ள அழகியலை நிரந்தரமாக அழித்து விட்டன.
Main photo:
ஓவியம் (ஓவியர்: மணியம் செல்வன், ம.செ., Maniam Selvan, Ma Se).
#SangamPeriod #SangamLiterature #சங்ககாலம் #Kuruntokai #குறுந்தொகை #MullaiThinai #முல்லைத்திணை #Natrinai #நற்றிணை
No comments:
Post a Comment