Thursday, November 16, 2023

தமிழக ஏரி- குளம் என நீர் நிலைகளை பாதுகாப்பு குறித்த என் வழக்கு ( WP no 30863- 2023) பற்றி….





#தமிழக ஏரி, குளம் நீர் நிலைகளை  
காப்போம்

தமிழக ஏரி- குளம் என நீர் நிலைகளை பாதுகாப்பு குறித்த என் வழக்கு ( WP no 30863- 2023) பற்றி பலர் பேசினர்.

தமிழகத்தின் ஆண்டு சராசரி மழையளவு 921 மி.மீ. இதில் வடகிழக்குப் பருவமழை (அக்டோபர் - டிசம்பர்) மூலம் 441 மி.மீ. (48%) கிடைக்கிறது. தென்மேற்குப் பருவமழை (ஜூன் - செப்டம்பர்) 321 மி.மீ. (35%) அளிக்கிறது.

மழைப் பொழிவில் இருவகை உண்டு. ஒன்று, ஒரு சில நாள்கள் பெய்வது. மற்றது தொடரும் அடைமழை. இந்தியா போன்ற நாடுகளுக்கு அடைமழையே சிறந்தது.




ஏரிகளில் - வானம் பார்த்த ஏரி, ஆறுகளை நம்பி உள்ள ஏரி, சங்கிலித் தொடர் ஏரி, குடிநீர் ஏரி என பலவகை இருந்த போதிலும் இவை அனைத்தும் விவசாயம் முதற்கொண்டு, தொழிற்சாலைகள் வரை மனிதர்கள் மற்றும் அனைத்து ஜீவராசிகளின் நீர்த்தேவைகளையும் நிறைவு செய்பவையாக விளங்குகின்றன.

வேளாண்மை மூலம் தமிழக அரசுக்கு கிடைத்து வந்த மொத்த வருவாய் 1960-61-இல் 44 சதவீதமாக இருந்து, 2013-14-இல் 6.2 சதவீதமாக குறைந்துவிட்டது. இருப்பினும், உற்பத்தித் திறன் அதிகரிப்பினால் வேளாண் உற்பத்தியில் ஓரளவு தன்னிறைவு பெற்றுள்ளோம்.

தமிழகத்தின் நிகர சாகுபடிப் பரப்பு 2010-11 முதல் 2013-14 வரை ஏறத்தாழ 50 லட்சம் ஹெக்டேராக உள்ளது.

நிகர நீர்ப்பாசனப் பரப்பு ஏறத்தாழ 29 லட்சம் ஹெக்டேர். இந்நீர்ப்பாசனம் கால்வாய்கள் (7.5 லட்சம் ஹெக்டேர்), ஏரிகள் (5.3 லட்சம் ஹெக்டேர்), கிணறுகள் (16.2 லட்சம் ஹெக்டேர்) மூலம் பெறப்படுகிறது. இம்மூன்று நீர்ப்பாசன வகைகளிலும், பாசனத்தில் அதிக மாறுதல்களை ஏற்படுத்துவது ஏரிப் பாசனம் மட்டுமே.

தமிழகத்தில் தற்போது 41,127 ஏரிகள் உள்ளன. இதில் 40 ஹெக்டேருக்கு மேல் பாசன வசதி தருபவை 7,985; 40 ஹெக்டேருக்கு கீழ் பாசனம் தருபவை 33,142.

இவற்றில் பெரிய ஏரிகள், சிறிய ஏரிகள், முறைப்படுத்தப்பட்ட சிறிய ஏரிகள் என ஏறத்தாழ 11,100 ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 30,000}க்கும் மேற்பட்ட சிறிய ஏரிகள் கிராம பஞ்சாயத்துக்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தமிழகத்திலுள்ள 30,000 (சில தரவுகள் சொல்கின்றன 41,122 என)  ஏரிகளின் மொத்த பாசனப் பரப்பு 10.12 லட்சம் ஹெக்டேர். அதாவது, சராசரியாக ஓர் ஏரி 25 ஹெக்டேர் பாசனம் தருகிறது.

1960-களில் அதிகபட்சமாக 9.1 லட்சம் ஹெக்டேர் பாசனம் பெற்ற ஏரிப்பாசனப் பரப்பு தற்போது 5.1 லட்சமாகக் குறைந்துவிட்டது.

ஆனால், ஏரிகளின் எண்ணிக்கை புள்ளிவிவரப்படி குறையவில்லை. எங்கெல்லாம் ஏரிப் பாசனம் சிறப்பாக உள்ளதோ அங்கெல்லாம் கிணற்றுப் பாசனமும் சிறப்பாக உள்ளது.

ஏரிகளுக்கான நீர் ஆதாரம் மழைநீர். இம்மழைநீரை ஏரிகளுக்கு கொண்டு செல்பவை வரத்துக் கால்வாய்கள்.



கடந்த பல ஆண்டுகளாக பெருவாரியான ஏரிகளின் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டும், செப்பனிடப்படாமல் சீர்கெட்டும் உள்ளதால் மழைநீர் சரியான முறையில் ஏரிகளை அடைவதில்லை.

இதனால், பல ஆண்டுகளாக ஏரிகள் வறண்டு இருக்கும் நிலையைப் பயன்படுத்தி ஏரிகளுக்கு உள்ளேயே ஆக்கிரமிப்பு மிக அதிகமாக உள்ளது.

தமிழகத்தின் உயிர்மழை வடகிழக்குப் பருவமழை. இம்மழையே ஏரிப்பாசனத்தின் எழுச்சியை தீர்மானிப்பதாகும். தற்போது, நன்கு பருவமழை பெய்யும் ஆண்டுகளில்கூட ஏரிப்பாசனம் அதிக அளவாக 6 லட்சம் ஹெக்டேர் அளவே உள்ளது.

கடந்த 2011-12-ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழை மூலம் 541 மி.மீ. மழையை தமிழகம் பெற்றதில், ஏரிப்பாசன அளவு 5.28 லட்சம் ஹெக்டேராக இருந்தது. இதற்கு அடுத்த ஆண்டு (2012-13) பருவமழை அளவு 371 மி.மீ. ஆக குறைந்ததால் ஏரிப்பாசன அளவும் 4.20 லட்சம் ஹெக்டேரானது.

இதன்படி பார்த்தால், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையில் 1 மி.மீ. குறைந்தால் ஏரிப்பாசனப் பரப்பு 635 ஹெக்டேர் குறைகிறது.

இதே புள்ளிவிவரத்தை அதிக அளவு வடகிழக்குப் பருவமழை பெற்ற 2008-09 (553 மி.மீ. - 5.40 லட்சம் ஹெக்டேர்) மற்றும் 2011-12-இன் ஏரிப்பாசனப் பரப்போடு ஒப்பிட்டால் 1 மி.மீ. மழை குறைந்தால் 1,000 ஹெக்டேர் ஏரிப்பாசனப் பரப்பு குறைவதை அறியலாம்.இப்படியே ஒவ்வொரு ஆண்டும் கணக்கிய்க்கிட்டுக்கொண்டே வந்தால் 2023-2024 இல் எத்தனை ஹெக்ட்டர் ஏரி பாசனப் பரப்பு குறையும் என்பதை நாம் உணரலாம்.

ஆக, ஏரிகள் உள்ள ஒவ்வொரு கிராமத்தினரும், அரசின் உதவியை எதிர்பார்க்காமல், நம் மூதாதையர் செய்து வந்த குடி மராமத்து முறை மூலம் வரத்துக் கால்வாய்களை செப்பனிட வேண்டும்.

கிடைக்கின்ற மழைநீரை தங்கள் சொந்த சொத்தாகக் கருதி ஏரி, கண்மாய்களில் தேக்கி வைத்து அது வீணாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தேவைக்கேற்ப, முறையான பாசனம் செய்தால் ஏரிப்பாசனப் பரப்பு உயர்வதோடு விவசாயிகளின் வாழ்வும் வளம் பெறும்.

#தமிழக_ஏரி_குளம்_நீர்_நிலைகளை_காப்போம்….
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
16-11-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...