Friday, July 28, 2023

#*அம்பிகா கஃபே*




" உங்க அம்மா பெயர் அம்பிகாவா?" இந்தக் கேள்வியை பலர், பலமுறை என்னை கேட்டிருக்கிறார்கள். அம்பிகா என்ற பெயருக்கும், எங்கள் குடும்ப அங்கத்தினர்கள் யாவருக்கும் தொடர்பே இல்லை.

" அம்பிகா கஃபே" பெயர்க்காரணம் பற்றி அப்பா சொன்னது. வயிற்றுப் பிழைப்புக்காக சீர்காழியிலிருந்து இடம் பெயர்ந்து, சென்னை மா நகரத்தில் குடியேறி, ஒரு வழியாக ஹோட்டல் வைக்க ஏற்பாடுகள் செய்தவருக்கு, அதற்கு ஒரு போர்டு மாட்ட கையில் காசில்லை. அதற்கு முன்பு அதே இடத்தில் இருந்த நொடித்துப்போன ஹோட்டலின் பெயர்ப்பலகையே, புது ஹோட்டலுக்கும் மாட்டப்பட்டது.

அப்பாவின் வாழ்வையே திசை திருப்பி எங்கெங்கோ கொண்டு சென்ற "அம்பிகா கேப்" உதயம்.
 Cafe என்ற ஆங்கில வார்த்தையை கஃபே என்று உச்சரிக்க வேண்டும் என்று எனக்கும் ரொம்ப நாள் கழித்து தான் தெரியும்.

ராமர் கோவில் தேரடி எதிரில், மாம்பலம் வாசிகள் எல்லோரும் அறியும் வண்ணம் கம்பீரமாக காட்சி அளித்தது..அந்த சிறிய ஹோட்டல். நடுவில் ஒரு கொல்லாப்ஸிபிள் கேட், இரு புறமும் சிறிய ஜன்னல்கள். இதுதான் கடையின் முகப்பு. இடது பக்க ஜன்னல் அருகில், ஒரு சிறிய மேடை மேலே போடப்பட்ட ஒரு கல்லா டேபிள், மேற்புறம் சலவைக்கல் மூடிய 6 டேபிள்கள், 24 நாற்காலிகள், ஒரு ஸ்வீட் ஸ்டால், கொஞ்சம் பித்தளை காபி டபரா செட்டுகள், எவர்சில்வர் தட்டுகள், சட்னி சாம்பார் கிண்ணங்கள், இட்லி பானை, வாணலி, ஜார்ணி போன்ற பழைய கடையிலிருந்து வாங்கிய சமையல் பாத்திரங்கள்.... இவையே எங்கள் கடையின், ஆரம்ப கால அசையும் சொத்து.

தினமும் காலை 5 மணிக்கு, ஹோட்டல் திறக்கப்பட்டு, காபி தயாராகி விடும். அந்த 5 மணி காபிக்கென்றே சில ரெகுலர் கஸ்டமர்கள் உண்டு. என்றாவது ஒரு நாள் சற்று தாமதித்தாலும், பொறுமையுடன் காத்திருந்து காபி குடித்துவிட்டே போவார்கள்.

ஒரு குண்டு ஐயர் மாமா தான் சரக்கு மாஸ்டர். கடைசி வரையில் அவரை மனம் கோணாமல் வைத்திருந்தார் அப்பா. காலை 6 மணிக்கே, ஆவி பறக்கும் இட்லி, வடை, பொங்கல், உப்புமா நான்கும் வெளியே ஸ்டாலுக்கு வந்துவிடும். 20 நாற்காலிகளும் நிரம்பி, சிலர் காத்திருக்க வேண்டி வரும்.

நான் படித்த சாரதா ஸ்கூல் வாத்தியார்களில், அநேகமாக அனைவருமே மாதாந்திர கஸ்டமர்கள். ஒரு 80 பக்க லெட்ஜர் நோட்டு, அகலம் குறைந்தது, நீளம் உள்ளது எப்பொழுதும், கேஷ் டேபிளில் இருக்கும். தினமும் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, பில் தொகையை எழுதி விட்டு போவார்கள். பிரதி மாதம் 5ம் தேதிக்குள் பணம் கொடுத்துவிட வேண்டும்.

மாலை நேரத்தில், கோதுமை ஹல்வா, வெங்காய பகோடா, மெது பகோடா, மைசூர் போண்டா. இவைகளுக்கென்றே பிரத்யேக வாடிக்கையாளர்கள் உண்டு. ராவுஜீ என்ற பரிசாரகர்....கடைக்கு வரும் கஸ்டமர்களில் யார் யாருக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை அறிந்து வைத்திருப்பவர். அவர்கள் வந்து, நாற்காலியில் உட்கார்ந்த அடுத்த நிமிடம், டேபிளில், சுடச்சுட ஐட்டங்கள் வந்து விடும்.

இதை விட, வியாபார அபிவிருத்திக்கு வேறென்ன வேண்டும். 
Ambika Cafe கொடி கட்டிப் பறந்தது. மாம்பலத்தில், எங்கள் கடையில் சாப்பிடாத ஜனங்களே இல்லை என்று சொல்லலாம்.
வீட்டில் செல்வம் கொழித்தது. ஒரு சிறிய மர பீரோவில், கீழ் டிராயரில், முழுவதும் நாணயங்கள் நிரம்பி இருக்கும். அதை கையால் அளைந்து விளையாடிய ஞாபகம் இருக்கிறது.

எங்கள் ஹோட்டலுக்கு பால் சப்ளை செய்தவர் யார் தெரியுமா..
நடிக வேள் எம்.ஆர்.ராதா. அவரின் நந்தம்பாக்கம் தோட்டத்திலிருந்து தினமும் ஒருவர் இரண்டு மூன்று பாத்திரங்கள்….அதற்கு ஜோடு தவலை என்ற பெயர்….அதில் பால் கொண்டு வருவார். ஒரு நாள் திடீரென ஒரு கார் வந்து நின்றது. அந்த காரின் டிக்கி முழுவதும் வைக்கோல் அடைக்கப்பட்டு நிரம்பி வழிந்தது. காரிலிருந்து இறங்கியவர் வேறு யாருமல்ல...எம் ஆர் ராதாவே தான்.
"என்ன அய்யிரே….பசங்க பால் ஒழுங்கா ஊத்தரானுங்களா….தண்ணி கிண்ணி கலந்துடப்போறாங்க...சொல்லி வச்சிருக்கேன்….டேய் நல்ல பாலா ஊத்துங்கடா...அய்யர் பேரை கெடுத்துடாதீங்கடான்னு...எப்டி யாவாரமெல்லாம் நல்லா நடக்குதா ன்னு பாத்துட்டு போலாம்னு வந்தேன்.." என்று விசாரித்திருக்கிறார்.
அதுவரை யாரோ பால் சப்ளை செய்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்த அப்பாவுக்கு அன்று தான் விஷயம் புரிந்ததாம். அப்பா சொல்லி கேட்டிருக்கிறேன்.

அய்யர் என்றதும் நினைவுக்கு வருகிறது. நாங்கள் கன்னட மாத்வ வகுப்பை சேர்ந்தவர்கள் ஆயினும், எங்கள் கடை மேற்கு மாம்பலத்தில் ராயர் ஹோட்டல் என்ற பெயர் இல்லாமல் அய்யர் ஹோட்டல் என்றே அறியப்பட்டது. அதற்கு காரணம் என் அப்பாவின் தோற்றம். ஆஜானு பாக உடல் கட்டு கொண்டிருந்த அவர் வெள்ளை வேட்டியும், வெள்ளை ஜிப்பாவும் அணிந்து, நெற்றி நிறைய திருநீறும், குங்குமமும் இட்டு கல்லாப்பெட்டியின் முன்பு அமர்ந்து கடையை நிர்வகித்தது இன்று வரை பலரால் பேசப்படுகிறது. இந்த தோற்றமே கடைக்கு அய்யர் கடை என்று பெயரும் வாங்கி கொடுத்தது.

ஜாதி மத பேதமின்றி நட்பை வளர்த்தவர் என் தந்தை. சிட்டிபாபு ரெட்டி, மணவாள பிள்ளை, பிஸ்கட் கடை பாய் (பாய்), சந்தனப் பொட்டு சுப்ரமணிய நாயக்கர், ராமர் கோவில் பட்டாச்சாரியார், காசி விஸ்வநாதர் கோவில் மணி குருக்கள், பழனி ஆயில் மில் முதலியார் எல்லோருமே அப்பாவின் நண்பர்கள். அவர் வாழ்வின் மூலம் அதே ரத்தம் தான் என் உடம்பிலும் ஓடுகிறது.

மணவாள பிள்ளை ரொட்டிக்கடை அருகில்,கற்பக விலாஸ் என்று ஒரு ஹோட்டல் இருந்தது. அதில் சாப்பாடு மாத்திரம் தான். வைத்தியநாத ஐயர் அதன் உரிமையாளர். அவருக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக, அவரால் அந்த ஹோட்டலை நடத்த முடிய வில்லை. அப்பா அதை வாங்கினார். அந்த சமயம் தான் என் தங்கை பத்மா பிறந்திருந்தாள். எனவே புதிய கடைக்கு பெயர் " பத்ம விலாஸ்". சாப்பாட்டின் விலை 50 பைசா. அளவற்ற முழு சாப்பாடு. அதை நடத்தியது அப்பாவால், தன் முதல் மகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட, என் உடன் பிறவா வேணு அண்ணா.

எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்த சமயத்தில், அப்பா, வேறு கடை வைத்தார்...மாம்பலம் ஸ்டேஷனுக்கு மிக அருகில். பெயர் "ஹோட்டல் அம்பிகா".
இதுவும் நன்றாகவே நடந்தது.

ஆனால் ஏதோ காரணங்களால் எல்லாம் நொடித்து போனது. சீர்காழியிலிருந்து பிழைப்பை தேடி சென்னைக்கு வந்த நிலைக்கே தள்ளப்பட்டார் என் அப்பா.
இரும்பு மனிதர்...எல்லாவற்றையும் பொறுத்தார்.

எனக்கு தெரிந்து அவர் செய்த தவறு...கடவுள் மேல் அசையா நம்பிக்கை வைத்தது போல், மனிதர்கள் மேலும் நம்பிக்கை வைத்தார்.

மனிதர்கள் காக்க வில்லை. அவர் கடவுள் மேல் வைத்த நம்பிக்கை எங்கள் குடும்பத்தை காத்தது. அளவற்ற செல்வத்துக்கு எங்கள் குடும்பத்தினர் யாரும் அடிமை இல்லை.

தொடர் கதையாக இருந்தால் 300 பக்கங்களுக்கு குறைவில்லாமல் எழுதலாம். பாலசந்தர் படமாக எடுத்திருந்தால் வெள்ளி விழா நிச்சயம். மெகா சீரியலாக எடுத்தால் ரெண்டு வருஷம் ஓடும்.

சமீபத்தில் ஒரு நாள் மேற்கு மாம்பலத்தில் நடந்து கொண்டிருந்தேன். என் வயதை ஒத்த யாரோ ஒருவர், "யாரு ஹோட்டல் அய்யர் பையனா நீங்க?" என்றார். ஆமாம் என்றேன். என் கைகளை பிடித்துக்கொண்டார். அவர் கண்களில் நீர்த்துளிகள்.
 
இது போதும் எனக்கு...உயிர் உள்ள வரை….

Vijayendran Gopalakrishnan in #MADHYAMAR

No comments:

Post a Comment

*Run your own race. No one cares what you are doing*

*Run your own race. No one cares what you are doing*. Think yourself as a powerful creator. You will see opportunities to get your goal, and...