Sunday, March 12, 2023

`#திருநெல்வேலி எழுச்சி தினம்’ -மார்ச் 13-ம் தேதி.



———————————————————- 
நாடு முழுவதும் சுதேசி உணர்வை ஊட்டியதற்காக விபின் சந்திரபால் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் விடுதலையான 1908, மார்ச் 8-ம் தேதி சுயராஜ்ய நாளாக சுதந்திரப் போராட்ட வீரர்களால் கொண்டாடப்பட்டது. அதற்காக மார்ச் 9-ம் தேதி திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றின் கரையிலிருந்த தைப்பூச மண்டபத்தின் மீதேறி வ.உ.சி., சுப்பிரமணிய சிவா ஆகியோர் பேசினார்கள். அந்த உரையை 12,000 பேர் கேட்டனர்.

ஆங்கிலேய அரசின் தடையை மீறிப் பேசியதற்காக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் மூவரும் மார்ச் 12-ம் தேதி கைதுசெய்யப்பட்டனர். இந்தத் தகவல் பரவியதும், மார்ச் 13-ம் தேதி நெல்லையில் கலவரம் மூண்டது. மாணவர்கள், தொழிலாளர்கள் எனப் பலரும் சாதி, சமய பேதங்களை மறந்து போராட்டத்தில் குதித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட நெல்லை ம.தி.தா.இந்து கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மீதும் ஆங்கிலேய அரசின் போலீஸார் தடியடி நடத்தினார்கள். அதனால் கொந்தளித்த போராட்டக்காரர்கள், நகராட்சி அலுவலகத்தைத் தீவைத்துக் கொளுத்தினார்கள். பெட்ரோல் பங்க், காவல் நிலையம் ஆகியவற்றையும் சூறையாடினார்கள்.

கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய ஆங்கிலேய அரசு, துப்பாக்கிச்சூடு நடத்தியது. அதில் ஒரு சிறுவன், இஸ்லாமியர், கோயில் பூசாரி என நான்கு பேர் கொல்லப்பட்டனர். அடக்குமுறையால் இந்தக் கலவரம் அடக்கப்பட்டாலும் இந்த விவகாரம் பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. இந்த தினத்தை ஆங்கிலேய அரசு `திருநெல்வேலி கிளர்ச்சி’ என வரலாற்றில்  இடம் பெற்றது.

இந்தக் கலவரத்தைத் தூண்டிவிட்டதாக வ.உ.சி., சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரையும் கைதுசெய்த ஆங்கிலேய அரசு, அனைவருக்கும் மூன்று ஆண்டுகள் முதல் 40 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்தது. சுதேசி கப்பலோட்டிய வ.உ.சி., பொதுக்கூட்டத்தில் பேசியதற்காக அதிகபட்சமாக 40 வருட சிறைத் தண்டனை பெற்றார்.
****

#திருநெல்வேலி_எழுச்சி_நாள்_நினைவுகள்

1908 மார்ச் 12-13 நாட்களில்  
திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் எப். ஏ.-இல் 1908ல் படித்துக் கொண்டிருந்தேன். அதற்கு முந்திய ஆண்டு, 1907 ல் நான் சென்னையில் படித்து வந்த போது, பிபின் சந்திர பால், திருவல்லிக்கேணிக் கடற்கரையில், பெரு முழக்கப் பேருரைகளை நிகழ்த்தக் கேட்டேன். வங்காளப் பிரிவினை காரணமாகக் கொதித்தெழுந்தவர்களுள்ளும் சுதந்திரத் தீயைப் பற்றி எழச் செய்தவர்களுள்ளும்  அவர் ஒருவர். சுதேசி அயல் நாட்டுப் பண்ட பகிஷ்காரம்" என்னும் கூச்சல்கள் தமிழ் நாட்டிலும் எழுந்திடச் செய்தவர், இந்த உணர்ச்சி தென்னாட்டில் எங்கும் அத்தகைய மனப்போக்கு உடையவர்களிடையே பரவிற்று, . வ.உ.சி.யும் அவர்களில் ஒருவர். அவர் செய்த சிற்சில செயல்களின் காரணமாக 1908ம் ஆண்டில் அவர் சிறைப் படுத்தப்பட்டார்.

அதைக் கேட்ட திருநெல்வேலி மக்களில் பலர் ஆவேசங் கொண்டார்கள். பெருங் கூட்டமாகத் திரண்டார்கள். கடைகளை அடைக்கச் செய்தார்கள். கற்களை வீசினார்கள். "இந்துக் கல்லூரி வாயிலில் பெருங்கூட்டம் திரண்டது. கல்லூரிக்கு சைக்கிளில் ஏறி வந்து கொண் டிருந்த ஹெர்பெர்ட் சாம்பியன் (இவர் பின்னர், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரித் தலைவராகவும், அதன் பின்னர் கல்வித்துறை நெறியாளராகவும் பணிபுரிந்தார்) / பாரி அன்ட் கம்பெனி அலுவலகத்திற்கு விரைந்து சென்று, கூட்டத்திலிருந்து தப்ப வேண்டியிருந்தது. அன்று அக் கூட்டத்தார் அனைவரும் சிதம்பரம் பிள்ளையின் பெயரை முழங்கினார்கள் அவ்வாறு முழங்கிய வண்ணம், தெருக்களில் உள்ள விளக்குகளை எல்லாம் உடைத்தார்கள்.

திருநெல்வேலி டவுனில் உள்ள நகராட்சி அலுவலகத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் தீக்கு இரையாக்க முயன்றார்கள். நகராட்சி அலுவலகம் பற்றி எரிந்து, தீக்கு இரையாகி விட்டது. போலீஸ் ஸ்டேஷன் தப்பிற்று.

அக் கலகக்காரர்கள் எங்கள் கல்லூரி வாயிலில் கூச்சலிட, கல்லூரித் தலைவர் தப்பி ஓடிவிட கல்லூரியின் கீழ் அதிகாரிகள் கூட்டத்தின் விருப்பத்துக்கு, உத்தரவுக்கு. இணங்க – அதை மூடிவிட்டார்கள். நாங்கள் அச்சத்தோடு வீடு சென்றோம். ஒவ்வோர் வீட்டின் வாயிற் கதவும் அடைக்கப்பட்டது. நான் அப்பொழுது வீரராகவபுரத்தில் இருந்தேன். 

எனது தந்தையின் மிக நெருங்கிய நண்பர் பி. எச். வெங்கடாசலம் ஐயரின் வீட்டு இரண்டாவது மாடியில் எறி, அவருடைய மகனும். என்னுடைய நண்பரும் நீதிபதியாக இருந்து இப்போது ஓய்வு பெற்றிருப்பவருமான பி. வி. கிருஷ்ணஸ்வாமி ஐயருமாக ஒன்றரை மைலுக்கு திருநெல்வேலியில் எரியும் கட்டடப் புகையைக் கண்டோம். எங்கும் கூட்டமாகச் சென்று, ஆரவாரம் செய்யும் ஓசை காதில் விழுந்தது. அன்று மாலையில் போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்பவேண்டியிருந்தது என்றும், அதனால் சிலர் இறந்தனர் என்றும் கேட்டு வருந்தினோம். அவ்வாறு நடக்கப்போகிறது என்று வ, உ.சி  கருதவே இல்லை என்பது எங்களுக்கு நிச்சயம்.  அந்த நினைவுகளை ஒருநாளும் மறக்க முடியாது.
–பெ.நா.அப்புஸ்வாமி. (1964) மாதவையா உறவினர், ரசிகமணியின் வட்தொட்டி நண்பர், அறிவியல் தமிழை வளர்த்தவர்.
••••

1908 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12- 13 தேதிகளில் திருநெல்வேலிப் பாலத்துக்கு அண்மையிலிருக்கும் கைலாச புரத்தில் இருந்தவன் தைப் பூச மண்டபத்தில் நடந்த கூட்டத்தைப் பார்த்தவன்; வந்தேமாதர கோஷத்தைக் கேட்டவன். கூட்டத்தின் விளைவாக நடந்த கலகத்தன்று பள்ளிக்கூடத்திலிருந்து உபாத்தியாயர்கள் சொன்னபடி நேரே வீட்டுக்குச் சென்றவன். என் நினைவிலிருக்கும் சில சம்பவங் களைப் பற்றித்தான் எழுத முடியும்; வ.உ.சி. யைப்பத்தி எழுத எனக்கு அப்போதைய வயது போதாது. 

கலகத்தன்று கல் வீச்சில் நிபுணர்கள் பலர் தங்கள் கைத்திறனைக் காட்டினார்கள். திருநெல்வேலிச் சாலையில் இருந்த விளக்குகள் பல உடைந்தன. அன்றிரவு பாதசாரிகளுக்கு மிகுந்த தொல்லை ஏற்பட்டது. இந்து காலேஜுக்கு தீதொன்றுமில்லை- அதனுடைய தலைவர் ஹெர்பெர்ட் சாம்பியன் தலை தப்ப ஓடினது எல்லோருக்கும் தெரிய வந்தது.

எங்கள் வீட்டில் நடந்ததை இன்று நினைத்தால் சிரிப்பு வருகிறது. அன்றோ பயத்தை உண்டாக்கியது. பதின் மூன்று வயதுப் பையனெருவன் கோவிலுக்குப் போய் தேங்காய் மூடிகளை மடியில் வைத்திருந்தான். அவன் மடியிலிருப்பது  கல்லோ குண்டோ என்று நினைத்து போலீசார் அவனைச் சுட்டதாக வதந்தி, என் தகப்பனாரிடம் யாரோ ஒரு நண்பர் 'உங்களுடைய பையன் போல் இருந்தது' என்று சொன்னார் போலும், என்னுடைய நேர்மூத்த தமயன் வயது 13. என் தகப்பனர் வழக்கறிஞர். அவர் கொக்கிரகுளம் கோர்ட்டிலிருந்து ஓடோடியும் வீட்டுக்கு வந்தார், என்னுடைய தமயன்கள் இருவரும் வீட்டிலில்லை. தகப்பனாருக்கு கோபக்கனல் மூண்டது. என் தாயாருக்கும் என்ன நடக்குமோ என்று நடுக்கம். 13 வயது மகன்  எப்படியாவது வீடு வந்து சேர வேண்டுமே தகப்பனார் கோபத்துக்காளாகி அடி வாங்கக் கூடாதே என்று இறைவனை வேண்டினாள், என் தமயனும் வெரு நேரத்திற்குப் பிறகு வந்து சேர்ந்தான் – காயமுமில்லை, கட்டுமில்லை! ஆனால் என் தகப்பனார் கேட்ட கேள்விகளுக்குச் சரியாக சொல்ல வில்லை. சரி இன்றைக்கு அண்ணாவுக்கு நல்ல பூசை கிடைக்கும் என்று நான் தினைத்தேன். என் தகப்பனாருக்கோ என் தமையன் கூட்டத்தில் போயிருப்பான் என்று சந்தேகம். அடிக்கவில்லை. அவனை வீட்டிலேயே இருக்க உத்திரவிட்டார். அதற்குக் காரணம் எங்கள் கிராமத்திலிருந்த 'என் தகப்பனாருடைய ஆப்த நண்பர் ஒருவர் தற்செயலாய் எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் என் தமையனையும் மற்றும் சிலரையும் போலீசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்த வேளையில் கிராமத்திலேயே கண்டதாகச் சொன்னார்.என் தகப்பனார் கோபம்
தணிந்தது. வழக்கறிஞர் அல்லவா? "அலிபி"(குற்றம் நடந்தவேளையில் குற்றவாளி வேறு ஒரு இடத்தில் இருந்தான் என்னும் வாதம்) ஏற்கத் தக்கதாயிருந்தால் கிரிமினல் கேசில் எதிரிக்கு விடுதலை கொடுக்க வேண்டியது தானே..

– தி.கோ.அனந்த சுவாமி.     (1964)
****

"1907 ஆம் ஆண்டு, ஒருநாள் நான் கற்றுவந்த இந்து கலாசாலையில் மாணாக்கரிடையே ஒரு பரபரப்பு உண்டாகியிருந்தது. அன்று மாலை சுமார் ஐந்தரை மணிக்குத் தூத்துக்குடியிலிருந்து தேசபக்தர் சிதம்பரம் பிள்ளை திருநெல்வேலிக்கு வந்து கீழரத வீதியில் அம்மன் சன்னதிக்கு எதிரே பேசப் போகிறார் என்று ஒரு வதந்தி. குறித்த நேரத்திற்கு முன்பே ஜனங்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தார்கள். நானும் கலாசாலையிலிருந்து நேரே போய்ச் சேர்ந்தேன். 'குறித்த நேரம் கடந்துவிட்டது. ஆனால், ஜனங்கள் காத்துக் கொண்டிருந்தார்களேயல்லாமல் கலைந்து போகவில்லை. கமார் ஆறுமணிக்கு மேல் வ.உ.சி. வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்தவுடன் முதலாவது இவர் என்ன பேசமுடியும் என்று தான் நினைத்தேன். ஆனால், அவர் தொடங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம். விஷயங்களைத் தெளிவாக எடுத்துச் சொன்ன முறை என்னை வசீகரித்தது.

அந்நிய அரசாங்கத்தினர் நாம் சிறிதும் முன்னேற வொட்டாதபடி வாணிகம் முதலியன புரிந்து நம்நாட்டுச் செல்வத்தைச் சுரண்டிக் கொண்டு போவதைக் குறித்து விஸ்தாரமாகப் பேசினார். ஒவ்வொருவனும் தேசாபிமானமுடையவனாக இருத்தல் வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இதைப்பற்றிப் பேசும்பொழுது அவர் தம்மையே மறந்து பரவசமாய் நின்று கேட்போர் உள்ளத்தை நேரடியாய்த் தாக்கினார் என்று சொல்லவேண்டும்.
சுமார் ஒரு மணிநேரம் பேசியிருப்பார். கேட்ட மக்கள் அனைவரும் மிக்க குதூகலமுற்றனர்". 

-எஸ்.வையாபுரிப் பிள்ளை, 'நான் கண்ட வ.உ.சி: நூலில்…
****

நான் மெட்ரிக்குலேஷன் வகுப்பில் படிக்கும் போது (1907) ஒரு நாள் மாலையில் மாணவர்கள் திரள் திரளாகக் கலாசாலை மூடியதும் ஆற்றங்கரை நோக்கிச் செல்வதைக் கண்டேன். அங்கு யாரோ பிரசங்கம் செய்வதாக அறிந்தேன். நான் அதுவரை பிரசங்கம் எதுவும் கேட்ட தில்லை. அதனால், மிகுந்த ஆவலுடன் என் சகாக்களுடன் நதிமணல் நாடிச் சென்றேன்.

அங்கே ஐயாயிரம் ஜனங்களுக்கு அதிகமாகக் கூடியிருந்தனர். தவசு மண்டபத்தின் படியில் ஏறி நின்றுகொண்டு ஒரு குள்ளமான மனிதர் பேச ஆரம்பித்தார்.
இவர் தானா பிரசங்கி, இவரைப் பார்த்தால் பிரமாதமாகத் தோன்றவில்லையே என்று நானும் என் நண்பர்களும் பேசிக் கொண்டோம். ஆனால் அந்த மனிதர் பேசத் தொடங்கினாரோ இல்லையோ நாங்கள் இந்த உலகத்தில் இருக்கவில்லை. மெய் மறந்து போய் வாயைப் பிளந்து கொண்டு அப்படியே உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருந்தோம். வ.உ.சி. அன்று எழுப்பிய சுதந்திர தாகம் இன்னும் எனக்கு அடங்கினபாடில்லை" 

-பொ.திருகூடசுந்தரம்    வ.உ.சிதம்பரம்பிள்ளை- கட்டுரைகள்: தொகுதி, 

 "வ.உ.சி. வளர்த்த தமிழ்' நூலில் இருந்து…

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...