Wednesday, November 1, 2023

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, பின் சென்னை மாகாணம் என்றும்; இன்றைய தமிழகம் அமைந்து 67ஆண்டுகள்…

#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, 
#சென்னைராஜதானி, பின் சென்னை மாகாணம்என்றும்;  









இன்றைய தமிழகம் அமைந்து67ஆண்டுகள்…



——————————————————-
இன்றைய தமிழ்நாடு அமைந்து நவம்பர் 1ம் தேதி (இன்று) 67 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இது நமக்கு மகிழ்ச்சியா? துக்கமா? என்று சொல்ல முடியாது. பல பகுதிகளை இழந்துள்ளோம். சில பகுதிகளைப் பெற்றுள்ளோம். இதனால் நமக்கு நதிநீர் மற்றும் வன வளங்களின் பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன.






சென்னை இராஜதானி என்று அழைக்கப்பட்ட ஆந்திரம், கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் இணைந்த மாநிலமாக இருந்ததை 1956ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மொழிவாரியாக சென்னை மாகாணம் என்று பிரிந்த பின்பு அறிஞர் அண்ணா ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு என்று பெயரிடப்பட்டது. தமிழர்க்கு சொந்தமான பல பகுதிகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுவிட்டன. இந்த ஆண்டு கடந்த காலத்தில் சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்ட தமிழகத்திற்கு பொன்விழா ஆண்டு ஆகும். கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்கள் தோன்றிய நாளை யொட்டி ஆண்டுதோறும் அந்த மாநில அரசுகள் விழாக்கள் நடத்தி வருகின்றன. ஆனால், தமிழகத் தில் இம்மாதிரி நிகழ்ச்சிகள் நடைபெறுவது இல்லை.




‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நல்உலகம்’
என்று தொல்காப்பியம் தமிழகத்தின் எல்லைகளை வரையறுத்து கூறுகிறது. ஆங்கிலேயரின் தவறான நிர்வாகத்தால் ஒவ்வொரு தேசிய இனம் மற்றும் மொழிவாரியாக மாநிலங்கள் அமையா மல் இருந்த நிலை ஏற்பட்டுவிட்டது. ஆங்கிலேயர் வங்கத்தை சூழ்ச்சியால் இரண்டாகப் பிரித்தனர். அன்றைக்கு காங்கிரஸ் கடுமையாக இச்சூழ்நிலையை எதிர்த்தது. இந்நிலையில், அய்க்கிய தமிழகம், விசாலா ஆந்திரம், நவக் கேரளம், அகண்ட கர்நாடகம், சம்யுக்த மகாராஷ்டிரம், மகா குஜராத் என மொழிவாரியான மாநிலக் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.

தெலுங்கு பேசும் மக்களுக்கு தனி மாநிலம் கோரி 1952இல் அக்டோபர் 13ஆம் நாள் பொட்டி ஸ்ரீராமுலு தொடங்கிய 65 நாள் உண்ணாவிரதம் டிசம்பர் 15இல் அவருடைய மரணத்தில் முடிந்தது. இப்போராட்டம் ஆந்திரத்தில் பெரும் புயலைக் கிளப்பி, 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதன் விளைவாக கர்நூலை தலைமையகமாகக் கொண்டு ஆந்திரம் தனி மாநிலமாக ஆக்கப்பட்டது. இருப்பினும் ஆந்திரர்கள் தமிழகத்திற்குச் சொந்தமான வேங்கடமலையையும் தன் வசப்படுத்திக் கொண்டது மட்டுமல்லாமல் மெட்ராஸ் மனதே என்ற கோஷம் வைத்து அர்த்தமற்ற முறையில் போராடினார்கள்.
சென்னை மாகாணம், தமிழகம் உருவாகியதற்கு பலரின் தியாகங்கள் அளப்பரியவை.

தமிழகத்தின் வட எல்லையன திருத்தணியும், திருப்பதியும் தமிழகத்திற்குப் பெற சிலம்புச் செல்வர் ம.பொ.சி.யின் போராட்டங்கள் இன்றைக்கும் வரலாற்றில் உள்ளன. வடக்கு எல்லைப் போராட்டத் தில் ம.பொ.சி. அவர்கள், கொ.மோ.ஜனார்த்தனம், சோமா. சுவாமிநாதன், ஆ.தாமோதரன், கிருஷ்ண மூர்த்தி, அ.லூயிஸ், மு.வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் ஆகியோருடன் திருப்பதி மீது படையெடுப்பு என்ற போராட்டத்தையும் பிரச்சார பணியையும் மேற்கொண்டார். மங்களம் கிழார் என்பவரின் அழைப்பை ஏற்று வடஎல்லைப் பகுதிக்கு புகைவண்டி மூலமாக திருப்பதி வரை செல்ல பயணப்பட்டார்.
ம.பொ.சி. திருப்பதி நுழைவைத் தடுக்க பலர் முனைந்தும் கீழ் திருப்பதியில் உள்ள குளக்கரை கூட்டத்தில் ம.பொ.சி. பேசும்பொழுது திட்டமிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கூச்சலிட்டு, மரங்களில் இருந்து கிளைகளை முறித்து வீசினர். அதைப் பொருட்படுத்தாமல் வேங்கடத்தை விட மாட்டோம் என்று ஒருமணி நேரம் கர்ஜித்தார். ம.பொ.சி. நடத்திய மொழிவாரி மாநிலப் பிரச்சினை வேகமடைந்து வெற்றிக் கொடியை நாட்டியது. ஆனால், திருப்பதி, சித்தூர், திருக்காளத்தி, திருத்தணி, பல்லவநேரி, கங்குந்திகுப்பம் போன்ற பகுதிகள் நியாயமாக தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று ஆவணங்களோடு மத்திய அரசுக்குத் தெரியப்படுத்தினார்.

09.04.1953இல் 24.4.1953 வரை கடை அடைப்பும் பொது வேலை நிறுத்தமும் தொடர்ந்து 15 நாள்கள் (மறியல், போராட்டம்) நடைபெற்றது. புத்தூர் கலவரத் தில் ம.பொ.சி.யை தாக்க சதிகளும் தீட்டப் பட்டன. அந்தக் கலவரத்தில் நெல்லையைச் சேர்ந்த ஒருவர் ம.பொ.சி.யைக் காப்பாற்றிய தாகவும் இவரை நெல்லை தமிழன் என்று ம.பொ.சி. போராட்ட வரலாற்றில் குறிப்பிடப் பட்டு உள்ளது. 1953ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் தேதி எல்லை தடையை மீறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப் பட்டு 6 மாத சிறைத்தண்டனை ம.பொ.சி. பெற்றார்.
திருத்தணி எல்லைப் போராட்டத்தில் சிலம்புச் செல்வர் ம.பொ.சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக தமிழக – ஆந்திர முதல்வர்கள் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசி வடவேங்கடம் போன்று திருத்தணியும் ஆந்திரர்களின் ஆளுமைக்குச் செல்லாமல் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. 

ஒரு காலத்தில் வடஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த சித்தூர், திருப்பதி ஆகிய வற்றை ஆந்திரர் எடுத்துக் கொண்டனர். இப்பிரச்சினை குறித்து திரும்பவும் திருப்பதியில் காமராஜரும், சஞ்சீவரெட்டியும் பேசியதன் விளைவாக தமிழக ஆந்திர சட்டமன்றங்களில் ஒரே நாளில் இதுகுறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ம.பொ.சி. அவர்கள் திருத்தணி எல்லைப் போராட்டம் மட்டுமல்லாமல் நாஞ்சில் நாடான கன்னியா குமரி மாவட்டத்தையும், செங்கோட்டை, கூடலூர், தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற போராட்டங்களுக்கும் துணை நின்றார்.
கன்னியாகுமரி, செங்கோட்டை தமிழகத்துடன் இணைக்கும் போராட்டத்தை வழி நடத்தியவர் பி.எஸ்.மணி ஆவார். சாம் நதானியெல், நேசமணி போன்ற போர்குணம் கொண்டோரின் தலைமை யில் இக்கோரிக்கை பிறப்பெடுத்தது. பி.எஸ்.மணி – அழைப்பு இருந்தாலும், அழைப்பு இல்லை என்றாலும் தமிழகத்தில் நடக்கும் அனைத்து மாநாட்டுக்கும் சென்று குமரியை தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என்ற தீர்மானங்களை முன்மொழிய வேண்டிக் கொள்வது அவரது சலியாத நடவடிக்கை ஆகும். பலர் மணியினுடைய கோரிக்கையை காதில் போடாமல் அவரை தவிர்த்த பொழுதும் கூட சற்றும் கவலைப்படாமல் தொடர்ந்து போராடினார். மணிக்கு ம.பொ.சி. அவர்களு டைய ஆதரவு கிடைக்கப்பெற்றது. 1954இல் ஜூனில் நேசமணி தலைமை ஏற்று குமரியில் போராட்டங்களை நடத்தினார். சிறை சென்றார். ம.பொ.சி. அச்சமயத்தில் மூணாறு சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டார். நேசமணி கைதைக் கண்டித்து ம.பொ.சி. குரல் கொடுத்தார். அச் சமயத்தில் திருவிதாங்கூரில் கல்குளத்தில் நேசமணி கைதைக் கண்டித்து மக்கள் பேரணி நடத்தினர்.

1948ஆம் ஆண்டு ராஜஸ்தானுக்கும் குஜராத்துக்கும் ஏற்பட்ட எல்லை சிக்கலில் சிரோதி பகுதியை குஜராத்துக்கு அன்றைய துணைப் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் படேல் மாற்றம் செய்ததை தினமணி கார்ட்டூன் படமாக வெளியிட்டது. அந்தக் கார்ட்டூனை 1000 தாள்களில் அச்சிட்டு ஏன் திருவிதாங்கூரை தமிழகத்தில் சேர்க்கக் கூடாது என்று நியாயம் கேட்டார் மணி.
1950இல் கன்னியாகுமரி எல்லைப் போராட்டம் மிகவும் வேகம் அடைந்தது. இதுகுறித்து கொச்சி முதல்-அமைச்சரும் அன்றைய தமிழக அமைச்சர் பக்தவத்சலமும் பாளையங்கோட்டையில் சந்தித்துப் பேசினர். ஆனால், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை மணி ஏற்றுக் கொள்ளாமல் கேரளத்துடன் குமரி மக்கள் இருக்க முடியாது என்பதையும் எந்த சமசர திட்டத்திற்கும் தயார் இல்லை எனத் தெரிவித்தார். குஞ்சன் நாடார் போன்ற பல்வேறு போராட்ட தளபதிகள் இப்பிரச்சினையில் அணிவகுத்தனர். அரசு அலுவலகங்கள் முன்னால் மறியல், பொதுக் கூட்டங்கள், மறியல்கள் போன்றவை நித்தமும் குமரி மாவட்டத்தில் நடைபெற்றன. 1954 ஆகஸ்ட் 11 அன்று 16 தமிழர்கள் போலீசாரால் சுடப்பட்டு மாண்டனர்.
நேசமணியின் தொடர் போராட்டம் நிறுத்தப்பட்ட பின்பும் குஞ்சன் நாடார் போன்ற தளபதிகள் போலீசாரின் குண்டர் தடியால் அடித்து உதைக்கப்பட்டனர். அச்சமயம் தலைமறைவாக இருந்த போராட்டத்தை நடத்தி வந்த மணியை திருநெல்வேலி மாவட்டத்தில் கேரள போலீசார் கைது செய்து திருவனந்தபுரம் சிறையில் வைத்தனர். இதுபோன்று செங்கோட்டையிலும் போராட்டங்கள் நடத்தி கரையாளர் கைது செய்யப்பட்டு திருவனந்தபுரம் சிறையில் வைக்கப்பட்டார்.
இறுதியாக காமராஜரும் திருவிதாங்கூர் – கொச்சி உள்ளடக்கிய கேரள முதல்-அமைச்சர் மனம்பள்ளி கோவிந்தமேனன் ஆகியோர் பேசியபின் தேவிக்குளம் – பீர்மேடு பகுதிகளை கேரளம் எடுத்துக்கொண்டது. தேவிகுளம் – பீர்மேடு கேரளத்திற்கு சென்றதற்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. கன்னியாகுமரி – செங்கோட்டை தமிழகத்தில் இணைந்தது. இருப்பினும் கேரளம் பெரியாறு அணையை கையகப்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் இருந்தபொழுது காமராஜர் அதற்கு இடம் கொடுக்கவில்லை. மாநில புனரமைப்புக் குழு பசலிக் கமிஷன் உறுப்பினராக இருந்த பணிக்கரால் தேவிகுளம் – பீர்மேடு தமிழகத்தை விட்டுப் போய்விட்டது என்ற குற்றச்சாட்டும் அப்பொழுது எழுந்தது.

நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட இணைப்பு விழாவில் 1956 நவம்பர் 1ஆம் தேதி காமராசர் கலந்து கொண்டார். அதே நாளில் செங்கோட்டை இணைப்பு விழாவிற்கு செங்கோட்டையில் சி.சுப்பிரமணியன் பங்கேற்றார். நாகர்கோவிலில் நடந்த விழாவிற்கு தியாகி பி.எஸ்.மணி அவர்களை அழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதைப் பொருட்படுத்தாமல் மணி இரண்டு நாள் கழித்து நாகர்கோவிலில் ம.பொ.சி., என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரைக் கொண்டு குமரி மாவட்டம் இணைப்பு விழாவை சிறப்பாக நடத்தினார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியிலும் சிலர் ஆதரவாக இருந்தனர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பொது உடைமைக் கட்சியைச் சார்ந்த ஜீவா போன்ற தலைவர்களும் மொழிவாரியாக தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வேண்டும் என்று தியாகி சங்கரலிங்கனார் 77 நாள்கள் உண்ணாநோன்பு இருந்து தன்னுடைய உயிரையே அர்ப்பணித்தார். தனது கோரிக்கையை கம்யூனிஸ்ட் தலைவரான ஐ.மாயாண்டி பாரதிக்கு கடிதம் மூலமாகத் தெரியப்படுத்தினார். தமிழ்நாடு என்ற பெயர் சூட்டவேண்டும் என்ற கோரிக்கையை அண்ணா முதல்வராகி நிறை வேற்றினார். தமிழ்நாடு என்ற பெயரிடக் கோரி நாடாளுமன்ற மக்கள் அவையில் பேரறிஞர் அண்ணாவின் கோரிக்கையை ஆதரித்து பூபேஷ் குப்தா குரல் கொடுத்தார்.

தட்சணப்பிரதேசம் என்று தக்கண பீடபூமி மாநிலங்கள் ஒன்றிணைக்க பண்டித நேரு நடவடிக்கைகள் எடுத்தபொழுது முதல் கண்டனக் குரல் அன்றைய முதல் காமராஜரிடம் இருந்து எழுந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் அமைய வேண்டும் என்று காமராஜர் விரும்பினார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் குரல் காமராஜரின் எதிர்ப்புக்கு வலு சேர்த்தது.
தமிழகத்திற்கும் கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. ஆகும். கோவை மாவட்டம் முதுமலை தொடங்கி தெற்கே நெய்யாற்றங்கரை – கொல்லங்ககோடு வரை நீண்டுள்ளது. தமிழக கேரள மாநிலங்கள் எல்லை தூரம் 203 கி.மீ. அளவில்தான் இதுவரை நிர்ண யிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 கி.மீ. தூரம் எல்லைகள் நிர்ணயிக்கப்படாமலே இருக்கின்றது. இதற்கு கேரளா அரசு ஒத்துழைப்புத் தரவில்லை. 

இதனால் தமிழகத்தில் இருந்தாலும் தமிழகப் பயணிகள் சித்ரா பௌர்ணமியில் கண்ணகியை வணங்கச் செல்லும்போது கேரள காவல் துறையினரால் அத்துமீறி தாக்கப்படுகின்றனர். அண்டை மாநிலங்களோடு நதிநீர்ப் பிரச்சினை யிலும், சமீபத்தில் கர்நாடகத்தோடு ஒக்கனேக்கல் பிரச்சினையில் தமிழகத்தின் நியாயங்களை வெளிப்படுத்தினாலும் கர்நாடகத்தின் எல்லை அத்துமீறல் தொடர்ந்தவண்ணம் உள்ளது.
கடந்த காலங்களில் தமிழர் இழந்த நிலங்கள் ஆந்திரத்திலும், கேரளத்திலும், கர்நாடகாவிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள தாளவாடி கர்நாடகத்தில் சேர்க்க வாட்டள் நாகராஜ் தேவையற்ற போராட்டங்களை நடத்தி வருகிறார். ஏற்கனவே கொள்ளேகால், பெங்களூர், கோலார் ஆகிய பகுதிகளை கர்நாடகத்திடம் இழந்து உள்ளோம். 

1956இல் தமிழகத்தின் விருப்பத்திற்கு மாறாக நெய்யாற்றங்கரை, நெடுமாங்கரை, தேவிகுளம் – பீர்மேடு கேரளத்தில் முறைகேடாக சேர்த்து விட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், தோவாளையின் தெற்கேயிருந்து தமிழகத்தோடு இணைந்தது. நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு இழந்ததால் இன்றைக்கு காமராஜர் ஆட்சியில் நாம் கட்டிய நெய்யாறு அணையை கேரளா மூடிவிட்டது. தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை இழந்ததால் முல்லைப் பெரியாறில் கேரளா முரண்டு பிடிக்கின்றது. அது மட்டுமல்லாமல் நெல்லை மாவட்டத்தின் அடவி நயனாறு, உள்ளாறு, செண்பகவல்லி, விருதுநகர் மாவட்டம் அழகர் அணை திட்டம், பாலக்காடு பகுதிகளை இழந்ததால் கொங்கு மண்டலத்தில் சிறுவாணி, பம்பாறு, பாண்டியாறு-புன்னம்புழா, பரம்பிக்குளம்-ஆழியாறு பிரச்சினைகள் இன்றைக்கும் கேரளாவோடு தலைதூக்கி நிற்கின்றது.

கர்நாடகத்தோடு கொள்ளேகால், மாண்டியா, கோலாறு இழந்ததால் காவிரி, தென்பெண்ணை, ஒகேனக்கல் பிரச்சினை, ஆந்திரத்தில் சித்தூர், நெல்லூர், திருப்பதி இழந்ததால் பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரி பிரச்சினை. கணேசபுரத்தில் தடுப்பணை கட்டப்படுகிறது. 

இவ்வளவு நதிநீர் ஆதாரங்களும், இயற்கை ஆதாரங்களும் நம்மிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் நாம் இழந்த மண்ணால். இந்தத் தருணம் கொண்டாட்டமா? சிந்திக்கவா? என்று தெரியவில்லை. ஆனால் தென் மாவட்டங்களில் தமிழகத்தின் கலாச்சார பண்டைய தலைநகரம் ஏதென்ஸ், ரோம் நகர்களைப் போன்ற மதுரையைத் தலைநகராகக் கொண்டு தென் தமிழகம் ஏன் அமையக்கூடாது என்ற கோரிக்கையும் எழுந்து வருகின்றது.
தமிழகத்தின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், இன்னொரு மாநிலம் அமைந்தால் பல சலுகைகளும், கிடைக்கும் என்று சிலர் வலியுறுத்துகின்றனர். மத்திய அரசின் பகுதியான புதுச்சேரிக்கே சிறப்புச் சலுகை இருக்கும்போது, தமிழ் பேசும் இன்னொரு மாநிலம் அமைந்தால் சில உரிமைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர். இந்த வகையில் தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற கோரிக்கையும் விவாதத்துக்கு உரிய பொருளாகும். தென் தமிழகம் அமைந்தால் நிர்வாகம், மக்கள் நலப் பணிகள் என பல நன்மைகளும் உள்ளன.

காலப் போக்கில் அரங்கன் பள்ளிகொண்ட காவிரியின் தென்கரை திருவரங்கரத்திலிருந்து குமரி முனையில் ஐயன் வள்ளுவன் சிலை வரை தென் தமிழகம் அமைய வேண்டும் என்ற சிலரின் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்று நீர்பூத்த நெருப்பாக உள்ளன. 1998லிருந்து மத்திய அரசு சிறு மாநிலங்கள் அமைய வேண்டும் என்று வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது திட்டங்கள் தீட்டப்பட்டது. உள்துறை அமைச்சர் அதற்கான முழு முயற்சிகளை மேற்கொண்டு உத்தராஞ்சல், ஜார்கண்ட், சட்டீஸ்கர் வரை பல மாநிலங்கள் அமைந்தன. தற்போது தெலுங்கானாவும் தனி மாநிலமாகிவிட்டது. ஒரே மொழி பேசும் மாநிலத்தை நிர்வாக ரீதியாக பிரிக்கலாம் என்று மத்திய அரசும் கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளது.
தியாகங்கள் செய்து மீட்டுத் தந்த தணிகை, குமரி, செங்கோட்டை ஆகிய பகுதிகளோடு தமிழகத்தோடு இணைக்க போராடிய தியாகச் செம்மல்களின் கீர்த்தியை நினைவில் கொள்வோம். நாம் இழந்த மண்ணை எப்படி மீட்பது என்பதும் இப்போது சிந்திக்கப்படவேண்டிய விடயமாகும்.

விதியே விதியே என் தமிழச் சாதியை
என்செயக் கருதியிருக்கின் றாயடா?
ஆப்பிரிக் கத்துக் காப்பிரி நாட்டிலும்
தென்முனை யடுத்த தீவுகள் 
பலவினும்
பூமிப் பந்தின் கீழ்ப்புறத் துள்ள
பற்பல தீவினும் பரவயிவ்வெளி்ய
தமிழச் சாதி, தடியுதை யுண்டும்
காலுதை யுண்டும் கயிற்றடி யுண்டும்
வருந்திடுஞ் செய்தியும் மாய்ந்திடுஞ் செய்தியும்
பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது
செத்திடுஞ் செய்தியும் பசியாற் சாதலும்
பிணிகளாற் சாதலும் பெருந்தொலை யுள்ளதம்
நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும
இஃதெலாம் கேட்டும் எனதுளம் அழிந்தில…

விதியே! விதியே! தமிழச் சாதியை
என்செயக் கருதி யிருக்கின் றாயடா?
என்று ஒரு நூற்றாண்டுக்க முன்னர் மகாகவி பாரதி பாடியது இன்றும் சரியாகவே இருக்கிறது!
****
தமிழ்நாடே வாழ்க- 
எம்தாய்நா டே வாழ்க.
அமிழ் தா கியஇய லிசைகூத் தென்னும்
தமிழா கிய உயிர் தழையும் விழுமிய.
தாய்நாடே வாழ்க!
இலங்கை சிலம்பும் குமரித் திருவடி தென்பால்
எழிலார் விந்தக் குழலார் வேங்கடம் வடபால்
கலங்கொள் முத்துக் கடலும் பவழக்
கடலும் கிழக்கு மேற்கில் உடுக்க
தமிழ்நாடே வாழ்க!
குன்றுகள் வான்தொறும் எரிமலை அறியாய்!
பெருநில முடையாய் நடுக்க மறியாய்!தென்றற் குளிரும் செங்கதிர்ச் செல்வமும்
தண்ணீர் வளவயல் செந்நெலும் கொழிக்கும்
தமிழ்நாடே வாழ்க!
-பாவேந்தர் பாரதிதாசன்-

                        (2)
(தமிழகம் இழந்தது அதிகம். எல்லைகள் வரையறுக்கப்பட்டு 67 ஆண்டுகள் ஆகிறது).தமிழக எல்லைகள் அமைந்த மொழிவாரி மாநிலமாக இன்றைய தமிழகம் அமைக்கப்பட்டு இன்றோடு 66 ஆண்டுகள் ( நவம்பர் 1, 2018 ) முடிகிறது. நவம்பர் 1, 1956ம் ஆண்டு இன்றைய தமிழகம் அதன் எல்லைகளோடு பிரிக்கப்பட்டு அமைந்தது.
‘தமிழகம் 50’ விழாவை 12 ஆண்டுகளுக்கு முன் மயிலை பாரதிய வித்யா பவனில் விழா எடுத்தேன். ‘தமிழ்நாடு 50’ என்ற எனது நூலும் வெளியிடப்பட்டது.
அந்த விழாவில் வடக்கு எல்லை போராட்ட தியாகிகளான சிலம்புச் செல்வர் ம.பொ.சி, விநாயகம், மங்கலங்கிழார், கொ. மோ. ஜனார்த்தனம், சோமா.சுவாமிநாதன், ஆ. தாமோதரன், சி.வேங்கடசாமி, ஆ.வை. கிருஷ்ணமூர்த்தி, அம்மையப்பன், விசுவநாதன், அ. லூயிஸ், மு. வேணுகோபால், தங்கவேலு, ஆறுமுகம், ஜி.சுப்பிரமணியம் போன்றோரும், தெற்கெல்லை குமரி மாவட்டத்தை தமிழகத்தோடு இணைக்க பாடுபட்ட பி.எஸ்.மணி, மார்ஷல் நேசமணி, குஞ்சன் நாடார், ஏ.அப்துல் ரசாக், தாணுலிங்க நாடார், டாக்டர். மத்தியாஸ், பொன்னப்ப நாடார், சிதம்பர நாதன் நாடார், போன்றவர்களையும், நெல்லை மாவட்ட செங்கோட்டையை தமிழகத்தோடு இணைய போரிட்ட செங்கோட்டை கரையாளர் அவர்களையும், தமிழ்நாடு என்று பெயர் வேண்டும் என்று உண்ணா நோன்பிருந்த தியாகி சங்கரலிங்கனார் ஆகியோரின் சிலரது படங்களையும், அவர்களின் தியாகத்தையும் இநத நிகழ்ச்சியில் நினைவு கூறப்பட்டது.
இதே நாளை ஆந்திரம் விசால ஆந்திரம் என்றும், கேரளம் நவகேரளம் என்றும், கர்நாடகா சம்யுக்த கர்நாடகம் என்றும், மகாராஷ்டிரம் சம்யுக்த மகாராஷ்டிரம் என்றும், குஜராத் மகா குஜராத் என்றும் கொண்டாடுகின்றன.
ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை இந்த நாள் அமைந்தது குறித்து இதுவரை கவனிக்கப்பட வில்லை. 2005ல் ஆனந்த விகடனில் இதுகுறித்து நான் எழுதிய கட்டுரையும் வெளியானபின்; நான் எடுத்த விழாவிற்கு பிறகே இதுகுறித்து தமிழக மக்கள் அறிந்து கொண்டனர்.
தொடர்ந்து 12 ஆண்டுகளாக இந்த நிகழ்வினை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தியும் கலந்து கொண்டும் வருகிறேன். கடந்த ஆண்டு இதே நாளில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ என்ற தலைப்பில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன்.
தெற்கே கன்னியாகுமரி அருகே நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு பகுதிகளை இழந்து அந்த பகுதி கேரளத்திற்கு சென்றதால் நெய்யாறு அணையில் தமிழகத்தின் உரிமை கேள்விக்குறியாக உள்ளது. நெல்லை மாவட்டம் அடவிநயினார், உள்ளாறு, செண்பகவல்லி அணை பிரச்சனை, அழகர் அணை பிரச்சனை (ஸ்ரீவில்லிப்புத்தூர்), தேவிகுளம், பீர்மேடு இழந்ததால் முல்லை-பெரியாறு பிரச்சனை, கொங்கு மண்டலத்தில் பாலக்காட்டு பகுதியில் உள்ள தமிழர்களுடைய கிராமங்களின் இழப்பால் பம்பாறு, சிறுவாணி, ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – புன்னம்பழா போன்ற நதிதீரப் பிரச்சனைகள், கர்நாடகத்திடம் கொள்ளேகால் போன்ற தமிழர்கள் பகுதிகளை இழந்த்தால் காவிரி, ஒகேனக்கல், தென்பென்னையாறு பிரச்சனை, ஆந்திரத்திடம் சித்தூர், நெல்லுர் பகுதிகளை இழந்த்தால், பாலாறு, பொன்னியாறு, பழவேற்காடு ஏரிப் பிச்சனைகள் ஏற்பட்டுள்ளது. கேரளத்தில் அட்டப்பாடி பிரச்சனை, கன்னியாகுமரி மாவட்டத்தின் எல்லையோர பிரச்சனையில் கேரள அரசு குடிமைப் பொருள் வழங்கும் அட்டை (ரேசன் அட்டை) வழங்கியது. இப்படியாக நாம் இழந்த பகுதிகளால் பல சிக்கல்களை கடந்த 66 ஆண்டுகால் சந்தித்து வருகிறோம். பலர் போராடவில்லை என்றால் திருத்தணி நம்மைவிட்டு ஆந்திரத்ற்கு செல்கிறோன். நமது எல்லைப் போராட்ட தலைவர்களையும், தியாகிகளையும் நினைவுகூற வேண்டிய நாள் இன்று.
கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைய பல்வேறு போராட்டங்களில் துப்பாக்கிச் சூடும் நடந்ததுண்டு. அந்த தியாக வரலாறையெல்லாம் நாம் நினைவு கூறவேண்டும்.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதியில் மூன்று பேர் பலியாயினர்.�1. ஏ. தேவசகாயம், மங்காடு,�2. தி. செல்லையா, கீழ்க்குளம்,�3. கத்திக்குத்தில், பாகோடுவை சார்ந்த ஒருவரும் பலியானார்.�1950-ல் குமரி மாவட்டத்தில் போராட்டங்கள் வேகமெடுத்தன. இதற்கிடையில் தமிழக அமைச்சர் பக்தவச்சலமும், கொச்சி முதலமைச்சர் பாளையங்கோட்டையில் சந்தித்து சில முடிவுகள் எடுக்கப்பட்டபோது, குமரி மாவட்ட போராட்டக் குழுவினருக்கு அது உடன்பாடாக இல்லை. இதை எதிர்த்து 11/08/1954இல் குமரி மாவட்டத்தில் மறியல்களும், பொதுக் கூட்டங்களும் நடந்தது. அன்று காவல் துறையினர் 16 பேர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள்.
1. புதுக்கடை ஏ. அருளப்பன் நாடார்�2. கிள்ளியூர் எம். முத்துசாமி நாடார்�3.. தோட்டவாரம் எம். குமரன் நாடார்,�4. புதுக்கடை எம். செல்லப்ப பணிக்கர்,�5. தேங்காய்ப்பட்டணம் ஏ. பீர்முகமது,�6. தொடுவட்டி சி. பப்புப் பணிக்கர்,�7. நட்டாலம் எஸ். இராமையன் நாடார்,�8. மணலி, தோட்டவிளை ஏ. பொன்னப்பன் நாடார்�9. தோட்டவிளை, மணலி எம். பாலையன் நாடார்.
மேலும் இப்போராட்டத்தில் சங்கரன்நாடார் என்பவர் கிணற்றில் வீசிக் கொல்லப்பட்டார். வண்டி ஏற்றி ஒருவர் கொல்லப்பட்டார். பனை உச்சியிலிருந்து ஒருவர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டார். மொத்தம் 36 பேர் பலியானதாக தகவல்கள். பலர் கை, கால்களை இழந்தனர். குமரி மாவட்டமே அப்போது பதட்டமாக இருந்தது.
குமரி மாவட்டம் இரணியல் காவல் ஆய்வாளர் திரு. வி.எம். ஜார்ஜின் உத்தரவின் பேரில் இயங்கிய சிறப்பு தனி காவல் படை, காட்டுமிரான்டித் தனமாக நடந்து கொண்டது.
ஒரே நாளில், மாங்கரை, கொட்டேத்தி, பாலப்பள்ளம் ஆகிய இடங்களுக்குச் செல்லும் தெருக்களில் சென்று கொண்டிருந்தவர்களில் 50-க்கும் மேற்பட்டவர்கள் மீது லத்தியால் அடித்தனர். திக்கணம்கோட்டை வரும்போது பள்ளியை விட்டு வீட்டிற்கு திரும்பிய மாணவர்களிடம் அச்சத்தை உருவாக்கியது.
வடிவேல் என்ற மாணவன் சவரிமுத்து என்பவரின் வீட்டில் புகுந்து ஒளிந்துகொண்டார். போலீஸ் படை வீட்டுகுள் புகுந்துவிட்டதை கண்ட மாணவன் உயிருக்குப்பயந்து வெளியே சாடி ஓடிவிட்டான். அந்த பையன் யார் என்று சவரிமுத்துவிடம் போலீஸ் ஆய்வாளர் கேட்டார். தனக்குத் தெரியாது என்று சவரிமுத்துக் கூறியதால் தனி போலீஸ் படையினராலும், ஆய்வாளராலும் லத்தியால் அடித்து உதைக்கபட்டார் சவரிமுத்து. குறுக்கிட்ட அவன் சகோதரனும் தாயும் அதேபோன்று தாக்கப்பட்டனர். இச்செயலை கண்டித்த, திருமண வயதுக்கு வந்த, அவனது இளைய மகள் கன்னத்தில் அறையப்பட்டாள்.
அவளது காதில் கிடந்த அணிகலன் துண்டுதுண்டாக நொறுங்கியது. மூன்று பற்களும் ஆட்டம் கொடுத்தன. 10 தினங்களுக்கு முன் தனது 11-வது குழந்தையைப் பெற்றெடுத்த அவன் மனைவி இரக்கம் காட்டும்படி கெஞ்சினாள். அவள், பூட்ஸ் காலால் நெஞ்சில் உதைக்கப்பட்டாள். முடிவில், சவரிமுத்து போலீஸ்வேனில் கொண்டுசெல்லப்பட்டார். கொட்டேத்திச் சந்தையில் போலீசார் புகுந்து கலகம் விளைவித்தனர். அன்றாட பொருட்களை வாங்கவும் விற்கவும் அங்கு கூடியிருந்த 1000-க்கும் மேற்பட்ட பெண்களை துரத்தி அடித்தனர். பெண்கள் அலங்கோலமான முறையில் உயிருக்குப்பயந்து அங்குமிங்குமாக ஓடினர். இப்படியான ரணங்களும், அவலங்களும் அன்றைக்கு குமரி மண்ணில் நடந்தன.
கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம், செங்கோட்டையில் சரிபாதி என நாலரைத் தாலுகாக்கள் திருவிதாங்கூர் பகுதிகளில் தமிழகத்தோடு இணைந்தன. குமரி மாவட்ட எல்லைப் போராட்டத்தில் பி.எஸ்.மணி, நேசமணி போன்றோர் செய்த தியாகங்களை எல்லாம் மறக்க முடியாது.
விடுதலைப் போரில் போராடினோம். விடுதலை பெற்றோம். தமிழர் மண்ணை மீட்க போராடிய போது, தமிழகத்தின் குரலை மத்திய அரசு புறந்தள்ளியது. நம்முடைய நியாயங்கள் மறுக்கப்பட்டன. நம்முடைய தமிழ் மண்ணை கேரளம், கர்நாடகம், ஆந்திரத்துடன் இழந்தோம். இறுதியாக கச்சத்தீவையும் இழந்தோம். இப்படியெல்லாம் மண்ணை இழந்து  66 ஆண்டுகள் கடந்துவிட்டன.

*****

தமிழ்நாடு நாள் .
 சிலரின்  பொய்யும்  புரட்டும்..
-------------------------------------------------

முதல் மொழிவாரி மாநில கோரிக்கை ஒரிய மக்களிடம் எழுந்தது. 1895 தொடங்கி 1935-ல் ‘ஒரிஸா’ என்ற மொழிவழி மாகாணத்தைப் பெற்றார்கள். காங்கிரஸ் ஆதாரித்த
மொழிவாரி மாநில கோரிக்கையக் அம்பேத்கர் ஏற்றுக்கொள்ள வில்லை.

அதற்கடுத்து, மராட்டிய மொழிவழி மக்கள் ‘மாகாண கோரிக்கை 1906-ல் தொடங்கினார்கள். பெற்றார்கள். சுதந்திரப்போரில் பங்கெடுத்த பாலகங்காதர திலகர்கூட அந்த கோரிக்கை போராட்டத்தில் 1919-களில் பங்கெடுத்தார். 

தென்னகத்திலும் அந்த ‘மொழிவாரி’ மாகாணம் குரல் 1915-களிலேயே ஒலிக்கத் தொடங்கியது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, ‘மொழிவாரி’ மாநிலம் என்பதை ஏற்கிறது. விவாதிக்கின்றது. 1921-ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி என மொழி வழியிலேயே கட்சியின் மாகாண கட்டமைப்பை ஏற்படுத்தியது. பிறகு மாகாணங்களுக்கு ‘சுயாட்சி அதிகாரமும் வேண்டும் என (1921-ல்) தீர்மானத்தை (பெல்காம்) போடுகிறது

காங்கிரஸ் கட்சியின் மொழிவாரி கட்சி கட்டமைப்பில், திருத்தனி, திருப்பதி நெல்லூர் ஆகிய பகுதிகள் ஆந்திர காங்.கமிட்டி பகுதிக்குள் சேர்த்தார்கள். அதை தமிழ்நாடு காங்.கமிட்டி தலைவராக இருந்த சத்தியமூர்த்தி எதிர்த்தார்.

சி. சங்கரன் நாயர் அவர்கள், சென்னை ராஜதானி மாகாணத்தில் உள்ள பத்து மாவட்டங்களை தனியாக பிரித்து சுயாட்சி (தனி மாநிலம்) வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தை 1926-ல் மத்திய சட்டப்பேரவையில் கொண்டு வந்தார். அது தோற்கடிக்கப்பட்டது.

சென்னை மாகாணத்தின் பிரீமியர் அமைச்சராயிருந்த இராஜாஜி இந்தியை (1937-ல்) திணித்தார். அப்போது , மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தரபாரதி, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், ஈழத்து அடிகளார் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் தலைமையில் தீவிர எதிர்ப்பு போராட்டம் எழுந்தது. 

பெரியார், காங்.ஆட்சிக்கு ஆதரவாக இந்தியை ஆதரித்தார்.

தமிழ் அறிஞர்கள் அவரை சந்தித்து இதில் உள்ள பாதிப்புகளை-அபாயத்தை எடுத்துச் சொல்லி விளக்கிய பிறகு பெரியாரும் இந்தியை எதிர்க்கத் தொடங்கினார். (ஆதாரம்:ஈழத்து அடிகள் எழுதிய ‘இந்தி எதிர்ப்பு போராட்டம்)

தொடர்ந்து, சென்னை கடற்கரையில் இந்தி எதிர்ப்பு மாநாடு (11,9.1938) மறைமலை அடிகளார் தலைமையில் நடந்தது. அதில்தான் “தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற தீர்மானத்தை மறைமலை அடிகளார் முன்மொழிய. பெரியாரும், நாவலர் சோமசுந்தரபாரதியும் வழிமொழிந்தார்கள். 

ஆனால், அடுத்த ஆண்டே ஈவெரா, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ கொள்கையில் இருந்து கிரேட் எஸ்கேப்பானார். அதாவது 1939-ல் ஆந்திர தெலுங்கர்கள் ஆதிக்கத்தில் இருந்து வந்த ‘நீதிக்கட்சியின் தலைமை’ பெரியார் கைக்கு வந்தது.

அதை தலையில் தூக்கிக் கொண்டு, ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என்ற முழக்கத்தை கைவிட்டுவிட்டு “திராவிட நாடு” என்ற புது முழக்கத்தை தூக்கிக் கொண்டார். 

தமிழ்நாடு தமிழர்களுக்கே என்ற கோரிக்கையை, ஈவெரா ‘திராவிட நாடு’ கோரிக்கையை வைத்து மடைமாற்றம் செய்தார். இது ஒரு மோசடி.

பிறகு 1946-களில் மா.பொ.சி. அவர்கள் தீவிரமாக களம் இறங்க ‘தமிழ்நாடு’ கோரிக்கை மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. அப்போது தொடங்கி 1956 வரை, பெரியார், 'திராவிட நாடு' கோரிக்கையோடு, தமிழர்களின் கோரிக்கைகளுக்கு எதிராகவே பேசிக் கொண்டிருந்தார். 

எப்படியாக…

“தமிழ் நாட்டை தனியாகப் பிரிக்க வேண்டும் என்பது தமிழ் அரசு, தமிழராட்சி, தமிழ் மாகாணம் என்று பேசப்படுவன எல்லாம், நம்முடைய சக்தியை குலைப்பதற்காகவும், குறைப்பதற்காகவும் செய்யப்படுகிற காரியங்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும்” என்று (11.1.1947 ) தனது விடுதலை ஏட்டில் அறிக்கை விடுக்கிறார்.

“மொழிவழி மாகாணங்கள் பிரிவதில் உள்ள கேட்டையும் விபரீதத்தையும் முன்னரே பல தடவை எடுத்துக்காட்டி உள்ளோம். மீண்டும் கூறுகின்றோம். மொழிவழி மாகாண கிளர்ச்சியில் தமிழர்கள் கலந்துகொள்ள வேண்டாம்” (21.4.1947-விடுதலை)

“மொழிவாரி என்பதை பற்றி சில சொல்கிறேன். மொழி மீது ஒரு நாடு எதற்காக பிரியவேண்டும்? ஜாதியின் மீது, மதத்தின் மீது, இனத்தின் மீது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு” (1953 விடுதலையில் பெரியார்)

இப்படியாக, 1939- தொடங்கி பெரியார் பேசி வந்தார். (இந்த பெரியாரைத்தான் தமிழர் தலைவர் என்கிறார்கள்)

இங்கே ஒரு விடயத்தை நாம் மறந்துவிடக் கூடாது. 

இதே காலகட்டத்தில், ‘விசால ஆந்திரா, ஐக்கிய கேரளம், தனி கர்நாடகம்’ என்ற கோரிக்கை வலுத்தபடி இருந்தது. அவர்களைப் பார்த்து, “முட்டா பசங்களா, தனி மாநிலம் கேட்பது திராவிட நாடு ஒற்றுமையை சீர்குலைக்கும், எவனாவது மொழிக்காக தனி மாநிலம் கேட்பானா“ என்று பெரியார்  கேட்கவில்லை, எழுதவுமில்லை.

ஆனால்,தமிழர்களுக்குதான் அப்படி சொன்னார், எழுதினார்.

1952 அக்டோபர் 19-ம் தேதி ஒரு சம்பவம் நடத்தது. 

சுதந்திரப் போராட்ட தியாகியான பொட்டி ஸ்ரீராமுலு, தனி ஆந்திர மாநிலம் கோரிக்கைக்காக சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார். 82 நாட்களுக்கு பிறகு டிசம்பர் 15-ல் இறந்து போகிறார். சென்னைக்குள்ளாக இறுதி ஊர்வலம். பெரும் கலவரம், தமிழர்களுக்கு பொருட்சேதம், உயிர்சேதம் நடக்கிறது.

பிரதமர் நேரு படிந்தார். உடனே ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என்கிறார்.

அதன் பேரில் 1953- அக்டோபர் 1-ம் தேதி கர்நூலை தலைநகராகக் கொண்டு ஆந்திர மாநிலம் அமைக்கப்பட்டது. அப்போது ஐதராபாத் நிஜாம் அரசின் கீழ் இருந்த தெலுங்கானா பகுதி ஆந்திராவுடன் சேர்க்கப்படவில்லை.

தொடர்ந்து,  தமிழ் அறிஞர்கள் மத்தியில் ‘தமிழ்நாடு கோரிக்கை எழுந்தபடியே இருந்தது. இதற்கிடையில் மாநில எல்லை பிரிப்பு விடயமும் நடக்கின்றது. சென்னை திருத்தனி, திருப்பதி, சித்தூர் ஆகிய பகுதிகள் ஆந்திராவுடன் சேர வேண்டும் என்ற போராட்டம் தீரவிரமடைகிறது.

இந்த பக்கம் கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவோடு என்ற சிக்கல்.

வடக்கே ம.பொ.சி தலைமையில் எல்லை மீட்பு போராட்டம். ஐந்து பேர் சிறை, இருவர் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள்.

தெற்கே கன்னியாகுமரி மீட்பு போராட்டத்தில் ஐயா மார்ஷல் நேசமணி முன்நின்றார். 11 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார்கள். இந்த உயிரிழப்புகள் எல்லாம் வரலாற்றில் மறைக்கப்பட்டது. பேசப்பட வில்லை. முக்கியத்துவம் கொடுக்கப்பட வில்லை.

இவர்களின் உயிர் தியாகத்தில்தான் வடக்கே சென்னையும், திருத்தனியும், தெற்கே கன்னியாகுமரியும் தப்பியது.தமிழ்நாட்டில் சேர்ந்தது.

இப்படி,
மொழிவாரி மாநிலம் அமைக்கப்படுவது உறுதி என்றான பிறகுதான், 1955 இறுதியில் பெரியார் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டு, மீண்டு ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற கோரிக்கைக்கு வந்து நின்றார்.

அதாவது 
1938-ல் திராவிட நாடு என ஓடிப்போன பெரியார், மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உறுதி என்றானபோது, நம்மவர்கள் போராடி, உயிர்த் தியாகம் செய்து நகர்த்தியிருந்த போது 1955-ல் மீண்டும் இங்கே ஓடி வந்து 'தமிழ்நாடு' என்கிறார்.

 (இதைத்தான் ஐயா சுபவீரபாண்டியன் பெரியார் 1956-ல் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பினார், அதையொட்டி சங்கரலிங்கனார் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார் என்று திரிக்கின்றார். அதாவது, 39-ல் ஓடிப்போன பெரியார் பிறகு வந்து தொடங்கியதையடுத்து சங்கரலிங்கனார்..என்ற அளவில்)

எல்லைப் பிரிப்பு போராட்ட சூட்டோடு, ஐயா சங்கரலிங்கனார் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காக 1956- ஜுலை 27-ம் நாள் உண்ணாநிலை போராட்டத்தை தொடங்கினார். (சொந்த ஊர் சூலக்கரை- பிறகு விருதுநகர் தேசபந்து மைதானம்) 75 நாட்களுக்கு பிறகு அக்டோபர் 13 அன்று இறந்து போகிறார். 

ஆந்திர மாநிலத்திற்காக உயிர் தியாகம் செய்த பொட்டி ஸ்ரீராமுலுவை ஆந்திர தேசம் கொண்டாடியதைப் போல், தமிழர் தலைவர் ஐயா சங்கரலிங்கனாரை திராவிட அரசு கொண்டாட வில்லை. காங்.கட்சியும் கொண்டாட வில்லை. திராவிடத்தின் சூழ்ச்சி இதுதான்.

இந்த பின்னணியோடு 1956-ல் மொழிவாரி மாநிலம் என்பதை பிரதமர் நேரு அறிவிக்கின்றார்.

1938-ல் ‘தமிழ்நாடு தமிழருக்கே என்று கடறக்ரையில் முழக்கமிட்டு ஓடிப்போய், திராவிட நாடு திராவிடர்களுக்கே என்று களமாடிய பெரியார் 1956-ல் தான் மீண்டும் ‘தமிழ்நாடு தமிழர்க்கே’ என வந்து தன்னை ஒட்டிக்கொள்கிறார்.

இப்படியாக வந்து ஒட்டிக்கொண்டவரைத்தான் ‘பெரியார் வாங்கிக் கொடுத்த தமிழ்நாடு, பெரியார் வைத்த கோரிக்கை, பெரியார் இல்லை என்றால், கோவணம் மிஞ்சியிருக்காது என விதம் விதமாக கயிறு திரித்து, உண்மையில் போராடிய தமிழர் தலைவர்களை எல்லாம் வரலாற்றில் இருட்டடிப்பு செய்தது இந்த திராவிடம். 

இறுதியாக 1956 நவம்பர் ஒன்றாம் தேதி, மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்டது. தமிழகத்தின் சில பகுதிகளோடு ஆந்திரம் அமைந்தது (பழயை ஐதராபாத் தெலுங்கானா பகுதியும் ஆந்திராவோடு இணைந்தது)

தமிழகத்தின் சில பகுதிகளை அபகரித்து கர்நாடகம் அமைந்தது.

தமிழகத்தின் சில பகுதிகளை அபகரித்து கேரள மாநிலம் அமைந்தது.

அந்த மாநிலங்கள் எல்லாம் நவம்பர் 1-ம் தேதியைத்தான் மாநிலம் பிறந்த நாளாக கொண்டாடி வருகிறது.

ஆனால் காங்கிரஸ் கட்சியும், பிறகு வந்த திராவிட கட்சிகளும், ‘நவம்பர் ஒன்று தமிழ்நாடு நாள்’ என்பதை கொண்டாடவே விரும்பவில்லை. காரணம் இரண்டு கட்சிகளும் ‘தமிழநாடு தமிழர்க்கே’ என்ற கோரிக்கையில் உடனிருக்கவில்லை. துரோகம் செய்தவர்கள். அதனாலேயே தமிழ்நாடு நாளை கொண்டாடவில்லை.

1967-ல் முதல் 1977 வரை இருந்த அண்ணா-கலைஞர் ஆட்சி ‘நவம்பர்-1’ தமிழ்நாடு நாளை கொண்டாட வில்லை.

1977-ல் ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர், 1981-ல்தான் ‘நவம்பர்-1’ தமிழ்நாடு நாளை கொண்டாடுவதாக அறிவித்து, கொண்டாடச் செய்தார். எம்ஜிஆர் கலைவாணர் அரங்கில் நடத்தினார். அதே நாளில் நாகர்கோவில் நடந்த நிகழ்வில் பழ நெடுமாறனை கலந்து கொள்ள எம்ஜிஆர் கேட்டுக்கொண்டார்

நான் 2006 நவம்பர் தமிழ்நாடு மயிலை பாரதிய வித்ய பவனில் விழா நடத்திய போதுதான் அன்றை திமுக அரசுக்கு தெரிந்த பின், அந்த சமயத்தில் இது குறித்து எனது கட்டுரை வெளி வந்த பின்
பிறகு ஆட்சியில் இருந்த கலைஞர்
 கருணாநிதி 2006-ம் ஆண்டு முதல்வராக இருந்தபோது ‘நவம்பர்-1’ தமிழ்நாடு நாளை அறிவித்து கொண்டாடினார். 

இப்படியாக நகர்ந்து இறுதியாக 2019-ம் ஆண்டு, தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி அவர்கள், ‘நவம்பர்-1’ தமிழர் நாள் என்பது இனி வருடம்தோறும் கொண்டாடப்படும் என்று அரசாணை அறிவிப்பை செய்தார். 

இதன் பிறகுதான், முதல்வர் ஸ்டாலின் அவர்கள், ‘ஜுலை 18-தான் தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என அறிவிக்கின்றார். (சுபவீ , வீரமணி எல்லாம் தமிழறிஞர்கள்?!!)

இது அநீதியான ஒன்று. பிறந்த நாளை தவிர்த்துவிட்டு பெயர் வைத்த நாளை யாராகிலும் கொண்டாடுவார்களா என்ற கேள்வி.

இதிலும்கூட உண்மை இல்லை. அண்ணா, தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்கு முன்பே, 1961-ல் தமிழக சட்டப் பேரவையில் காங்.கட்சி தரப்பில் ‘தமிழ்நாடு’ என தமிழிலும், ‘மதராஸ் ஸ்டேட்’ என்று ஆங்கிலத்திலும் பெயர் சூட்ட வேண்டும் என்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டுவிட்டது. 

இவர்களுக்கு இருப்பதெல்லாம் காழ்ப்புணர்ச்சி அரசியல்.

1965-ல் இந்தி திணிப்பு ஆட்சிமொழியாக வருகின்றது. அப்போது காங்கிரஸ் ஆட்சி. பக்தவச்சலம் முதல்வர். இளைஞர்களின் பேரெழுச்சி கிளர்ச்சியாகிறது. 

அண்ணாவின் தம்பிமார்களும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினுள்ளே நுழைந்து கொள்கிறார்கள்.

 தமிழ்மொழி காக்கும் போராட்டம் வலுக்கிறது. மாணவர் இராசேந்திரன் தொடங்கி 400-க்கும் மேற்பட்டவர்களை சுட்டுக் கொன்றது அன்றைய காங்கிரஸ் ஆட்சி.

தமிழ் இளைஞர்களின் அந்த  உணர்ச்சிமிகு போராட்டத்தை ஈவெரா பெரியார், ‘காலிகளின் போராட்டம்’ என்ற தலைப்பிட்டு… 

“தமிழ் நாட்டில் எங்கே உள்ளது இந்தி? யார் வீட்டுப் பையனை இந்தி படி என்று எந்த பள்ளியில் யார் கட்டாயப்படுத்தினார்கள்? பத்திரிகைகார அயோக்கியர்களும், பித்தலாட்ட அரசியல்வாதிகளும், (திமுக) இந்தி கட்டாயம் என்று கட்டிவிட்டது கண்டு, எல்லா மக்களும் சிந்திக்காமல், ‘இந்தி-இந்தி’ என்று இல்லாத ஒன்றை இருக்கிறதாக எண்ணிக்கொண்டு மிரள்வதா? ஆரம்பத்திலேயே நான்கு காலிகளை சுட்டிருந்தால் இந்த நாச வேலைகளும், இத்தனை உயிர் சேதமும், உடைமை சேதமும் ஏற்பட்டு இருக்காது. எதற்காக சட்டம்? எதற்காக போலீஸ்? எதற்காக போலீஸ் கையில் தடி, துப்பாக்கி? பிறகு, முத்தம் கொடுக்கவா கொடுத்துள்ளார்கள்.? இது என்ன அரசாங்கம்? வெங்காய அரசாங்கம்” என்றிருந்தது அந்த அறிக்கை. (1965 மே-28.விடுதலை)

அது மட்டுமல்ல, ‘கிளர்ச்சிக்கு தயாராவோம்’ என்று வேறு முழங்கி 

"திராவிடர் கழகத்தினர் எல்லாம் கையில் மண்ணெண்ணை, தீப்பெட்டியோடு கிளம்புங்கள். கலவரக்காரர்களை- காலிகளை கண்டால் அந்த இடத்திலேயே அவர்கள் மீது எண்ணெயை ஊற்றிக் கொளுத்துங்கள்" என்று அறிக்கை வேறு விட்டு கொதித்திருந்தார்.

போராட்டம் நடத்திய தமிழர்களை, தமிழ் அறிஞர்களை கொளுத்துங்கள் என்றார் பெரியார்.

“எனது இந்தி எதிர்ப்பு என்பது, இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதை தோழர்கள் உணர வேண்டும். மற்றெதற்கு என்றால், ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே ஆகும்...ஆகையால் தமிழர் தோழர்களே! உங்கள் வீட்டில் மனைவியுடன், குழந்தைகளுடன், வேலைக்காரிகளுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள். பேசப் பழகுங்கள்” (27.1.1969-ல் விடுதலை அறிக்கை) 

1968-ல் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த கலைஞர் ஏதோ ஒரு பிரச்சனைக்காக, “தமிழுக்கு ஒரு ஆபத்து என்றால் அமைச்சர் பதவியை தூக்கி எறிவோம்” என்று சும்மா ஒரு சவடால் அடித்தார் (2009ல் ஈழ இன அழிப்பை தடுக்க Mp-க்கள் பதவியை ராஜினாமா செய்வோம் என நாடகமாடியது போல்). 

அப்படியான நாடக பேச்சைக்கூட பெரியார் சகித்துக் கொள்ளவில்லை. 

“எதற்கு பதவியை தூக்கி எறியனும். இதுதான் ஈரோட்டுப் பள்ளியில் கற்ற கல்வியா. நான் நாற்பது வருடமாக கூறி வருகின்றேன். தமிழ் காட்டுமிராண்டி மொழி என்று” என்ற புகழ்பெற்ற வார்த்தையை கொட்டினார். ஆனால் இவர்தான் தமிழ்த் தேசியவாதி. தமிழ் மொழிப் பற்றாளர்.

மீண்டும் அந்த வார்த்தை, ‘பெத்தவனுக்குதான் தெரியும் வலி. மற்றவனுக்கு தெரியாது. மற்றவர்களின் ஒட்டுத் திண்ணையில் குடியிருப்பவர்கருக்கும்,… 

•••

ராமன் ராஜூ பதிவு

#தெற்கெல்லை_மீட்பு_போரில்_பசும்பொன்_தேவரின்_போர்க்குரல்:

"தமிழ்ப் பகுதிகளை அபகரிக்க நினைக்கும் கேரள அமைச்சருக்கு எச்சரிக்கை! 
தமிழர்களை உரண்டை இழுக்க வேண்டாம்; உள்ள பயனும் தேய்ந்து விடும்."

"தமிழ் நாட்டின் ஒட்டுக்கட்டில் மஞ்சள் குளிக்கும் தமிழ்ப் பிரதேசத்தின் அண்டை பிராந்தியத்தார், தமிழர்களின் விட்டுக் கொடுக்கும் சுபாவத்தை, பலவீனமென்று கருதி, அவர்களின் பிராந்தியங்களைப் பங்கிட்டுக் கொள்ள ஆசைப்படுகின்றனர். இந்த ஆசை நிறைவேற, தமிழர்கள் என்ன எழ முடியாத பெரு நோயாளிகளா? என்பதைப் பற்றி ஆசை வெறியேறிய அண்டைப் பகுதியார் ஆலோசிக்கவே இல்லை. 

உள்ளது போதாதென்று ஊதாரித்தனமாக, பிறர் உரிமைக்கு தூண்டில் போடும் குணம் தமிழர் சமுதாயத்திற்கு பழக்கமல்லாத ஒன்று. இதே மாதிரி, தமது உரிமை பலாத்கரிக்கப்படுவதைப்  பார்த்துக்  கொண்டிருக்கும்  நொண்டிக் குணமும் தமிழர்களுக்கு இல்லை. பலாத்கரிப்பு முற்றி, நிலைமையில் கலசல் நேருமானால், அப்புறம் எதிர்ப்பு அரோகராவாகிவிடும்.  இதை அண்டைப் பிராந்தியத்தார் உணந்ததாகத் தெரியவில்லை. உணர வேண்டும். அப்பொழுதுதான் உள்ள உடைமையாவது தங்கும் என்பதே எம் எச்சரிக்கை .

சமீபத்தில் ஆல்வாய் என்ற ஊரில் நடந்த ஐக்ய கேரள மகாநாட்டில் தலைமை வகித்த திரு. கேளப்பன், தமது ஐக்ய கேரள கோரிக்கையை வற்புறுத்தியதோடு  நில்லாமல், நீலகிரியையும், தென்திருவிதாங்கூர் தமிழர் தாலுகாக்களையும் ஐக்ய கேரளத்திற்குள்  அடக்க வேண்டுமென்ற ஆசையையும் சேர்த்து வற்புறுத்தியிருக்கிறார்.
....... ........................................... ........
ஐக்ய கேரள அமைப்புக்கு அமைப்புக்கு ஆசைப்பட ஸ்ரீகேளப்பனுக்கு உள்ள உரிமையை விட, தமிழ்ப் பிராந்தியங்கள் தமிழ் நாடோடு சேர வேண்டுமென்ற கோரிக்கை கீழ்ப்பட்டதல்ல. ஐக்ய கேரளம் அமைந்தாலும் அமையாவிட்டாலும், தமிழர் பிராந்தியங்கள் தமிழ் நாட்டோடு சேர்க்கப்படுவது நிச்சயம். வீணில் தமிழர்களை உரண்டை இழுத்து, கெளரவத்தையும், பரஸ்பர உதவிகளையும் பறிகொடுத்து விட்டு பரிதவிக்க வேண்டாம்.  

அன்றல்ல - இன்றல்ல - என்றுமே, கேரள வாசிகள், தமிழகத்தின் ஆதரவில்லாமல் வாழ்ந்ததில்லை - வாழவில்லை - வாழப்போவது மில்லை.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
13 - 2 - 49 , நேதாஜி வார ஏடு



01.11.2023, சென்னை

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
K.S.Radhakrishnan. 

#KSR_Post.
1-11-2023.
8.00 -காலை.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...