Tuesday, March 28, 2023

மாமனிதன் வைகோ அன்றும் இன்றும்…

#மாமனிதன்வைகோ அன்றும்இன்றும்…
————————————————————-
இன்றைய தினசரி செய்தி தாட்களில் இந்தப் படத்தைப் பார்த்ததும் சற்று பின்னோக்கிப் பார்க்கிறேன்.1993 -2001 வரைக்கும் ( முப்பது ஆண்டுகளுக்கு பின்) பின்னோக்கிப் பார்க்கிறேன். ம.தி.மு.க. தொடங்கப்படும்போது அதன் நிறுவனர்களில் நானும் ஒருவன். 

வைகோவுக்குத் துணை நின்று அந்த இயக்கம்   வளர வேண்டும் என்ற இதயசுத்தியோடு உழைத்தவன்.
 பாரதியின் வரிகளின்படி, ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம் ? சர்வேசா ! இப்பயிரைக் கண்ணீராற் காத்தோம் ; கருகத் திருவுளமோ?’ என்ற எண்ணத்தோடு வைகோவுக்குத் துணைநின்று அவரும் இயக்கமும் உயர வேண்டும் என்று அவருக்காகப் பணி  செய்தவர்களை; நன்றியற்று படிப்படியாக  அரசியல் சதுரங்கத்தில் ஓரங்கட்டி, ஒதுக்கி வைத்து, திட்டமிட்டு செயல்படக் கூடிய ஆற்றல் மிக்கவர் வைகோ. அது வேறு விடயம்.   
 
விஷயத்துக்கு வருகிறேன். இந்தப் படத்தில் சோனியாகாந்தியுடன் ராகுலுக்கு ஆதரவாக கையை  மடக்கி உயர்த்தி குரல் கொடுக்கின்றார். இது மாதிரி ஈழத்தமிழர் பிரச்னையில் ராஜீவ், சோனியா போன்றவர்களை எதிர்த்து கையை உயர்த்தி, முறுக்கி கடந்த காலத்தில் காட்டியதும் உண்டு. இதே மாதிரி சோனியா, ராகுல் ஆகியோரை ஆதரித்தும் பலமுறை கையை உயர்த்திக் காட்டியதும் உண்டு. வாழ்‌க அவருடைய திருப்பணி! 
 
மதிமுக தொடங்கப்பட்ட நேரத்தில் பேரறிஞர் அண்ணா காட்டிய வழி, காங்கிரசுடன் கூட்டு சேரக் கூடாது என்பதுதான். அதுதான் எங்களுடைய நிரந்த நிலைப்பாடு என்று சொன்னவர் வைகோ.“அண்ணாவின் கூற்றின்படி காங்கிரஸ்  கூட்டணியிலோ, அதனுடன் சேர்ந்தோ அரசியலில் நான் ஒரு நாளும் பணியாற்ற முடியாது .கலைஞர் அண்ணாவின் கொள்கைக்கு மாறாக காங்கிரஸ்யுடன் உறவு என…….” என்று விடிய விடிய நடந்த கூட்டங்களில் மார்தட்டி சொன்னவர்தான் இந்த வைகோ. அதற்குப் பிறகு  அவருடைய எம்பி பதவியைத் தக்க வைத்துக் கொள்ள 2001 வரை நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைப்பார்; சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்று வெறுத்துத் தள்ளுவார்.
 
வேலூர் சிறைச்சாலையில் அவர் பொடோ கைதியாக இருந்தபோது, 2003இல்சாத்தான்குளம் இடைத்தேர்தலில் காங்கிரசுடன் கூட்டுச் சேர்ந்து மதிமுக ஆதரவாக பணி ஆற்றியது எல்லாம் வரலாறு. 

பின் முள்ளிவாய்க்கால் ரணங்களுக்குத் துணை போன காங்கிரஸ், திமுகவை கடுமையாகச் சாடி பேசிய வைகோ சொன்ன  வார்த்தைகளை இங்கு நான் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. இந்த நாடும், பலரும் அறிந்ததே. 
 
இப்போது ராகுலுக்கு சால்வை போட்டு கட்டித் தழுவுகிறார். சோனியாவுடன் மேடையிலும் போராட்டக் களத்திலும் நிற்கிறார். 

ஒரு காலத்தில், “ காங்கிரஸ் இயக்கத்தை ஆலன் ஆக்டேவியன் ஹியூம் தான் நிறுவினார். அவர் வெளிநாட்டுக்காரர். அதேபோல் காங்கிரஸை முடிவுக்குக் கொண்டுவந்து அதை  ஒன்றுமில்லாமல் செய்யப் போகிறவர் வெளிநாட்டுக்காரரான சோனியாதான்” என்று வைகோ பேசியது இன்றும் பல கேசட்டுகளில் உள்ளது. 
 
லட்சியத்தில் உறுதி, வாரிசு அரசியல், காங்கிரசுடன் கூட்டணி கூடாது,  ஐந்து பேர் (நொச்சிப்பட்டி தண்டபாணி, இடிமழை உதயன், கோவை பாலன், நாகநல்லூர் வீரப்பன், மேலப்பாளையம் ஜஹாங்கீர்) வைகோ ஆதரவாக தீக்குளித்த காரணங்கள் குறித்து எல்லாம் வைகோ பேசிய பேச்சுகளை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. வாரிசு அரசியலை எதிர்த்து  இந்த 5 தியாக சுடர்களை பற்றி  “மாமனிதன் ” ஆவணப்படத்தில் முக்கியமாக சொல்ல பட்டதா? என்று தெரியல…..
 
வைகோவை நம்பி, அவர் தமிழ்நாடு முதலமைச்சர் ஆக வேண்டும்; அதற்குத் தகுதியானவர்; ஆற்றலாளர்; போராளி என்று ஆரம்பகட்டத்தில் அவருக்காக எங்களைப் போன்ற பலர், வேண்டி விரும்பி குரல் கொடுத்தது மட்டுமல்ல, அவருக்காக களப்பணிகள் ஆற்றினோம். அதற்காக நாங்கள் இழந்தவை அதிகம். பெற்றது ஒன்றுமில்லை. அவர் எப்படியோ பதவி என்ற மோகத்துடன் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் எங்களைப்  போன்றோர் 30 ஆண்டுகாலத்துக்கும் முன் எடுத்த முடிவினால், அவமானமும் அவப்பெயரும்தான் பெற்றோம். 

‘சிலநேரங்களில் சிலமனிதர்கள்’ என்பது ஒரு குறுகிய கால வலி வதைதான். ஆனால் இப்படிப்பட்ட சூழல் எங்களுக்கு வாழ்க்கை முழுவதும் ரணத்தையும் வலியையும் தந்து கொண்டிருக்கின்றது. 
‘நம்மை நம்பி சிலபேர் வந்தார்கள்; நம் சுய விருப்பத்துக்கு ஏற்றவாறு முடிவெடுக்கிறோம்; இதனால் நம்மோடு வந்தவர்கள் என்ன நிலைக்குக் தள்‌ளப்படுவார்கள்’ என்று அவர் யோசித்ததெல்லாம் இல்லை. “என்னோடு வந்தவர்களுக்கு அமைச்சர் பதவி வாங்கித் தரமாட்டேன். என்னுடைய வாழ்க்கை கரடுமுரடான தியாக வாழ்க்கை ”  என்பார். எப்போதும் அந்தப் பதிலை தயாராக வைத்திருப்பார். பொள்ளாச்சி கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன், கணேசமூர்த்தி ஆகியோருக்கு பொறுப்புகளைத் தந்து,  வைகோ சுயநலமற்றவர் என்று காட்டிக் கொண்டாலும், தன்னுடைய சுயநலனுக்காக, காரண காரியங்களுக்காக மட்டுமே மேலே குறிப்பிட்டவர்களுக்குப் பதவி பெற்றுத் தந்தார். யார் இந்த பொள்ளாச்சி  கிருஷ்ணன்? அவர்  பத்து வருடம் எம்பி. அவருக்கு உழைத்த மற்றவர்களைப் பற்றி அவர் நினைத்தும் பார்த்ததில்லை. அன்றைக்குத் தள்ளப்பட்ட குழியிலிருந்து இன்றைக்கு வரை பலரால் எழுந்திருக்க முடியவில்லை. இது இவரின் ராஜ தந்திரம் என்பார்.

அக்னியைத் தொட்டவர்களுக்கு தான் அதன் வலி தெரியும். எவ்வளவு கால விரயம், குடும்பப் பணிகள், வயது, பொருளாதாரம் என அனைத்து வகைகளிலும் இழப்புகளைச் சரிக்கட்டுவது மட்டுமல்லாமல், வயது மூப்பில் இருக்கும்போது என்ன செய்ய? ‘கண்கெட்ட பின்தான் கதிரவன் வணக்கம்’ என்பதுபோல என்ன செய்ய? நம்பினோம். நம்பியவர்‌கள் தங்களுடைய சுயநலத்தை மட்டுமே எண்ணினார்கள். அதனால் பாடங்களை மட்டுமே கற்றுக் கொண்டோம். அவமானங்கள், இழப்புகள், பின்னடைகள், ரணங்கள் ஆகியவைதான் இன்றைக்கும் எமது  52 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை முழுவதும் எச்சங்களாக இருக்கின்றன.
 
என்அரசியல் வாழ்க்கையைப் படித்தாலே போதும். புதிதாக அரசியலுக்கு வருபவர்களுக்கு அது பாலபாடமாக இருக்கும். எப்படி அரசியல் கயிற்றில் நடக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

குற்றம் சொல்லி எழுதவில்லை. பட்ட துயர்களால், ரணங்களால், படும் வேதனைகளால் வெளிப்படும் வார்த்தைகள் இவை. அவ்வளவும் சத்தியம்.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
28-3-2023.


No comments:

Post a Comment

BBC - MDMK மதிமுக பழைய சங்கதிகள்

https://www.bbc.com/tamil/articles/cpekp475v48o?fbclid=IwAR0AbwO3Tm8L7Jq2sNptv5Gz1mw9yjqMROo_gxGls02hTHu51CtQBCW3uPs