Monday, November 20, 2023

ஏதேன்ஸ்ஜனநாயகம் ரோம குடியரசு விட நம்குடவோலை மாண்புமானது!

இன்றைய (20-11-2023) தினமணியில் வெளி வந்த எனது  ‘’ #குடவோலையில் 
தொலைநோக்குச் சிந்தனை’’ என்ற பத்தி
Column

#ஏதேன்ஸ்ஜனநாயகம்
ரோம குடியரசு விட நம்குடவோலை
மாண்புமானது!
- கே. எஸ். இராதா கிருஷ்ணன்
•••••••••
குடவோலை என்பது ஊர்  நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்தெடுக்க பழங்காலத்தில் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.
குடவோலை முறை 9 ஆம் நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று பள்ளிப்பாக்கம், மானூர் கிராமங்களில் கிடைத்துள்ளன.
தமிழகத்தின் மக்களாட்சி பாரம்பரியத்திற்கு உதாரணமாக ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உத்திரமேரூர் கல்வெட்டுகளில் காணப்படும் குடவோலை முறை வாரியத் தேர்தல் பற்றிய குறிப்புகளைப் பலர் மேற்கோள் காட்டுவார்கள். சிறு வயதில் பள்ளிகளில் வரலாறாகவும், பிற்காலங்களிலும் இதைப் படிக்கும் பொழுதெல்லாம் புளகாங்கிதம் அடைந்தது உண்டு.
குடவோலை தேர்தல் முறை  ஒவ்வொன்றும், சோழர்கள் காலத்தில் மனு நீதி எவ்வாறு கட்டி காக்கப்பட்டது என்பதற்கு உதாரணங்களாகத்தான் இருக்கின்றன.
உள்ளாட்சி தேர்தலில் பங்குபெறுபவர்களுக்கான தகுதிகளாக:-
1) கால்வேலி நிலமாவது தேவை
2) தன் மனையில் வீடு இருத்தல் வேண்டும்
3) வயது முப்பத்தைந்துக்கு மேல் எழுபதுக்குள் இருக்க வேண்டும்
4) வேதபாஷ்யங்கள், மந்திர ப்ராம்மணம் இவற்றில் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
5) ஆசாரம் வேண்டும்
6) முந்தின மூன்றாண்டுகளுக்கு இப்பதவி வகிக்காதவனாக இருக்க வேண்டும்
உத்திரமேரூர் தேர்தல் :
அப்படிப்பட்ட ஒரு தேர்தல் முறை தேர்தலில் நிற்கத் தகுதிகள் யாவை? யார் நிற்கலாம்? யார் நிற்கக் கூடாது என்பதெல்லாம் தெளிவாக அரசியல் சாசனம் சோழர் காலத்தில் எழுதி வைத்திருந்தனர். சென்னைக்கு அருகில் 50 கல் தொலைவில் உள்ள உத்திரமேரூரில் ஒரு பெரிய கல்வெட்டுச் சாசனமே இருக்கிறது. தமிழ்நாட்டைப் பராந்தக சோழன் ஆண்ட போது கி.பி. 920 இல் ஊர்ச்சபைக்குத் தேர்ந்தெடுப்பதைக் குறிக்கும் கல்வெட்டில்தான் இவை அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. நேற்றுத்தான் எழுதியது போல் உள்ள இந்த ஆயிரம் ஆண்டுக்கு முந்திய கல்வெட்டைப் பார்த்தால் நாம் வியப்போம். அக்காலத்தில் பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டோரின் தன்மை என்ன? இன்று நிலமை எவ்வாறு உள்ளது என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

உத்திரமேரூர் முப்பது குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அந்த குடும்பத்திலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வுக்கு நிற்பவர் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும்.
அசையாத சொத்து சிறிதாவது உடையவராக இருக்க வேண்டும். கால் வேலியிலிருந்து அரை வேலி நிலமாவது அவருக்கு இருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்திலோ, பிறர் நிலத்திலோ வீடு கட்டிக் கொண்டிருப்பவராக இல்லாமல் “தன் மனையில் வீடு எடுத்துக் கொண்டவராக” இருக்க வேண்டும்.
தகுதி 35 வயதுக்கு மேற்பட்டவராக இருகக வேண்டும். 70 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். பொதுமக்களின் பிரச்சினைகளையும், வாழ்வையும் சார்ந்த முடிவுகளை ஆட்சிக்கு வருபவர் எடுக்க வேண்டுமாதலால், 35 வயது குறைந்தபட்ச வயதாகக் வகுக்கப்பட்டது. அந்த வயதில்தான் வாழ்க்கையில் அனுபவமும் ஒரு நிதானமும் கிட்டும் என்று அக்காலத்தில் கருதினர். 70 வயதுக்கு மேலும் தாமே ஆட்சி புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணாமல் இளைய சமுதாயத்துக்கு இடமளித்தல் தேவை என்பதால் 70 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி கற்றிருக்க வேண்டும். படிப்புக் கூட இல்லாமல் சட்டம் இயற்றவோ நெறிப்படுத்தவோ இயலுமா? படிப்பு மட்டுமிருந்தால் போதாது. தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது.
செயல் புரிவதில் வல்லவனாக இருக்க வேண்டும். அதைக் கல்வெட்டு “காரியத்தில் நிபுணன்” என்று கூறுகிறது.
அவன் ஒழுக்க சீலனாக இருக்க வேண்டும். ஒழுங்கீனமாகச் சுற்றித் திரிபவர்க்கு இடமில்லை.
நேர் வழியில் சம்பாதித்த பொருளை உடையவனும் நல்ல மனம் உடையவனாகவும் இருக்க வேண்டும்.
மிகமிக இன்றியமையாத தகுதி ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு நிற்க முடியாது. இதனால் ஆற்றலும் தகுதியும் உடைய மற்றவர்களுக்கு வாய்ப்புக் கிட்டும். இல்லையெனில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தாமே எப்பொழுதும் ஆட்சியில் இருக்க முயற்சி செய்வர். அதனால் இளைய சமுதாயத்தினரிடையே வெறுப்பும் கொந்தளிப்பும் ஏற்படும். 25 ஆண்டுகளாக நானே ஆட்சி செய்தேன் என்று ஒருவர் மார் தட்டிக் கொள்ள வழியில்லாமல் பலரும் பங்குபெறும் வாய்ப்பை மக்கள் மன்றம் பெற்றிருந்தது. இப்படியாக சோழர்கால  ஆட்சி முறை இது நம்முடைய ஆட்சி என மக்கள் உள்ளத்தில் உணர செயல்பட வழி வகுத்தது. இவ்வாறு கல்வி, வயது, சொத்து, ஒழுக்கம், செயல்திறன், நேர்வழிச் சம்பாத்தியம், மனத்தூய்மை ஆகியவையே தகுதிகளாகக் கொண்டு அத்துடன் இதற்கு முன் மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் படாதவராகவும் இருத்தல் வேண்டும் என்று தகுதியை வரையறை செய்து அரசு என்பது என்ன என்பதை தெளிவாகக்குறிக்கிறது கல்வெட்டு.

அத்துடன் நின்றுவிடவில்லை. யார் யார் தகுதியற்றவர் என்றும் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்க முடியாது. இவர் மட்டுமல்ல இவரது மகன், பெயரன், தந்தை வழி, தாய் வழி, மகளையோ, மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவர் வழியில் எந்தவிதமான சொந்தக்காரர்களும் தேர்தலில் நிற்க முடியாது. தான் கொள்ளை லாபம் சம்பாதித்துவிட்டு பின் தனது சொந்தக்காரர் யாரையும் ஆட்சியில் அமர்த்திவிட முடியாது. இதைக் கல்வெட்டு தன் சுதந்திர வாசகத்திலேயே கூறுகின்றது.
“எப்பேர்ப்பட்ட வாரியங்களும் செய்து கணக்கு காட்டாது இருந்தான், இவன் சிற்றவை பேரவை மக்கள், இவர்களுக்கு அத்தை மாமன் மக்கள், இவர்களுக்கு தாயோடு பிறந்தான், இவர்கள் தகப்பனோடு உடன்பிறந்தான், தன்னோடு உடன் பிறந்தான், இவர்களுக்கு பிள்ளை கொடுத்த மாமன், இவர்கள் மனைவியோடு உடன்பிறந்தாளை வேட்டான் (மணந்தான்), உடன் பிறந்தான் மக்கள், தன் மகளை வேட்ட மருமகன், தன்தமப்பன், தன்மகன் இத்தனை யவரையும் நீக்கி” என்று கல்வெட்டு கூறுகிறது. பொதுச் சொத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தன் சொத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும் என்பது கருத்து. இல்லையெனில் அவனது இருவழிச் சொந்தக்காரர்களும் எப்பொழுதும் தேர்தலில் நிற்க முடியாது எனக் கடுமையான விதி ஏற்படுத்தப்பட்டது.
இது மட்டுமல்ல கள் சாராயம் குடிப்பவன், பிறர் பொருள் அபகரித்தவன், பிறர் மனைவியை அபகரித்தவன், முதலியோர் நிற்க முடியாது. இவை எல்லாம் மகாபாதகம் என்று கூறப்பட்டன. இவர்கள் மட்டுமல்ல. இவர்கள் தூய்மையானவர் என்று சாதிப்பவர்களும் நிற்க முடியாது. இவற்றிற்காகத் தண்டனை பெற்று வெளிப்போந்த பின்னரும் நிற்க முடியாது. ஊரில் மாய்மாலம் செய்தல், பேசியே ஏமாற்றுபவர்கள் எல்லாம் நிற்க முடியாது. இவர்களைச் சாஹஸம் செய்வோர் என்று கல்வெட்டு கூறுகிறது.
இறுதியாக ஆனால் இன்றியமையாததாகக் குறிக்கப்பட்டுள்ளது லஞ்சம். இதைக் கையூட்டு என்று கல்வெட்டு கூறுகிறது. யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தேர்தலில் நிற்க முடியாது. இரண்டே ஆண்டுகளில் பல லட்சம் சேர்த்தாயே எப்படி சேர்த்தாய் என்று மக்கள் கேட்பார்கள். கொஞ்சம் வாங்கினான் என்று தெரிந்தால் கூட ஒரே ஆண்டில் நீக்கிவிடுவார்கள். ஊழலை ஒழிப்பேன் என்று மக்களை ஏமாற்றி பல லட்சம் சேர்ப்பது “சாகசம்” எனப்படும். சாகசம் செய்தவர், தப்புச் செய்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்தவர், இவர்களெல்லாம் அக்காலத்தே தேர்தலுக்கு நின்றிருக்கு முடியாது என்பதை கல்வெட்டு எப்படிக் கூறுகிறது பாருங்கள்! சாஹஸியராயிருப்பான் பரதிரவியம் அபஹரித்தான் எப்பேர்ப்பட்ட கையூட்டும் கொண்டான்.
இக்காலத்தில் “பேட்டை ரெளடி” என்பதை அக்காலத்தில் “கிராம கண்டகன்” என்று கூறினர். “கண்டகம்” என்றால் முள் என்று பொருள். முள் போல் ஊருக்கு துன்பம் இழைப்பவன் கிராம கண்டகன் மட்டுமல்ல அவனுக்கு பாதுகாப்பு அளிப்பவனும் நிற்க முடியாது என்பது “கிராம கண்டகனாய் பிராயச்சித்தம் செய்து சுத்தம் ஆனான்” கல்வெட்டில் உள்ள வாசகம். “ஆக இச்சுட்டப்பட்ட அனைவரையும் நீக்கி” பிற தகுதி உடையோர் பெயரிட்டுத் தேரந்தெடுத்தல் வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. இன்று இந்த கல்வெட்டு அங்கு இருக்கிறது யார் வேண்டுமானாலும் நேரில் சென்று பார்த்து ஆய்வு செய்யலாம்.
இந்தத் தேர்தல் முறையைக் குடவோலை முறை என்கிறோம் குடத்தில் பெயர் எழுதிய ஓலைகளை கட்டிப் போட்டு அதிலிருந்து ஒரு பெயரை எடுத்து அவரே தேர்ந்தெடுக்குப்பட்டவராகக் கொள்ளப்படுபவர். ஆதலின் இது குடவோலை சீட்டு முறை எனப்படும். தகுதியற்றோரை நீக்கி தகுதியுடையவர் 30 பேர் இருக்கலாம் அல்லது 40 பேர் இருக்கலாம் ஒவ்வொருவர் பெயரையும் ஒரு ஓலையில் எழுதி ஒரு குடத்தில் போடுவர். ஒரு சிறுவனை விட்டு ஒரு ஓலையை எடுக்கச் சொல்வர். 40 பேர் தகுதியுடையவராக இருந்தால் 40 பேர் பெயரும் குடத்தில் இருக்கும். யார் ஒருவர் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். அவர் நாட்டுக்காக ஒரு குறிப்பிட்ட காலம் உழைக்க வேண்டும். அடுத்த முறை அவர் பெயர் இடம் பெறாது. மற்றவர் பெயர் இடம் பெறும். இதனால் “என்னை தேர்ந்தெடு” என்ற பிரசாரம் இல்லை. தவறான வழியில் ஆட்சியை பிடிக்க முடியாது. யார் பெயர் வருகிறதோ அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கட்டாயம் நாட்டுக்காக ஒரு முறையாவது உழைக்க வேண்டும். இதனால் “யாரோ நிற்கிறான் நமக்கென்ன” என்று அலட்சியமாக யாரும் இருக்க முடியாது. அனைவருக்கும் பங்கு இருந்தது. தவறு செய்பவர்களை நீக்கவும் வழியிருந்தது.

இக்காலத்தில் தேர்தல்முறைகேடு, வோட்டுச் சாவடியில் முறைகேடு, வோட்டு எண்ணுவதில் முறைகேடு என்று செய்திகள் வருகின்றன. இது போன்ற குறைபாடுகள் வராமலிருக்க அக்காலத்தே வழி செய்திருக்கிறார்கள். குடவோலை எடுக்கும் முறை ஊர் மக்கள் அனைவரின் முன்னிலையில் நடைபெறும். ஊரில் பெரியவர்கள் மத்தியில் அக்குடம் வைக்கப்படும். குழுமியிருப்போரில் வயதானவர் எழுந்து நின்று பார்வையிடுவர். ஒரு சிறியவனை அழைத்து ஒரு ஓலை எடுக்க சொல்வர். ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ஓலையாக முப்பது குடும்புக்கு முப்பது ஒலை எடுக்கப்படும். எடுத்த ஓலையை ஊர் மத்யஸ்தர் கையில் கொடுப்பர். மத்யஸ்தர் தான் கையில் எந்த ஓலையையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிவிக்க தனது கையை அகல விரித்து காண்பித்து பின், அகல விரித்த கையில் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி அதில் எழுதியுள்ள பெயரை எல்லோரும் கேட்கும்படி வாசிப்பார். அவ்வோலையை மண்டபத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வாசிப்பர். வாசித்த அப்பெயர் சரிதான் என்ற பின்னர் அவர் தேரந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சேரந்தது ஊர்ச்சபை. இவ்வூர்ச் சபையர் சிறு குழுக்களாகப் பல பணிகளைக் கவனிப்பர். அக்குழுக்களுக்கு வாரியம் என்று பெயர். இளைஞர்கள் உடல் வலியுள்ளவர் கடுமையான பணிகளையும், வயதாலும் ஆற்றலாலும் முதிர்ந்தவர்கள் மேற்பார்வை புரியும் பணிகளையும் புரிவர். இவ்வாறுதான் ஏரி வாரியம், தோட்ட வாரியம் என்றெல்லாம் பல வாரியங்களில் சபையோர் பணிபுரிந்தனர்.
இவ்வாறு ஊர்தோறும் கிராமங்கள் தோறும் சோழர் காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட சபைகளே ஊராட்சி புரிந்தன. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கல்வெட்டு பெருமக்கள் என்று கூறுகிறது. இதனால் ஏரிகளும், குளங்களும் ஆண்டுதோறும் தூர் எடுக்கப் பெற்று நீர்நிலைகளாகத் திகழந்தன. ஏராளமான நீரோடுகால்கள் வெட்டப்பட்டு நீர்பாசனம் நிறைந்து திகழ்ந்தது. பல்லாயிரம் வேலி நிலங்கள் பண்படுத்தப்பட்டு பயிர் நிலங்களாக மாறின. செல்வம் செழித்தது. கல்வி மிகுந்தது. இயல் இசை நாட்டியம் முதலிய கலைகள் மிகுந்தன. அவற்றை பிரதிபலிக்கும் வகையில் கோயில் கட்டங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் ஆயிரக்கணக்கில் இன்றும் சான்று கூறுகின்றன. அடிப்படை ஊராட்சி தேர்தல் முறையில் நாடு முழுவதும் நிறைந்து விளங்கியதால் நாம் வலிவுள்ளவர்களாகத் திகழ்ந்தோம். எளியர் என நம்மைப் பிறர் நகையாமல் வலியர் என வணங்கும் நல்லோராய்த் திகழந்தோம். நம்மோரையே முதற்பகை எனக் கருதாது உட்பகையின்றி வாழ்ந்தோம் என்பது சோழர் கல்வெட்டுக்கள்.
ஒருவருடன் ஒருவருக்கும் ஒன்றினுடன் ஒன்றுக்கும்
வேறுவேறு பகைமை மனத்தின்றி விழைந்து காதலுடன் சேர
எல்லோரும் தனித்தனியே வாழ்ந்தனம் என இன்புற்று
எனப் புகழ்கிறது.
இஃது அன்றிருந்த தேர்தல் முறை. ஆயிரம் ஆண்டுகள் சுழன்று விட்டன. எவ்வளவோ மாற்றங்கள் சுழற்சிகள் வந்துள்ளன. ஆதலின் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ள தேர்தல் முறை இக்காலத்துக்கு பொருந்துமா எனில். பொருந்தும் பொருந்தாது என்று சொல்வதற்கு முன்னர் அடிப்படையிலாவது கிராமங்களில் இதை முயலலாமே! அதுதான் இல்லையெனில் கல்லுரிகளிலாவது பிரசாரம் இல்லாமல் கட்சிப் பகை இல்லாமல் மாணவர் தலைமையைத் தேர்ந்தெடுக்கலாமே! அதன் பின்னர் சொல்லலாமே இது பொருந்தும் பொருந்தாது என. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயமாக கூறலாம். அன்றிருந்த மக்கள் பொது வாழ்விலும், அரசியலிலும் கொண்டிருந்த விதித்திருந்த ஒழுக்கமும், தூய்மையும், ஆற்றலும், தியாகமும் இன்றுள்ளதா எனில் அது கேள்விக் குறியாகவே நிற்கும் என்பதில் ஐயமில்லை.

ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இந்த மக்கள் வாழ்க்கையினுடைய ஜனநாயக அரசியல் முறை என்பது மன்னர் காலத்திலேயே இவ்வளவு சிறப்பாக செயல்பட்டிகிறது. இந்த 21 ஆம்நூற்றாண்டில் எத்தனையோ வளர்ச்சி என்கிறார்கள் தொழில்நுட்பம் என்கிறார்கள் முழுவதும் சுய ஆதாயத்திற்கே பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களாக இருக்கிறது. அரசாங்கம் நடத்துகிறார்களா வணிகம் நடத்துகிறார்களா என்பதே கேள்விக்குறியாக நிற்கிறது. யார் யார் தேர்தலில் நிற்கலாம் அல்லது யார்யார் நிற்கக்கூடாது என்பதற்கான விதிமுறைகளை மட்டும் பாருங்கள். இந்த உத்தரமேரூர் கல்வெட்டை அரசியல் பயிலும் மாணவர்கள் கல்லூரியில் இருந்து சென்று ஏன் பார்த்து ஆய்வு செய்யக்கூடாது. உலகளாவிய அரசியல் பார்வைகளைக் கற்றுக் கொடுக்காமல் உள்ளூரில் தகுதியற்றவர்களாக்கி அவர்களை தெருவில் விடுவது என்ன வகையில் நியாயம்?

இன்றைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிடும்போது இதில் எவர் ஒருவருக்கும் எந்த அடிப்படை தகுதியும் இல்லை என்று தான் ஆகிறது. தமிழர்கள் ஜனநாயக முறையை எவ்வாறு போற்றி வந்தார்கள் என்பதற்கு அல்லது அந்த வரலாற்றை சகல யோக்கியதையுடன் திரும்பி பார்ப்பதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் யாராயினும் வெட்கப்படத்தான் வேண்டும். இன்னும் இதுபோக பல வகையான அறநெறி சார்ந்த ஜனநாயக சான்றுகள் நமக்கு மன்னர் ஆட்சி காலத்திலேயே கிடைக்கின்றன.

பாலாற்று கரை கல்வெட்டுக்கள், மக்கள் 
பிரதிநிதிகளின் சொத்து விபரங்களை அறிவிக்க வேண்டும் என்ற நிலை தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது எனத் தீர்மானிக்கிறது. 
ஜனநாயகம், நீதி நேர்மையை நிலை நாட்டிய மனு நீதி சோழன், 
‘’தேரா மன்னா செப்புவது உடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை ஆகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி நான்… கண்ணகி கோபத்தோடு நீதிகேட்டு இன்னொரு சிலம்பை தூக்கி எறிந்தாள்’’  கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள். தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவர்மனைவியானகோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். இப்படியான பல வரலாறுகள் நம்மிடம்
உண்டு.

இன்று எல்லாம் பொருள்வாதம்; எதற்கும் பணம். சீர்மிகு குடவோலை  கண்ட மண்  இன்று ஓட்டை விற்பனை செய்கிறது.

இன்றைய அரசியல் கட்சிகள் தங்கள் நடத்தும் நிகழ்வுக்கு ரூ 200-500, மது, பிரியாணி வழங்கி  மக்களை அழைக்கிறார்கள். கிரிமினல்கள் புகுந்த  இன்றைய சட்டமன்றம் ‘மந்திரிகள்’ , எம்பி, எம்எல்ஏக்கள், கவுன்சிலர்கள் என பதவிகளைப் பெற்று கொள்ளையடிக்கும் கூடாரங்கள் ஆகிவிட்டது.  மறைந்த குன்றக்குடி  அடிகளார் சொன்னதை போல ‘ஜனநாயகம் என்ற தேர் சகதியில் உள்ளது. அதை மீட்டு தரையில் நிறுத்தி  தேரைக் கழுவி சுத்தம் செய்த பின் அனைவரும் கூடி வடம் பிடிப்போம்’ என்றது போல இன்றைய ஜனநாயகத்தை மீட்டு சீர் செய்ய பேரளவு அறநிலைவாதிகள் கூடி செயல்பட வேண்டிய ஒரு அவசியத்தை இங்கே நாம் கட்டாயம் பேசி ஆக வேண்டியிருக்கிறது. இப்படியான மரபு சார்ந்த அறங்கள் ஒருபுறம் இருக்க இன்றைய பின் நவீன காலத்தின் இளைஞர்களுடைய போக்கு நடத்தைகள் மற்றும் அவர்களுடைய அரசியல் தெளிவு யாவும் விழலுக்கு இறைத்த நீர் போல் ஆகிவிட்டது.

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் மற்றும் தமிழ் மக்கள் இதை உணர்வர்களா?

#குடவோலை

#ஏதேன்ஸ்ஜனநாயகம்_ரோமகுடியரசு_விட_நம்_குடவோலை_மாண்புமானது!

#உத்தரமேரூர்
#தஞ்சைப்_பள்ளிப்பாக்கம்  #மானூர்

#Uttaramerurinscriptions
#Kudavolaisystem.
#kurrams_kottams. #Cholaadministration #LocalSelfGovernment 


கே. எஸ். இராதாகிருஷ்ணன்,

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-11-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...