Thursday, March 23, 2023

#தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர்... #இந்திராகாந்தி... #வஉசி பிறந்தநாள் விழா... #வஉசிகல்லூரி.... #செருப்பு வீச்சுகள்... #என்னுடைய மாணவர் காங்கிரஸ் நாட்கள்.



—————————————
 
கடந்த 20.03.2023 அன்று தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் பக்கம் சென்றிருந்தேன். 2002 - இல் சார்லஸ் தியேட்டர் மூடப்பட்டது என்று நினைவு. 
   
கடந்த 1955 - இல் கட்டத் தொடங்கி 1958 இல் 1383 இருக்கைகளோடு உருவாக்கப்பட்ட  இந்த திரைக்காட்சியகத்தில், ‘எங்கள் வீட்டு மகாலட்சுமி’ திரைப்படம் முதன்முதலாகத் திரையிடப்பட்டுதொடங்கப்பட்டது.
அப்போது ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இருந்தது. 

தென்தமிழகத்தில்  மதுரை தங்கம் தியேட்டருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர் பெரிய திரைக்காட்சி அரங்கமாகத் திகழ்ந்தது. 
  
இன்றைக்கு (23.03.2023) தினத்தந்தியில் இது குறித்தான பத்தி வெளிவந்துள்ளது. அதைப் படித்ததும் எனக்கு 1972  கால கட்டத்தின் பழைய நினைவுகள் கண்முன் வந்தன. அப்போது ஸ்தாபன காங்கிரஸின் மாணவர் நிர்வாகிய நான் இருந்த நேரம். இந்‌திராகாந்தி எங்கள் மாவட்டமான திருநெல்வேலிக்கு, குறிப்பாக தூத்துக்குடிக்கு 05.09.1972  அன்று வருகை தந்தார். 
 
வ.உ.சி. பெயரில் இன்றைக்கு இருக்கும் தூத்துக்குடி துறைமுகவிழா நடந்தது. இதில் வ.உ.சி. தபால்தலையை வெளியிட்டு இந்திராகாந்தி நிறைவுரை ஆற்றினார். அதன் பின் வ.உ.சி. கல்லூரி வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  இந்த கல்லூரியின் தாளாளர்  ஏ.பி.சி.வீரபாகு,  எங்கள் குடும்பத்துக்கு நெருங்கிய உறவினர். அன்றைய இந்திரா காங்கிரஸ் தமிழ்நாடு கமிட்டியின் தலைவர். 
 பின் சார்லஸ் தியேட்டரில் இறுதி நிழ்ச்சியாக இந்திரா காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் இந்திரா காந்தி கலந்து கொண்டார். 

தமிழ்நாட்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரியின் மாணவர் லூர்து நாதனை தாமிரவருணி ஆற்றில் கவால்துறையினர் தள்ளிவிட்டு கொன்றுவிட்டனர் என்பதற்காக நடந்த  மாணவர் போராட்டம், திருச்சி செயின்ஜோசப் கல்லூரி கிளைவ் ஆஸ்டலில் மாணவர் போராடியபோது, போராடிய மாணவர்களைகாவல்துறையினர் அத்துமீறி அடித்து துவம்சம் செய்ததை எதிர்த்து நடந்த மாணவர் போராட்டம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலையைக் கண்டித்த மாணவர் போராட்டம் என முன்னும் பின்னும் பல போராட்டங்கள் நடந்த நேரம் அது. இந்த மூன்று நிகழ்வுகளுக்காகவும் மாணவர் போராட்டம் தமிழ்நாடெங்கும் அன்றைக்கு வெடித்தது. சட்டமன்றத்தில் அன்றைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனக் குரல்களை எழுப்பின. இந்த மாணவர் போராட்டங்களில் பல்வேறு களப்பணிகளை நான் ஆற்றினேன். 

பாளையங்கோட்டை மாணவர் லூர்துநாதன் சாவுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கோதண்டராம ராஜா தலைமையில் நீதி விசாரணையையும், திருச்சி கிளைவ் ஹாஸ்டல் சம்பவத்துக்கு ஓய்வு பெற்ற நீதிபதி குப்பண்ணா தலைமையில் நீதி விசாரணையையும், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் படுகொலைக்கு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என்.எஸ்.ராமசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனையும் தமிழக  அரசு அமைத்தது. இந்த மூன்று நீதி விசாரணைகளிலும் நான் பங்கேற்ற நினைவுகள் எல்லாம் இன்றைக்கு உள்ளன. 

தினத்தந்தியில் இன்றைக்கு வந்த செய்தியால் பழைய நினைவுகள் எல்லாம் கண்ணில் ஆடின. வ.உ.சி. கல்லூரியில் 05.09.1972  - இல் நடந்த நிகழ்வில் பிரதமர் இந்திரா, அன்றைய தமிழக முதல்வர் கலைஞர் உடன்சி.பா.ஆதித்தனார், ஏ.பி.சி.வீரபாகு என பலர் கலந்து கொண்டனர். மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் மதியம் இரண்டே கால் மணியளவில் கலைஞர் பேசும்போது, கலைஞர் மீது செருப்புகள் சரமாரியாக வீசிய நிகழ்வும் நடந்தது. அன்றைக்கு மாணவர்கள் போராட்டம், விவாசாயிகள் போராட்டம், விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு என்ற நிலையில் அன்றைய தமிழகம் கொதிநிலையில் இருந்தது என்பதை மறக்க முடியாது.  
  
திருநெல்வேலி - பாளையங்கோட்டையில் கொல்லப்பட்ட மாணவர் லூர்துநாதனுக்கு இந்த காலத்துக்குப் பின் நாங்கள் எல்லாம் சிலை எடுத்து பாளையங்கோட்டை தெற்கு பஜார் மேற்குமுனை மனக்காவலம் பிள்ளை சாவடியில் சிலை வைத்தோம். இதைப் பெருந்தலைவர் காமராஜர் திறந்த வைத்தார். அந்த நினைவுள் எல்லாம் உள்ளன. இன்றைக்கும் அந்த சிலை அனைவரின் பார்வையில் படக் கூடிய நிலையில் அன்றே எழுப்பினோம். இப்படியெல்லாம் பழைய செய்திகள்.
 
அன்றைக்கு இந்திராகாந்தி கலந்து கொண்ட கட்சி ஊழியர் கூட்டத்துக்கு தூத்துக்குடியில்  இடம் கொடுத்தது சார்லஸ் தியேட்டர் சேவியர் மிசியர். பலருக்கும் இந்த வரலாறெல்லாம் இன்றைக்குத் தெரியக் கூடிய வாய்ப்பு இல்லை. வெறுமனே 1995க்குப் பிறகான வரலாறையே பொதுவெளியிலும் இணையத்திலும் எந்தவித வாசிப்பும், புரிதலும், யோசித்தலும் இல்லாமல் எழுதி வருகின்றனர். 
 
இன்றைக்கு தினத்தந்தியில் வந்த அந்த கட்டுரையின் ஒரு பகுதி இது.  நானாகச் சொன்னால் தவறாகச் சொல்லிவிட்டேன் என்று எந்த யோசிப்பும் இன்றி, எதுவும் அறியாமல், உடனே பின்னோட்டம் போடுவதற்கு ஒரு கூட்டமும், ஒரு விங்க்கும் முட்டாள்தனமாக இருக்கும்போது, உரிய ஆதாரத்தோடு போட வேண்டிய நிலை இன்றைக்கு இருக்கின்றது. 
 
இன்றைக்கு எங்கள் வட்டாரத்தில் காங்கிரசில் நீண்டகாலமாகப் பொறுப்பிலிருக்கும் நிர்வாகி கதிர்வேல் அவர்கள் இதைக் குறித்துப் பேசியுள்ளார். அது தினத்தந்தியில் (23.03.2023) வெளிவந்திருக்கிறது. அது வருமாறு:
 "காங்கிரஸ் கட்சியானது ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என்று இரண்டாக பிரிந்து இருந்த சமயம். தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலானவர்கள் காமராஜரின் தலைமையை ஏற்று ஸ்தாபன காங்கிரசில் இருந்தனர். தமிழ்நாடு இ.காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஏ.பி.சி.வீரபாகு இருந்தார். நகர இ.காங்கிரஸ் தலைவராக குழந்தை என்பவர் இருந்தார். நான் உதவித் தலைவராக இருந்தேன். அன்றைய தினம் தூத்துக்குடி மாவட்டத்தில் 3 நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் நடந்த விழாவில் பிரதமர் இந்திராகாந்தி, முதல்-அமைச்சர் கருணாநிதி  உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  கருணாநிதி பேசும்போது கூட்டத்தில் செருப்பு வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த கூட்டத்தை முடித்த பிறகு பிரதமர் இந்திரா காந்தி மாலையில் சார்லஸ் தியேட்டரில் நடந்த இ.காங்கிரஸ் ஊழியர் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். 
 
அந்த ஊழியர் கூட்டம் ஸ்தாபன காங்கிரசுக்கும், காமராஜருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது. தூத்துக்குடியில் இந்திரா காங்கிரசின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், காங்கிரசாரை ஒருங்கிணைக்கும் வகையிலும் அந்தக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க இந்திரா காந்தி வந்தார். தியேட்டர் முன்பு அவருக்கு சேவாதள தொண்டர்களின் எழுச்சிமிகு அணிவகுப்பு நடந்தது. அதனை உற்சாகமாக ஏற்றுக் கொண்ட பிரதமர், ஊழியர் கூட்ட அரங்கிற்கு வந்தார். அவர் மிகவும் எளிமையாக இருந்தார். அவரை பார்த்ததும் காங்கிரசார் கைகளைத் தட்டியும், வாழ்த்து கோஷங்களை எழுப்பியும் ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் அனைவரும் தலா 5 நிமிடங்கள் மட்டுமே பேசினர். அதன் பிறகு பிரதமர் இந்திராகாந்தி காங்கிரஸ் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி பேசினார். அப்போது, காமராஜர் முக்கிய நிர்வாகிகளுடன் சேர்ந்து சிண்டிகேட் அமைத்து செயல்படுவதாக குற்றம்சாட்டினார்" 
இவ்வாறு கடந்த நிகழ்வுகளை கதிர்வேல் நினைவு கூர்ந்தார். 
https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/indira-gandhi-came-925925

#தூத்துக்குடி_சார்லஸ்_தியேட்டர்... #இந்திராகாந்தி... 
#வஉசி_பிறந்தநாள் விழா... #வஉசிகல்லூரி.... 
#செருப்பு_வீச்சுகள்... 

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
23-3-2023.

No comments:

Post a Comment

#*Cauvery* #*காவேரி*

#*Cauvery* #*காவேரி*  ———————————— T. Ramakrishnan's latest book, "Cauvery: A Long-Winded Dispute," published by The Hindu Gro...