Saturday, November 18, 2023

#*கரிசல் கிராமத்துப் பழக்கவழக்கங்கள் சில……*

#*கரிசல் கிராமத்துப்
பழக்கவழக்கங்கள் 
சில……*
 —————————————

(‘கரிசல்கதைகள்’ என்ற தொகுப்பின் முன்னுரையில் #கிரா மானாவாரி விவசாயிகள் பற்றிச் சொல்வார்.
“இந்தக் கரிசலில் பிறந்த சம்சாரி, அல்லல் படுவதற்கென்றே பிறந்த மாபாவி. எந்த வகையிலும் இவனுக்கு யாராலும் எந்தவித உதவியும் இதுவரை இல்லை; எந்த அரசுக்கும், எந்த அரசியல் கட்சிகளுக்கும் கூட இவன் ஒரு மாற்றாந்தாய்ப் பிள்ளைதான்…..)

1) ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வீட்டில் சமையல் செய்ய வேண்டுமானால் உழக்கு அல்லது ஆழாக்கு, நாழி, சிரட்டை, கரண்டி ஏதாவது ஒன்றில் அடுத்த வீட்டு அடுப்பில் எப்போதும் சூடாகிக் கொண்டிருக்கும் பால் சுடவைத்த அடுப்பில் தீக்கங்கை எடுத்துவந்து அடுப்புப் பற்ற வைப்பார்கள். இந்தத் தீக்கங்கு கோனார்கள் வீட்டில்தான் எப்பொழுதும் இருக்கும்.
2) ஆட்டுக் கறியைத் தேவைக்குப் போக மீதியை உப்பு, மஞ்சள் இரண்டையும் சேர்த்துத் தடவி கறித் துண்டில் நடுவில் துவாரம் போட்டு ஒரு கயிற்றில் கோர்த்து வெயிலில் நன்றாகக் காயவைத்த பின் ஒரு பழைய மண்பானையில் போட்டு வைத்துக்கொண்டு, தேவைப்படும்போது சமைத்துச் சாப்பிடுவார்கள். இதற்கு ‘உப்புக் கண்டம்‘ என்று பெயர்.
3) ஆடு மேய்ப்பவர்கள் மூங்கில் குழலில் சாப்பாடு கொண்டுபோய் மதிய உணவாகச் சாப்பிடுவார்கள். உணவு கெட்டுப் போகாது.
4) கிணறுகள் இல்லாத இடத்தில் உழவு உழச் செல்பவர்கள் மண் தோண்டியில், கம்மஞ்சோறு, தினை குதிரைவாலி, சாமைச் சோறு இவற்றை உருண்டையாக உருட்டி நீர் ஆகாரத்தில் போட்டுக்கொண்டு செல்லுவார்கள். தண்ணீர்த் தாகம் ஏற்பட்ட நேரத்தில் தண்ணீர் குடிப்பார்கள். பின்பு மதிய வேளையில் இந்தச் சோற்று உருண்டைகளைச் சாப்பிட்டுவிட்டு மீதி தண்ணீரையும் குடிப்பார்கள். இது வெயில் காலத்தில் உடம்பின் சூட்டைத் தணிக்கும்.
5) புளிச்சக் கீரையைக் கடைந்து உணவுடன் சேர்த்து முன் காலத்தில் சாப்பிடுவார்கள். இது இரத்த அழுத்தம் சம்பந்தப்பட்ட நோய் வராமல் தடுக்கும்.
6) ஒரு துக்க வீட்டில் உறவினர் இறந்தால் கண்ணீர்  விட்டு அழும்போது அதிக கண்ணீர் வெளியேறும். இதை ஈடுகட்ட மறுநாள் இறந்தவரைப் புதைத்த இடத்தில் நாய், நரி தோண்டாமல் இருக்க குழி மெழுகுவார்கள். அப்போது அகத்திக் கூரையை அவித்து எல்லோருக்கும் கொடுப்பார்கள். முதல் நாள் இழந்த கண்ணீரை இந்த அகத்திக் கீரை ஈடு கட்டுமாம்.
7) கிராமத்தில் அம்மன் கோவில் கொடை விழாவில் சாமி ஆடுபவர்களுக்கு வீடு வீடாக தண்ணீரைத் தலை வழியாக ஊற்றி நேர்த்திக் கடனைத் தீர்ப்பார்கள். இதனால் அவர்களுக்கு ஜலதோஷம் ஏற்படாதவாறு மறுநாள் காலையில் அம்மனுக்கு மஞ்சள் பானை பொங்கல் என்று வைப்பார்கள். அதில் மஞ்சள் பொடி கலந்து கொதிக்க வைக்கும்போது முதல் நாள் சாமி ஆடியவர்கள் வேப்பிலையை மஞ்சள் பானையில் முக்கியெடுத்து தலையில் தெளித்துத் தெளித்து ஆடுவார்கள். இதனால் ஜலதோஷம் பிடிக்காதாம்.
இப்போதும் ஜலதோஷம் பிடித்தால் மஞ்சள் பொடி கலந்த தண்ணீரைக் கொதிக்கவைத்து இறக்கி வைத்துக்கொண்டு ஒரு போர்வையை மூடிக்கொண்டு அந்த ஆவியைப் பிடித்தால் ஜலதோஷம் நீங்கிவிடும்.
8)மாட்டுத்தாவணி அல்லது வெகுதூரக் கோவிலுக்குச் செல்பவர்கள் நார்ப் பெட்டி அல்லது துணியில் சோற்றைக் கட்டிக்கொண்டு செல்வார்கள். இதற்குக் ‘கட்டுச் சோறு‘ என்று பெயர். சோறு கெட்டுப் போகாது.
****

#ஆடுகளின்_வகைகள்
(செம்மறி ஆட்டு வகைகள்)
 
1) செவ்வாடு
2) ராயாடு
3) கரா ஆடு
4) கராராயாடு
5) கொப்பாடு (கொம்பு உள்ளது.)
6) அரியாடு
7) சுட்டியாடு
8)கரிசல் மரையாடு
9) வெங்காலாடு
10) கோட்டை மரையாடு
11) கிடா (கொம்பு இல்லாததை மோழைக் கிடா என்பார்கள்.)
 
ஆடுகளை ஒன்றாகச் சேர்த்து இரவில் போடுவதைக் ‘கிடை‘ என்பார்கள். பின்பு அவரவர் ஆட்டை மேய்ச்சலுக்குப் பத்தும்போது ஆட்டை ஒதுக்குவார்கள். அந்த இடத்துக்குப் ‘பாங்கு‘ என்பார்கள். இரவில் அவரவர் ஆட்டைக் காப்பதை ‘பாங்கு முறை‘ என்பார்கள்.
 
****
#மாட்டின்_வகைகள்_சில
 
1) கருத்தக் காளை
2) செவலைக் காளை
3) மயிலைக் காளை
4) புல்லக் காளை
5) செம்போர்க் காளை
மாட்டில் பெரிய மாடு - கோம்பை மாடு

 ****
                   
 #நேரத்தைக்கணக்கிடுவது
 
1) அதிகாலை 3 மணி - தலைக்கோழி கூப்பிடும் நேரம்
2) சூரிய உதயத்துக்கு முன்பு - பலபலவென விடியும் நேரம்
3) 10 மணி - ஆடு எழுப்புகிற நேரம்
4) 12 மணி - உச்சி நேரம்
5) 3 மணி - பெரும் பானை உலை வைக்கிற நேரம்
6) 5 மணி - ஊர் மாடு வருகிற நேரம்
7) 6 மணி - கருக்கல் நேரம்
8)இரவு 10 மணி - ஊர் உறங்குகிற நேரம்
9) இரவு 11 மணி - ஒருச் சாமம்
10) இரவு 12 மணி - நடுச் சாமம் (அல்லது) நடுநிசி

****
 
#ஊரின்_மண்வளம்
 
இளக்கட்டாக் குறிச்சிக் கரிசலும் சரி, குருக்கள்பட்டி செவலும் சரி.

****
 
#கிராமத்து_வழக்காளிகள்
 
1) மருக்காலங்குளம் - மாடப்பத் தேவர்
2) கலங்கல் - சின்னசாமி கோனார்
3) கழிநீர்க்குளம் - செல்லையா தேவர்
4) புளியம்பட்டி - மாடசாமித் தேவர்
5) குப்புணாபுரம் - சீனித் தேவர்
6) குருக்கள்பட்டி - பொலத்துராமத் தேவர்
 ****

#முதலாளி_எனப்பட்டம்_பெற்றவர்கள்
 
1) கொளக்கட்டா குறிச்சி முதலாளி
2) சீகலம்பட்டி முதலாளி
3) சங்கரபாண்டியாபுரம் முதலாளி
4) நாகம்பட்டி முதலாளி
****
 
#அந்தக்கால_கைகாரர்கள்
 
1) சிப்பிப்பாறை - கந்தசாமி நாயக்கர். சீறும் புலிக் குடை படைத்தவர்
2) மீன்துள்ளி கோடாரி பொன்னையா கோனார் மான் துள்ளுவது போன்று         துள்ளி எதிரிகளை மடக்கி அடிப்பது.
3) கல் எரிவதில் வில்லாளிகளையும் மடக்கி எரிவார்கள். மீன்துள்ளி காளைக் கோனார் ஆவுடையாள்புரம் எட்டையாக் கோனார்
 ****
1) நெல்லை மாவட்டத்தில் இரண்டு பாதைகள் அல்லது ரோடு சந்திக்கும் இடத்தை விலக்கு ரோடு, விலக்குப் பாதை என்பார்கள்.
2) கோவை மாவட்டத்தில் குச்சை என்பார்கள்
3) விழுப்புரம் மாவட்டத்தில் கூட்டு ரோடு அல்லது கூட்டுப் பாதை என்பார்கள்.
*****
 
#காரணப்பெயர்கள்
 
ஒரு வீட்டில் விவசாயம் பார்ப்பவரை சம்சாரி என்றும், ஆடு மேய்ப்பவரை ஆட்டுக்காரர் என்றும், சிறு வியாபாரம் செய்பவரைக் வியாபாரி என்றும், அந்த வீட்டில்படித்தவரைப்பள்ளிக்கூடத்தான் என்றும் அழைப்பார்கள்.
 ****
மாடுகள் விற்கும் இடத்தை மாட்டுத்தாவணி என்று கூறுவார்கள்.
 
1) கழுகுமலை - தைப்பூசம் பங்குனி உத்திரம்
2) திருச்செந்தூர் - மாசிமகம்
3) சீவலப்பேரி - சித்திரை மாதம்
4) முத்துலாபுரம், கன்னிசேரி - பங்குனி உத்திரம்
5) சங்கரன்கோவில் - ஆடித்தபசு
6) வாரம்தோறும் சனிக்கிழமை - பாம்புக்கோவில் சந்தை
 ****
#ஆட்டுக்கிடையின்_விபரம்
 
ஆட்டுக் கிடைக்கு மேற்பார்ப்பவரைக் கீதாரி என்றும், கிடைக்கோன் என்றும் அழைப்பார்கள். மொத்தத்தில் கிடை கிடக்கும் ஆட்டை ஒதுக்கும்போது வட்ட வடிவமாக நின்று கொண்டு அவரவர் குரலில் கூப்பிடும்போது முதலில் ஒருவரும் பின்பு ஒன்றன்பின் ஒன்றாக அவர்கள் ஆடுகள் அனைத்தும் அவர்கள் இடத்துக்கு வந்துவிடும். இந்த இடத்தைப் பாங்கு என்று சொல்வார்கள். இரவில் ஆடுகளைப் பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பாங்கு முறை என்று கூறுவார்கள். அவர்கள் தங்கி சமையல் செய்யும் இடத்தை வலசை என்று சொல்லுவார்கள்.
 ***
 ஒரு வாழைப்பழம் நெல்லையிலிருந்து சென்னை வரை படும் பாடு
 
நெல்லையில் வாழைப்பழம் என்றும்,
மதுரையில் வாழைப்பளம் என்றும்,
திருச்சியில் வாலப்பலம் என்றும்,
விழுப்புரத்தில் வாலப்பலம் என்றும்,
செங்கல்பட்டில் வாலப்பயம் என்றும்,
சென்னை எழும்பூரில் வாயப்பயம் வாயப்பயம் என்றும் தேய்ந்துவிடுகிறது.
 பாண்டிச்சேரி பேருந்து நிலையத்தில் நேர்வழியாக விழுப்புரம் செல்லும் வண்டிக்குக் கூப்பிடும்போது நேரா விழப்போரை என்று அழைப்பார்கள்.
 
#ஊரைச்சார்ந்த_பாடல்கள்
 
1) கத்தரிக்காக் கூட்டு கழுகுமலை ரோட்டு அய்யாபுரம் ஏட்டு அவளைப்  பிடித்து மாட்டு.
2) கோயிலாங்குளத்துப் பிள்ளை கொலுசு போட்ட வண்ணாப்பிள்ளை. நான் போட்ட சிட்டுத் துண்டை நயமாய் வெளுத்து வாடி
 
3) சில்லிக்குளத்துத் தேவா
 சீரனிச் சமுத்துத் தேவா
 பெட்டியை எடுத்துப் போய்
 உன்பிட்டிதான் தெரிஞ்சுபோச்சே
 
4) கொலைகொண்ட பாதகன்
 தென்மலை வன்னியர்
 தலைகொண்டு போகிறார்
 தளவாய் புலிச் சிங்கமே
 
5) புகுந்து குத்தும் பொன்னுச்சாமி
 புலியைக் குத்து நடுவைப்பட்டி
 கிராமச்சந்திரன்
 செம்பு மேலே செம்பு வைத்து
 சிவகாசிப் பட்டினத்தைச்
 செந்தூள் பறக்கவைத்தான்
 
6) பார்க்கப் பகட்டான குருக்கள்பட்டியில்
 பெருங்கடையாய் இருந்து
 வெறுங்கடையாய் ஆகுமாம்
 வெளியா
****
எட்டையபுரம், குருவிகுளம், செவல்பட்டி  ஜமீனில் கிடைத்த தரவுகள் வழியாக……..

#வேட்டை_நாய்கள்
(கதநாய் வடுகர்)

நாய் வைத்துக்கொண்டு வேட்டையாடும் வடுகரை சங்க இலக்கியம்,

கடும் குரல் பம்பை கதநாய் வடுகர்  - நற்.212
கல்லா நீள்மொழி கதநாய் வடுகர் - அகம். 107 என்றே குறிப்பிடுகிறது.

வீட்டுநாயைக் விட வேட்டையாடும் நாய் அதிக சினமும் அதிக ஆற்றலும் உடையது. இதனால் வேட்டை நாயை 'கதநாய்' என்றே தொகைப்பாடல்கள் கூறும். வடுகமொழி அதவாது தெலுங்கின் மூலமொழி பயிலும் 'வடுகர்' என்போர் காட்டில் வேட்டையாடுதலையே தொழிலாக உடைய வேட்டுவ தொல்குடிகள். இவர்களுடன் வேட்டைநாய் எப்போதும் இருக்கும், எனவே இவர்களைக் 'கதநாய் வடுகர்' என்றே இலக்கியங்கள் குறிப்பிடும்.

சரி வடுகர் மட்டும் தான் வேட்டைக்கு நாயை பயன்படுத்தினார்களா, இல்லை தமிழகத்தைச் சேர்ந்த வேட்டுவர்களும் நாய்களை வேட்டைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். இதனை, 

வேட்டைநாயை விலங்குகளை வேட்டையாட பழக்கியத்தை,
"நாய் பயிர் குறிநிலை கொண்ட கோடே" - அகம். 318

சத்தம் எழுப்பக்கூடு கொம்பினை ஊதி (விசில் போன்று) வேட்டை நாயின் உதவியுடன் காட்டில் வேட்டையாடும் வேட்டுவரின் மகள் என்பதை, 

"கோடு துவையாக் கோள்வாய் நாயொடு 
காடுதேர் நசைஇய வயமான் வேட்டு 
வயவர் மகளிர் என்றி ஆயின்" - நற்.276

கொலைவெறியுடன் பாய்ந்து வந்த வேட்டைநாயினைக் கண்டு பயந்துபோன மானானது வேடுவர் விரித்த வலையில் சிக்கிய,

"கொலைவெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப
வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல" - கலி.23

வேடனுக்கு பயந்து ஓடிய மானை, வேட்டை நாய்கள் பாய்ந்து கொன்றன என்பதை,

"மான் கணம் தொலைச்சிய கடு விசை கத நாய்
நோன் சிலை வேட்டுவ" - புறம் 205

மேலும், வேட்டுவன் காட்டில் வேட்டையாடிய இறைச்சியைக் கொண்டுவது கொடுத்துவிட்டு தானியங்களை பண்டமாற்றாகப் பெற்றுச் சென்றான் என்பதை, 

"கான் உறை வாழ்க்கைக் கதநாய், வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும்," புறம் 33
பாடல் குறிப்பிடுகிறது. 

தமிழகத்தில் இருந்த தமிழக வேட்டுவரும், வடுகர் முனையில் இருந்த வடுகர் வேட்டுவரும், ஒரே மாதிரி வேட்டைப் பண்புகளைக் கொண்ட மக்களாக இருந்துள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து, தென் தமிழகத்தை ஆண்ட பிற்கால வடுகர்களான, பாளையக்காரர்கள் தங்களது கோட்டைகளைக் காக்கவும், போர்களிலும் நாய்களை பயன்படுத்திவுள்ளனர் என்பதை அங்கிலேயர்க் கால ஆவணங்கள் கூறுகின்றன. 

சங்க காலத்திலும், நாய்கள் காவலுக்கு பயன்படுத்தப்பட்டதை,

கணைக்கால் பந்தர் தொடர்நாய் யாத்த துன்னரும் கடி நகர் - பெரும்.125

காவலர் கடுகினும் கதநாய் குரைப்பினும் - குறி.240

உப்பு விற்க வந்த பெண்ணை, குரைத்து மிரட்டிய நாயை,

ஞமலி குரைப்ப வெரீஇய
மதர் கயல் மலைப்பின் அன்ன கண் - அகம்.140 போன்ற சங்கப் பாடல்கள் கூறுகின்றன. ஞமலி என்றால் நாய்.

மேலும், வடுக அரசர்களைப் போன்று அதற்கு முன்பு தமிழகத்தை ஆட்சி செய்த சோழர்கள் பெரிய கோவில் ஓவியத்திலும், பல்லவர் காலக் குடிகள் தங்கள் நடுகல்லிலும் நாயின் வீரத்தை, அவர்கள் வாழ்வின் அங்கம் என்பதை போற்றும் விதமாக வரைந்து வைத்துள்ளனர்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
#ksrpost
18-11-2023.

(தொகுத்து அளித்தவர் :
அரசு சின்னசாமி வாத்தியார், ஆவுடையாள்புரம், சங்கரன்கோவில்)
 
~~~~~~~~~~~~~~~~~~~


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...